லியோனார்டோ டா வின்சி (1452 - 1519)படைத்தோரின் குறிப்புகள் இளைஞர்களுக்காக
லியோனார்டோ டா வின்சி (Leonardo da vinci) இத்தாலியில் ஃபிளாரன்ஸ் அருகில் 1452 ஆம் ஆண்டில் பிறந்தார். 1519 ஆம் ஆண்டில் இறந்தார். அதற்கும் இன்று வரைக்குமிடையில் பல நூற்றாண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், உலகில் இதுகாறும் உயிர் வாழ்ந்த பல்துறைப் புலமை வாய்ந்த மிகச் சிறந்த மேதை இவர்தான் என்ற பெருமையைச் சிறிதும் மங்கச் செய்துவிடவில்லை. இது தனிப்பெருமை வாய்ந்தவர்களின் பட்டியலாக இருந்திருந்தால். முதல் 50 பேரில் ஒருவராக லியோனார்டோவும் இருந்திருப்பார். ஆனால், வரலாற்றில் உள்ளபடிக்கு அவர் பெற்றுள்ள செல்வாக்கைவிட மிக அதிகமான அளவுக்கு அவருடைய திறமையும் புகழும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.
லியோனார்டோ விட்டுச் சென்றுள்ள குறிப்பேடுகளில் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற நவீன கண்டு பிடிப்புகளின் சித்திரங்களை வரைந்திருக்கக் காண்கிறோம். இந்தக் குறிப்பேடுகள், அவருடைய திறமைக்கும் தற்சிந்தனைக்கும் சான்று பகன்றபோதிலும், அவை உள்ளபடிக்கு அறிவியல் வளர்ச்சியில் செல்வாக்கு எதனையும் பெறவில்லை. முதலாவதாக, அந்த கண்டுபிடிப்புகளின் மாதிரிகளை அவர் உருவாக்கவில்லை. இரண்டாவதாக, அவருடைய சிந்தனைகள் மிகவும் தேர்ச்சித் திறன் வாய்ந்தனவாக இருந்தபோதிலும், அந்தக் கண்டுபிடிப்புகள் நடைமுறையில் செயற்பட்டிருக்கும் எனத்தோன்றவில்லை. ஒரு விமானம் அல்லது நீர்மூழ்கி பற்றியே ஒரு கருத்தைச் சிந்திப்பது ஒன்று நடைமுறையில் செயற்படக்கூடிய அதன் மாதிரியைத் துல்லியமாக வடிவமைத்து உருவாக்கம் செய்வது மற்றொன்று. உண்மையில், இந்த இரண்டாவது மிகக் கடினமானது. அற்புதமான கருத்துகளைச் சிந்தித்துவிட்டு, அவற்றின் நடைமுறை மாதிரிகளை உருவாக்கத் தவறியவர்களைப் பெரிய புத்தமைப்பாளர்களாகக் கொள்ள முடியாது மாறாக, தாம் சிந்தித்தவற்றை நடைமுறையில் உருவாக்கிக் காட்டுவதற்கும் உள்ளபடிக்கு இயங்கக் கூடியவற்றைத் தயாரிப்பதில் எதிர்ப்படும் இன்னல்களைச் சமாளிப்பதற்கும் ஏற்ற எந்திரவியல் மனப்போக்கும் பொறுமையும் வாய்ந்தவர்களைத் தான் தாமஸ் எடிசன், ஜெம்ஸ் வாட், ரைட் சகோதரர்கள் போன்றவர்களைத்தான் - உண்மையில் பெரும் புத்தமைப்பாளர்கள் என்று கூற முடியும். லியோனார்டோ அவ்வாறு செய்யவில்லை.
மேலும், அவருடைய கண்டுபிடிப்புகளைச் செயற்படுத்துவதற்குத் தேவையான துல்லியமான விவரங்கள் அனைத்தையும் அவரது சித்திரங்கள் கெண்டிருந்தாலும், அவற்றினால் ஒரு விளைவும் ஏற்பட்டிருந்திருக்காது. ஏனெனில், அவை அவருடைய குறிப்பேடுகளில் புதைந்து கிடந்தன. அவை, அவர் இறந்த பின்பு பல நூற்றாண்டுகள் வரையில் வெளியிடப்படாமலே இருந்தன. அவருடைய குறிப்பேடுகள் வெளியிடப்பட்டபோது, அவரது கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்திருந்த கொள்கைகள் ஏற்கனவே மற்றவர்களால் தனித்தனியே கண்டுபிடிக்கப்பட்டு விட்டிருந்தன. எனவே, ஒரு விஞ்ஞானி, புத்தமைப்பாளர் என்ற முறையில் லியோனார்டோ கணிசமான செல்வாக்கினைக் கொண்டிருக்கவில்லை என்றே முடிவு செய்ய வேண்டிருக்கிறது.
எனவே, இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கான அவருடைய தகுதிப்பாடு, அவருடைய கலைத் திறமையினையே பெரும்பாலும் பொறுத்திருக்கிறது. ரெம்ராண்ட், ராக்ஃபேல் வான்கோ, எல் கிராக்கோ போன்ற ஓவியர்களை லியோனார்டோ விஞ்சியிருக்கவில்லையாயினும், அவர் ஒரு முதல்தரமான ஓவியர் என்பதில் ஐயமில்லை. பிற்காலத்திய ஓவியக் கலை வளர்ச்சியில் அவருடைய செல்வாக்கைப் பொறுத்த வரையில், அவர், பிக்காசோவை அல்லது மைக்கே லாஞ்சலோவைவிடக் குறைந்த அளவு செல்வாக்கையே பெற்றிருந்தார் எனல் வேண்டும்.
லியேனார்டோவிடம் விரும்பத்தகாத ஒரு பழக்கம் இருந்தது. அவர், மாபெரும் திட்டங்களைத் தொடங்குவார் ஆனால், அவற்றை முடிக்க மாட்டார் இதன் விளைவாக மேற்சொன்ன ஓவியர்களுடையதைவிட இவரது முடிவடைந்த ஓவியங்கள் மிககுறைவாகவே உள்ளன. அவர் அடிக்கடிப் புதிய திட்டங்களைத் தொடங்கினார். பழைய திட்டத்தை முடிக்காமலேயே அடுத்து திட்டத்திற்குத் தாவினார். இவ்வாறு தமது வியக்கத்தக்க திறமைகளை லியோனார்டோ சிதறடித்து வீணாக்கினார். மர்மப் புன்னகையழகி மோனாலிசா ஓவியத்தை அற்புதமாகத் தீட்டிய இந்த ஓவியரைக் குறைந்த சாதனையாளர் எனக் கூறுவது வருத்தமளிக்கிறதென்றாலும் அவருடைய வாழ்க்கைப் பணிகளை உன்னிப்பாக ஆராய்ந்த பெரும்பாலான திறனாய்வாளர்கள் இந்த முடிவுக்கே வருகிறார்கள்.
எது எப்படியாயினும், லியோனார்டோ டா வின்சி, ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, இசை, அறிவியல், கணிதம், பொறியியல், தாவரவியல், உயிரியல், வானவியல் முதலிய பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க மேதையாக விளங்கினார் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், அழியாது நிலை பெற்றிருக்கும் அவரது சாதனைகள் மிகச்சிலவே. அவர் ஒரு புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராக விளங்கிய போதிலும், உண்மையில் கட்டப்பட்ட கட்டிடம் எதனையும் வடிவமைக்கவில்லை. அதே போல் அவர் வடித்த சிற்பங்கூட இன்று இல்லை. ஓரளவுக்கு கணிசமான எண்ணிக்கையிலான சித்திரங்களும் இருபதுக்கும் குறைவான வண்ண ஓவியங்களும் ஒரு சில குறிப்பேடுகளும் மட்டுமே இன்று அவருடைய மேதைமைக்கும் சான்றாக உள்ளன. இவற்றைக் கொண்டுதான் இருபதாம் நூற்றாண்டு வாசகர்கள் அவருடைய அதிசயத் திறமைகளை வியக்க முடிகிறது. ஆனால் அவை அறிவியலிலோ புத்தமைப்பாக்கத்திலோ செல்வாக்கு எதனையும் கொள்ளவில்லை. லியோனார்டோ அதிசயத் திறம்பாடுகளைக் கொண்டிருந்தாரெனினும் உயிர் வாழ்ந்திருந்த மிக்க செல்வாக்கு வாய்த்த நூறு பேரில் அவர் ஒருவர் அல்லர்.