இணையம் என்ற ஒரு போதையில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் மிகையாகாது.இன்னும் பத்தாண்டுகள் கழித்து பள்ளி செல்லத் தொடங்கும் சிறுவனுக்கு, எப்படி நாம் இன்டர்நெட் இல்லாமல் வாழ்ந்தோம் என்பதைச் சுட்டிக் காட்டவே முடியாது. அந்த அளவிற்கு இணையம் நம் வாழ்வின் ஓர் அங்கமாக, நம் வாழ்வின் நடைமுறையை மாற்றும் சாதனமாக மாறி வருகிறது.இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 15 கோடியை எட்டியுள்ளது. சீனா (57.5 கோடி) அமெரிக்காவினை (27.4 கோடி) அடுத்து, மூன்றாவதான இடத்தை இந்தியா எட்டியுள்ளது.அண்மையில் நடைபெற்ற ஒரு ஆய்வில் 17 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். அதன் முடிவுகள் இங்கு தரப்படுகின்றன. இந்திய மெட்ரோ நகரங்களில் உள்ள மாணவர்களில், நான்கில் ஒருவர், தங்கள் மொபைல் போன்களில், இன்டர்நெட் பிரவுஸ் செய்கின்றனர்.ஒவ்வொரு நாளும் 1 முதல் 2 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். 72 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் ஐந்தில் ஒருவர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போன் வழி இணையப் பயன்பாடு, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.