முட்டை போண்டா
20 Nov,2013
பொதுவாக முட்டை ரெசிபிக்கள் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். அதிலும் முட்டை போண்டா என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவில் அதனை 10 நிமிடங்களிலேயே செய்து முடிக்கலாம். குறிப்பாக இந்த முட்டை போண்டா பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். இதனால் அவர்கள் பசி நீங்குவதோடு, அவர்களுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும்.
இப்போது அந்த முட்டை போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
முட்டை போண்டா
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
கடலை மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
செய்முறை:
முதலில் முட்டை வேக வைத்து, முட்டையின் ஓட்டை நீக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை இரண்டாகவோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.
பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை கடலை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான முட்டை போண்டா ரெடி!!! இதனை கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிடலாம்.