காதல் விவகாரத்தில் நிர்வாணப்படுத்தி ஊர்வலம்
12 Dec,2010
மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் பட்டாலா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி சுனிதா பர்மு. மலைவாழ் இன பெண்ணான இவர் வேறொரு இனத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்தார். இதனால் அந்த கிராமத்தினர் முன்னிலையில் சிறுமி சுனிதா நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சிறுமியை கொடுமைப்படுத்தியவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
காதல் விவகாரத்தில் சிக்கியதால் பெற்றோரும் அவளை ஒதுக்கி தள்ளினர். இதனால் ராம்பூர்கட் என்ற இடத்தில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கினாள். அங்கிருந்தவாறு கிராம மக்களை எதிர்த்து போராடினாள். துணிச்சலுடன் போலீசில் புகார் செய்தாள்.
மீண்டும் அவள் பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டாள் சிறுமிக்கு உதவ பல்வேறு சமூக அமைப்புகள் முன் வந்துள்ளன.
சிறுமி சுனிதாவின் நிலை பற்றி தேசிய குழந்தைகள் நல கவுன்சில் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பியது. கலெக்டர் சவுமித்ரா யோகன் சிறுமி மீது பரிவு கொண்டு அவளது மறு வாழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார். சிறுமி சுனிதா பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும் கிராமத்தினரை தனியாக எதிர்த்து போராடும் சிறுமி சுனிதாவின் துணிச்சலை பாராட்டி அவளது பெயர் வீரதீர செயல் புரிந்தமைக்கான விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.