
ஒரு காகம் இருந்தது. ஒரு பெண் நகைகளைக் கழற்றி வைத்து குளத்தில் குளிக்கும்போது காகம், ஒரு சங்கிலியை எடுத்து வந்துவிட்டது. அந்த தங்கச் சங்கிலியை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அதற்குத் தெரியவில்லை. எனவே, அதை எடுத்துக்கொண்டு புறாவிடம் வந்தது. ""இந்த சங்கிலியை நீ விலைக்கு வாங்கிக்கொள்கிறாயா புறாவே?'' என்று புறாவிடம் கேட்டது காகம். புறா, அந்தச் சங்கிலியை எச்சரிக்கையுடன் பார்த்தது.
பிறகு சொன்னது புறா,""காகமே, இந்த சங்கிலி எனக்கு சற்றும் பயன்படாது. எனது வாழ்க்கை மிகவும் எளிமையான வாழ்க்கையாகும். எனக்கு தானியங்களும், இருப்பதற்கு பாதுகாப்பான இடமும்தான் தேவையே தவிர, இதுபோன்ற ஆடம்பரமான பொருட்கள் தேவையில்லை. இந்த விலை மதிப்புமிக்க பொருளை பாதுகாக்கவும் என்னால் முடியாது. எனவே, இங்கிருந்து இதை உடனே எடுத்துச் சென்றுவிடு!''
அடுத்ததாக, காகம் அந்தச் சங்கிலியை எடுத்துக்கொண்டு பருந்திடம் சென்று சொன்னது,""பருந்தே, இது ஒரு அருமையான தங்கச் சங்கிலியாகும். இதை அணிந்துகொண்டால் நீ மிகவும் அழகாக இருப்பாய். உனக்காகத்தான் இதை எடுத்துக்கொண்டு வருகிறேன். இதை விலைக்கு வாங்கிக்கொள்கிறாயா?''பருந்து தான் சேகரித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை விலையாகக் கொடுத்து அந்த சங்கிலியை வாங்கிக்கொண்டது.
அப்போது விரைவாகப் பருந்திடம் வந்தது புறா. அது சொன்னது,""அண்ணே, இந்தப் பொருள் உனக்கு வேண்டாம். இது உனக்கு ஆபத்தைத்தான் தேடித்தரும். இந்தக் காகத்திடமே இதைத் திரும்பக் கொடுத்துவிடு!'' ஆனால், புறாவின் அறிவுரையை பருந்து கேட்கவில்லை. ""இந்தச் சங்கிலியை அணிந்துகொண்டால் நான் மிகவும் அழகாக இருப்பேன் என்பதால் நீ பொறாமைப்படுகிறாய். போ,போ!'' என்றது பருந்து.
காகம் சொன்னது, ""அடேய் சின்னப் புறாவே, நீ உடனடியாக பணக்காரனாவதற்கு நான் உனக்கு வாய்ப்பளித்தேன். நீ அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த பருந்து உன்னைப் போல பிழைக்கத் தெரியாதது அல்ல. இது அறிவுமிக்கது. வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டது. உன்னைப்போன்ற ஏமாளிகளின் தொடர்பு எங்களுக்குத் தேவையில்லை. உடனே இங்கிருந்து ஓடிவிடு''
அப்போது சிலர் சங்கிலியைத் தேடிக்கொண்டு அங்கு வந்தனர். சங்கிலி பருந்தின் அலகில் இருப்பதைப் பார்த்தனர். அவர்கள் போட்ட கூச்சலில் பருந்து பயந்து பறந்தது. பிறகு, சங்கிலியைப் பாதுகாக்கவேண்டி தன் கூட்டிற்குத் திரும்பி வந்து அதைப் பத்திரப்படுத்திவிட்டு மீண்டும் தொலைவிற்குப் பறந்தது. சங்கிலியைத் தேடி வந்த மனிதர்கள், பருந்தின் கூடு இருந்த மரத்திற்கு வந்தார்கள்.
இருவர் மரத்தின் கீழே நின்றுகொண்டார்கள். இன்னொருவர் சிரமப்பட்டு அந்த மரத்தின் மீது ஏறினார். மரம் மிகவும் உயரமாக இருந்தது. அவர் உடல், மரத்தில் சிராய்த்துக் காயங்கள் ஏற்பட்டன. பருந்துக் கூட்டை அடைந்ததும் அவர் சங்கிலியை எடுத்துக்கொண்டு,கடுங்கோபத்துடன் அந்தக் கூட்டை அடித்துச் சிதைத்துவிட்டுக் கீழே இறங்கினார்.
வெகு நேரம் கழித்து பருந்து தன் கூட்டிற்குத் திரும்பி வந்தது. தன் கூடு சிதைந்திருப்பதைப் பார்த்து மிகவும் துயரமுற்றது. "அந்தப் புறா சொன்னதைக் கேட்டிருந்தால் எனக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. பேராசைப்பட்டு, முன் யோசனை இல்லாமல் எனக்குத் தேவையில்லாத பொருளை வாங்கியதால் இந்தத் தண்டனையை நான் அனுபவிக்கத்தான் வேண்டும்!' என்று வருந்தியது அது