
யுத்தத்தை நிறுத்த பிரபாகரன் ஒப்புக்கொள்ளவில்லை: ப.சிதம்பரம்
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்’ என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதியதலைமுறை டி.வி.யில் இடம்பெற்ற நிகழ்சியொன்றில் பேசிய போதே அமைச்சர் சிதம்பரம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
‘இன்றைய அரசியல் நிலை, சிவகங்கை தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தமிழக அரசின் தடை, லோக்சபா தேர்தல் கூட்டணி, ராஜீவ் படுகொலை, இலங்கை இறுதிக்கட்டப் போர் நிலவரம் பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
‘இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் நிறுத்தவில்லை. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஒரே பிடிவாதத்துடன் போராடினார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘போரை நிறுத்துமாறு இந்தியா இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும் இரண்டு தரப்பினரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போரை நிறுத்தச் சொல்லி பிரபாகரனிடம் இந்திய அரசாங்கம் எவ்வளவு சொல்லியும் கடைசிவரை அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மரணமடைய நேரிட்டது. இந்தியா சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்’ என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
‘மீனவர்கள் பிரச்சினையில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், இருதரப்பு மீனவர்களையும் அழைத்துப் பேசவும் இந்திய அரசு தயாராகவே உள்ளது. ஆனால் தமிழக அரசு அதற்கு தயாராகவில்லை. அதற்கான திகதியை இன்னமும் குறிப்பிடவில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை முடிந்து தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. விசாரிக்கப்பட வேண்டியவர்கள் இன்னமும் இருக்கிறார்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம்,
‘தற்போதைக்கு நிலவும் கருத்துக்கள் வாக்குமூலங்கள் அல்ல. பிற்காலத்தில் எழுந்த சிந்தனைகள். அவர்கள்தான் வழக்கைத் தொடர்ந்தார்கள். கார்த்திக்கேயன்தான் கருத்து சொல்ல வேண்டும். என்னால் கருத்துச் சொல்ல முடியாது’ என்றார்.
‘விசாரணையில், தீர்ப்பில், சந்தேகம் உள்ளது என்ற பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்து மறு விசாரணை நடத்தக் கோர வேண்டும். நிராபராதி என்று வரும் பட்சத்தில் அதை அரசு ஏற்றுக்கொள்ளும். அதற்காகத்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றும் அமைச்சர் சிதம்பரம் மேலும் கூறியுள்ளார்.