ஆட்டோமொபைல் கண்காட்சியில் பசுமைச் சூழலை பாதுகாப்பதில் முதலிடம் பெற்ற ஹோண்டா அக்கார்ட் கார்
22 Nov,2013
ஆட்டோமொபைல் கண்காட்சியில் பசுமைச் சூழலை பாதுகாப்பதில் முதலிடம் பெற்ற ஹோண்டா அக்கார்ட் கார்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று ஆட்டோமொபைல் வர்த்தகக் கண்காட்சி ஒன்று துவங்க உள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியின் முன்னோட்டமாக கடந்த மூன்று நாட்களாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட கார்களுக்கிடையேயான போட்டியும் நடைபெற்றது. அதில் தேர்வுப் பட்டியலில் இருந்த ஆடி 6 டிடிஐ, பிஎம்டபிள்யூ 328 டி,மஸ்டா 3, டொயோட்டா கரோலா போன்றவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஹோண்டா அக்கார்ட் முதலிடத்தைப் பிடித்தது.
இதன் சிறப்பு அம்சங்களாக எரிவாயு மற்றும் கலப்பு மின்சார வசதிகளுடன் மிகப்பெரிய பெட்ரோல் எஞ்சினின் மாடலான வி-6 நெடுந்தூரப்பயணத்தின்போது கேலனுக்கு 34 மைல் அளிப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
பசுமைப் பாதுகாப்பு மட்டுமின்றி அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுமே தற்போது எரிபொருள் உற்பத்தித் திறன் அதிகரிப்பு, சுற்றுச்சூழல் செயல்திறன் போன்ற பலவேறு செயல்பாடுகளையும் கருத்தில்கொண்டு தங்களின் உற்பத்தியை மேற்கொள்ளுகின்றன என்று பரிசளித்த கிரீன் கார் பத்திரிகையின் வெளியீட்டாளரான ரோன் கோகன் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு உபயோகிப்பாளர்களுக்கு பல்வேறு வசதிகளையும் அளிக்கும்விதத்தில் இத்தகைய கார்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய பரிசுகள் எதிர்காலத்தில் கார்பனைக் குறைவாக வெளியிடும் தன்மைகொண்ட தயாரிப்புகளில் எங்களுடைய முயற்சியை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று அமெரிக்க நிறுவனமான ஹோண்டாவின் மூத்த துணைத்தலைவரான மைக் அக்கவிட்டி தெரிவித்தார்.
சென்ற வருடம் இந்தப் பரிசினை ஃபோர்ட் ஃபியுஷன் வகை கார்களும்,அதற்கு முன்னர் ஹோண்டா சிவிக், செவர்லெட் வோல்ட் போன்றவைகளும் இந்தப் பரிசினைப் பெற்றிருந்தன.