தேடல் - 11
TKS.Tmilnanbargal.
பதிந்தவர் Sivaji dhasan
சொர்க்கத்திற்கு வந்து முதல் வெற்றியை ருசி பார்த்த வசந்தனுக்கு உள்ளமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது. காண்பதெல்லாம் மகிழ்ச்சியின் சாராம்சமாகத் தோன்றியது. கடல் அலைகளின் சீற்றம் வெகுவாகக் குறைந்து சாது அலைகள் மரக்கலத்தை மெதுவாக இழுத்துக்கொண்டு சென்றன. மரக்கலத்தின் முனையின் மேல் நின்றுகொண்டு மேற்குத் திசையில் இளம் மஞ்சள் நிறத்தில் தக தகவென்று மோகனக்கதிரை வீசியபடி இருந்த வானை நோக்கியபடி தன் இமைகளை மூடிக் கடல் அலைகளின் இன்னிசையை உற்றுக்கேட்டான்.
வசந்தன் பின்னால் அமர்ந்திருந்த செல்வம் அவன் அடைந்திருந்த மகிழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார். ஆனால், ஒன்று மட்டும் இன்னும் விளங்காத புதிராக இருந்தது. மரக்கலம் எப்படி அவனைத் தேடி வந்தது என்ற கேள்வி அவரின் உள்ளே உறுத்திக்கொண்டிருந்தது. இது வரை எத்தனையோ பேர்கள் கடலுக்கு இரையாகி இருக்கின்றனர். ஆனால், அவன் வென்றுள்ளது நிச்சயமாக அவரைப் பொறுத்தவரை அதிசயம். மற்றவர்களைப் பொறுத்தவரை ஆச்சர்யம். செல்வத்திற்கு வசந்தன் ஜெயித்தது, கோடிக்கணக்கான வருஷங்களுக்கு ஒரு முறை நிகழும் ஒரு சம்பவமாகத் தோன்றியது. அதைத் தனக்குள்ளாகவே பூட்டிக்கொண்டு சலனமில்லா முகத்தோடு கடலை நோக்கியபடி இருந்தார்.
வசந்தன் இமைகளை மூடியபடியே இருந்தான். கடல் அலையின் சிறு சிறு நீர் முத்துக்கள் அவன் முகத்தை வருடியபோதும் இமைகளைத் திறக்கவில்லை. எல்லாத் துன்பமும் மறைந்து இன்ப மலர்கள் சோலைகளாக அவன் பாதையில் முளைப்பதாய் எண்ணி புன்முறுவினான். பின்னர், இமைகளைத் திறந்து கடலை நோக்கினான். சிறு சிறு அலைகள் மறைந்து சலனமற்ற ஓர் இடத்தை நோக்கி மரக்கலம் சென்றுகொண்டிருப்பதைக் கண்டான். ராட்சத மின்னும் மீன்கள் எங்கோ தூரத்தில் குதித்து நீந்துவதைக் கண்டு அவன் மனதும் தானும் மீனாக மாறவேண்டும் என்று எண்ணியது. தன் மரக்கலத்தின் பின்னே வரும் எண்ணற்ற மரக்கலங்களை நோக்கினான். வசந்தனின் மரக்கலத்தை முந்துவதற்கு மற்ற மரக்கலங்கள் கடலைக் கிழித்துக்கொண்டும் அலைகளைத் தாண்டிக்கொண்டும் வருவதைக்கண்டு தன் மரக்கலத்தின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான்.
சில நாழிகைகள் கடந்தபின், "போதும் நிறுத்து! மெமோரியல் உலகம் வந்துவிட்டது!" என்றார் செல்வம் கடுமை நிறைந்த குரலில்.
"நிற்கட்டும் !" என்று சிறிது உரக்கக் கூறி மரக்கலத்தை நிறுத்தினான் வசந்தன்.
மெமோரியல் உலகம் எப்படி இருக்கும் என்ற ஆவலோடு நோக்கினான். அதில் ஏமாற்றமே மிஞ்சியது. கடலின் நடுவே ஒரு சிறிய சோலை நிறைந்த இடம் மட்டுமே இருந்தது. இதுவா மெமோரியல் உலகம் என்று சலிப்போடு தன்னையே கேட்டு நொந்துகொண்டான்.
செல்வம் மரக்கலத்திலிருந்து மறைந்து தரையினில் தோன்றினார். எப்படி அங்கு போனார் என்று திகைத்து, பின்பு இயல்பான மனநிலைக்குள் குடிபுகுந்தான். இவ்வுலகில் அதிசயங்கள் நிமிடத்திற்கு நூறுமுறை நடந்துகொண்டிருக்கின்றன. ஆச்சர்யப்பட்டு ஆச்சர்யப்பட்டு சலித்து விட்டதாய் சிறு சோர்வு அவன் கண்களைச் சுருக்கியது. செல்வம் சோலைக்குள் சென்று மறைந்து போனார். மற்ற மரக்கலங்களும் நின்று, அவர்களும் சோலைக்குள் சென்று மறைவதை வெறித்தபடி மேலே எழும்பி இருக்கும் நட்சத்திரக் கூட்டத்தையும் இருளால் கருமை நிறத்தில் கடல் மிதந்துகொண்டிருப்பதையும் அதனுள் சிப்பிகள் மின்னிக்கொண்டிருப்பதையும் கண்டான். எல்லோரையும் இறக்கிவிட்டு மற்ற மரக்கலங்களின் ஓட்டுனர்கள் வெவ்வேறு திசைகளில் சென்று மறைந்து போயினர்.
ஒரே ஒரு மரக்கலம் மட்டும் அவனருகே நின்றது. யாரது என்ற கேள்விக்குறியோடு அம்மரக்கலத்தை நோக்கிய வசந்தனை ராஜீவ் புன்முறுவலோடு நோக்கிக்கொண்டிருந்தான். வசந்தனின் மரக்கலத்தில் ஏற ராஜீவ் முயற்சித்தபோது, அவன் சிரமமின்றி ஏற அவன் கைகளைப் பற்றி உதவி செய்தான், வசந்தன்.
ராஜீவ் சந்தோசப் புன்இதழுடன், "வேலை கிடைத்துவிட்டது ! வாழ்த்துக்கள் !" என்றான்.
"நன்றி, நண்பா! முதல் வெற்றி. எதிர்பார்க்கவே இல்லை. எனக்கும் சிறிது அதிர்ஷ்டம் இருக்கின்றது போலும்"
"அதிர்ஷ்டம் என்று சொல்லாதே. உன் விடா முயற்சி என்று சொல். அதிர்ஷ்டத்தால் கிடைக்கும் வேலை அல்ல இது"
வசந்தன் ஆமோதிப்பதாய் தலையசைத்து கீழே குனிந்தான்.
"இனி உனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும்" என்று ஊக்கமளித்தான் ராஜீவ்.
"நன்றி !" என்று கூறிவிட்டு தன் சந்தேகத்தை வினவினான் வசந்தன்.
"நீ இரு வாரங்களுக்குப் பணி செய்ய செல்வம் தடை விதித்தாரே?"
"உண்மை தான். ஆனால், எப்படியோ அவரைச் சமாதானம் செய்து மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டேன்"
இருவரும் சில நொடிகள் நகைத்தார்கள்.
"நண்பா ! என்ன இந்த மெமோரியல் உலகம் சோலையாக காட்சி அளிக்கிறதே? இதையா அப்படிப் பிரம்மிப்பாகக் கூறினாய் ?"
ராஜீவ் லேசான சிரிப்போடு, "இங்கு நம் இதழ்களை விட கண்களே அதிகப் பொய் கூறும். நீயும் சில அனுபவங்களைக் கண்டிருப்பாயே. நம் கண்களுக்கு மட்டும் சோலையாகத் தெரியும்படி அமைத்திருப்பார்கள். ஆனால், இது சோலை அல்ல" என்று கூறினான்.
"அதில் சிறிது தூரம் கடந்து பார்க்கலாமா?. மெமோரியல் உலகம் தென்பட்டாலும் படும் அல்லவா?"
"நான் பலமுறை முயன்று பார்த்துவிட்டேன். தோல்வி தான் மிஞ்சியது. நீயும் முயன்று பார்த்துச் சலிப்படையாதே. உன் வேலையை மட்டும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள். நல்லதே நடக்கும். நான் சென்று வருகிறேன்" என்றான் ராஜீவ்.
வசந்தனும் சோலையைப் பார்த்தபடி, "சரி" என்றான். அதில் ஒரு மொட்டு மலராக விரிந்து ஒளிவீசும் காட்சியைப் பார்வையால் படம் பிடித்துக்கொண்டே நடந்தவை அனைத்தையும் அசைபோட்டான்.
"இந்த மாயப்பதக்கத்தை நீ வைத்துக்கொள். உனக்கு உபயோகமாக இருக்கும்" என்று வசந்தனின் கையில் மாயப்பதக்கத்தைத் திணித்துவிட்டு அங்கிருந்து மரக்கலத்தில் சென்று மறைந்தான் ராஜீவ்.
சிறிது நேரம் மரக்கலத்தின் முனையில் உட்கார்ந்து சோலையின் மலர்களையே நெடுநேரம் நோக்கிக்கொண்டிருந்தான் வசந்தன். கடலின் சத்தம் தவிர வேறு ஒலி அங்கே கேட்கவில்லை. அவனுள் என்ன நினைத்தானோ தெரியவில்லை. மரக்கலத்திலிருந்து கடலில் குதித்தான். நீந்தி சோலையின் கரையேறி நடந்தான். இரண்டு நாழிகைகள் நடந்த பிறகு அவன் கண்களுக்குத் தெரிந்த அழகில் தன்னையே மறந்து சிலையாகிப் போனான் வசந்தன்.
"அற்புதம் ! அற்புதம் !" என்று அவன் மனம் ஒரே வார்த்தையை மென்றுகொண்டிருந்தது. மெமோரியல் உலகம் அவன் கண்களுக்குப் புலப்பட்டது தான் அதற்குக் காரணம். மெமோரியல் உலகத்தை வெகு சாதரணமாக எண்ணிவிட்டோமே என்று அவன் மனம் புழுங்கியது. அவனுடைய கற்பனைகளை விட ஆயிரமாயிரம் அழகு பொருந்தி பிரம்மாண்டமாக அமைந்திருந்தது அவ்வுலகம்.
ராஜீவ் கூறிய வார்த்தைகள் அவன் மனதில் மீண்டும் உதித்தன. தனக்குச் சோலை மட்டுமே தெரிவதாகவும் மெமோரியல் உலகத்தை இது வரை காணவில்லையென்றும் கூறினானே. எனது கண்களுக்கு மட்டும் இவ்வுலகம் காட்சியளிப்பதேனோ என்றெண்ணினான் வசந்தன். ஒரு வேளை தன்னிடம் பொய் கூறி இருப்பானோ என்று சிந்தித்தான். அப்படி இருக்க வாய்ப்பில்லை. அவன் பொய் கூறி எதை மறைக்கப் போகிறான். நண்பனின் மேல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று வருந்தியபடி மெமோரியல் உலகை நோக்கி நடக்கத் துவங்கினான்.
*** *** ***
வசந்தனோடு சேர்ந்து நாமும் ஒரு மானிடனாய் மெமோரியல் உலகில் பயணிப்போம்.
பத்து கடல்கள் ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் சங்கமித்தால் கிடைக்கும் பரப்பு எவ்வளவோ அவ்வளவு பெரிதான நிலப்பரப்பில் பரந்து விரிந்து படர்ந்து செழித்திருந்தது மெமோரியல் உலகம். அவ்விடத்தைச் சுற்றி இருள் திரையிட்டிருந்தது. அந்தக் கரும் திரையை விலக்கிப் பார்த்தால் சுற்றியெங்கும் நீல நிற நட்சத்திரங்கள் மரங்களாய் முளைத்து ஒளிவீசுவதாய்த் தோன்றும். மரங்களின் இலைகள் இளம் பச்சையிலும் மலர்கள் நறுமணம் கமிழ்ந்துகொண்டும் மரங்களின் மீதிருந்து உதிர்ந்த பூக்கள், நடக்கும் பாதைகளுக்கு வெளிச்சத்தை வாரி வழங்கிச்
சிரமமில்லாமல் நடக்க உதவும்.
மரங்களின் அருகில் புதர்கள் பரவியிருந்தன. சிகப்பு நிற வண்டுகள் ஒளியை உமிழ்ந்துகொண்டே மலர்களைத் தேடிப் பறந்து வந்தன. பூக்களும் தாங்கள் இங்கே இருக்கிறோம் என்பதைப் போல் இதழ்களை அணைத்து அணைத்து எரியச் செய்தன. அதைக் கண்ட வண்டுகள், தேனை ருசிபார்க்கவும் பூக்களோடு உறவாடவும் மலர்களின் இதழ்களின் மேல் ரீங்காரத்துடன் அமர்ந்து குலாவின.
மரங்கள்,செடி,கொடிகளை விலக்கி ஓய்வெடுக்காமல் இரண்டு நாட்கள் விடாமல் நடந்தால் மெமோரியல் உலகின் பிரம்மாண்டக் கட்டடங்களின் மேல் பாகம் தெரியும். அவை வானை முட்டும் அளவிற்குக் கூம்பு வடிவாக அமைந்த அற்புதக் காட்சியைப் பார்ப்போம். பளிங்குக் கற்களில் முத்துக்களும் பவளங்களும் கடலினுள் கிடைக்கும் அரிய வைடூரியப் பாறைகளையும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் கூம்புகள், மிளிர்ந்தபடி சிரித்துக்கொண்டு மேகத்தையும் தாண்டி முளைத்திருக்கும். அக்கட்டடத்தின் மேல் அலங்காரமாய்ப் பூச்செடிகளின் கொடிகள் படர்ந்து வண்ண வண்ண ஒளியை உமிழ்ந்து மாலையாய் அலங்கரித்திருக்கும். கொடிகளின் இலைகளின் முனையில் நீல நிற ஒளியும் நடுவே அடர்ந்த பச்சை நிற ஒளியும் வீசி மிளிர்ந்தபடி கட்டடங்களை அணைத்துக்கொண்டு அழகு பொருந்தி காட்சியளிக்கும். அவ்விடத்திற்குக் கிரீடமாய், பளிச்சென்று சிரிப்பதைப் போன்று வானவில் அமைந்திருந்து, கண்ணிற்கும் மனதிற்கும் ஒரு வித நிம்மதிக் குளுமையைக் கொடுத்தன.
மீண்டும் மூன்று நாட்கள் இடைவிடாது பயணம் மேற்கொண்டால், வழியில் பவளப் பாறைகளும் சிறு சிறு நதிகளும் குறுக்கிடும். நதியில் மீன்களும் ஓரத்தில் பட்சிகளின் கானமும் கேட்கலாம். சுமார் ஐம்பது அடி ஆழத்தில் தண்ணீர் பால் நிறத்தில் சுரந்திருக்கும். அதையெல்லாம் ரசித்தபடி தொடர்ந்தால், வழியில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஒரு காடு உங்களை வரவேற்கும். அதில் லட்சக்கணக்கான மரங்களும், அக்காட்டில் எண்ணற்ற ஜீவராசிகளும், இடைவிடா பவளங்களாய்ப் பொழியும் மழைத் துளிகளும், அவற்றை இலைகளில் தேக்கிச் சிறு சிறு ஜீவராசிகளுக்கு உணவாய்க் கொடுக்கும் தாவரங்களும் அமைந்திருக்கும்
அக்காட்டைக் கடந்தால், மலைகளும் அருவிகளும் வழிமறித்து நிற்கும். நடுவே நீண்ட பெரிய பாலம் ஒன்று தென்படும். மலைகளின் நடுவே அமைந்திருக்கும் அப்பாலத்தின் இன்னொரு முனையைக் கண்டுபிடிக்க ஏறக்குறைய இருபது நாட்கள் பயணம் மேற்கொள்ளவேண்டும். கீழே முடிவில்லா பள்ளம் வாயைப் பிளந்து யார் விழுவார்கள் என்பதைப் போல் காத்திருக்கும். மேலே நிலவு உங்களுக்கு வழிகாட்டுவது போல் தோன்றும். சுற்றி இருக்கும் மலைகளின் ஜிவ்வென்ற குளிரை உடலில் சுமந்தபடி நடந்தால் இறுதியாக மெமோரியல் உலகத்தின் ஒரு பகுதியை அடைந்துவிடலாம்.
வானவில் மாலையை அமைத்து அம்மாலையைத் தாங்க இரண்டு பெரும் தூண்கள் நின்று தாங்கிக்கொண்டிருக்க அதனுள் நுழைந்தால் சிறிது நேரம் மலைத்துச் ஸ்தம்பித்து நின்று போவீர்கள். கட்டடங்களின் உயரத்திற்குக் கடல் பொங்கி எழுந்து நீல நிற ஒளிரும் வைரங்களாய்த் தரையில் குதித்துச் சீற்றமாய் ஓடிக்கொண்டிருக்கும். சுற்றியெங்கும் பரந்து விரிந்த கட்டடங்கள் ஜொலிக்கும் முத்துக்களின் நிறத்தில் மின்னி ஒருவித மயக்கத்தை உண்டு பண்ணியவாறே நம்மைக் கண்டு சிரிக்கும்.
அவற்றின் கீழே மெமோரியல் உலகின் பணியாட்கள் சுமார் லட்சோப லட்சம் பேர் சென்றுகொண்டிருப்பார்கள். அத்தனை பேர் சென்றும் அவர்களைப் பார்க்கையில் மலைகளின் மேலே செல்லும் எறும்புக்கூட்டமாய்த்தான் தோன்றும். கற்பனைக்கும் எல்லையுண்டு. ஆனால் அவ்விடத்திற்கு எல்லையே இல்லாதது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மாளிகைகள்தான்.
அங்கிருந்து சுமார் நான்கு நாட்கள் பயணம் செய்தால், ஒரு கடலின் பாதி பரப்பளவில் ராட்சத நீர்வீழ்ச்சி மேகங்களைக் கிழித்துச் சோவென்ற இரைச்சலோடு விழுந்துகொண்டிருக்கும். நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் பாசிகள் படிந்து பச்சை நிற மாணிக்கக் கல்லாய் ஒளிவீசி தண்ணீருக்குப் பச்சை வண்ணத்தைத் தீட்டிக்கொண்டிருக்கும்.
அந்த நீர்வீழ்ச்சியின் நடுவே ஒரு மாளிகை தண்ணீரில் மிதந்தபடி அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் ஆட்கள் வருவோரும் போவோருமாய் இருந்தனர். எப்படி அதற்குள் ஆட்கள் சென்று வருகின்றனர் என்பது சாமானிய மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் விசேஷ சக்தியின் மூலம் அவர்கள் சென்று வருகிறார்கள் என்ற உண்மையை மெமோரியல் உலகின் மக்கள் தெரிந்துவைத்திருப்பர்.
நடுவே ஒரு சிறிய கடலைக் கடந்து சென்றால் பாழடைந்த ஒரு மாளிகை தென்படும். அதில் செடி, கொடிகள் படர்ந்து ஆக்கிரமித்திருக்கும். அதைக் காணும் போதே அதில் யாரும் வேலை புரியவில்லை என்பது புரியும். வடக்கு திசைக்குச் சென்றால் பச்சைப் புற்களின் மேல் ஒரு சிறு மாளிகையும் அதன் அருகில் ஒரு பெரிய மாளிகையும் தென்படும்.
ஒரு சாதாரண மனிதன் அவ்வுலகிற்குச் சென்றால் சுற்றிப் பார்க்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது விஞ்ஞானத்தாலும் கணக்கிடமுடியாதது என்று கூறலாம். மேலே கூறிய அத்தனையும் மனிதர்கள் புரிந்துகொள்ள வர்ணிக்கப்பட்டது. மெமோரியல் உலகின் ஆட்கள் இத்துணை இடத்தையும் நொடிப்பொழுதில் கடந்து விடுவார்கள் என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இதுவரை மெமோரியல் உலகில் நாம் பயணித்த இடங்கள் நூற்றில் இரண்டு பங்கு தான் அப்படியென்றால், மீதம் உள்ள இடங்கள் எத்துணை பிரம்மாண்டம் பொருந்தி அமைந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
இவற்றையெல்லாம் நொடிப்பொழுதில் கடந்து சென்றான் வசந்தன். ராஜீவ் கொடுத்த மாயப்பதக்கம் அவனுக்கு உதவி புரிந்தது. அழகை ரசித்தபடி மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைந்து வேகமாகச் சென்றுகொண்டிருந்தான் வசந்தன். ஒரு வாசல் அவனை வரவேற்றது. அதனுள் சென்றான். பனிப்பாறையில் பவளப்பாறையைக் கலந்து அமைக்கப்பட்டிருந்தது தரை. சுவரெங்கும் ஒளிரும் மலர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் கீழே எண்ணற்ற அறைகள்; அறைகளுக்குக் கதவுகளாக நீர்வீழ்ச்சிகள் காவல் புரிந்து, நீர்வீழ்ச்சியின் தண்ணீர் தரையெங்கும் ஓடி அவன் கால்களை நனைத்தது.
அவனை யாரும் கவனிக்கவில்லை. அது அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. அவ்விடத்தைச் சுற்றி என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தபடியே உலவிக்கொண்டிருக்கும் வேளையில் ஷோபனா அவன் கண்களில் தென்பட்டாள். அவள் அவசரமாக அருவியை விலக்கிக்கொண்டு ஓர் அறையில் நுழைந்து மறைந்தாள். அவளின் பின்னே வசந்தன் ஓடினான்.
*** *** ***
அம்மாளிகையின் கடைசிக் கட்டடத்தில் தான் முகுந்தனின் அறை அமைந்துள்ளது. அது மேகங்களுக்கு அருகாமையில் இருப்பதால் குளிருக்குப் பஞ்சமில்லாமல் குளுமையாக இருந்தது அவ்வறை. அவ்வறை முழுதும் மேகப் பஞ்சுகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதால் அழகிற்குக் குறைவில்லாமல் இருந்தாலும் முகுந்தனின் மனம் வாடிய கொடியாக இருந்தது.
சுயம்பு காரணம் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்.
"தலைவரே ! கவலை தோய்ந்த முகத்தோடு தங்களைக் காண எனக்குச் சங்கடமாக இருக்கிறது"
"சுயம்பு" என்று கூறி சற்று இடைவெளி விட்டு சிறு சிந்தனையில் மூழ்கி பிறகு பேசத் துவங்கினார். "எனக்கு இன்னும் முழு சக்தியும் கிடைக்கவில்லை சுயம்பு. மற்றவர்கள் தான் தலைவர் என்று நினைக்கிறார்கள். ஆனால், தலைவர் என்னும் பொறுப்பு இன்னும் வெற்றிடமாகவே உள்ளது" என்றார் கவலையுடன்.
"அதற்குப் பொருத்தமானவர் உங்களை விட்டால் வேறொருவர் உண்டோ?" என்றார் சுயம்பு விசுவாசத்துடன்.
"புரியாமல் பேசாதே. இதற்கு முன் இருந்த தலைவர்களைச் சூழ்ச்சி செய்து அவர்களை யாருக்கும் தெரியாமல் சிறையில் அடைத்துப் இப்பொறுப்பில் வந்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் அந்த மாபெரும் சக்தியைப் பத்திரமாகப் பூட்டிவைத்துவிட்டார்கள். காவலுக்கு இளவரசியை வைத்திருக்கிறார்கள்"
சுயம்புவின் மனம் எங்கோ பறந்து மறந்த நினைவுகளை மீட்டச் செய்தது. மெமோரியல் உலகின் தலைவர்களில் ஒருவரின் மகளான அந்த இளவரசி தான் தலைவர் பொறுப்பில் அமரவேண்டும் என்று அவரின் உள் மனதில் தோன்றியது. அந்தச் சக்திக்குக் காவலாக அவள் துணை நிற்பது அவர் மனதிற்குச் சிறு கிலியை உண்டாக்கியது. காரணம், அவள் அளவில்லா சக்தியைப் பெற்றிருப்பவள்.
இவ்வாறு சுயம்பு சிந்தனை செய்துகொண்டிருக்கும் போதே முகுந்தன் அவ்வறையில் இருந்து எழுந்து போனார். சுயம்புவும் அவரைப் பின்தொடர்ந்தார். முகுந்தன் மேகங்களால் அமைந்த பஞ்சு போன்ற படிக்கட்டுகளிலிருந்து கீழிறங்கி ஒரு அறைக்குள் நுழைந்தார். சுமார் ஐம்பதடி பெரிய கண்ணாடி அவரைப் பார்த்து முறைத்தது. அதை உற்றுநோக்கினார். கைகளில் ஒரு மாய ஒளியை உருவாக்கிக் கண்ணாடியின் மீது பாய்ச்சினார். கண்ணாடி, ஒளியால் மின்னி மின்னலைப் போல் பளிச்சிட்டது. திடீரென்று, இன்னொரு சிவப்புநிற ஒளி முகுந்தனைத் தாக்கி அவ்வறையிலிருந்து தூக்கி வெளியே போட்டது. முகுந்தன், கையைப் பிடித்துக்கொண்டு தடுமாறி எழுந்து கண்ணாடியை முறைத்தார். கண்ணாடியிலிருந்து இரண்டு கண்கள் முகுந்தனைக் கொல்லும் வெறியுடன் நோக்கின.
சுயம்பு ஓடி வந்து, "தலைவரே! வாருங்கள். பிறகு பார்த்துக்கொள்வோம்" என்று சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
அவர்கள் சென்றதும், முரட்டுக் கண்கள் மறைந்து அழகிய குவளைக் கண்கள் தோன்றின. அக்கண்களில் வசந்தன் செல்வது தெரிந்தது. ஒரு சிறிய வெண்ணிற ஒளி அவ்வறையில் படர்ந்து ஒரு பெண் தோன்றினாள். அவளது மயங்க வைக்கும் அழகை வர்ணிக்க மொழிகளே திண்டாடியது என்னவோ உண்மை தான். அவள் ஒரு பட்டாம்பூச்சியாக வசந்தன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள்.
தேடல் தொடரும்...