உறவைத் தேடும் உயிர் - 3

28 Dec,2013
 தேடல் - 3
TKS.Tmilnanbargal.
பதிந்தவர் Sivaji dhasan
 

பிரபஞ்சத்தில் மாற்ற முடியாத விதிகளில் ஒன்று ஒளியும் இருளும். இருள் அரசன் ஆண்ட உலகை ஒளி அரசன் கையகப்படுத்தி ஆளத் துவங்கினான். அதற்கு சாட்சியாக பொழுது புலர்ந்து புத்துணர்ச்சியைப் புனைந்தது. பட்சிகளின் சந்தங்களில், வண்ணத்துப் பூச்சிகள் தங்களை மறந்து மோகனக் கடலில் மூழ்கி சிறகடித்து மகிழ்ந்தன. முன்தினம், திடீர் விருந்தாளியைப் போல் வந்த மாமழை மறைந்ததால், தாங்கள் கூத்தாட மழை இல்லையே என்று வருந்திய சோலைகள், கண்ணீர் சிந்துவதைப் போல் பனித்துளிகள் பூவிதழ்களை அலங்கரித்துக்கொண்டிருந்தன.

 

இரவின் மடியில் தன் தோழியின் நினைவோடு துயில் கொண்டிருந்த வசந்தனுக்கு, மழை நின்றாலும் இன்னும் விடாத தூவானம் போல் பல நினைவுகள் கனவுகளாக மாறித் தூறிக்கொண்டிருந்தன.கனவுத் துளிகள் அவன் உடலைப் பரவசப்படுத்தின. கவலையில்லாக் கடவுள் போல் தன்னை எண்ணிக்கொண்டு கற்பனையில் தவழ்ந்தான்.

 

வசந்தனின் துயில் தொடர்ந்தபடி இருந்தது. அவன் இருந்த வீட்டின் அருகே இருந்த பாதையில் சிலர் பயணிக்கத் தொடங்கினர். அவர்கள் எங்கே செல்கிறார்கள்? என்று தெரியவில்லை. அவர்கள் வேகத்தில் அவசரமில்லை; சஞ்சலமில்லாத முகம்;  குளிரைத் தாங்கவல்ல ஆடையை உடுத்தியிருந்தனர். அது அவர்களின் உடல்களை முழுவதும் மறைத்து, நடக்கிறார்களா? மிதக்கிறார்களா? என்ற சந்தேகத்தை எழுப்பியது.

 

வசந்தன் எழும்ப மனமில்லாமல் படுத்துக் கிடந்தான். பாதி துயில் கலைந்த பிறகும், அவனால் எழும்ப முடியவில்லை. பிரயாணம் செய்த அலுப்பு வலிகளாக அவன் உடலில் தங்கின. கை, கால்கள் அசையும் போது ஏற்பட்ட வலி சுகமாய்த் தோன்றியது அவனுக்கு.

 

திடீரென்று, அவன் இமைகள் திறந்தன. ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளதைப் போல் தோன்றியது அவனுக்கு. ஆம், மாற்றமே தான். அதை அவன் உடனே கண்டுகொண்டான். இரவில் தூங்கும் போது போர்வை இல்லாமல் தூங்கிய அவன், விழிக்கும் போது போர்வையை அணைத்தபடி இருந்தான். யார் எனக்கு போர்வை அளித்திருப்பார்கள் என்ற சிந்தனையில் ஆழ்ந்தான். விடைகிடைக்கவில்லை.

 

அப்போது, அங்கே எழுந்த ஒரு சிறு சத்தம் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

 

திரும்பினான்; ஓர் உருவம், அந்த சிறிய வீட்டிற்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தது. சுமார் ஆறடி உயரம் கொண்ட அந்த உருவம் வசந்தனைத் திரும்பிப் பார்த்தது.

 

திடீரென்று நிகழ்ந்த இந்தச் சந்திப்பால் வசந்தனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. யார் இவன்? இங்கு எதைத் தேடிக்கொண்டிருக்கிறான்? இவன் தான் எனக்குப் போர்வையை அளித்திருப்பானோ?

 

"யார் நீங்கள்? இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்றான் படபடப்போடு, வசந்தன்.

 

"ஒரு நிமிடம் நீ தாமதித்திருந்தால் இந்தக் கேள்விகளை நான் கேட்டிருப்பேன். என் வீட்டில் நிம்மதியாகத் தூங்கினாயா?" என்று பரிகாசமகாக் கேட்டான் வீட்டின் சொந்தக்காரன்.

 

"இது உங்கள் வீடா? மன்னிக்கவும். நான் புதியவன். தங்கும் இடம் தெரியவில்லை. அதனால்...."

 

"அதனால் என் வீட்டில் தங்கிவிட்டாய். நல்லது. என் பெயர் ராஜீவ். தேநீர் அருந்துகிறாயா?" என்று கூறியபடி ஒரு கோப்பையை வசந்தனிடம் நீட்டினான்.

 

மறுமொழி சொல்லாமல் வாங்கிப் பருக ஆரம்பித்தான், வசந்தன்.

 

"உன் பெயரை மறைத்திருக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?" புன்னகையோடு கூறினான், ராஜீவ்.

 

"அப்படி ஒன்றும் இல்லை. என் பெயர் வசந்தன். உங்கள் வீட்டிற்குள் அனுமதி இல்லாமல் தங்கியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்".

 

"மன்னிப்பு இருக்கட்டும். நீ எப்படி இறந்தாய் ? விபத்தா? கொடிய நோய்களா? அல்லது தற்கொலையா?"

 

வசந்தன் மௌனமானான். தேநீர் கோப்பையில் இருந்து ஆவி மெதுவே காற்றோடு கலந்திருந்தது.

 

"தவறாகக் கேட்டுவிட்டேனா?"

 

மௌனத்தை உடனடியாகக் கலைத்து, "இல்லை, நான் தற்கொலை செய்துகொண்டேன்".

 

அதைக் கூறும் போது கண்ணீர் சுரப்பி கண்ணீரைச் சுரந்தது.

 

"எதனால்?"

 

"காதலால்?"

 

"தற்கொலையால் அதிலிருந்து தப்பிக்கலாம் என்று எண்ணினாயா?"

 

"அவ்வுலகை விட்டுத் தப்பிக்கலாம் என்று மட்டும் தான் எண்ணினேன். அவள் நினைவுகளில் இருந்து தப்பிக்க அல்ல. சோகமானதாக இருந்தாலும் அவள் நினைவுகள் எனக்கு எப்பொழுதும் சொர்க்கம் தான்".

 

அவன் கூறிய பதில் ராஜீவைக் கவர்ந்தது. அதை வெளிக்காட்டாமல் பேசினான்.

 

"இப்படிப் பேசிப் பேசி உயிரை விட்டது தான் மிச்சம்".

 

பரிகாசச் சொற்கள் வசந்தனின் மனதை ஏற்கனவே முள்ளாய்த் தைத்திருந்ததால் தான் இங்கு வந்தான். இங்கேயும் சுடு சொற்களைத் தாங்காமல் மனக்குமுறலைக் கோபமாக மாற்றினான்.

 

"தங்கள் அறிவுரைக்கு நன்றி" கோபமாகச் சொன்னான், வசந்தன்.

 

"கோபப்படாதே நண்பா! உன்னைப் பார்த்தால் நல்லவன் போல் தெரிகிறது. ஆனால் ஒரு பெண்ணிற்காக உயிரை விட்டது தான் உறுத்துகிறது".

 

"நான் இங்கிருந்து புறப்படுகிறேன்" என்றபடி தன் உடைமைகளை அவசர அவசரமாக எடுத்தான், வசந்தன்.

 

"தாராளமாகச் செல்லலாம். உன்னிடம் ஒன்று கேட்கலாமா?"

 

வசந்தன், என்ன? என்பதைப் போல் பார்த்தான்.

 

"உன் காதல் வரலாற்றைச் சொல்ல முடியுமா? உன்னைத் தொலைத்த அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது".

 

வசந்தன், கையில் பிடித்திருந்த உடைமைகளை நழுவவிட்டான். மயக்கம் அவனை எங்கோ இழுத்துச் செல்வதைப் போல் உணர்ந்தான். தடுமாறிக் கீழே விழப்போனபோது ராஜீவ் அவனைப் பிடித்துக்கொண்டான்.
 

"என்ன ஆயிற்று?" என்றான் அவசரக் குரலில்.
 

"எனக்கு....எனக்கு...." வசந்தனின் கருவிழிகள் மேலேயும் கீழேயும் உருண்டன. பிறவி ஊமை பேசத் துடிப்பது போல் இருந்தது அக்காட்சி.
 

ராஜீவ் அவனைத் தூக்கி அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தான்.
 

வசந்தன் கரையே இல்லாக் கடலில் மாட்டிக்கொண்டது போல் தவித்தான். "எனக்கு...எனக்கு..."
 

"உனக்கு....?"
 

"எனக்கு...எல்லாம் மறந்து போய் விட்டது" என்றான் தழுதழுக்கும் குரலில் வசந்தன்.
 

ராஜீவ் புரியாமல் விழித்தான்.
 

"என் காதலியின் முகம் மறந்து விட்டது. அவளின் சில நினைவுகள் மட்டுமே ஞாபகம் இருக்கிறது. உருவம் நினைவில்லை. ஏன் பிரிந்தாள்? என்ற காரணமும் மறந்து விட்டதாக உணர்கிறேன்" என்று கூறிக் கண்ணீர் வடித்தான்.
 

ராஜீவ் அவனை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தான். அதில் பலனில்லை. வசந்தன், முகத்தைக் கைகளால் மூடியபடிக் கண்ணீர் வடித்தான்.
 

"நிதானமாக சிந்தித்துப் பார். திடீரென்று, தூக்கத்தில் இருந்து எழுந்ததால் மறந்தது போல ஒரு தோற்றம் எழுவது வழக்கமே".
 

"இல்லை, முயன்று பார்த்து தோற்றுவிட்டேன். அவளின் பிம்பம் மறந்துவிட்டேன்".
 

ராஜீவ் எழுந்தான். ஜன்னலின் அருகே சென்று காலைப் பொழுதை வெறுமையாகப் பார்த்தபடி, சிந்திக்கலானான்.
 

உருவம் ஞாபகம் இல்லை. அவளின் நினைவுகள் மட்டும் எப்படி தங்கும்? விந்தையாக இருக்கிறதே. ஒரு வேளை, சித்தப்ரம்மை பிடித்தவனோ? என்ற பல சிந்தனைகளில் வீழ்ந்தான்.
 

ஆனால், வசந்தனின் முகமோ, அப்படி எல்லாம் இல்லை என்பது போல் இருந்தது. உதவி செய்யத் தீர்மானித்தான்.
 

"நீ அழுவதை நிறுத்து ! எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரிடம் சென்றால் சரியாகிவிடும். அதன் பிறகு நீ செல்லலாம். உன் பரிதாப நிலையால் தான் உதவி புரிகிறேன்"
 

கடலில் தத்தளித்தவனின் கண்களில் படகு தெரிந்தது போல் வசந்தன் சிறிது மகிழ்ச்சி அடைந்தான். அவன் மனம் சாந்தி அடைந்தது.
 

தன்னுடைய உடையில் ஒன்றை எடுத்து வசந்தனின் மீது வீசினான், ராஜீவ்.
 

"குளித்துவிட்டு வா !" என்று வீட்டின் ஒரு திசையில் சுட்டிக்  காட்டினான்.
 

இந்தச் சிறு வீட்டில் குளியலறையா? என்பதைப் போல் ஒரு பார்வை பார்த்து கதவைத் திறந்து உள்ளே போனவன், அதிர்ச்சியில் உறைந்து போனான்.
 

இது மாயாஜாலமா? அல்லது கானல்நீர் மாயையா?
 

அந்த அறையைச் சுற்றிப் பார்த்தான். அறை என்பதை விட ஒரு சொப்பனத்தீவு என்றே கூறலாம்.
 

எல்லையே இல்லா பசும்புல் தரைப்பரப்பு. அதன் மேல் கிரீடமாய் பனித்துளிகள். தூரத்தில் பல மரங்கள் போர்வீரர்கள் அணிவகுத்திருப்பது போல் நின்றுகொண்டிருந்தன. மரங்களின் கிளைகள் அடர்த்தியான வெண்பனியை ஆடையாக உடுத்தியிருந்தன. சிவப்பு வண்ண விளக்குகள் போல் பழங்கள் மரங்களை அலங்கரித்தன. குளிர் காற்று "சர்ர்ர்..." என்று வீசி அவன் உடலை நனைத்து பரவசம் அடையச் செய்தது.
 

பகலில்லாமல் இரவுத் தீவாக விளங்கியது அவ்விடம். வானம், நீல நிறக் கடல் போல் படர்ந்திருந்தது. முத்துக்களை வாரி இறைத்தார் போல் நட்சத்திரங்கள் பல வண்ணங்களில் ஜொலித்துக்கொண்டிருந்தன. அவற்றின் நடுவே ஆகாயத்தாமரை போல் பிரம்மாண்ட நிலவு மிதந்துகொண்டிருந்தது. நிலவின் வெண்ணிற மோகனக்கதிர்கள் அத்தீவில் சங்கமித்து சரசகீதம் பாடின.
 

வழியெங்கும் மலர்கள், தங்கள் மகரந்தக்காம்புகளை ஒளியாக வீசி இதழ்களையும் மிளிரச் செய்தன. பூவிலிருந்து வெளியேறிய மகரந்தத்தூள்கள் மின்மினிப்பூச்சிகள் போல மினுமினுத்து காற்று போகும் திசையில் மிதந்துகொண்டிருந்தன.
 

அப்போது, வான் குதிரைகள் தங்கள் விசாலமான சிறகுகளை விரித்தபடி பறந்து வந்தன. அவற்றின் இறகுகள், ஒளிக்கீற்றுகளால் செய்யப்பட்டது போல் கண்களைக் கூசச் செய்து,அவற்றின் உடலை ஒளி வெள்ளத்தில் மின்னச் செய்தது. தாய்க்குதிரை முன்னேயும் அதன் சேய்க்குதிரைகள் பின்னேயும் அணிவகுத்துக்கொண்டு பறந்து வந்தன.
 

வசந்தனின் அருகில் அக்குதிரைகள் தாழ்வாகப் பறந்து தரையில் இறங்கி தங்கள் இறகுகளை மூடியபடி பசும்புற்களை மேய்ந்தன.
 

வசந்தனுக்கு புது எண்ணம் தோன்றியது. அக்குதிரையின் ஒளியை உமிழ்ந்தபடியிருக்கும் இறகுகளின் உள்ளே சென்று குளிர்காயலாமா? என்றெண்ணினான் அவன்.
 

பின்னர், அது நடக்காத காரியம் என்று உணர்ந்துகொண்ட அவன், ஒரு புன்முறுவலை உதிர்த்தபடி அங்கிருந்து நடை போட்டான்.
 

அப்போது, அவன் முன்னால் தொப்பென்று ஒரு குதிரைக் குட்டி விழுந்தது. வலியால் துடித்தபடி கத்திகொண்டே எழுந்தது. அதன் சிறகுகள் முழுவதுமாக வளர்ச்சியடையவில்லை. வசந்தன், அதை விநோதமாக நோக்கினான். அந்தச் சிறு குதிரையும் அவ்வாறே நோக்கியது. அதன் முகத்தைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு கைகளைக் கொண்டு போனான். முதலில் பயந்து பிறகு அவன் தொடுவதற்கு வழி விட்டது. அதன் துளிர் இலை போன்ற மிருதுவான ரோமங்களை சிலிர்ப்புடன் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தான்.
 

தாய்க் குதிரையிடம் இருந்து ஒரு கனைப்பு ஒலி கேட்டதும், குட்டிக் குதிரை நடக்கவும் முடியாமல் பறக்கவும் முடியாமல் தவித்துக்கொண்டு அங்கே போனது. சிறிது நேரத்தில் ஒட்டுமொத்தமாக எல்லாக் குதிரையும் வானை நோக்கி பறக்க ஆரம்பித்தன. தாய்க்குதிரை, குதிரைக் குட்டியைப் பறக்க வைக்க உதவி செய்தபடி, இரண்டும் நிலவை நோக்கிப் பறந்து சென்றன. 
 

என்ன இனிமையான அனுபவம் என்று நினைத்தான் வசந்தன்.
 

சிறிது தூரத்தில் செந்நிற மான்களும் அதனுடைய குட்டிகளும் ஓடியாடிக் கொண்டிருந்தன. மான்களின் கொம்பு மரக்கிளைகள் போல பல கிளைகளைக் கொண்டதாக இருந்தன. தாய் மான் முன்னே ஓட குட்டி மான் அதைப் பிடிக்கத் துரத்திக்கொண்டிருந்தது.
 

விலங்குகள் கூட அழகாக விளையாடுகின்றன என்று எண்ணினான் வசந்தன்.
 

தூரத்தில் ஒரு குயிலின் ஓசை காற்றில் தவழ்ந்தபடி அவன் காதில் தஞ்சமடைந்தது. அந்த நேரத்தில் அவ்வோசை காதிற்கும் மனதிற்கும் குளிர்ச்சியைத் தந்தது.
 

குயிலின் பாடலுக்கு மயில்கள் தோகைகளை விரித்து நடனமாடின. மற்ற பறவைகள் குயிலின் குரல் வரும் திசையை நோக்கிப் பறந்து சென்றன.
 

வசந்தனின் எண்ணங்கள் அவன் உடலை நிறுத்தி, கண்கள் இயற்கையை ரசிக்கத் தடையின்றி இமைகள் இமைக்காமல் ஸ்தம்பித்தன. அவன் கஷ்டங்களை சந்தோஷ மேகங்கள் மூழ்கடித்தது போல் அவன் மனது லேசாயிற்று. குளிர்க்காற்று அவன் உடலை முத்தமிடுவதை நிறுத்தவே இல்லை.
 

பார்த்த நினைவுகளை மீட்டிக்கொண்டே ஒரு சிறு ஓடையை அடைந்தான்.
 

குளிர் உடலை விழுங்குகின்றதே! எவ்வாறு இந்த ஓடையில் குளிப்பது என்று எண்ணியபடி ஓடையில் உள்ள நீரின் குளுமையை கால் விரல்களால் பரிசோதித்தான். உடனே, தன் ஆடைகளைக் களைந்து ஓடையில் குதித்தான். காரணம், அது குளிர் நீரல்ல. குளிருக்கு இதம் தரக்கூடிய வெது வெதுப்பான நீர்.
 

அவன் இடுப்பளவே அவ்வோடையில் தண்ணீர் இருந்தது.
 

புது உலகம்; எழில் கொஞ்சும் இயற்கை; கண்களை மயக்கும் அழகு; மனதை வருடும் குளிர்க்காற்று; குளிரைப் போக்கும் இளஞ்சூடு நிறைந்த ஓடை. பார்க்கப் பார்க்கத் திகட்டாத பால்நிலா! .
 

ஆஹா ! சொர்க்கம்...சொர்க்கம்..! என்றெண்ணியபடி ஓடையில் குளிக்க ஆரம்பித்தான்.
 

இரவில் யாருமற்ற தீவில், நிலவைப் பார்த்துக்கொண்டே குளிப்பது அவனுக்கு எண்ணிலடங்கா கிளர்ச்சியை உடலிலும் மனதிலும் உண்டு பண்ணியது. கண்களை மூடினான். தன்னிலை மறந்து ஒரு பேரானந்தத்தை ரசித்தான்.
 

அவன் இருந்த இடத்தைச் சுற்றி மான்களும் மயில்களும் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தன. தன் கண்களை மெதுவே திறந்தான். மேலே பறந்துகொண்டிருந்த குதிரைகளைக் கண்டான். மின்னும் நட்சத்திரங்களுக்கு இறக்கை முளைத்து நிலவின் ஒளியோடு சங்கமிக்கச் சென்றது போலிருந்தது, அக்காட்சி. மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் மறந்து விட்டது போல் ஒரு மனநிலை அவனைத் தழுவியது.
 

தன் தலையை நனைக்க நீரில் புதைந்தான். ஓடையின் அடியில் தங்க நிறத்தில் ஏதோ ஒன்று மின்னியது. அதை எடுக்கக் கீழே குனிந்தான். அகப்படவில்லை. மீண்டும் குனிந்தான். அது சிக்கவில்லை. நன்றாகக் குனிந்தான். ஓர் பெரிய சமுத்திரத்திற்குள் விழுந்து விட்டது போல் ஆழமாக இருந்தது
 

பொன்னிறத்தில் ஜலம் ஜொலித்தது. வண்ண வண்ண மீன்கள், கூட்டம் கூட்டமாக அங்கே வலம் வந்துகொண்டிருந்தன.
 

அதையெல்லாம் கவனியாது சென்றுகொண்டிருந்தவன், திடீரென்று ஸ்தம்பித்தான். நீருக்கடியில் ஒரு பெண்ணின் குரல், அவன் மனதைக் காந்தம் போல் கவர்ந்தது. நீரினுள் குரலைத் தேடினான். குரல் ஒலிக்கிறதே தவிர குரலின் சொந்தக்காரியைக் காணமுடியவில்லையே என்று வருந்தினான்.
 

மீண்டும் அவன் கண்கள் ஆழத்தில் மின்னிய பொருளைக் கவனித்தன. அதை நோக்கி நீந்திக்கொண்டு போனான். அது வைரம் என்று நினைத்த அவனது உள்ளம் ஏமாற்றம் அடைந்தது. ஆனால், அவன் கண்களோ ஆனந்த உவகை கொண்டது.
 

ஓர் இளையகன்னி அங்கே இருந்த மீன்களின் உலாவை ரசித்தபடி ஒரு பாறையின் மேல் அமர்ந்திருந்தாள்; குயிலின் குரலைத் தேனில் குழைத்துப் பாடுவதைப் போல் கானத்தைப் பாடிக்கொண்டிருந்தாள்.
 

கனவு உலகிலே இனிய காதலால்
கரம் பிடித்த தலைவா !
கனவாக மறைந்து விட்டாயே !
இனிமையிலே வாழ்க்கையை வாழ்ந்து
தனிமையிலே தவிக்க விட்ட தலைவா !
தாரகை தவிக்கிறேன் வாராயோ!
 

அவள் குரலில் சோகம் தொனித்தது. அவள் குரலை ரசிப்பதா ? அவள் அழகை வர்ணிப்பதா ? இல்லை, அவளின் சோகக் கண்ணீரைத் துடைப்பதா? என்று அவன் குழம்பினான்.
 

அவளுடைய முகம் கற்பனையில் தீட்டிய கனவுப்பெண் போல இருந்தது. கண்களோ வைரங்களைப் போல ஜொலித்து, மீன்களை நினைவுபடுத்தின. இதழ் மாதுளைப்பூப்போல் மலர்ந்திருந்தது. உடல், பூவினால் தொடுக்கப்பட்ட மென்மையுடையதாக மணத்தது.
 

அவளைப் பார்த்தபடியே வசந்தன் தன்னை மறந்து போனான்.
 

தன் அழகை ரசிக்கும் ஆடவனை, அவளின் குவளைக் கண்கள் கவனித்தன..
 

விழிகள் இரண்டும் சங்கமித்தன. பார்வை மொழிகளைக் கற்க ஆரம்பித்தனர்.
 

அவனை நோக்கி அந்த அழகிய பதுமை மெதுவே வந்தாள். அவள் நீந்தவில்லை. நடந்தபடியே வந்தாள்.
 

இவன் உள்ளம், அவள் இன்னும் அருகில் வரவேண்டும்...இன்னும் அருகில்..என்று ஏங்கின.
 

அவன் ஆசைப்படியே தங்கநிற மேனி கொண்டவள் வந்தாள். அவன் கன்னங்களை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள். அதில் காதல் இல்லை. காமம் இல்லை. தாய்மையும் இல்லை. இவற்றையெல்லாம் கடந்து அப்பாற்பட்ட ஓர் உணர்வின் உந்துதல் அது.
 

திடீரென்று, அவன், அவள் கையை உதறி மேலே நீந்த ஆரம்பித்தான். ஓடையின் வெளிபரப்பில் வந்து சேர்ந்ததும் தான், அவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்தான். எப்படி இது எல்லாம் நடந்தது என்று யோசிக்க அவன் விரும்பவில்லை. மீண்டும் கீழே பார்த்தான். அந்த மங்கை மீண்டும் அதே வரிகளைப் பாடத் துவங்கினாள்.
 

கனவு உலகிலே இனிய காதலால்
கரம் பிடித்த தலைவா !
கனவாக மறைந்து விட்டாயே !
இனிமையிலே வாழ்க்கையை வாழ்ந்து
தனிமையிலே தவிக்க விட்ட தலைவா !
தாரகை தவிக்கிறேன்i வாராயோ!
 

இப்பொழுது நடந்ததற்கும் இப்பாடல் வரிகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்று குழம்பினான்.
 

அவசர அவசரமாக ஓடையில் இருந்து வெளிவந்து உடையை மாட்டினான். அவன் உடல் மல்லிகை மணத்தால் மணந்தது. அதற்குக் காரணம் ஓடையில் இருந்த பெண் என்பது அவனுக்குப் புரிந்தது.
 

சொப்பனத்தீவிலிருந்து வெளியே வந்த அவன் சோகக் குழிக்குள் விழுந்தான்.
 

என் நினைவுகள் ஏன் மறந்து போயின? என்று சிந்திக்கலானான்.
 

தலை பயங்கரமாக வலித்தது. யோசிப்பதை நிறுத்தினான். வீட்டிற்குள் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். ராஜீவ் அங்கே இல்லை....
 

தேடல் தொடரும்...Share this:

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies