தேடல் - 2
TKS.Tmilnanbargal.
பதிந்தவர் Sivaji dhasan
வசந்தன் இன்னும் அழுதுகொண்டே இருந்தான். தன் மனதை ஆசுவாசப்படுத்தினாலும் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.
அவன் வண்டியிலிருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். பல ஆத்மாக்கள் உலாவிக்கொண்டிருந்தன. அவர்கள் ஏன் அழாமல் இருக்கிறார்கள் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். பந்தம், பாசம், கண்ணீர், புன்னகை எல்லாம் மறந்துவிட்டார்களா?
ஒரு நீண்ட பெருமூச்சோடு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினான். அவன் கண்ட பல கனவுகள் தொலைந்து போய்விட்டன. உறக்கத்திற்கும் கனவிற்கும் நடுவே ஒரு சிறிய வழியில் அவன் எண்ணங்கள் போய்க்கொண்டு இருந்தன. அவன் சில நிமிடங்கள் எந்த அசைவும் இல்லாமல் அப்படியே இருந்தான்.
திடீரென்று வண்டியின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு விழித்தான். யாரோ ஒருவர் உள்ளே வருவதை அவன் திரும்பிப் பார்க்காமலேயே கணித்தான். அந்தக் காலடி ஓசை அவனைக் கடந்து அவனுக்கே எதிரே இருந்த இருக்கையில் அடங்கியது. வேறு பக்கமாக திரும்பியிருந்த அவனை ஒரு சிறு விசும்பல் திரும்பிப் பார்க்க வைத்தது.
அவன் எதிரே, தன் முதுகைக் காட்டியபடி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். இளஞ் சிவப்பு நிற ஆடையை அப் பெண் அணித்திருந்தாள்.அவளுடைய கூந்தல் அவள் முதுகை மறைத்திருந்தது. அவளுடைய கைகள் முகத்தை மூடியிருக்க விசும்பலால் அவளுடைய தோள்கள் குலுங்கியது. தான் மட்டுமே அழுகிறோம் என்று நினைத்த அவன், அப்பெண் அழுததைப் பார்த்து சிறிது மனம் கலங்கினாலும் ஏதோ ஓர் ஆறுதல் அவனைத் தழுவியது. இருக்கையின் விளிம்புக்கு வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பேசலாமா என்று அவன் மனம் தூண்டினாலும் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. மீண்டும் இருக்கையில் தன்னை முழுவதுமாக சாய்த்துக்கொண்டான். நேரங்கள் கடந்தன. விசும்பலும் நின்று அவள் அமைதியானாள். இது வரையிலும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அதைப் பற்றி அவன் கவலையும் படவில்லை.
வண்டி கிளம்புவதற்கு ஆயத்தமானது. அந்த வண்டிச் சத்தம் அவன் மனதிற்குள் சென்று அவன் உணர்ச்சிகளைக் கிளறியது. அவன் இதயப் பகுதியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். வண்டி ஒரு சிறு குலுங்கலோடு செல்ல ஆரம்பித்தது. அவன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான். வண்டி மேலே பறந்தது. தன் பெட்டியை கைகளால் இறுகப் பிடித்துக்கொண்டான். காற்று அவன் முகத்தில் பலமாக வீசியது. அவன் கண்களைத் திறக்கவேயில்லை. ஒரு கட்டத்தில் வண்டியின் வேகம் குறைந்து காற்றில் தள்ளாடிக்கொண்டே செல்வது போலிருந்தது. இது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவன் எங்கே அந்தக் குரல் கேட்கிறது என்று திரும்பிப் பார்த்தான். கடைசி இருக்கையில் ஒரு குழந்தை கை கால்களை அசைத்தபடி அழுது கொண்டிருந்தது. அழுகிறதே தவிர அதன் கண்களில் கண்ணீர் இல்லை. பிறந்த குழந்தையின் கண்களிலிருந்து கண்ணீர் வராது என்று தெரிந்தும் அவன் அதை வித்தியாசமாகப் பார்த்தான். பாசம் வந்தால் மட்டுமே கண்களில் இருந்து கண்ணீர் வரும். ஏமாற்றமும் கூடவே வரும் என்று நினைத்துக்கொண்டே அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஓடிப்போய் அக்குழந்தையை தூக்கிக் கொள்ளலாமா என்று அவன் உள்ளம் பதறியது. ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. பாசத்தால் அவன் மனம் மிகவும் துன்பப்பட்டதால் அவன் உள்ளம் பாறை போல் ஆகியிருந்தது. குழந்தை அழுதுகொண்டேயிருந்தது. அவன் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து தான் எவ்வளவு கல் நெஞ்சக்காரன் ஆகிவிட்டோம் என்று எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது அப்பெண் இருக்கையிலிருந்து எழுந்தாள். அவளுடைய கால்கள் வேகமாக குழந்தையை நோக்கிச் சென்றன. இப்போது அவள் முகத்தை அவன் பார்த்தான். அவள் அழகி என்று சொல்வதை விடப் பேரழகி என்று சொல்லலாம். வட்டமான முகம்; மீனைப் போன்ற கண்கள்;கோவைப்பழ இதழ்கள்; மஞ்சள் நிற மேனி; ஒல்லியான தேகம்; கருநிறக் கூந்தல். அவள் அழகைக் கண்டு ஒரு கணம் அவன் ஸ்தம்பித்துப் போனான்.
அவள் அந்தக் குழந்தையைக் கையிலெடுத்துக்கொண்டு தன் இருக்கைக்குத் திரும்பினாள். திரும்பும் போது அவனை முறைத்துக்கொண்டே சென்றாள். அவன் அதைக் காணத்தவறவில்லை. அவள் விழிகளை அவன் விழிகள் சந்தித்தன. ஏன் அப்படி அவள் முறைத்தாள் என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு பெட்டியிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.
புத்தகத்தைப் பிரித்தானே தவிர அவனால் அதைப் படிக்க முடியவில்லை. அவனுடைய கண்கள் புத்தக எழுத்துக்களை விடுத்து அவள் முதுகையே பார்த்தன. அவள் மடியில் குழந்தை இருந்தது. அவளுடைய கைகள் குழந்தையின் நெஞ்சை மெதுவாகத் தடவிக் கொடுத்தது. அந்த அரவணைப்பில் குழந்தை அழவில்லை. குழந்தை அழுகையை நிறுத்தியதில் அவனுக்கு சந்தோசமே.
அந்த வண்டி மெல்ல இருட்டிற்குள் நுழைந்தது. வண்டியில் இருந்த சிறு விளக்கு மட்டுமே அங்கு ஒளியைத் தந்தது. குளிர் அங்கு சூழ ஆரம்பித்தது. அவன் புத்தகத்தை மூடி பெட்டியினுள் வைத்துவிட்டு ஒரு போர்வையை எடுத்தான். தன் உடலைப் போர்வைக்குள் புகுத்திவிட்டு அவன் தூங்க ஆயத்தமானான். அவன் கடைசியாகக் கண்களை மூடும் முன் அவளைப் பார்த்தான். அந்தக் குழந்தைக்கு குளிராத வண்ணம் தன் ஆடையின் ஒரு பகுதியால் அதை மூடி எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் தூக்கத்திற்குள் செல்ல ஆரம்பித்தான். நீண்ட நாட்கள் கழித்து ஒரு நிம்மதியான தூக்கம். மனதிலிருந்த பாரங்கள் எல்லாம் இலவம் பஞ்சாய்ப் பறந்தன. கவலை மறந்து நிம்மதி அடைந்தான்.
வண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. வண்டியில் இருந்த சிறு விளக்கு விட்டு விட்டு எரியத் தொடங்கி பின் அணைந்து போனது.
அவர்களைச் சுமந்து வந்த வண்டி ஓரிடத்தில் "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." என்ற சத்தத்துடன் நின்றது.
பட படவென்று கதவுகள் திறக்கும் ஓசை கேட்டு அவன் விழித்துக்கொண்டான்.
அந்த வண்டியை நோட்டமிட்டபோது அவள் அங்கு இல்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது எல்லோரும் வண்டியிலிருந்து இறங்கிப் போவதைக் கண்டான். அவசரமாக போர்வையை பெட்டிக்குள் திணித்து பெட்டியைத் தூக்கிக்கொண்டு வண்டியின் வாசலில் நின்று கொண்டு அவன் வாழப்போகும் உலகத்தைப் பார்த்து அவன் கண்கள் விரிந்தன.
கீழே இறங்கி, முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக்குஞ்சு போல் அவன் புதிதாய் அவ்விடத்தை நோக்கினான். அவன் பூவுலகில் சொர்க்கத்தைப் பற்றி எண்ணிய கற்பனையெல்லாம் தவிடு பொடியாயிற்று. ஏனென்றால் அவன் எண்ணியிருந்ததை விட அந்த இடம் ஆயிரம் மடங்கு அழகாக இருந்தது. பாவைக்குத் திகட்டாத அவ்விடத்தை பார்த்து அவன் மெய்சிலிர்த்து நின்றான். அவன் உள்ளத்தில் உள்ள கவி அலைகள் பொங்கி வழிந்தன.
எங்கும் மரங்களும் சோலைகளும் குளுமையான தென்றல் காற்றும் மரங்களின் நடுவே முடிவற்று நீளும் பாதையும் மரங்களின் இலைகளின் மேல் முத்து முத்தாகப் படர்ந்திருந்த பனித்துளிகளும்... ஆங்காங்கே மான்கள் ஓடிக்கொண்டிருந்தன; மயில்கள் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தன; அவன் தலைக்கு மேல் பறவைகள் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தன.
இரவும் பகலும் ஒன்றோடு ஒன்று கலந்த அந்தி நேரம் போல் அவ்விடம் காட்சியளித்தது. அவன் தலையை மேலே உயர்த்திப் பார்த்தான். பிரம்மாண்டமாய்த் தோன்றிய நிலவின் பிரகாசமான ஒளி அவன் கண்களைக் கூசச்செய்தது. அந்நிலவு அவன் எட்டிப்பிடிக்கும் தொலைவில் இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. அந்த அழகில் அவனையே மறந்து போனான். மெய்மறந்து அங்கேயே சிறிது நேரம் நின்றிருந்தான்.
பின்னர் சுயநினைவுக்குள் தன்னைக் கொண்டுவந்து எங்கே செல்வது என்று தெரியாமல் அங்கு சென்று கொண்டிருப்பவர்களைப் பார்த்தான். பெட்டியைத் தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தான்.
வழியில் ஒருவரை நிறுத்தி, "நான் புதிதாக வந்திருக்கிறேன். நான் எங்கே தங்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?" என்று ஒரு குழந்தையைப்போல் கேட்டான்.
"இந்தப் பக்கமாக செல் தம்பி" என்று கூறி அவர் அகன்றார்.
பெட்டியின் கனம் அவன் கைகளை வலிக்கச் செய்தது. இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் அவன் அந்த மரங்களின் நடுவே செல்லும் பாதையில் நடந்தான். செல்லும்போது அந்த மரங்களின் உச்சியை அவ்வப்போது பார்த்தான். தன் தோழி எங்கே இருப்பாள்? என்ற நினைவுடன் அவன் நடந்து சென்று கொண்டிருந்தான்.
அவன் முன்னும் பின்னும் நோட்டமிட்டான். யாரும் அவன் சென்ற வழியில் இல்லை. பாதை சற்று ஈரமாக இருந்தது. நடந்து நடந்து அவன் மிகவும் களைத்துப் போய்விட்டான். அவன் கால்கள் தள்ளாட ஆரம்பித்தன. கைகள் கழன்று விடுவதுபோல் வலித்தது. இனி தன்னால் நடக்க முடியாது என்று தெரிந்த அவன் கையிலிருந்த பெட்டியை நழுவவிட்டு அப்பாதையின் ஓரமாக இருந்த புற்களின் மேல் அப்படியே விழுந்தான்.
புற்களின் மேலிருந்த பனித்துளிகள் அவன் முதுகை குளிர்ச்சிப்படுத்தின. அவன் மூச்சுக்காற்று அனலாக வெளிவந்தது. குளிர்காற்று அவன் உடலைத் தழுவியது. இருந்தும் அவன் எழும்ப மனம் இல்லாமல் படுத்துக் கிடந்தான். வானத்தில் இருந்த கார்மேக வெடிப்புகளை பார்த்தான். இன்னும் சிறிது நேரத்தில் பெரு மழை வரப்போகிறது என்று நீண்டு பளிச்சிட்ட மின்னல் கூறியது. அந்த மின்னலின் ஒளி அவன் கண்களைக் கவ்விச் சென்றது போல் அவன் கண்கள் வலித்தன.
மீண்டும் குழந்தையின் அழுகுரல் அவனைத் திடுக்கிட்டு நிமிரச் செய்தது. அதோ ! தான் வண்டியில் பார்த்த அவளே தான் ! குழந்தையுடன் வந்து கொண்டிருக்கிறாள். இவளைப் பின் தொடந்து சென்று தங்குவதற்கு ஓரிடத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும் பிறகு தன் தோழியைத் தேட வேண்டும். இப்படி பல எண்ணங்கள் அவன் மனதில் உதித்தன.
அவள் அவனைப் பாராமல் கடந்து சென்றாள். இவளை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தான். அவன் கால்கள் வலித்தபோதும் அவன் தொடர்வதை நிறுத்தவில்லை. அவ்வப்போது அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
பாதைகள் நீண்டு கொண்டே போயின. மரங்களின் நடுவே இருந்த பாதைகள் முடிந்து சோலைகளின் நடுவே இருந்த பாதையில் சென்றுகொண்டிருந்தார்கள். இவள் என்ன இவ்வளவு தூரம் சென்று கொண்டிருக்கிறாள். முடிவு எப்போது வரும் என்று புலம்பினான்.
தூரத்தில் ஆங்காங்கே வெளிச்சப் புள்ளிகள் அவன் கண்களில் தென்பட்டன. அதோ ! அது தான் தாங்கும் இடமாக இருக்கும்.
இவளைப் பின்தொடர்ந்து எப்படியோ வந்துவிட்டோம். இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு நம் தோழியைத் தேடலாம்.
பச்சைப் புற்கள் அவன் கால்முட்டி வரை வளர்ந்திருந்தது. அதன் மேல் சிறிது தூரம் நடந்து ஒரு வீட்டைப் பார்த்தான். ஒரு மரம் வளர்ந்து அதன் மேல் மரக்கட்டையால் வீடு அமைந்திருந்தது. வீட்டிற்குச் செல்ல படிகள் இருந்தன. வீட்டில் கதவு இல்லை. கும்மிருட்டு சூழ்ந்திருந்தது. அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டே முன்னே செல்லும் அவளைப் பார்த்தாள்.
சிறிது தூரத்தில் அவள் ஒரு பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தாள். குழந்தையை அப்பெண்மணியிடம் கொடுத்து, பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் மேலிருந்த வீட்டிற்குள் சென்றாள். வீட்டின் கதவாக ஒரு மெல்லிய திரையை மூடினாள். சிறிது நேரத்தில் அவள் வீட்டிலிருந்து வெளிச்சம் வந்தது. அவ்வெளிச்சத்தில் அந்த திரையில் அவள் உருவம் ஒரு நிழல் போலத் தெரிந்தது.
அங்கே நாலைந்து வீடுகள் மட்டுமே இருந்தன. எல்லா வீட்டிலும் திரைகள் மூடப்பட்டு இருந்ததால் அங்கே ஆட்கள் இருக்கிறார்கள் என்று யூகித்துக்கொண்டான்
இந்த ஒரு வீட்டில் மட்டும் தான் திரை இல்லை; வெளிச்சமும் இல்லை; இந்த வீட்டில் யாரும் வாழவில்லை என்று தெரிகிறது. இந்த வீட்டை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி யாரேனும் இந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடினால் இங்கிருந்து சென்றுவிடலாம் என்று எண்ணியவாறு படிகளில் ஏறி அந்த வீட்டினுள் நுழைந்தான்.
விளக்கு ஏதும் இன்றி கும்மிருட்டாக இருந்தது. மூடியிருந்த ஜன்னலைத் திறந்தான். நிலவின் ஒளி அவ்வீட்டிற்குள் நுழைந்தது. மின்மினிப்பூச்சிகள் அந்த ஜன்னலின் வழியே நுழைந்து அவ்வீட்டை மேலும் பிரகாசப்படுத்தின. மின்னல் மின்னி இடி இடித்தது. அவன் பெட்டியிலிருந்த தன் நோட்டுப் புத்தகத்தை எடுத்து தன் தோழிக்காக ஒரு கவிதையை வடித்தான்.
"உன்னைத்தேடி நான் இங்கு வந்தேன்..என்னுடன் எப்பொழுது சேரப் போகிறாய்...காயப்பட்ட இதயம் உன் அன்பை நினைத்து ஏங்குகிறது....உனக்காகக் காத்திருக்கிறேன்...சீக்கிரம் வா.." என்று எழுதி முடித்து வெளியே பார்த்தான்.
மழை பேரிரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது. தாவரங்கள் மகிழ்ச்சிக் கூத்தாடின. மழை பெய்யும் போது நிலவு வானத்தில் மிதந்திருந்தது அவனுக்கு ஆச்சர்யத்தையும் ஆனந்தத்தையும் மனதில் அள்ளி வீசியது. நிலவின் ஒளியில் மழைத் துளிகள் வெண்மை நிறத்தில் எரிந்துகொண்டு சோலைகளை நனைப்பது போல் இருந்தது.
இதையெல்லாம் வாசலின் ஓரத்தில் தலையைச் சாய்த்தபடி ரசித்துக்கொண்டிருந்தான்...
தேடல் தொடரும்...