காலிஃப்ளவர் பக்கோடா
காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று
சோள மாவு - அரை கப்
சக்தி சிக்கன் 65 மசாலா தூள் - 3 தேக்கரண்டி
ரெட் கலர் - சிறிது
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
சுடுநீரில் மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து காலிஃப்ளவரை போட்டு இரண்டு நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு தண்ணீரை வடித்துவிட்டு காலிஃப்ளவருடன் சிக்கன் 65 மசாலா தூள், சோள மாவு, உப்பு, ரெட் கலர் சேர்க்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்.
காலிப்ளவர் மசால் ரோஸ்ட்
காலிப்ளவர் - ஒன்று
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
தேங்காய் துருவல் - ஒரு கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
சோம்பு - ஒரு சிட்டிகை
பிரிஞ்சி இலை - ஒன்று
கொத்தமல்லி தழை - சிறிது
காலிப்ளவரை மிக சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.தேங்காய், பட்டை, கிராம்பு, சோம்பு இவற்றை நைசாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலையை போட்டு பொரிந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய காலிப்ளவர் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
காலிப்ளவர் நன்கு வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
தோசைக்கல் சூடானதும் மெல்லிய தோசை வார்த்து மசாலாவை பரவலாக தடவி வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
காலிஃப்ளவர் குழம்பு
காலிஃப்ளவர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - பாதி
தக்காளி - 2
கொத்தமல்லி தழை - கால் கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்த கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையின் காம்பை மட்டும் நறுக்கி விட்டு தண்டுடன் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் காலிஃப்ளவர் பூக்கள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்.
இப்போது தக்காளி, கொத்தமல்லி விழுதை இதில் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைக்கவும். குக்கரில் வைத்தால் 2 விசில் வைத்து அடுப்பை நிறுத்தவும்.
காலிஃப்ளவர் வெந்து குழம்பு சிறிது கெட்டியானதும், அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான காலிஃப்ளவர் குழம்பு தயார்.
வழக்கமாக காலிஃப்ளவரில் செய்யும் குருமா, பொரியல் வகைகளை விட இந்த குழம்பு வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். கொத்தமல்லி பச்சையாக அரைத்து சேர்ப்பதால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.
காலிஃப்ளவர் கிரேவி
காலிஃப்ளவர் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2
உப்பு - தேவைக்கு
அரைக்க 1:
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10
இஞ்சி - அரை இஞ்ச்
தேங்காய் துருவல் - கால் கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
அரைக்க 2:
தக்காளி - 3
அரைக்க 3:
முந்திரி - 10
பால் - 25 மில்லி
தாளிக்க :
எண்ணெய் - தேவைக்கு
பட்டை, கிராம்பு
சோம்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
அரைக்க கொடுத்த சின்ன வெங்காயம் கலவை தனியாக அரைக்கவும். தக்காளி தனியாக அரைக்கவும். முந்திரியில் பால் சேர்த்து தனியாக அரைக்கவும்.
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும். உருளையையும் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த மசாலா கலவை, உப்பு சேர்த்து வதக்கியதும் தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.
சுருள வதங்கியதும் காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கிரேவி பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த முந்திரி விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
காலிஃப்ளவர் கிரேவி தயார். இது சப்பாத்தி, நாண், பரோட்டாவுக்கு பொருத்தமாக இருக்கும்.
கோபி 65
காலிப்ளவர் - ஒன்று (பாதி)
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கடலை மாவு - 4 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கேசரி பவுடர் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்கு
காலிப்ளவரை சிறு சிறு துண்டுகளாக்கி அதை உப்பு சேர்த்து கொதிக்க வைத்த சுடு நீரில் இரண்டு நிமிடம் போட்டு வைக்கவும்.
பின் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி இஞ்சி பூண்டு விழுது, கடலை மாவு, உப்பு, கேசரி பவுடர், தனி மிளகாய் தூள் சேர்க்கவும்.
கலந்த கலவையை பத்து நிமிடம் (இஞ்சி பூண்டு சேர்ப்பதால்) ஊற வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிப்ளவரை போட்டு பொரித்து எடுக்கவும்.
இறுதியில் அதே எண்ணெயில் கறிவேப்பிலை போட்டு பொரித்து சூடான கோபி 65 ல் சேர்க்கவும். சூடான சுவையான கோபி 65 ரெடி.
கோபி ஃப்ரை
காலிஃப்ளவர் - 1(சிறியது)
கடலை மாவு - 7 தேக்கரண்டி
சோளமாவு - 7 தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மூடி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சக்தி கறிமசாலாதூள் - ஒரு தேக்கரண்டி
ரெட் கலர் - சிறிது
எலுமிச்சை - பாதி பழம்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
காலிஃப்ளவரை சுத்தப்படுத்தி தண்ணீரில் சிறிது உப்பு போட்டு காலிஃப்ளவரை போட்டு கொதிக்க விடவும். பின்னர் தண்ணீரை வடிக்கட்டி காலிஃப்ளவரை தனியாக பாத்திரத்தில் வைத்து அதில் உப்பு, லெமன் சாறு, சோயா சாஸ் போட்டு நன்கு பிரட்டி அதில் மிளகாய் தூள், கறிமசாலா தூள், கடலை மாவு, சோளமாவு, ரெட் கலர் பொடி சேர்க்கவும்.
அதில் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு சிவக்க எடுக்கவும்
சுவையான கோபி ஃப்ரை ரெடி
காலிப்ளவர் சப்பாத்தி
சப்பாத்தி மாவு - 4 கப்
மைதா - 2 கப்
காலிப்ளவர் - தேவையான அளவு
இஞ்சி - பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி தழை
சீரகம்
மிளகாய் தூள்
கரம் மசாலா
காலிப்ளவரை காய்கறி துருவும் க்ரேட்டரில் துருவி வைத்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
அதில் துருவி வைத்திருக்கும் காலிப்ளவரை போட்டு நன்கு வதக்கவும்.
5 நிமிட வதக்கிய பிறகு மிளகாய் பொடி, கரம் மசாலா, உப்பு போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும். நன்கு ஆற விடவும்
அதன் பின், பிசைந்து வைத்திருக்கும் மாவை உருண்டையாக்கி அதை தேய்த்து அதன் மேல் படத்தில் உள்ளது போன்று கலவையை வைத்து பரப்பி விடவும்.
மற்றொரு சப்பாத்தியை அதன் மேல் வைத்து படத்தில் உள்ளது போன்று ஓரங்களை சுருட்டி விடவும்.
அதனை கல்லில் போட்டு சுட்டு எடுத்து சுட சுட டேஸ்டியான சப்பாத்தியாக பரிமாறவும். உள்ளே இருக்கிற காலிப்ளவர் ஸ்ட்ஃப்க்கு ஒன்னு சாப்டறவங்க, கண்டிப்பா மேலும் கேட்டு சாப்பிடுவாங்க