தேடல் - 1
TKS.Tmilnanbargal.
பதிந்தவர் Sivaji dhasan
இது நான் எழுதும் ஒரு புதிய தொடர்கதை. இதற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
இது ஒரு கற்பனை கலந்த காவியம். கண்ணீரில் நனைக்கும் கதை. மரணத்திற்குப் பிறகு நடக்கும் கதையாய் இதை உருவாக்கியிருக்கிறேன். சொர்க்கமும் நரகமும் நான் கண்டதில்லை. அதைப் பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை.
மரணத்திற்குப் பிறகு ஒரு புது உலகம் இருந்தால்...? அது எவ்வாறு இருக்கும் என்று இக்கதையைப் புனைந்திருக்கிறேன். அந்தக் கற்பனையில் பல கதைகளை நான் உருவாக்கி இருந்தாலும், என்னால் விரும்பி எழுதப்பட்டது, இந்த "உறவைத் தேடும் உயிர்"
பூமியில் வாழும் பந்தத்தை அறுத்து சொர்க்கத்திற்குச் செல்லும் உயிர், அங்கே தன் சிறு வயது தோழியைத் தேடுகிறது. அவள் அங்கு இல்லை. அவளைத் தேடிக்கொண்டே இருக்கிறது.
அந்த உயிருக்கு அவள் உறவு மட்டும் தான் சொந்தம். அதனால், அந்த உயிர் உறவைத் தேடுவதை நிறுத்தவில்லை. அவள் கிடைத்தாளா? இல்லை, அவள் தொலைந்து போய் விட்டாளா?
கதையில் பார்க்கலாம்....உங்களை அந்தக் கற்பனை உலகத்திற்கு வரவேற்கிறேன்...வாருங்கள்...செல்லலாம்..
உயிர்...இறைவன் இதை மட்டும் மனிதனுக்குக் கொடுக்கவில்லையென்றால், எத்தனை பேர் பிறவாமல் நிம்மதியாக இருந்திருப்பார்கள். உடல், உயிரையும் இதயத்தையும் சுமந்துகொண்டு வாழும் அவல நிலையை விட மரண நிலை மகத்தானது. இருப்பது சில நாள். அதில் வருவோர் போவோரும் சிலர் தான். கடந்து போகும் வாழ்க்கையில் இன்பம் , துன்பம், காதல், காமம், மனைவி, மக்கள், பணம், பதவி இது போன்ற மாயையில் சிக்கிக்கொண்டு கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.
அந்தக் கனவு உலகில் ஒருவனுடைய வாழ்க்கையை மட்டும் பார்க்கப் போகிறோம். யார் அவன் ?
இதைத் தான் அவனும் தேடிக்கொண்டிருக்கிறான். விடை கிடைக்கும் முன், அவன் உயிரை விட்டுவிட்டான். ஆம், அவனே தான் அவன் உயிரை விட்டான், தற்கொலை செய்துகொண்டு. இப்போது வேறு ஓர் உலகத்திற்குப் புறப்பட்டுவிட்டான்.
அவன் பெயர் வசந்தன்.
அவன் ஒரு நடைபாதையில் உட்கார்ந்துகொண்டிருக்கிறான். வானின் நடுவே மேகங்களின் மேல் அந்த நடைபாதை அமைந்திருந்தது.
அவனைச் சுற்றி அவனைப் போல் எண்ணற்ற பேர் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவன் யாரையும் கவனிக்கவில்லை. அவன் கண்கள் கலங்கிச் சிவப்பாக மாறி இருந்தது.
எழுந்தான்...மெதுவே அங்கிருந்து நடந்தான்..அவன் காதுகளில் பல ஓலக் குரல்கள் கேட்டன.
"ஏன்டா, இப்படிச் செய்தாய்? எங்களை இப்படி தவிக்க விட்டு போய்ட்டியேடா? உன்னை நாங்க மறுபடியும் எப்போ பார்க்கப்போகிறோம்?". இப்படி அவன் உடலைப் பார்த்தபடி அழுது கொண்டிருந்தார்கள்.
அவன் நிலை தடுமாறிக் கீழே விழுந்தான். ஏன், இப்படி ஓலங்கள் என் காதுகளைத் துளைக்கின்றன? என்று அவன் பொறுக்க முடியாமல், "ஓஓஓ... ஓ" வென்று கத்தினான். அவனைச் சுற்றி நடந்திருந்தவர்கள் அவனைப் பார்த்தபடிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவன் அதை உணர்ந்தான். இங்கேயும் மனிதாபிமானம் இறந்து விட்டதா? என்று அவன் நினைத்துக்கொண்டே எழுந்தான். ஒருவர், அவன் உடலில் புகுந்து கொண்டு சென்றார். அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். எப்படி இது முடிந்தது என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
அங்கிருக்கும் ஒரு பொருளைத் தொட முயற்சி செய்தான். அவனால் அதைத் தொட முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்தான். அந்த பொருளைத் தொடும் போது ஏதோ தண்ணீரைப் பிடித்து, பிடிக்க முடியாமல் தோற்று விடுவது போலிருந்தது.
தான் முன்னே இருந்த இடத்திற்குச் சென்று உட்கார்ந்தான். மீண்டும் அவன் காதுகளில் அழு குரல்கள் கேட்டன. "என்னை விட்டு விடுங்கள்! என்னை விட்டு விடுங்கள்!" என்று அவன் அழுதான். இருந்தும் அந்த அழு குரல்களை அவன் ஒரு முறை உன்னிப்பாகக் கேட்டான். அதில் அவன் காதலியின் குரல் கேட்கிறதா என்று இன்னும் காதுகளைத் தீட்டிக் கேட்டான்.
அவன் இதயம் படபடத்தது. நெஞ்சு விம்மிற்று. அவன் காதலியின் குரல் கேட்கவில்லை. தான் இறந்தும் அவள் வரவில்லை என்று அவன் அழுதான். கண்ணீர் வரவில்லை. பாலைவனம் போல் அவன் கண்களில் இருந்த கண்ணீரும் வற்றிவிட்டது. நிறைய அழுது கண்ணீர்த் துளிகளை வீணாக்கி விட்டான். இப்பொழுது கண்ணீர் இல்லையே என்று கலங்கிக் கொண்டிருக்கிறான்.
திடீரென்று அவனுள் ஒரு புது எண்ணம் தோன்றியது. நான் ஏன் அழுது கொண்டிருக்கிறேன்? அழுவதால் என்ன பயன்? எல்லாம் முடிந்த பிறகு வருந்தி என்ன லாபம்? நம்மால் இனி திரும்ப முடியாது என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டான்.
அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்குப் பக்கத்தில் இரண்டு பெட்டிகள் இருந்தன. அவனுடையவை தான். அவன் மெதுவாக பெட்டிகளின் கைப்பிடியைப் பிடித்தான். என்ன அதிசயம்! அதை அவனால் பிடிக்க முடிகின்றது. அதைத் தூக்கினான். அந்த சமயம் ஒன்று மட்டும் அவனுக்குப் புரிந்தது. தன் உடைமைகளைத் தன்னால் தொட முடியும் என்று புரிந்துகொண்டான். சில மணி நேரம் அவன் அமைதியில் கழித்தான்.
திடீரென்று, ஓர் ஒலி அவனை வேறு திசையில் பார்க்க வைத்தது. மேகங்களைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரிய வண்டி வந்து கொண்டிருந்தது. நீளமாகவும் சிறிது அகலமாகவும் பெட்டி பெட்டியாக இருந்தது அந்த வண்டி. ஒரு பெட்டிக்கும் இன்னொரு பெட்டிக்கும் இணைப்பில்லை. ஆனால், இணைப்பு இருப்பது போலவே பாதை மாறாமல் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வந்து கொண்டிருந்தது. ஆம்.....சொர்க்கத்திற்குச் செல்லும் வாகனம் வந்து கொண்டிருக்கிறது.
இவனுடைய கடைசி நேர இதயத்துடிப்பு அவனுடைய இதயத்தையே உடைத்து விடும் போலிருந்தது. தன் பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தான். அவன் கால்கள் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கே தயக்கம் காட்டின. எல்லோரும் வண்டியில் ஏற அவனை வேகமாகக் கடந்து சென்றார்கள்.
திடீரென்று, அவன் பெட்டி கை தவறிக் கீழே விழுந்தது. பெட்டியில் உள்ளவை அனைத்தும் சிதறின. சில துணிகளும் சில நோட்டு புத்தகங்களும் இருந்தன. துணிமணிகளை வேகமாகப் பெட்டியினுள் போட்டவன் ஒரு புத்தகத்தை மட்டும் உள்ளே போடாமல் தன் கைகளால் அதை ஏந்தி மெதுவாகப் புரட்டிப் பார்த்தான்.
தன் காதலிக்காக அவன் வடித்திருந்த பல கதைகள், கவிதைகள் அதில் இருந்தன. பல தலைப்புகளில் கவிதைகள் இருந்தன. அவளின் ஆசைகள், அவளின் கண்ணீர், அவளுடைய முதல் சந்திப்பு, அவளுடைய முதல் முத்தம், அவளுடைய முதல் கோபம், அவளுடைய முதல் சண்டை இப்படி எல்லாமே அவளுக்காக எழுதியவை தான்.
கண்ணீர் வராமல் இருந்திருந்த அவன் கண்களைக் கண்ணீர் நனைத்தது. சில துளிகள் அந்த புத்தகத்தில் விழுந்து தன் காதலுக்குக் கண்ணீர்த் துளிகளால் முற்றுப்புள்ளி வைத்தான். புத்தகத்தை மூடி பெட்டிக்குள் பூட்டிவிட்டு வண்டியை நோக்கி நடந்து சென்றான். மேகங்களில் அவனால் நடக்க முடிவதை நினைத்து அவன் ஆச்சர்யப்பட்டான்.
வண்டி அருகே சென்றதும் அவன் திடீரென்று பயந்து நடுங்கினான். அவனுள் பயம் படர்ந்து முகத்தில் வியர்வைத் துளிகளாய் வெளியே வந்தன. அதோ வண்டி அங்கு இருக்கிறது. இதோடு மேகங்கள் முடிந்து விட்டன. எப்படி மேகங்களின் பாதை இல்லாமல் அந்த வண்டியை நெருங்குவது என்று தடுமாறினான். வண்டியைப் பார்த்துக்கொண்டே கீழே பார்த்தான். ஒரு பெரிய பள்ளம் முடிவே இல்லாமல் சென்று கொண்டிருந்தது. அவனுக்கு மயக்கமே வந்து விட்டது. அங்கேயே நின்று விட்டான்.
அப்பொழுது, ஒருவன் அவனைத் தாண்டி நடந்து சென்று வண்டியில் ஏறினான். அந்தரத்தில் பதற்றமின்றி நடந்து சென்றான். அவன் எப்படி நடந்தான்? நாமும் கண்டிப்பாக நடக்க முடியும் என்று நினைத்தான்.
ஒரு காலை எடுத்து வைத்தான். பயத்தில் திரும்ப எடுத்து விட்டான். சிறிது நேரம் மூச்சு வாங்கிக்கொண்டு தைரியமாக இரண்டு கால்களையும் எடுத்து வைத்தான். அவனால் நிற்க முடிந்தது. அவன் எதிரே ஒரு பெட்டியின் கதவு திறந்து அவனை வரவேற்றது. இவன், எங்கே நாம் விழுந்துவிடுவோமோ என்று பயத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்து சென்று வண்டியின் படிகளில் நின்ற பிறகு தான் அவனுக்கு நிம்மதியே வந்தது. அவன் அந்த உலகத்தைத் திரும்பிப் பார்த்தான். அழுகை சத்தம் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அவன் வெடுக்கென்று உள்ளே நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான். அங்கிருக்கும் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்தான். அந்த வண்டியை ஒரு முறை நோட்டமிட்டான். யாரும் அங்கு இல்லை. அவன் கதறி அழ ஆரம்பித்தான். நிறுத்த முடியாமல் அழுதான். பாசத்தில் பலனில்லை. அன்பில் அரவணைப்பில்லை. எதிர்பார்ப்பில் ஏமாற்றம் மட்டும் தான் மிச்சம் என்று நினைத்தான்.
கண்ணீரைத் துடைத்தான். அவன் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. அது...அது...அவன் என்ன சொன்னான் ?
"நல்லவனாய்ப் பிறந்தது தான் நான் செய்த பாவம்"
வண்டி புறப்படத் தயார் ஆனது.
அவன் உறவைத் தேடி பயணம் தொடங்கி விட்டான். நாமும் பயணிக்கத் தயார் ஆவோம்....
தேடல் தொடரும்...