
வெளிநாட்டு தலைவர்களை ‘மேலே அனுப்பும்’ சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷன்கள்1-2-3
அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., ‘அரசியல் காரணங்களுக்காக’ வெளிநாட்டு தலைவர்களை ‘மேலே அனுப்பி வைத்த’ சம்பவங்கள் நடந்தன என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அவர்கள் ‘மேலே அனுப்பி வைத்த’ தலைவர்களைவிட, மேலே அனுப்ப முயன்று, சொதப்பிவிட்ட ஆபரேஷன்கள்தான் அதிகம் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதுவும், வெளிநாட்டு தலைவர்களை கொலை செய்வதற்கு முட்டாள்தனமாக திட்டம் போட்ட சம்பவங்களும் உள்ளன. போடப்பட்ட திட்டத்தை முட்டாள்தனமாக நிறைவேற்ற முயன்று, வெளிநாட்டு தலைவர்கள் தப்பித்துக்கொண்ட சம்பவங்களும் உள்ளன.
உளவுத்துறை வட்டாரங்களில் கூறப்படும் சுவாரசியமான விவகாரங்களில், ‘சி.ஐ.ஏ. சொதப்பிய ஆபரேஷன்களுக்கு’ முக்கிய இடமுண்டு.
அதிகம் வெளியே அறியப்படாத இப்படியான உளவுத்துறை ஆபரேஷன்களை, படிப்படியாக விறுவிறுப்பு.காமில் கொண்டுவந்து, தமிழில் உளவுத்துறை பற்றிய முழுமையான பதிவுகளை வைத்திருக்க ஆசை. பார்க்கலாம், ஆசை நிறைவேறுகிறதா என்பதை.
சி.ஐ.ஏ. வெளிநாட்டு தலைவர்களை மேலே அனுப்ப முயன்ற ஆபரேஷன்களில், ஒரே காலப்பகுதியில் – அல்லது ஒரே சி.ஐ.ஏ. தலைமையில் – நடந்தவை என்று பார்த்தால், சி.ஐ.ஏ.வின் தலைவராக அலன் டுல்லஸ் இருந்த காலத்தில்தான், அதிக ‘கொலை முயற்சி’ ஆபரேஷன்கள் நடந்தன.
மொத்தம் 3 நாடுகளின் தலைவர்களை ‘போட்டுத்தள்ளும்’ முயற்சிகள் இவரது தலைமையில் சி.ஐ.ஏ. இருந்தபோது அடுத்தடுத்து நடந்தன.
கொஞ்சம் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், இரண்டு ஆபரேஷன்களில் தோல்வி! ஒன்று சுமாரான வெற்றி!!
அலன் டுல்லஸூக்கு பின் சி.ஐ.ஏ.வுக்கு தலைமை தாங்கியவர்களில் சிலரும், வெளிநாட்டு தலைவர்களை மேலே அனுப்பும் ஆபரேஷன்களை வெளிநாடுகளில் நடத்தினார்கள். இந்தியாவில்கூட அப்படி ஒரு ஆபரேஷன் நடந்தது.
ஆனால், கடகடவென அடுத்தடுத்து 3 ஆபரேஷன்கள் நடத்தப்பட்டது, அலன் டுல்லஸ் தலைவராக இருந்த காலத்தில்தான்.
அலன், 1953-1961 காலப்பகுதியில் சி.ஐ.ஏ.வின் தலைவராக இருந்தவர்.
இந்த காலப்பகுதியில் சி.ஐ.ஏ. கொலை செய்யத் திட்டமிட்ட மூன்று வெளிநாட்டு தலைவர்கள்: – ட்ரூஜிலோ (டொமினிகன் ரிப்பப்ளிக் நாடு) கஸ்ட்ரோ (கியூபா) பட்ரிஸ் லுமும்பா (கொங்கோ நாடு).
இவர்களில் கியூபா ஜனாதிபதியாக இருந்த காஸ்ட்ரோ ஆபரேஷன் தோல்வி. காஸ்ட்ரோ இன்னமும் உயிருடன் உள்ளார்.
டொமினிகன் ரிப்பப்ளிக் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ட்ரூஜிலோவை (மேலே போட்டோவில் உள்ளவர்) கொல்ல முயன்ற ஆபரேஷன், ‘சி.ஐ.ஏ.வுக்கே அல்வா கொடுக்கப்பட்டு’ தோல்வி. ஆனால், பின்னாட்களில் அவர் கொல்லப்பட்டார் (அதில் சி.ஐ.ஏ.வின் கைகள் இருந்தன என்பது உண்மை).
இருப்பினும் முதலாவது கொலை முயற்சி தோல்விதான்.
கொங்கோ நாட்டு ஜனாதிபதியாக இருந்த லுமும்பாவை மேலே அனுப்பி வைக்க செய்யப்பட்ட ஆபரேஷன்தான், சுமாரான வெற்றி!
‘சுமாரான வெற்றி’ என்றால், அவர் சி.ஐ.ஏ.வின் கைகளால் சாகவில்லை. கொன்றவர்களின் கைகளுக்கு அவரை அனுப்பி வைத்தது, சி.ஐ.ஏ.தான்!
ட்ரூஜிலோ கொலை முயற்சி ஆபரேஷன் சிறியது என்பதால், முதலில் அதை பார்க்கலாம்.
அலன் டுலஸ் சி.ஐ.ஏ.வின் தலைவராக இருந்த காலத்தில், சில வெளிநாட்டு தலைவர்களை மேலே அனுப்பவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அப்போது உயரதிகாரியாக இருந்த யாருமே இந்த ஆபரேஷன்களுக்கு சரியான நபராக இல்லை என்பது டுல்லஸ்ஸின் நினைப்பாக இருந்தது
இறுதியாக பலத்த சிந்தனையின் பின் அலன் தேர்ந்தெடுத்த நபர் – டிக் பிஸ்ஸல்.
பிஸ்ஸல் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம், அவர்தான் சி.ஐ.ஏ.வின் முதலாவது உளவு விமானம் U-2வை வடிவமைக்கும் வேலைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்தவர். அந்த வேலைதிட்டத்தில் அவர் இறக்கிவிடப்பட்டபோது, அவருக்கு விமானங்கள் பற்றி இருந்த அறிவு பூச்சியம். அப்படியிருந்தும், சி.ஐ.ஏ.வின் முதலாவது உளவு விமானம் வானில் பறந்தது, அவரால்தான்!
‘விமானம் என்றால் வானில் பறக்கும்’ என்பதைத்தவிர வேறு எதுவுமே தெரியாமல் இருந்த ஒருவரிடம், சி.ஐ.ஏ.யின் முதலாவது ரகசிய உளவு விமானத்தை வடிவமைக்கும் ஆபரேஷன் கொடுக்கப்பட்ட அந்த விவகாரத்தை கடந்த 2011-ம் ஆண்டு விறுவிறுப்பு.காமில் தொடராக எழுதியிருந்தோம்.
நீங்கள் 2011-க்கு பின் விறுவிறுப்பு.காம் வாசகராக இணைந்திருந்தால், ஒருவேளை அதை தவற விட்டிருக்கலாம். தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
பிஸ்ஸலை வைத்து, வெளிநாட்டு தலைவர்களை கொல்லும் ஆபரேஷனை ஏன் சி.ஐ.ஏ. செய்தது?
காரணம், சி.ஐ.ஏ.வை பொறுத்தவரை, ஒரு நாடு கம்மியூனிசத்தின் பக்கம் சாய்கிறது என்றால், முடிந்தவரை எந்த வகையிலாவது தடுத்து நிறுத்த பார்க்கும். அந்த முயற்சி முடியாவிட்டால், நாட்டை கம்மியூனிசத்தின் பாதையில் (அது வலதாகவும் இருக்கலாம் இடதாகவும் இருக்கலாம்) கொண்டுபோகும் தலைவரை மேலே அனுப்பத் திட்டம் போட்டுவிடும்.
இந்த வகையில்தான், டொமினிகன் ரிப்பப்ளிக் நாட்டின் ஜனாதிபதி ட்ரூஜிலோ மீது கண் வைத்து சி.ஐ.ஏ.
இது நடந்த காலத்தில் ட்ரூஜிலோ டொமினிகன் ரிப்பப்ளிக் நாட்டை நீண்ட காலமாக (30 வருடங்கள்) ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவரது ஆட்சியில் அவர் செய்த பெரிய சாதனை என்ன தெரியுமா? நாட்டிலுள்ள 70 சதவிகித வேளாண்மை நிலங்களைத் தனக்குச் சொந்தமாக்கியது.
இந்த 70 சதவிகித விளைநிலங்களில்தான் டொமினிகன் ரிப்பப்ளிக் நாட்டின் பிரதான ஏற்றுமதிக்கான பயிர் பயிராக்கப்பட்டது - கரும்பு (சர்க்கரை உற்பத்தி)
நாட்டிலுள்ள நிலங்களையெல்லாம் ட்ரூஜிலோ தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதை பலர் எதிர்த்தார்கள். தன்னை எதிர்ப்பவர்களை அவர் கையாளும் விதமே அலாதியானது.
தலைநகர் சான்டோ டொமிங்கோ நகருக்கு அருகே ஒரு ஆறு இருந்தது. அதன் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில், பலத்த கட்டுக் காவலுடன் வைத்திருந்தார். ஆற்றின் இந்தப் பகுதிக்குள் பெரிய சுறாக்கள் இருந்தன.
டொமினிகள் ரிப்பப்ளிக்கில் இந்த ஆற்றுப் பகுதியை ‘ட்ரூஜிலோவின் ஸ்விமிங் பூல்’ என்று சொல்வார்கள்.
தன்னை எதிர்ப்பவர்களை கைது செய்து இந்த ஸ்விம்மிங் பூலுக்கு அனுப்பி வைத்துவிடுவார் அவர்.
கைதான ஆட்கள் கைவிலங்கு பூட்டப்பட்ட நிலையில் ஸ்விம்பிங் பூலுக்குள் தூக்கி எறியப்படுவார்கள். சுறாக்களுக்கு உணவு அவர்கள்தான்!
இவரது இந்த நடவடிக்கை கம்மியூனிசத்துக்கு முதற்படி என்று அமெரிக்க ராஜாங்க அமைச்சு நினைத்து. உடனே இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கும்படி சி.ஐ.ஏ. கேட்டுக் கொள்ளப்பட்டது.
1960-ம் ஆண்டு இலையுதிர் காலத்தில், டொமினிகன் ரிப்பப்ளிக் நாட்டிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்த அமெரிக்கத் தூதர், ஜோசப் பார்லன்ட்.
இவரை தொடர்புகொண்ட சி.ஐ.ஏ., “நாட்டில் ஜனாதிபதிக்கு எதிராக உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஒரு அமைப்பாக, அல்லது இயக்கமாக உள்ளார்களா? உடனே அறிந்து தகவல் தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டது.
ஜனாதிபதியை எதிர்ப்பவர்கள் அவ்வப்போது சுறாக்களின் வாய்களுக்குள் போய் விடுவதால், ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்க தூதரிடம் யாரும் வாய் திறக்க மறுத்தார்கள்.
ஒருவழியாக சல்லடை போட்டு தேடி, டொமினிகன் ரிப்பப்ளிக்கில் அரசுக்கு எதிராக ரகசியமாக இயங்கும் ஒரு ‘புரட்சி இயக்கம்’ இருப்பதை தெரிந்து கொண்டார். அவர்களுடன் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டார்.
புரட்சி இயக்கத்தை சேர்ந்தவர்களை எப்படி சந்திப்பது? அமெரிக்க தூதர் கரும்பு தோட்டங்களுக்குள் போய் அவர்களை சந்திக்க முடியாது. அவர்களை, தூதரகத்துக்கு வர வைக்க வேண்டும்.
அமெரிக்க தூதர் ஜோசப் பார்லன்ட் அதற்கு போட்ட திட்டம் என்னவென்றால், புரட்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள், அமெரிக்க விசா எடுக்க வருபவர்கள் போல அமெரிக்கத் தூதரகத்துக்கு வரவேண்டும்.
அமெரிக்க விசாவுக்கு நேர்முகத் தேர்வு செய்வதாக போக்கு காட்டி கொண்டு, அமெரிக்க தூதர் அவர்களுடன் பேசுவார்.
இந்த ஏற்பாடு, புரட்சி இயக்கத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் அவ்வப்போது சில ‘கரும்பு விவசாயிகள்’, அமெரிக்க விசா விண்ணப்பிக்க தூதரகத்துக்கு வந்து போக தொடங்கினார்கள். அங்கே அமெரிக்கத் தூதரைச் சந்தித்து, ஆட்சி கலைப்பின் அவசியம் பற்றிப் பேசுவார்கள்.
இந்த விபரம், சி.ஐ.ஏ.வின் தலைமையகத்தில் இருந்த பிஸ்ஸலுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அந்த புரட்சி இயக்கத்தினரை வைத்தே ஜனாதிபதி ட்ரூஜிலோவை மேலே அனுப்பத் திட்டமிட்டார் பிஸ்ஸல். உடனே ரகசியக் குறிப்பு ஒன்று அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.

“புரட்சி இயக்கத்தினருக்கு துப்பாக்கிகளை கையாள தெரியுமா என விசாரியுங்கள்
“ஜனாதிபதி ட்ரூஜிலோவுக்கு எதிரான புரட்சி இயக்கத்தினருக்கு துப்பாக்கிகளை கையாள தெரியுமா என விசாரியுங்கள்” என்ற தகவல் சி.ஐ.ஏ. தலைமையகத்தில் இருந்து அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பதுடன் கடந்த பாகத்தை முடித்திருந்தோம். (அதை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்யவும்)
அமெரிக்க தூதர் விசாரித்தபோது புரட்சி இயக்கத்தினர், “ட்ரூஜிலோவின் பாதுகாப்பு படையில் இருந்து விலகி வந்த சிலர் எங்களது இயக்கத்தில் உள்ளார்கள். அவர்களால், எமது இயக்க உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்க முடியும்.
ஆனால், ஆயுதங்கள்தான் இல்லையே. ஆயுதங்கள் மட்டும் எமது கைகளில் கிடைத்தால், ஜனாதிபதியை கொன்றுவிட்டு, நாட்டை கைப்பற்றி விடுவோம்” என்றார்கள்.
இந்த தகவல், சி.ஐ.ஏ.வுக்கு போனது. “அப்படியானால், இந்த இயக்கத்துக்கு நாமே ஆயுதங்களை கொடுத்து வளர்த்து விடலாம். இவர்கள் மூலமாக ஆட்சி மாற்றம் வரட்டும்” என்றார் பிஸ்ஸல். “என்ன வகையான ஆயுதங்கள் தேவை என்று விசாரியுங்கள்” என அமெரிக்க தூதருக்கு தகவல் போனது.
செப்டெம்பர் 1960-ல் புரட்சி இயக்கத்தினர் தங்களுக்கு 12 செமி-ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள், 500 ரவுன்ட் தோட்டாக்களும் கொடுக்கும்படி கேட்டார்கள். இந்தத் தகவல் தூதரகத்தில் இருந்து பிஸ்ஸலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு அதிகாலை நேரத்தில், இந்த புரட்சி இயக்கத்தினர் குறிப்பிட்ட இடத்தில், விமானம் மூலமாக இந்த துப்பாக்கிகளை கீழே போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
M1-கார்பைன் (M1 carbine) துப்பாக்கிகள் பன்னிரெண்டும், 500 ரவுன்ட் தோட்டாக்களும் ஒரு பெட்டியில் வைத்து, விமானத்தில் இருந்து தரையில் போடப்படும் விட்டன.
ஆனால், ட்ரூஜிலோவுக்கு எதுவும் ஆகவில்லை. அவர்மீது கொலை முயற்சி தாக்குதல் ஏதாவது நடந்ததாக தகவல்கூட இல்லை.
புரட்சிப் படையினர் அடுத்த தடவை ‘அமெரிக்க விசா விண்ணப்பிக்க’ வந்து அமெரிக்க தூதரை சந்தித்த போது, கீழே போடப்பட்ட துப்பாக்கிகளை எடுக்க சென்ற புரட்சி படையின் ஆட்கள் ராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்ட விஷயம் தெரியவந்தது.
மொத்தம் 7 பேர் ஸ்விமிங் பூலுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள் என சோகத்துடன் தெரிவித்தனர், வந்த இயக்க உறுப்பினர்கள்.
“ஆயுதங்கள் புரட்சி படையினரின் கைகளுக்கு போய் சேரவில்லை” என்ற தகவல் சி.ஐ.ஏ.வுக்கு அனுப்பப்பட்டது.
அதன் பின்னர் அக்டோபர் மாதத்தில் மற்றுமோர் கோரிக்கை தூதரகத்தில் இருந்து சி.ஐ.ஏ.வின் தலைமையகத்துக்கு வந்தது. இம்முறை 200 துப்பாக்கிகளும் 10,000 ரவுன்ட் தோட்டாக்களும் தேவைப்படுகிறது என்றார்கள்!
முதல் தடவை விமானம் மூலம் அனுப்பப்பட்டு அவை அகப்பட்டு கொண்டதால், இம்முறை அவற்றை படகு ஒன்றின் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தார் பிஸ்ஸல்.
கரிபியன் கடல் மூலம் சென்ற சி.ஐ.ஏ.வின் வேகப் படகுகள், தலைநகர் சான்டோ டொமிங்கோவுக்கு கிழக்கே ‘லா-ரொமானா’ (La Romana) என்ற கடற்கரையை அடைந்தன. முன்னேற்பாட்டின்படி, புரட்சி படையின் ஆட்கள் அந்த கடற்கரையில் சி.ஐ.ஏ. படகுகளுக்காக காத்திருந்து, படகுகளுக்கு சிக்னல் கொடுத்தனர்.
அவர்களிடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டனஇம்முறை துப்பாக்கிகளை எடுக்க வந்தவர்கள், அவற்றைப் பத்திரமாக கரும்பு ஏற்றிச் செல்லும் ட்ரக் ஒன்றில் ஏற்றிக்கொண்டு செல்வதை கண்களால் பார்த்து விட்டுத்தான் திரும்பினார்கள் படகில் சி.ஐ.ஏ. அனுப்பிய ஆட்கள்.
“துப்பாக்கிகள் பத்திரமாக போய்விட்டன” என்று பிஸ்ஸலுக்கு தகவலும் அனுப்பினார்கள்.
அதன் பிறகும் ட்ரூஜிலோ கொல்லப்பட்டார் என்ற தகவல் சி.ஐ.ஏ.வுக்கு வரவில்லை. மாறாக, வேறு ஒரு தகவல் வந்தது – “300 துப்பாக்கிகளும் 15,000 ரவுன்ட் தோட்டாக்களும் தேவை!”
இப்படியே 1961-ம் ஆண்டு ஜனவரி வரை டொமினிகன் ரிப்பப்ளிக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து தகவல் வருவதும், சி.ஐ.ஏ.விடம் இருந்து துப்பாக்கிகளும் தோட்டாக்களும் செல்வதுமாக நடந்து கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில், ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கிகள் போய்விட்ட நிலையில், பிஸ்ஸலுக்கு ஒரு சந்தேகம் வந்தது – “டொமினிகள் ரிப்பப்ளிக் நாடே ஒரு சிறிய தீவு. அங்கே ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளை பயன்படுத்தும் அளவில் புரட்சிப் படையிடம் ஆயிரக் கணக்கான ஆட்கள் இருக்கிறார்களா?”
அதன் பின்னர்தான் சி.ஐ.ஏ. விழித்துக் கொண்டது. டொமினிகள் ரிப்பப்ளிக்கில் என்னதான் நடக்கின்றது என்று தெரிந்துகொள்ள தமது உளவாளிகளை உல்லாசப் பயணிகள் போல அனுப்பி வைத்தது.
சி.ஐ.ஏ. அனுப்பி வைத்த ‘உல்லாசப் பயணிகளிடம்’ இருந்து வந்த தகவல் தலைசுற்ற வைக்கும் தகவலாக இருந்தது.
அது என்ன?
ஜனாதிபதி ட்ரூஜிலோவின் ஸ்விமிங் பூலைச் சுற்றி காவல் இருந்த ராணுவத்தினரின் கைகளில், புத்தம்புதிய அமெரிக்கத் துப்பாக்கிகள் டாலடித்தன!
அத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் சி.ஐ.ஏ., பேசாமல் முகத்தை துடைத்துக் கொண்டு அடுத்த காரியத்தில் இறங்கியிருக்கலாம். ஓரிரு தினங்களில், அமெரிக்க தூதரிடம் இருந்து கடிதம் ஒன்று, ‘டொமினிகன் ரிப்பப்ளிக் அரசு அதிகாரிகள் கொடுத்தனர்’ என்ற குறிப்புடன், சி.ஐ.ஏ. தலைமையகத்துக்கு வந்தது.
அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்தான், பிஸ்ஸலை கொதிப்படைய வைத்து, பல நாட்களாக அவரை தூங்க விடாமல் செய்தது.
அப்படி என்ன எழுதப்பட்டிருந்தது?
“துப்பாக்கிகளுக்கு நன்றி. மேலும் ஆயுதங்கள் தேவைப்பட்டால், ‘விசா எடுக்க ஆட்களை’ அனுப்பி வைக்கிறோம். அல்லது, உங்கள் ‘உல்லாசப் பயணிகளிடம்’ துப்பாக்கிகளை கொடுத்து அனுப்புங்கள். வாங்கிக் கொள்கிறோம்” என்ற வாக்கியங்களுக்கு கீழ், ‘ராஃபெல் ட்ரூஜிலோ’ என ஜனாதிபதியே கையொப்பம் இட்டிருந்தார்.
இத்துடன் இந்த விவகாரத்துக்கு நாம் ‘முற்றும்’ போட்டிருக்கலாம். சி.ஐ.ஏ.வுக்கு அல்வா கொடுத்த கதை, இத்துடன் முடிந்தது.
ஆனால், சி.ஐ.ஏ.வுக்கு ‘கோபம் வந்தால்’ என்னாகும் என்பதை தெரிந்து கொள்ள விருப்பமா? கீழேயுள்ள ‘பின்குறிப்பை’ பார்க்கவும்.
பின்குறிப்பு:
சி.ஐ.ஏ.வுக்கு வந்து சேர்ந்த கடிதத்தில் எழுதப்பட்டது போல, மேலதிக ஆயுதங்களை பெற ஜனாதிபதி ட்ரூஜிலோ அதிக நாள் உயிருடன் இருக்கவில்லை!
இந்த சம்பவம், 1961-ம் ஆண்டு ஆரம்பத்தில் நடந்தது என எழுதியிருந்தோம் அல்லவா?
அதே ஆண்டு மே மாதம் 30-ம் தேதி. செவ்வாய்க்கிழமை.
ஜனாதிபதி ட்ரூஜிலோ, தமது நீல நிற ஷெவலே காரில் சென்று கொண்டிருந்தபோது, சுட்டுக் கொல்லப்பட்டார்!
அவரை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்ன தெரியுமா?
மூன்று M1-கார்பைன் செமி-ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள்! ஆம். ‘புரட்சி இயக்கம்’ என்று நம்பி சி.ஐ.ஏ. கொடுத்து ஏமாந்த, அதே ரக துப்பாக்கிகள்!
அதே ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி, ஜனாதிபதி ட்ரூஜிலோவை சி.ஐ.ஏ.பழிவாங்கியதா?
பின்னணி தடயம் இல்லாமல் செய்யப்பட்ட கொலை இது. “இந்த கொலையில் எமக்கு தொடர்பு கிடையாது” என உடனடியாகவே, அடித்துக் கூறிவிட்டது சி.ஐ.ஏ.
ஆனால், கொலை நடந்து 12 ஆண்டுகளின் பின், 1973-ம் ஆண்டு, அமெரிக்க செனட் பாதுகாப்பு கமிட்டியில் சி.ஐ.ஏ. தாக்கல் செய்த ‘பேமிலி ஜூவல்ஸ்’ ஆவணத்தின் (CIA Family Jewels Memo, 1973), 434-ம் பக்கத்தில், இந்தக் கொலையில் சி.ஐ.ஏ.வுக்கு ‘சற்றே நெருக்கமான தொடர்பு’ உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது!
அது, ‘எவ்வளவு நெருக்கம்’ என்பதை, சி.ஐ.ஏ.விடம்தான் கேட்க வேண்டும்.
ஆபிரிக்க நாடான கொங்கோவில் அதன் அதிபர் லுமுப்பாவைக் கொல்லும் திட்டம் வேறு ஒரு விதமான சுவாரசியத்துடன் நடைபெற்றது.
கொங்கோ நாட்டு ஜனாதிபதி லுமூம்பாவை கொலை செய்வதற்கு சி.ஐ.ஏ. போட்டிருந்த திட்டமும், அதை செயற்படுத்த செய்த வேலைகளும் ஒரு த்ரில்லர் சினிமாபோல சுவாரசியமானவை. அமெரிக்கா போன்ற ஒரு நாட்டின் உளவுத்துறை, வெளி நாடு ஒன்றின் தலைவரைக் கொலை செய்யத் திட்டமிட்டது என்பது நம்புவதற்கு கடினமான விஷயம்தான்.
ஆனால், இந்தச் சம்பவம் பின்னாட்களில் அமெரிக்க உளவுத்துறையாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள்.
1960-ம் ஆண்டு இலைதளிர் காலம்.
ஆபிரிக்க நாடான கொங்கோ அதுவரை பெல்ஜியத்தின் ஆதிக்கத்தில் காலனி நாடாக இருந்து சுதந்திரம் பெற்றது. அந்த வருடத்தில் மட்டும் பல ஆபிரிக்க நாடுகளுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் 1960-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற 16-வது ஆபிரிக்க நாடு கொங்கோ.
சுதந்திரம் கொடுக்கப்பட்டு விட்டதே தவிர, உடனடியாக நாட்டை நிர்வாகம் செய்வதற்கு கொங்கோவின் பிரஜைகள் தயாராக இல்லை. காரணம் படிப்பறிவு இல்லை. 1960-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது முழு நாட்டிலுமாகச் சேர்த்து மொத்தம் 20 பேர்தான் ஓரளவுக்காவது உயர்கல்வி பெற்றவர்கள் இருந்தார்கள்.
அந்த 20 பேருள் ஒருவராக இருந்து, பிரதமர் ஆனார் பட்ரிஸ் லுமூம்பா.
நாட்டில் சுதந்திரம் பெற்று இரண்டாவது வாரமே பெரிய ராணுவ அட்டகாசம் நடைபெற்றது. படிப்பறிவற்ற ராணுவத்தினர் கண்ணை மூடிக்கொண்டு ஐரோப்பியரைச் சுடுகிறோம் என்று சுட்டதில், அருகே நின்ற கொங்கோ நாட்டுப் பிரஜைகளில் பலரும் உயிரிழந்தார்கள்.
இப்படியொரு சம்பவம் நடைபெற்றவுடன், அமெரிக்கா கொங்கோ நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட முடிவு செய்தது.
காரணம் என்னவென்றால், கொங்கோ நாட்டில் உள்ள கட்டாங்கா என்ற மாகாணத்தில், நிலத்துக்கு கீழே விலை மதிப்பற்ற தாதுப் பொருட்கள் இருந்தன. அவ்வளவு காலமும் கொங்கோ, பெல்ஜியம் நாட்டின் காலனி நாடாக இருந்த காரணத்தால், அமெரிக்கா பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தது.
பெல்ஜியம் சுதந்திரம் கொடுத்துவிட்டு அந்தப் பக்கமாகப் போய்விட, இந்தப் பக்கமாக உள்ளே நுழைய விரும்பியது அமெரிக்கா.
அதுமாத்திரமல்ல, அமெரிக்கா உள்ளே நுழையாவிட்டால் ரஷ்யா உள்ளே நுழைந்து விடக்கூடிய அபாயமும் இருந்தது.
கொங்கோவின் மூன்று வாரப் பிரதமரை வாஷிங்டனுக்கு அதிகாரபூர்வ விஜயம் ஒன்றைச் செய்ய வருமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்தது.
அந்த அமெரிக்க விஜயத்தின் போதுதான் பிரதமர் லுமூம்பாவுக்கும் தலையெழுத்து மாறியது.
வழமையாக மற்ற நாடுகளிலிருந்து வரும் அரசு தலைவர்களைப்போல நாகரீகமான நபர் ஒருவர் வந்து சேர்வார் என்று அமெரிக்கர்கள் எதிர்பார்த்திருக்க, கோட் சூட் அணிந்த ‘காட்டு மனிதன்’ போல போய் வாஷிங்டனில் இறங்கினார் லுமூம்பா (மேலேயுள்ள போட்டோவில், ஆதரவாளர்கள் கைகளில் லுமூம்பா).
லுமூம்பாவின் அட்டகாசத்தை அமெரிக்க வெள்ளை மாளிகையால் தாங்க முடியவில்லை. 24 மணிநேரமும் போதையில் இருந்தார் லுமூம்பா.
அத்துடன் அவர் அமெரிக்க ஜனாதிபதி உட்பட யாருக்கும் மரியாதை கொடுத்துப் பேசத் தயாராக இல்லை. ஜனாதிபதியின் முதுகில் அவ்வப்போது ஒரு அடி போட்டுவிட்டு, வாய்விட்டு சிரித்தார். அருகே இருந்த அமெரிக்க அதிகாரிகள் திருதிருவென விழித்தனர்.
வெள்ளை மாளிகையின் விருந்தினர் விடுதியான பிளையர் ஹவுஸில் தங்க வைக்கப்பட்டிருந்த லுமூம்பா, ஒரு நாள் நள்ளிரவில் திடீரென காட்டுக் கத்தல் போட்டார். ஓடிப்போய் என்னவென்று கேட்டால் தனக்கு உடனடியாக வெள்ளைக்கார விலைமாது ஒருவரை அனுப்புங்கள் என்றார்.
“இவருடன் சகவாசம் வைத்துக் கொள்வது இயலாத காரியம்” என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்.
லுமூம்பாவை “ஒரு பைத்தியக்கார மிருகம்” என்றார் சி.ஐ.ஏ.வில் வெளிநாட்டு ஆபரேஷன்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த பிஸ்ஸல்
ஒரு வழியாக ஆளை மீண்டும் கொங்கோ நாட்டுக்குத் திருப்பி அனுப்பினார்கள். அதன்பின் ஜூலை 21-ம் தேதி 1960ம் ஆண்டு அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூடியது.
அதில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு “கொங்கோவில் அமெரிக்கா ஏதாவது செய்யாவிட்டால், இந்த பைத்தியக்கார மனிதர் ரஷ்யாவின் பக்கமாக சாய்ந்து விடுவார். ஆபிரிக்காவில் கம்மியூனிசம் காலூன்றத் தொடங்கிவிடும்” என்றார்.
அதையடுத்து, கொங்கோ நாட்டை அமெரிக்காவின் தீவிர கண்காணிப்பில் சிறிதுகாலம் வைத்திருப்பது என்று தீர்மானிக்கப்பட்டது இந்தக் கூட்டத்தில்.
அடுத்த சில வாரங்கள் கொங்கோவைத் தொடர்ந்து கண்காணித்ததில், அங்கே ரஷ்ய உளவுத்துறையின் ஆட்கள் நடமாடுவதும், லுமூம்பா ரஷ்யர்களுடன் ஏதோ பேசித் திட்டம் போடுவதும் சி.ஐ.ஏ.வுக்கு தெரியவந்தது. அந்த அறிக்கைகள் எல்லாம் அலன் டுல்லஸில் கைகளில் கிடைத்தபோது, பாதுகாப்பு கவுன்சிலின் அடுத்த கூட்டம் கூட்டப்பட்டது.
இது நடைபெற்றது 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி.
இந்தக் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள், எடுத்த தீர்மானங்கள் அடங்கிய ‘மினிட்ஸ் குறிப்புக்கள்’, 1960-களில் ‘கிளாசிபைட் ஆவணங்கள்’ என சகசியமாக வைக்கப்பட்டன. பின்னாட்களில் (1980களில்) அவை ‘அதி ரகசியம்’ பிரிவில் இருந்து நீக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
இந்த ஆவணம் பற்றி எதற்காக குறிப்பிடுகிறோம் என்றால், அந்த பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் “கொங்கோ பிரதமரை மேலே அனுப்பி வையுங்கள்” என அமெரிக்க ஜனாதிபதி எய்சன்ஹோவர் (Dwight D. Eisenhower) உத்தரவிட்டது, அன்றைய கூட்டத்தின் ‘மினிட்ஸ் குறிப்புக்களில்’ பதிவாகியுள்ளது.
வெளிநாட்டுப் பிரதமர் ஒருவரை கொலை செய்வதற்காக பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக முடிவு எடுக்கப்பட்டதும், அதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி கொடுத்ததும் அமெரிக்க வரலாற்றிலேயே அதுதான் முதற்தடவை.
(அதற்கு முன்னர் நடைபெற்ற சில அரசியல் கொலைகள் சி.ஐ.ஏ. தலைமை மட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டவை. அவற்றிற்கு அமெரிக்க ஜனாதிபதியின் ஒப்புதல்கள் வாய் வார்த்தையாக கொடுக்கப்பட்டதே தவிர, இது போல எழுத்து மூலம் பதிவு கிடையாது”
அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கோர்டன் கிரே, “கொங்கோ நாட்டின் பிரதமரை ‘அகற்றுவது’ தேசிய பாதுகாப்புக்கு உகந்தது” என்ற அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை பதிவு செய்து கொண்டார்.
அன்றைய தின பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ், “கொங்கோ பிரதமரை கொல்ல வேண்டும்” என்ற உத்தரவை தமது கைப்பட எழுதி, வெளிநாட்டு ஆபரேஷன்களுக்கு பொறுப்பாக இருந்த பிஸ்ஸெலிடம் கொடுத்தார்.
“கொங்கோ நாட்டில் கம்மியூனிசம் கால் வைக்காது இருக்கவும், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைளுக்கு அமைய தேசிய நலனைக் காக்கவும், கொங்கோவின் அரசு தலைவரை (லுமூம்பாவை) அகற்றுவது என்பதை முயன்று பார்க்கவும்” என்றது சி.ஐ.ஏ. தலைவர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவு.
இந்த உத்தரவின் நேரடி அர்த்தம் என்ன என்பது பிஸ்ஸலுக்குப் புரிந்தது.
‘அகற்றுவது’ என்றால் கொலை செய்வது என்று அர்த்தம். ‘முயன்று பார்க்கவும்’ என்பதன் அர்த்தம் – உடனே செய்யுங்கள்.
விஞ்ஞானி டாக்டர் சிட்னி கொட்லிப்
விஞ்ஞானி டாக்டர் சிட்னி கொட்லிப்
உத்தரவு கிடைத்து இரண்டு வாரங்களுக்கு உள்ளேயே ஏற்பாடுகளை தொடங்கிவிட்டார் பிஸ்ஸல். சி.ஐ.ஏ.வின் நம்பிக்கைக்குரிய விஞ்ஞானி டாக்டர் சிட்னி கொட்லிப்பை (Sidney Gottlieb – அருகேயுள்ள போட்டோ பார்க்கவும்) அணுகினார் பிஸ்ஸல்.
“பெயர் குறிப்பிட முடியாத ஆபிரிக்கத் தலைவர் ஒருவரை கொலை செய்வதற்காக விஷம் தயாரிக்க வேண்டும். இதற்கான உத்தரவு ‘அதி உயர் மேலிடத்தில்’ இருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது” என்று விஞ்ஞானி கொட்லிப்புக்கு கூறினார் பிஸ்ஸல்.
‘அதி உயர் மேலிடம்’ என்றால், அமெரிக்க ஜனாதிபதி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டார் விஞ்ஞானி.
அடுத்த கட்டமாக சரியான விஷத்தைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கினார் கொட்லிப். கொலை முயற்சி ஆபிரிக்காவில் நடைபெறப்போகின்றது என்பதால் அந்தப் பகுதியில் சரியாக வேலை செய்யக்கூடிய விஷமாக இருக்க வேண்டும்.
(குறிப்பிட்ட சில விஷங்கள், உதாரணமாக பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷங்கள் ஆபிரிக்காவில் சரியாக வேலை செய்யாது. காரணம் மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் தேள் மற்றும் பாம்புக்கடி விஷங்கள் அநேக ஆபிரிக்கர்களின் உடல்களில், ஓரிரு நாட்களுக்கு காய்ச்சலை மட்டும் ஏற்படுத்தும் அதன்பின் விஷம், நியூட்ரலைஸ் ஆகிவிடும்)
இறுதியில் ஆபிரிக்கர்களின் உடல்களை பாதிக்க கூடிய மூன்று விஷங்களை தேந்தெடுத்தார் விஞ்ஞானி கொட்லிப்.
அவை – முயல் காய்ச்சல் கிருமிகள், அந்திரெக்ஸ், தூக்க வியாதியை ஏற்படுத்தும் வைரஸ்.
இறுதித் தேர்வாக, கொங்கோ பிரதமர் லுமூம்பாவை கொல்வதற்கு ‘முயல் காய்ச்சல் (Rabbit Fever அல்லது Tularemia) கிருமிகள்’ தேர்ந்தெடுக்கப்பட்டது.
“இந்த கிருமிகளை டியூப் ஒன்றில் அடைத்து தருவோம். அவற்றை ஊசி மூலமாக லுமூம்பாவின் உணவிலோ அல்லது டூத்பேஸ்ட்டிலோ சேர்க்க வேண்டும்” என்று சி.ஐ.ஏ.வின் வெளிநாட்டு ஆபரேஷன் பொறுப்பாளர் பிஸ்ஸல்லிடம் கூறினார், விஞ்ஞானி கொட்லிப். (தொடரும்)