பெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர் கடுமையான வெயிலில் நடந்து வந்தார். தாகம் அவரை வாட்டியது. அருகில் இருந்த ஊர் ஒன்று அவருக்குத் தெரிந்தது. அங்கே சென்ற அவர் ஒரு வீட்டின் முன் நின்றார்.
""அம்மா தாயே! தாகமாக இருக்கிறது. தண்ணீர் கொடுத்தால் குடித்துவிட்டுச் செல்வேன்,'' என்று குரல் கொடுத்தார்.
பெண்மணி ஒருத்தி வெளியே வந்தாள். ""ஐயா! சிறிது நேரம் பொறுமையாக இருங்கள். குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்,'' என்று இனிமையாகச் சொன்னாள் அவள். ஒரு குடத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
நேரம் சென்று கொண்டே இருந்தது. அவள் வரும் அறிகுறியே தெரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்தார் கோபோ. "நான் யார் என்பதை அறியாமல் என்னிடமே விளையாடுகிறாளா? அவள் வரட்டும் நான் யார் என்பதை அவளுக்குக் காட்டுகிறேன்,'' என்று உள்ளுக்குள் பொறுமினார்.
இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் மெல்ல நடந்து வந்தாள் அவள். வீட்டிற்குள் சென்ற அவள், ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் வந்தாள். அதை அவரிடம் நீட்டினாள்.
""தண்ணீர் கொண்டு வருவதற்கா இவ்வளவு நேரம்?'' என்று கோபத்துடன் கேட்டார் கோபோ.
""ஐயா! இங்கே அருகில் எங்கும் தண்ணீர் இல்லை. ஐந்து கல் தொலைவில் உள்ள குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்!''
அப்போதுதான் கோபோ அவளைக் கவனித்தார். வெயிலில் நடந்ததால் அவள் உடல் எங்கும் வியர்வை வழிந்தது. அவருடைய கோபம் போன இடம் தெரியவில்லை. "இந்த வெயிலில் ஐந்து கல் நடக்க வைத்து விட்டோமே' என்று வருந்தினார்.
""இதை ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?'' என்று கேட்டார்.
""ஐயா! மழை பெய்யாததால் இங்கே உள்ள கிணறுகளும், குளங்களும் வற்றிவிட்டன. ஐந்து கல் தொலைவில் உள்ள குளத்தில்தான் தண்ணீர் உள்ளது. நாங்கள் எல்லாரும் நாள்தோறும் அவ்வளவு தொலைவு சென்றுதான் தண்ணீர் எடுத்து வருகிறோம். நீங்கள் கேட்டபோது வீட்டில் தண்ணீர் இல்லை. அதனால்தான் அங்கே சென்று தண்ணீர் கொண்டு வந்தேன்!'' என்று பணிவுடன் சொன்னாள் அவள்.
அவள் தந்த தண்ணீரைக் குடித்தார். அவர் உள்ளம் குளிர்ந்தது.
""அம்மா! உங்கள் அன்பிற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உங்களால் இந்த ஊர் மக்கள் தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் வாழப்போகின்றனர்!'' என்றார் கோபோ.
அங்கேயே தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் அவர் உதடுகள் மந்திரங்களைச் சொல்லியபடி இருந்தன. தியானம் கலைந்து எழுந்தார். தன் கையில் இருந்த தடியால் தரையில் தட்டினார். என்ன வியப்பு! அங்கே தரை பிளவுபட்டு நீரூற்று ஒன்று வேகமாக வெளியே வந்தது.
""அம்மா! இந்த இனிமையான நீரூற்று என்றும் வற்றாது. நீங்களும் இந்த ஊர் மக்களும் வளமாக வாழ்வீர்கள்!'' என்று வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
குட்டீஸ்... ஒரே ஒரு பெண்ணின் உபசரிப்பு குணத்தால் அந்த கிராமமே ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதைப் பார்த்தீர்களா?
நீங்க எப்படி!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நெஞ்சார நேசிப்போம்
ஒரு துறவி, அவரிடம் வாழ்க்கை பற்றிய தெளிவை பெற இரண்டு இளைஞர்கள் வந்தனர். அப்போது துறவி, ""என்னிடம் போதனை பெறுவதற்கு முன் உங்கள் இருவருக்கும் சோதனை வைக்கிறேன். சம்மதமா?'' என்றார்.
இருவரும் ""சம்மதம்!'' என்றனர்.
""ஆளுக்கு ஒரு விதை தருகிறேன். அதை செடி ஆக்கி ஆறு மாதங்களுக்கு பின் பூக்கும் பூக்களை என்னிடம் எடுத்து வாருங்கள்!'' என்றார் துறவி.
ஆறு மாதங்கள் உருண்டோடின. இளைஞர்கள் இருவரும் துறவியிடம் திரும்பி வந்தனர். ஒரு சீடன் கையில் இரண்டே இரண்டு பூக்கள் மட்டுமே இருந்தன.
""இந்த இரண்டு பூக்கள் மட்டும்தானா?'' என்று கேட்டார் துறவி.
""ஆம் குருவே... நீங்கள் கொடுத்த விதையை பார்த்தேன். பார்த்தபோதே பழுதானது போல தெரிந்தது. பயிர் செய்த மண்ணும் சரியில்லை. அதனால், இந்த இரண்டு பூக்கள் மட்டும்தான் பூத்தன!'' என்றான் விரக்தியோடு.
அடுத்த இளைஞனை திரும்பிப் பார்த்தார் துறவி. அவன் கையில் நிறைய பூக்கள் இருந்தன. ""உன்னிடம் மட்டும் எப்படி இவ்வளவு பூக்கள்?'' என்றார்.
""குருவே! நீங்கள் கொடுத்த விதையை நான் நெஞ்சார நேசித்தேன். மண்ணை மனதார மதித்து போற்றினேன். தண்ணீர் ஊற்றும்போது அன்பையும் கலந்து ஊற்றினேன். மகிழ்ச்சி அடைந்த செடி எனக்கு ஏராளமான பூக்களை பரிசாக கொடுத்து மகிழ்ந்தது, மகிழ்வித்தது!'' என்றான்.
துறவி அந்த இளைஞர்கள் இருவரையும் அருகில் அழைத்து சொன்னார்.
""உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். இதுவே உங்களுக்கு நான் தரும் வாழ்க்கைப் பாடம்!'' என்றார் துறவி. ஒவ்வொரு உயிரியையும் நேசிப்போம்! ஒவ்வொரு பொருளையும் நேசிப்போம்!