அரசியல் தஞ்சம் கோருவோரை நாடு கடத்துவதை நிறுத்துமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு
08 Nov,2013
அரசியல் தஞ்சம் கோருவோரை நாடு கடத்துவதை நிறுத்துமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு
அரசியல் புகலிடம் கோரி பிரித்தானியாவுக்கு வரும் இலங்கையர்களை நாடு கடத்துவதை தடுத்து நிறுத்தும் உத்தரவொன்றை பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அரசியல் தஞ்சம் கோரி பிரித்தானியாவுக்கு வரும் இலங்கையர்கள் தொடர்பில் இந்த வருடத்தின் நடுப்பகுதியில் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் நேற்று வழங்கிய தீர்ப்பில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அடுத்த வருட ஆரம்பத்தில் முழுமையான வழக்கு விசாரணைகளை நடத்தி இலங்கை தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜூலை மாதம் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்த இலங்கையர்களின் விண்ணப்பங்கள் அல்லது மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர் மீண்டும் மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் 2012ம் ஆண்டு வழங்கிய பரிந்துரைகள் தொடர்பில் மேல் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அவதானித்திருந்தது எனவும் கணநாதன் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்களில் சிலர் சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.