
ஒரு எஜமானியும் வேலைக்காரியும் இரு தேசங்களின் சண்டைக் கதை.!
அமெரிக்காவின் அகம்பாவமும், இந்தியர்களின் தேசப்பற்றும் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். அந்த மோதல் இன்று உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதற்குக் காரணம், அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ராஜதந்திரி சம்பந்தப்பட்ட விவகாரம். தேவயானி கொப்ரகடே என்ற 39 வயதுடைய பெண்.
நியூயோர்க்கிலுள்ள இந்திய தூதரகத்தில் பிரதி கொன்சியூலர் ஜெனரல் என்ற உயர் பதவியை வகிப்பவர். தமது வீட்டில் பணிபுரிவதற்காக இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவரை நியூயோர்க்கிற்கு அழைத்து வந்து சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பவர்.
இந்த சிக்கலின் கதை சற்று குழப்பமானது. மேலோட்டமாக ஆராய்வோம் .
தேவயானி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியூயோர்க் தூதரகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டார். தம்முடன் வீட்டு வேலைக்காக சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண்ணையும் அழைத்துச் சென்றார்.
ஒரு இராஜதந்திரி என்ற ரீதியில் தமக்குள்ள சலுகைகளின் அடிப்படையில் ராஜதந்திர கடவுச் சீட்டைப் பயன்படுத்தி சங்கீதாவை அழைத்துச் செல்ல அவரால் முடிந்தது. தமக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் சங்கீதாவுக்கு திருப்தியில்லை. அவர் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் கடவுச் சீட்டையும் சில ஆவணங்களையும் கொண்டு சென்றதாகத் தெரிகிறது.
இருவாரங்களுக்குப் பின்னர் தேவயானிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுபுறத்தில் ஒரு சட்டத்தரணியுடன் சங்கீதா. இருவருக்கும் இடையிலான சம்பாஷணை தொடர்ந்தது. தேவயானியின் முகம் வெளிறியது. புதுடில்லியில் வாழும் தமது தந்தையைத் தொடர்பு கொண்டார்.
ஒரு மாதத்திற்குப் பின்னர், புதுடில்லி நீதிமன்றத்தில் தேவயானியின் சார்பாக வழக்கொன்று தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், சங்கீதாவிற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்தது. இந்த உத்தரவு, தமது தொழில் உடன்படிக்கையின் அடிப்படையில் தேவயானிக்கு எதிராக சங்கீதா அமெரிக்காவில் வழக்குத் தொடுப்பதை தடை செய்கிறது.
நாட்கள் கழிந்தன. டிசம்பர் 12ஆம் திகதி தேவயானி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சங்கீதாவும், அவரது கணவரும் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில் அமெரிக்க இராஜதந்திர பாதுகாப்புச் சேவையின் விசேட முகவர் ஊடாக அமெரிக்க நீதியமைச்சில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது நிகழ்ந்தது.
இங்கு சங்கீதாவின் கணவர் எப்படி சம்பந்தப்பட்டார் என்று கேட்டால், அமெரிக்க அரசாங்கம் வழங்கிய விசாவின் அடிப்படையில் சங்கீதாவின் குடும்பத்தவர்கள் சில தினங்களுக்கு முன்னர் நியூயோர்க்கை அடைந்திருந்தனர். கைது செய்யப்பட்ட தேவயானி சற்று விசேடமான முறையில் சோதனையிடப்பட்டார்.
பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எஜமானி தேவயானிக்கும் பணிப்பெண் சங்கீதாவிற்கும் இடையிலான முறுகலின் சம்பவக் கோர்வை இது தான். இந்தக் கோர்வையில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவத்தின் பின்புலத்திலும் பல முரண்பாடுகள்.
ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு அமெரிக்காவின் அகம்பாவத்தையும், இந்தியாவின் விட்டுக் கொடுக்க முடியாத தேசப்பற்றையும் ஒன்றுடனொன்று மோதவிட்டுப் பார்க்கும் முரண்பாடுகள் என்று கூறினால், அதில் தவறேதும் இருக்க முடியாது.
முதலாவது முரண்பாட்டின் அடித்தளம் தேவயானியின் கைது. இரண்டாவது முரண்பாட்டின் அடித்தளம் தேவயானி கைது செய்யப்பட்ட விதம். மூன்றாவது முரண்பாட்டின் அடித்தளம் கைதுக்கான காரணம்.
முதலாவது முரண்பாட்டை ஆராய்வோம் . தேவயானி சாமான்ய பிரஜை அல்ல. வியன்னா சாசனத்தின் மூலம் தூதுவர்களுக்கும், இராஜதந்திரிகளுக்கும் கிடைக்கக்கூடிய சலுகைகள் உறுதி செய்யப்பட்ட உயர்மட்ட பிரதிநிதி. அவரை அமெரிக்கா எவ்வாறு கைது செய்ய முடியும் என்பது இந்தியர்களின் கேள்வி. அமெரிக்க சட்டத்தரணி ப்ரீத் பராரா என்பவர் தமது தரப்பு நியாயத்தை விளக்கினார்.
தேவயானி இந்திய இராஜதந்திரியாக இருந்தாலும் அவர் அமெரிக்காவின் சட்டங்களை மீறினார் என்பது பராராவின் வாதம். இராஜதந்திர நடவடிக்கையின் பிரதிபலனாக ஒருவர் கைது செய்யப்படுவதற்கு எதிராக மாத்திரமே வியன்னா சாசனம் பாதுகாப்பு அளிக்கிறது. அந்த சாசனம் தனிப்பட்ட செயல்களின் அடிப்படையில் இராஜதந்திரியொருவருக்கு விலக்களிப்பு வழங்குவதில்லை என அவர் வாதிட்டார். ஐந்து அம்சங்களை முன்வைத்து பராரா வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியத் தரப்பை பெரிதும் ஆத்திரப்படுத்தியிருக்கிறது என்பது வேறு விடயம்.
அடுத்ததாக இரண்டாவது முரண்பாடு. தமது பிள்ளையின் முன்னால் பொது இடத்தில் தம்மை விலங்கிட்டு இழுத்துச் சென்ற அமெரிக்க அதிகாரிகள், சோதனையென்ற பெயரில் இனியில்லை என்று கீழ்த்தரமாக நடத்தினார்கள் என்று தேவயானி சாடினார்.
ஒரு இராஜதந்திரியின் கைகளில் எவ்வாறு விலங்கிடலாம் என்பது இந்தியாவின் சார்பில் முன்வைக்கப்பட்ட முக்கியமான கேள்வி . அதை விட பிரச்சினையாக அமைந்திருப்பது தேவயானி மீதான சோதனை தான். தமது ஆடை களையப்பட்டது மாத்திரமன்றி, தம்மீது ஊயஎவைல ளுநயசஉh என்ற சோதனையும் நடத்தப்பட்டதாக தேவயானி குறிப்பிட்டார். இது சற்று விவகாரமான சோதனை.
ஒருவரது உடலில் எங்கெல்லாம் மறைவான பாகங்கள் இருக்கின்றனவோ, அந்தப் பாகங்கள் சோதனையிடப்படும். டோர்ச் போன்ற கருவிகள் ஊடாக மறைவான பாகங்கள் (வாய், காது, அந்தரங்க உறுப்புகள்) மீது வெளிச்சம் பாய்ச்சும் சோதனை முறையும் உள்ளது. அத்தகைய பாகங்களுக்குள் விரலை நுழைத்து சோதனையிடும் முறையும் இருக்கிறது.
இந்திய கலாசாரத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால், இவற்றில் எத்தகைய சோதனையும் ஒரு பெண்ணிற்கு இழைக்கக்கூடிய ஆகக்கூடுதலான கொடுமையாக அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது. இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியை எரிக்கும் அளவிற்கு கோபக் கணல் தூண்டப்பட்டதென்றால், அதற்கு தேவயானி மீதான ஊயஎவைல ளுநயசஉh சோதனை ஏற்படுத்திய எதிர்விளைவுகள் தான் காரணம் எனலாம்.
இவ்வகை சோதனையின் நோக்கம், சந்தேக நபர் மறைத்து வைத்திருக்கக்கூடிய ஆயுதங்கள் அல்லது போதைப் பொருளைக் கண்டுபிடிப்பது தான். ஒரு இராஜதந்திரி மீது அத்தகைய சோதனைகள் தேவை தானா என்பது இந்திய தரப்பின் கோரிக்கை. இங்கேயும் அமெரிக்காவின் பதிலில் அகம்பாவம் தொனிப்பதைக் காணலாம். ஆடை களைந்து சோதனையிடுவது அமெரிக்காவின் சட்டம் எனவும், அதில் ஏழை-, பணக்காரர், அமெரிக்கவர்-வெளிநாட்டவர் என்ற பேதம் கிடையாது எனவும் ப்ரீத் பராரா குறிப்பிடுகிறார்.
இனி மூன்றாவது முரண்பாட்டை ஆராயலாம். அமெரிக்க அதிகாரிகள் தேவயானியைக் கைது செய்வதற்காக இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள்.
விசா மோசடி என்பது முதலாவது குற்றச்சாட்டு. சங்கீதாவிற்கு குறைந்த சம்பளம் வழங்கினார் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. சங்கீதா தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. தம்மை இந்தியாவில் இருந்து அழைத்து வந்த சமயம், (இந்திய நாணயத்தின் படி) முப்பதாயிரம் ரூபா தான் சம்பளம் என்று தேவயானி உறுதியளித்ததாக சங்கீதா முறையிட்டிருக்கிறார்.
ஆனால், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சங்கீதாவிற்கு விசா கோரி விண்ணப்பித்த ஆவணங்களில் அவரது மாதாந்த சம்பளம் 4,500 டொலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சங்கீதா சாடுகிறார். சம்பளம் வழங்குவதற்காக மற்றொரு தொழில் உடன்படிக்கையை ஏற்படுத்திய தேவயானி, அது பற்றி வெளியே சொல்லக்கூடாதென உத்தரவிட்டதாகவும் தமது முறைப்பாட்டில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
மாதாந்தம் 30,000 என்ற அடிப்படையில் ஆராய்ந்தால், மணித்தியாலத்திற்கு சங்கீதாவிற்கு கிடைக்கும் தொகை 3.31 டொலர். இது அமெரிக்க விதிமுறைகளின் பிரகாரம் இராஜதந்திரிகளின் பணிப்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை விடவும் மிகக் குறைவானதென அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், சங்கீதா பொய் சொல்கிறார் என்று தேவயானியின் தந்தை குறிப்பிடுகிறார்.
அவர் புதுடில்லி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சங்கீதாவிற்கு மணிக்கு 8.75 டொலர் என்ற அடிப்படையில் சம்பளம் கொடுத்து, அந்தத் தொகையில் 30,000 ரூபாவை நோய்வாய்ப்பட்ட கணவனுக்கு அனுப்பி வைப்பது என்ற உடன்படிக்கை எட்டியதாகவும்; குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டின் அடிப்படையில் எழுந்த சட்டச் சிக்கல்களையும் பேசியாக வேண்டியிருக்கிறது. சங்கீதா அமெரிக்காவின் அனுசரணையுடன் நிவ்யோர்க் சென்ற போதிலும், சம்பளப் பிரச்சினை சங்கீதாவிற்கும் – தேவயானிக்கும் இடைப்பட்டதாகும்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சங்கீதாவிற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியில், அமெரிக்காவின் அரசாங்கம் சங்கீதாவின் கணவருக்கு எவ்வாறு விசா வழங்க முடியும் என்பது இந்திய தரப்பின் கேள்வி. இது பற்றி இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கையை இந்தியாவின் நீதி நடைமுறை மீதான தலையீடென அறிக்கை விபரித்துச் செல்கிறது. அதற்கு பதிலாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் தேவயானி மீதான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்பட மாட்டாதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியர்கள் சுயகௌரவம் மீது கொண்டுள்ள பற்றுதலுக்கும், அமெரிக்கர்களின் அகம்பாவத்திற்கும் இடையிலான போரின் மற்றொரு பரிமாணம் எனலாம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கயிறிழுப்பில் மறைக்கப்படும் விடயங்கள் ஏராளம். உணர்ச்சிகளின் மேலீட்டால் மிகைப்படுத்தப்படும் அல்லது திரிபுபடுத்தப்படும் விடயங்களும் ஏராளம். இந்த ஒளிவு மறைவுகளிலும், மிகைப்படுத்தல்களிலும் ஊடகங்களின் பங்கு அளப்பரியது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இது இராஜதந்திரியாகத் திகழும் எஜமானியொருவர் ஏழைப் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய கதையாக சித்தரிக்கப்படுகிறது. இன்று தேவயானிக்கு எதிராக கொதித்தெழும் இந்தியா, சங்கீதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மௌனம் காப்பது ஏனென அமெரிக்க ஊடகங்கள் சாடுகின்றன.
கடந்த ஜூன் மாதம் தேவயானியின் வீட்டில் இருந்து வெளியேறிய சங்கீதா, சரியாக அமெரிக்க ராஜதந்திர பாதுகாப்பு சேவையை அடைந்தது எவ்வாறு என்பதை முதலாவது கேள்வியாகக் கருத முடியும்.
இரு வாரங்களுக்குப் பின்னர் தமது சட்டத்தரணியுடன் தேவயானியைத் தொடர்பு கொண்ட சங்கீதா, 10,000 டொலர் ரொக்கப் பணத்துடன் வழமையான அமெரிக்க கடவுச் சீட்டை பெற்றுத் தருமாறு நிபந்தனை விதித்ததாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன. புதுடெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தேவயானியின் தந்தையும் இதே விடயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. சங்கீதா நியூயோர்க்கில் தலைமறைவானதை அடுத்து இந்திய தரப்பில் தாக்கல் செய்த இரு முறைப்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா முறையாகக் கையாளவில்லை என்று இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
சங்கீதா காணாமற்போனமை பற்றியும், அவரது சட்டத்தரணிகள் தேவயானியிடம் கப்பம் கோரியமை பற்றியும் தாக்கல் செய்த முறைப்பாடுகளை அமெரிக்கா கவனிக்காதது ஏன் என்ற கேள்வியிலுள்ள நியாயத்தை மறுக்க முடியாது.
சதீஸ் கிருஸ்