தேடல் - 8
TKS.Tmilnanbargal.
பதிந்தவர் Sivaji dhasan
வசந்தனும் ராஜீவும் கடல் தீவில் இருந்து இலவசமாகப் பெற்ற மந்திரப்பொருட்களைச் சோதித்தபடியே தங்கள் இல்லத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்...
"இந்த மந்திரப்பதக்கம் எப்படித் தன் சக்தியைக் காட்டும் என்று தெரியவில்லையே?" என்று புலம்பியபடி வந்துகொண்டிருந்தான் ராஜீவ். வசந்தனோ சிந்தனையோடு நடையை மேற்கொண்டிருந்தான்.
"நான் இவ்வளவு போராடுகிறேனே? என்னை ஒரு பார்வை பார்க்கிறாயா?" என்று ராஜீவ் வசந்தனைப் பார்த்துக் கூறினான்.
அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்த வசந்தன், ராஜீவைப் பார்த்து, "என்னை அழைத்தாயா?" என்று கேட்டான்.
"இல்லை. அதோ அந்த வானில் சூழ்ந்திருக்கிறதே மேகங்கள், அதனை அழைத்தேன்" என்று தன் ஆத்திரத்தை வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறிவிட்டு மீண்டும் பதக்கத்தை ஆராயலானான்.
அப்பொழுது தான் மேலே பார்த்தான் வசந்தன். பிரம்மித்தான்; இமைகள் துடிப்பதை நிறுத்தின; நிம்மதி அவனை அணைத்தது; சந்தோசம் அவனை முத்தமிட்டது. காரணம், வானில் கூடியிருந்த மேகங்கள். அவை கருநிற மேகங்கள் அல்ல; கருநிறத்தில் பச்சைநிற விளக்குகள் எரிவது போன்ற மேகங்கள்; இது வரை அவன் காணாத அதிசயம்; வானெங்கும் மேகங்கள் சூழ்ந்து மழையை உதிர்க்கத் தயாராகின. என்னே அழகு! என்று அவன் மனது நிமிடத்திற்கு ஒரு முறை கூறியது. தரையெங்கும் பச்சைப் புற்கள்; செடி கொடிகள்; கனி மரங்கள். காற்று தன் பலத்தைச் சற்றுக் கூட்டியது. மரங்கள் நடனமாடி மழையை வரவேற்கத் தயாராயின; மலர்கள் தங்கள் இதழ்களை விரித்துச் சிரித்து மகிழ்ந்தன; பல வண்ணப்பறவைகள் ஒளி வீசும் தங்கள் சிறகுகளை விரித்து வானத்தில் வட்டமிட்டன.
"மழை வரப்போகிறது" என்றான் வசந்தன்.
"ஆம்..அதற்குள் இந்த மந்திரப்பொருள் வேலை செய்யவேண்டுமே!"
"இல்லை, மழையில் நனையவேண்டும்" என்றான் வசந்தன் புன்முறுவலோடு.
"விளையாடுகிறாயா? மேலே இருப்பது சாதாரண மேகங்கள் அல்ல. பார்! பச்சைப் பூக்கள் பூத்தது போன்று இருக்கிறது. அவை புயலாக மாறும்; நம்மையே அடித்துச் சென்றுவிடும்; இதன் தாக்குதலை யாராலும் தடுக்கமுடியாது; விதி போகிற வழி போல் காற்று போகும் வழியில் செல்லவேண்டியது தான்; மரங்களைக் கூட வேரோடு பெயர்த்து விடும் சக்தி. நினைத்துப்பார்! கேட்கவே பயங்கரமாக இல்லை?"
"அதைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது" என்றான் வசந்தன்.
ராஜீவ் அவனை முறைத்தான். "உன்னிடம் பேசி என்னுடைய சக்தியைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. சீக்கிரம் நட! வீட்டை அடைய வேண்டும். இல்லையேல் விதி நம்மை அழைத்துச் சென்றுவிடும்" என்றான்.
சிறிது தூரம் சென்ற போது காற்று புயலாக மாறியது. வானில் இருந்த பச்சை மேகங்கள் சுழல ஆரம்பித்தன.
"வசமாக சிக்கிக்கொண்டோம்" என்று உரக்கக் கத்தினான் ராஜீவ். பட படப்பாக மந்திரப்பதக்கத்தைப் பார்த்து, "ஏதாவது செய்!" என்று கத்தினான்.. பதக்கம் ஒளி வீசி அவன் உடலின் மேல் பரவியது. தீ பரவுவது போல் உணர்ந்தான் ராஜீவ். சிறிது நேரத்தில், தீச்சுடர் போல ஒளிவெள்ளம் அவன் உடலைச் சூழ்ந்து காற்றோடு கரைந்து போனான்.
ராஜீவ் மறைந்து போனது வசந்தனுக்குத் திண்டாட்டமாகப்போயிற்று. புயலை ரசிக்கலாம் என்று நினைத்தவனின் மனநிலைமை நொடிப்பொழுதில் மாறியது. எதிரே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் பார்வை மங்கிப்போனதாய் உணர்ந்தான். மூடிய கண்களைத் திறக்க முடியாமல் சிரமப்பட்டான்.
மரங்கள் வேர்களை அறுத்துக்கொண்டு வானை நோக்கிப் பறந்து சென்றன. காற்றின் வேகம் இருமடங்காக உயர்ந்தது. பத்து மத யானைகள் உடலின் மீது ஓடுவதைப் போல் உணர்ந்தான் வசந்தன். காற்று மேலும் மேலும் அசுர வளர்ச்சியடைந்து அவ்விடத்தையே அலங்கோலப்படுத்தியது.
வசந்தனின் எடையை முழுதும் உறிஞ்சி, காய்ந்த இலை காற்று செல்லும் திசையில் பறப்பது போல் அவனைத் தன் போக்கில் இழுத்துக்கொண்டே போனது. வசந்தன் பறக்கத் துவங்கினான். பயத்தில் அலறிக்கொண்டே பறந்து சென்றான்."ஆஆ..." என்ற அந்த ஒலி புயல் காற்றின்
"உஷ்ஷ்ஷ்..." என்ற ஒலியில் அமுங்கிப் போனது.
வசந்தனின் எண்ணங்கள் தடைபட்டு, எங்கே போகிறோம் என்று கூட தெரியாமல் தன் சுயநினைவை மெல்ல இழக்க ஆரம்பித்தான். மயக்கத்திரை அவனுடைய கண்களில் லேசாகப் படரத் துவங்கிற்று. ஒரு பக்கம் அவனது தலையையும் இன்னொரு பக்கம் அவனது கால்களையும் அசுரக் கைகள் பிடித்திழுப்பது போலிருந்தது.
வசந்தன், கையில் இருக்கும் மாயப்பதக்கத்தைக் கெட்டியாகப் பிடித்திருந்தான். அவனது எண்ணங்கள், "இந்தப் பதக்கம் ஏதாவது செய்து என்னைக் காப்பாற்றக் கூடாதா?" என்று எண்ணின. சில நொடிகளில் பதக்கம் ஒளி வீசியது. அவனைச் சுற்றி மெல்லிய திரை, நீர்க்குமிழி போல் அவனைச் சூழ்ந்து இளம் பச்சை நிறத்தில் ஒளிர்ந்துகொண்டே காற்றில் மிதந்து அவனைக் கீழே அழைத்து வந்து நிறுத்தியது.
அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவன் எதிரே, புயல் காற்று கோரத் தாண்டவம் ஆடியதை அவனால் அருகிலிருந்தே பார்க்க முடிந்தது. புயலால் அவனை ஒன்றும் செய்ய முடியவிலை. கண்களின் பார்வையைப் பறிக்கும் மின்னல் கிழக்கிலிருந்து உருவாகி மேற்கில் மறைந்து போனது. அவன் நடக்க நடக்க அவனுக்குப் பாதுகாவலாய் நீர்க்குமிழித் திரையும் அவனுடனே சென்றது.
வசந்தன், புயலின் கோர அழகை ரசித்தான்; கிளர்ச்சியில் மூழ்கி மெதுவாக நடந்தான்; மாபெரும் மரங்கள், செடி கொடிகள் புயலோடு சேர்ந்து பறந்து சென்றன; ஒரு மாபெரும் மரம் அவனைச் சூழ்ந்திருந்த நீர்க்குமிழியின் மேல் விழ வந்தது. வசந்தன் பயந்தான். கண்களை இறுக மூடினான்; மரமும் நீர்க்குமிழியின் மேல் விழுந்தது. ஆனால், அவன் பயந்ததைப் போல் விபரீதம் ஒன்றும் நடக்கவில்லை. அவன் நிம்மதி கலந்த மகிழ்ச்சியடைந்தான். தன்னை மாபெரும் சக்தியாக எண்ணிக்கொண்டான். யாராலும் தன்னை நெருங்க முடியாது. முடிந்தால் செய்துபாருங்கள்! என்பது போல் அசட்டையாக வானை நோக்கினான்.
"என்னிடமா சவால் விடுகிறாய்?" என்பது போல் இடி இடித்தது. அதைப் பொருட்படுத்தாமல் அவன் புயலின் நடுவே நடந்து போனான். இது போன்று ஒரு பேரானந்தத்தை அவன் கண்டதில்லை. கிளர்ச்சியில் திக்குமுக்காடினான்.
அப்பொழுது ஓர் அழுகுரல் அவனைத் திசை திருப்பியது. அது, குழந்தையின் அழுகுரல் என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு வெகுநேரமாகவில்லை. எங்கேயிருந்து அழுகுரல் வருகிறது? என்று சுற்றும் முற்றும் தேடினான். அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. தூரத்தில் சிறு பிரகாசத்தோடு தென்பட்ட வெளிச்சத்தை உற்று நோக்கினான். அதை நோக்கி ஓடினான். அதை நெருங்க நெருங்க வெண்ணிற வெளிச்சத்தில் சிப்பி வாய் திறந்திருப்பது போலிருந்தது. அழுகுரல் வெகு அருகில் கேட்டது. வேகத்தைக் கூட்டினான். அங்கே, அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் ஒருசேரக் கண்டான்.
ஒரு சிறு சிப்பிக்கூட்டில் குழந்தையை வைத்துக்கொண்டிருந்தாள் ஷோபனா. தன் உடலையே குழந்தையைக் காக்கும் கவசமாகப் பயன்படுத்தியிருந்தாள் அவள். ஆயினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. அவளுக்கு உதவி செய்யவேண்டும் என்று அவன் மனம் துடித்தது. ஏற்றுக்கொள்வாளா? என்று தயங்கினான். விட்டுச் செல்ல மனமில்லை. துணிவு கொண்டு அருகில் சென்றான்.
அருகில் ஒருவர் வருவதை உள்ளுணர்வில் கண்டுகொண்ட ஷோபனா தலையைத் திருப்பி நோக்கினாள். எதிரே இருப்பது யார்? என்று அவளின் கண்களுக்குப் புலப்படவில்லை. நன்றாக உற்றுநோக்கிய பின்னர் தான் நிற்பது வசந்தன் என்று புரிந்துகொண்டாள். அவளின் அழகிய மலர் போன்ற முகம் வாடியிருந்தது. குழந்தையோ அழுவதை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருந்தது.
ஷோபனா,குழந்தையைத் தேற்ற முற்பட்ட சமயம், "இதனுள் வாருங்கள். புயலால் ஒன்றும் செய்ய முடியாது" என்றான் வசந்தன்.
அவள் ஏற்கலாமா ? வேண்டாமா? என்று குழம்பினாள். தூரத்தில் பெரிய பெரிய கற்கள் நீல நிறத்தில் பறந்து வருவதை வசந்தன் பார்த்தான்.
"சீக்கிரம் வாருங்கள்! கற்கள் பறந்து வருகின்றன!" என்றான்.
திரும்பிப் பார்த்த அவள், உடனே வசந்தனின் திரைக்குள் அவசரமாகச் சென்று தன்னையும் குழந்தையையும் காத்துக்கொண்டாள். கற்கள் நீர்க்குமிழித் திரையின் மேல் பட்டு எகிறிச் சென்று விழுந்தன.
"உள்ளே வந்ததற்கு நன்றி!" என்றான் வசந்தன் புன்முறுவலோடு. அவனுடைய கண்கள் குழந்தையின் மீது படிந்திருந்தன.
"நன்றி! நான் இது போன்று புயல் உருவாகும் என்று எண்ணவில்லை. நான் இன்று தேவைக்கதிகமாக எனது தற்காப்பு சக்தியை உபயோகப்படுத்திவிட்டேன். ஆதலால், புயலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது" என்று தலைகுனிந்தபடி கூறினாள்.
சில மணித்துளிகள் மௌனமாகவே கடந்தன. வசந்தன் மேற்கொண்டு எப்படிப் பேச்சை வளர்ப்பது என்று திண்டாடினான். அதற்குள் அவளே முந்திக்கொண்டாள்.
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், உங்கள் திரையை நான் பயன்படுத்திக்கொள்ளலாமா?" என்றாள்.
வசந்தன் ஒன்றும் விளங்காமல் விழித்தான். இருந்தும், "சரி" என்பதைப் போல் தலையசைத்தான்.
அவள் அந்த நீர்க்குமிழி திரையைத் தன் சக்தியால் பெரிதுபடுத்தினாள். கண்ணாடி போன்ற சுவர்களை உருவாக்கினாள். தன் உடையில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறு பையை எடுத்து அதில் கையை விட்டு எதையோ எடுத்தாள். அது வேறொன்றுமில்லை மணல் துகள்கள் தான். அதை அள்ளி திரையில் தூவினாள். உடனே, நடந்து போக பச்சை நிலப்பரப்பு தோன்றியது. வைரம், வைடூரியத்தைக் கலந்து செய்தது போன்ற மரங்கள் முளைத்தன. மரங்களைச் சுற்றி மலர்க்கொடிகள் படர்ந்து மரங்களையும் பாதைகளையும் அலங்கரித்தன. கொடிகளிலிருந்த மொட்டுக்கள் மலர்களாக மலர்ந்து பன்னீர்த் துளிகளுடன் ஸ்பரிசித்து "கம்ம்ம்.." மென்று மணம் வீசியபடி அவர்களை வரவேற்றது.
வசந்தன் அதிசயத்தில் உறைந்து நின்றான். "இவள் என்ன தேவதையா?" என்று மனதில் எண்ணியவாறே இது போன்ற மாய வித்தைகளை தேவதைகள் தான் செய்வார்கள் என்று சிறு வயதில் படித்தது நினைவுக்கு வந்தது.
அவள், அப்படியா? என்பது போல் திரும்பிப் பார்த்தாள். அவளின் பின்னே நடந்து சென்றான். அவள் தோள்களின் மேல் குழந்தை வசந்தனைச் சிரித்த முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது. அவனும் அதைக் கொஞ்சுவது போல் சமிக்ஞை செய்தான்.
மேலே வானத்தைப் பார்த்தான். அங்கே புயல் மேகங்கள் அடங்காமல் கொப்பளித்துக்கொண்டிருந்தன.
"என்னிடம் பேச மாட்டீர்களா?" என்றான் அவளின் முதுகைப் பார்த்தபடி.
அவள் மௌனமாகவே இருந்தாள்.
"பரவாயில்லை. ஆனால், மீண்டுமொருமுறை உங்களிடம் நன்றி சொல்லவேண்டும். நன்றி!" என்றான்.
அவள் கேள்விக்குறியோடு திரும்பிப் பார்த்து, "எதற்கு?" என்றாள் திருவாய் மலர்ந்து.
"என்னை அந்தப் பிசாசுகளிடமிருந்து காப்பாற்றியதற்கு"
அவள் மீண்டும் மௌனமாகித் தலையைத் திருப்பிக்கொண்டாள்.
"ஓல்ட்மன் என்ன சொன்னார்? உங்களின் சந்தேகங்கள் தீர்ந்துவிட்டனவா?" என்று கேட்டாள்.
வசந்தன் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினான்.
"வாருங்கள், நடந்துகொண்டே பேசலாம். ஒரு உலகத்தையே உருவாக்கி இருக்கிறீர்களே? சுற்றிப் பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா?"
இருவரும் மகரந்தப்பூவின் சோலைகளுக்குள் நடந்தபடி பேசினர்.
"அவரால் உதவி செய்ய முடியாதாம்"
"காரணம் என்ன?" என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள்
"அவரைத் தான் கேட்க வேண்டும். என்ன செய்வதென்று தெரியவில்லை"
"நல்லதே நடக்கும்" என்று ஊட்டச்சத்து வார்த்தைகளை அவள் இதழ்களில் உதிர்த்தாள்.
அவை அவனுக்குத் தெம்பூட்டின. "குழந்தை அழகாக இருக்கிறது" என்றான்.
அதற்கு அவள் மறுமொழி கூறவில்லை.
"சிறிது நேரம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் நீராடிவிட்டு வருகிறேன்" என்று குழந்தையை அவனிடம் கொடுத்தாள்.
குழந்தை அவனிடம் தஞ்சம் புகுந்தது. அன்போடு குழந்தையின் மலரினும் மென்மையான கன்னங்களை வருடினான்.
அவள் குளிப்பதற்கு நடந்து சென்றாள். சிறிது தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது மலர்க்கொடிகள் சுவர்களாகப் படர்ந்து அவன் கண்களில் இருந்து அவளை மறைத்தது.
குழந்தையின் பிஞ்சு விரல்கள் அவன் முகத்தில் கோடுகளை வரைந்தது. அதை ரசித்தபடி குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தான். குழந்தையின் மீது வீசும் பால்மணம் அவனுடைய குழந்தைப் பருவத்தைச் சிறிது நினைவுபடுத்தின.
நீராடச்சென்ற ஷோபனா, பன்னீர் மழையில் குளித்தாள். தண்ணீர் கூட சிறிது கனமாக இருக்கும். ஆனால் பன்னீர் மழையோ உடலில் படுவதே தெரியவில்லை. அவளின் உள்ளமும் குளிர்ந்து நடந்தவையெல்லாம் கனவாகத் தோன்றச் செய்தன. தாமரையாகக் குளித்துக்கொண்டிருந்த ஷோபனாவின் மனம் வசந்தனைச் சுற்றியே சுழன்றது. அவளின் இதழ்கள் புன்னகை சிந்தின. அவளைச் சுற்றி ஒளிரும் நீலநிற பட்டாம்பூச்சிகள் சிறகடித்திருந்தன.
இரண்டு நாழிகைகள் நீராடி வேறொரு உடையைத் தரித்து வெளியே வந்த அவளை நோக்கிய வசந்தன் அவள் அழகில் நிலைகுலைந்து போனான். பிரம்மன் தன் கற்பனையின் எல்லையாய் இவளைத் தான் வடித்திருப்பான் என்று எண்ணினான். அவளின் முகம் மலர்ந்த அல்லியாக இருந்தது. குழந்தை அவன் தோள்களின் மேல் துயில்கொண்டு ஒரு நாழிகையாகி இருந்தது.
அவள் தன் சக்தியால் ஒரு மேசையை உண்டாக்கினாள். உணவைப் படைத்தாள்; அதில் உட்கார்ந்து புசிக்கவும் செய்தாள்.
தன்னை அழைக்க மாட்டாளா? என்று ஆவலோடு காத்திருந்தான் வசந்தன். "நீங்களும் வாருங்கள்?" என்று கண்களாலேயே ஜாடை காட்டினாள் ஷோபனா.
உடனே, சம்மதம் என்றது போல் வசந்தன் அவளருகே சென்று உணவைப் புசிக்கத் தொடங்கினான்.
"குழந்தையை என்னிடம் தாருங்கள்" என்று வாங்கிக்கொண்டு தன் மடியில் கிடத்தினாள்.
வானில் இடி இன்னும் அடங்கியபாடில்லை. வானையே வெறித்தபடி உண்டுகொண்டிருந்தான் வசந்தன்.
"நாளை வரை புயல் ஓயாது. நாம் இங்கு தான் தங்கியாக வேண்டும்" என்றாள் ஷோபனா.
வசந்தன் ஆனந்த நீரில் மூழ்கினான். ஒரு நாள் இவளோடு இருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் உண்ணுவதைக்கூட மறந்துவிட்டான்.
"உங்களுக்குப் போதுமா?" என்றாள்.
"போதும்" என்று எழுந்து சென்றான் வசந்தன்.
திடீரென கிடைத்த சந்தோசத்தால், எல்லையில்லா மகிழ்ச்சி அருவியில் குதித்தோடியது அவனது மனம்.
சிறிது நேரத்தில் அந்தச் சிறு உலகம் இருளால் நிரம்பியது. ஒளிரும் மரங்கள், மலர்கள், தென்றல் ஆகியன அங்கே சூழ்ந்து வித்யாசமான வேறொரு உலகத்தை உண்டாக்கின.
ஷோபனா, தன் மார்போடு குழந்தையை அணைத்தபடி இருந்தாள். அவள் ஒரு நீண்ட மலர் படுக்கையில் குழந்தையை படுக்க வைத்து பிஞ்சுக் கால்களுக்கு முத்தம் குடுத்தாள்.
அவன் அதை ரசித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான்.
"உங்களிடம் சிறிது பேசலாமா?" என்றான் வசந்தன்.
என்ன? என்பதைப் போல் பார்த்தாள்.
"நீங்கள் நடனமாடியது இன்றும் என் கண்ணை விட்டு அகலவில்லை. அந்த நடனத்தில் எனது தோழியைப் பார்த்தேன்" என்றான்.
"நான் உங்கள் தோழி அல்ல" என்றாள்.
"நான் அப்படிச் சொல்லவில்லை. சிறு வயதில் அவளுக்கு நடனத்தின் மீது அதிக ஈடுபாடு. அதைச் சொன்னேன்"
"இதையெல்லாம் ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்?" என்றாள்.
"தெரியவில்லை. கூறவேண்டும் என்பது போலிருந்தது"
"எல்லோரிடமும் கூறிக்கொண்டிருக்காதீர்கள். உங்களை ஏளனம் செய்ய அதுவே போதுமானதாக இருக்கும். நான் ஒரு வழித்துணை. இந்த துணை நாளையோடு முடிந்து விடும். நீங்கள் உறங்கச் செல்லுங்கள். நீங்கள் மட்டும் இல்லை என்றால் இன்று நானும் குழந்தையும் நிம்மதியாக உறங்க முடிந்திருக்குமா என்பது சந்தேகமே" என்று சிறிது இடைவெளி விட்டாள்.
வசந்தன், இருளில் பிரகாசித்திருந்த அவளின் முகத்தை வெறித்தபடி இருந்தான்.
இறுதியாக "நன்றி!" என்றாள் மெல்லிய குரலில்.
அவனும் தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
வானில் சுழன்றடிக்கும் சூறைக்காற்றை நோக்கியபடி சிந்தனையில் இறங்கினான், வசந்தன். இதமான இரவுத் தென்றல் அவன் உடலெங்கும் விளையாடியது. ஆங்காங்கே மின்னும் ஒளி போன்ற மலர்களும் இலைகளும் அவனைப் பார்த்துக் கண்ணாடிப்பதாய்த் தோன்றின.
ஏன் அவளிடம் என் கதையைச் சொல்லி அவமானத்தைத் தேடிக்கொண்டேன்? என்று எண்ணத் தொடங்கினான். நீல நிற நதியின் ஓரம் சென்று தன் கால்களை நனைத்து அங்கேயே அமர்ந்தான். மீன்கள் குதித்துக் குதித்து ஓடின. அவற்றை ரசித்தபடி சிந்திக்கலானான். புரியாத புதிராக இருக்கிறாளே! என்று தனக்குள்ளாவே கூறிக்கொண்டான்.
சிறு சிறு அலைகள் அவன் கால்களை தொட்டுத் தொட்டுச் சென்றது. தன் தோழியின் நினைவு அவனுள் எழுந்தது. எழுந்தான்; நடக்க ஆரம்பித்தான். நெடுந்தூரம் நடந்தான். அவன் கால்கள் நோகவில்லை. நினைவுகள் வற்றவில்லை. எண்ணங்கள் சோர்வடையவில்லை. நடந்து சென்றுகொண்டே இருந்தான். நடக்க நடக்க பாதைகள் நீண்டுகொண்டே சென்றன. அவனுள் எழுந்த எண்ணங்களின் அலைகளும் மனதில் மோதிக்கொண்டு இருந்தன.
மேலே வானை நோக்கினான். இன்னமும் சூறாவளி தன் பரந்த கைகளால் பந்தாடிக்கொண்டே இருந்தது...
தேடல் தொடரும்....