முன்னொரு காலத்தில் ஒரு அரச குமாரனும், ஒரு குடியானவனின் மகனும் இணை பிரியா நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் இருவரும் படகில் ஏறி அருகில் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஒரு ஜாலிடிரிப் அடிக்க தீர்மானித்தனர். குடியானவரின் மகன் வேலு புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவன். இவனின் இசையில் மயங்கித்தான் அரச குமாரன் ரவீண், இவனிடம் நட்புக் கொண்டான் என்பது உண்மை.
""டேய் வேலு! நான் படகை மெதுவாக செலுத்துவேன். நீ அதற்கு ஏற்ப, அந்த சூழலை கவரும் வண்ணம் உன் புல்லாங்குழலிலிருந்து இசையெழுப்ப வேண்டும்,'' என்றான். வேலுவும் ஒப்புக் கொண்டான். படகில் செல்லும் போது ரவீண், வேலுவின் இசையில் மயங்கி தன் இஷ்டப்படி இலக்கு ஏதுமின்றி படகை செலுத்த, திடீரென இடியும், மின்னலும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ள, வானக் கூரை பிய்ந்து, "சோ' வென்று மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்தது. சிறுவர்களின் படகு இரண்டாய் பிளந்து திசைக்கு ஒன்றாக அடித்து செல்லப்பட்டது. வேலுவின் கையிலிருந்த புல்லாங்குழலும் வெள்ளத்தோடு போய்விட்டது.
வேலுவின் உடைந்த படகு ஒரு தீவில் போய் ஒதுங்கியது. படகை விட்டு இறங்கி தீவினுள் காலை வைத்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில் அங்கே அப்படியொரு மயான அமைதி. ஆங்காங்கே சின்னச் சின்ன வீடுகள் நிறைய இருந்தும், மனிதர்கள் இருப்பதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. வெகு நேரம் சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு ஏதோவொரு வீட்டினுள்ளிருந்து யாரோ அழும் குரல் கேட்டது.
அந்த அழுகுரல் வந்த இடத்தை அடைந்தான். அந்தோ பரிதாபம்... இரண்டு சின்னஞ்சிறு சகோதரிகள் அழுகையினூடே தங்களின் நிலையை கூறினர்.
""பத்து நாட்களுக்கு முன் எங்கிருந்தோ எங்கள் ஊரினுள் நுழைந்த ஒரு மலைப்பாம்பும், ஒரு பெரிய கழுகும் போட்டி போட்டுக் கொண்டு ஊரிலுள்ள அனைவரையும் ஒருவர் விடாமல் தின்று தீர்த்து விட்டது. நாங்கள் இருவர் மட்டுமே பாக்கி. எங்களையும் எப்போ முழுங்கவருமோ... தயை செய்து எங்களை காப்பாற்றுங்கள்!'' என்று கதிறினர்.
அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு வெளியே சென்றவன், ஊருக்கு வெளியே வயிறு முட்ட முட்ட ஜனங்களை முழுங்கிவிட்டு, தன் நிலை மறந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த மலைப்பாம்பையும், அதே நிலையில் இருந்த அந்த பெரிய கழுகையும் கொன்றான். பின்னர் கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த மற்றொரு பெரிய படகில் அந்த இரண்டு சகோதரிகளையும் ஏற்றிக் கொண்டு, தன் நண்பனை தேடிப் புறப்பட்டான்.
இவனின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சிறிது தூரத்திலிருந்த மற்றொரு தீவில்தான் அலைந்து கொண்டிருந்தான் அவனின் நண்பன் ரவீண். நண்பனைக் கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
அந்த தீவிலும் ஜன சந்தடியே இல்லை. இந்த மலைப்பாம்பிற்கும், அதனின் நண்பனான கழுகிற்கும் பயந்து போன அந்த தீவில் வசித்து வந்த ஜனங்கள், ஒரேயடியாக அவ்விடத்தை காலி பண்ணி விட்டு வேற்றிடம் சென்று விட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற வீடுகளில் சில வீடுகள் வசதியாகவே இருந்தன.
ரவீண் தன் நண்பன் வேலுவிடம், ""நாம் இனி இங்கேயே குடியேறிவிடலாம்!'' என்று சொல்ல வேலுவும் சம்மதித்தான். மூத்த சகோதரியை ரவீணும், இளைய சகோதரியை வேலுவும் திருமணம் செய்துக் கொண்டனர்.
நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. ரவீண் மனதில் கெட்ட எண்ணம் குடிகொள்ள ஆரம்பித்தது. அவனுக்கு வேலுவின் மனைவியின் மேல் ஒரு கண். எப்படியாவது வேலுவை அழித்துவிட்டு அவளை தன் உடமையாக்கிக் கொண்டு விட வேண்டும் என்று தீர்மானித்தான்.
அதன்படியே ஒருநாள் வேலு வெளியே சென்றிருந்த தருணத்தில், தன் மனைவியைக் கொன்று பூமிக்கடியில் எறிந்துவிட்டு, வேலுவின் மனைவியை அணுகி தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டபோது, அவள் மறுத்துவிட, அவளை இழுத்துப்போய் வெகு தூரத்திலுள்ள ஒரு காட்டில், ஒரு பெரிய மரத்துடன் சேர்த்து கட்டிவிட்டு, ஒன்றுமறியாதவனைப் போல் வீடு வந்து சேர்ந்துவிட்டான்.
ரவீண் அவனின் மனைவியை எறிந்த இடம் பூமிக்கடியிலுள்ள எறும்பு அரசனின் ஆளுகைக்குட்பட்ட இடமாகும். இறந்து கிடந்த அப்பெண்ணின் உடலைக் கண்டு பதறினான் எறும்பு அரசன். இப்பெண்ணின் தந்தையும் அவனும் நல்ல நண்பர்கள். தன் சேவகர்களை கூப்பிட்டு இப்பெண்ணை கொலை செய்தவனை தேடிப்பிடித்து கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.
வீடு திரும்பிய வேலு, தன் மனைவியை காணாமல் உடனே ரவீணிடம் சென்று தன் மனைவியைப் பற்றி கேட்க, ""எனக்கு என்னடா நண்பா தெரியும்? என் மனைவியையும்தான் காணவில்லை. ஒருவேளை இருவரும் வேறு எங்கேனும் ஓடி விட்டார்களோ என்னவோ...'' என்று ஒரேயடியாக சாதித்துவிட்டான்.
தன் மனைவியைத் தேடி வேலு மிக வேகமாக அலைந்து கொண்டிருந்த வேளையில், எறும்பு அரசனின் சேவகர்களின் கண்ணில் இவன்பட, ஓடிச் சென்று அவனை அப்படியே ஒரு அமுக்காக அமுத்திப் பிடித்து தங்கள் அரசன் முன் நிறுத்தினர்.
""மன்னா! இதோ இந்த கொலைகாரன்!'' என்று கூறினார். வேலு என்ன சொல்லியும் அரசன் அவனை நம்புவதாக இல்லை.
""என்னடா என்னை அத்தனை முட்டாள் என்று நினைத்துவிட்டாயா? எந்த கொலைகாரன்தான் நான்தான் கொலைசெய்தேன் என்று ஒப்புக் கொள்வான்? சரி இவனைக் கொண்டு போய் சிறையில் தள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட, பாவம் ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி வேலு சிறையில் அடைக்கப்பட்டான்.
கையைக் கட்டிக் கொண்டு அந்த சின்ன இருட்டு அறை மூலையில் எத்தனை நேரம்தான் உட்கார்ந்திருப்பது? குப்பை நிறைந்திருந்த அந்த அறை மூலையில் கிடந்த மூங்கில் குச்சிகளைப் பொறுக்கி, மிகவும் பிரயாசையுடன் ஒரு புல்லாங்குழல் தயாரித்தான். அக்குழலின் நேர்த்தியான அமைப்பைக் கண்டு இவனுக்கே ஆச்சர்யம் தாங்கவில்லை. தன் மனைவியை நினைத்துக் கொண்டு மிக சோகமாக இசை எழுப்பினான்.
"ஓ! என்ன இசை இது?' சிறைச்சாலையை சுற்றியிருந்த மரங்களிலும், மரப்பொந்துகளிலும் வசித்து வந்த பறவை இனங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. வேலு இசையெழுப்பும் போதெல்லாம், கூட்டமாக பறந்து வந்து அங்குமிங்குமாய் அமர்ந்து கொண்டு அந்த இசை வெள்ளத்தில் அப்படியே மூழ்கிவிடும்.
"அட இந்த புல்லாங்குழல் மட்டும் நம் கையில் இருந்தால், இவனை விட மிக அழகாக பாடலாமே...' என்று மனப்பால் குடித்தன. அத்தனை பறவை இனங்களும் மற்றும் சின்ன சின்ன மிருகங்களும்.
ஒருநாள் மிகவும் வஞ்சகமாக ஒரு காக்கை வேலுவை அணுகி, ""சகோதரா! உன் கவலையும், ஏக்கமும் எனக்கு புரிகிறது. நீதான் உன் சோகங்களை எத்தனை அழகாக இந்த குழல் மூலம் வெளிப்படுத்துகிறாய். சரி உன்னை இங்கிருந்து தப்பிக்க வழி செய்து, உன் மனைவியிடம் சேர்த்துவிடுகிறேன். அதற்கு பதிலாக இந்த குழலை எனக்குக் கொடுத்து விடு!'' என்று கெஞ்சியது.
வேலுவும் அதன் வார்த்தைகளை நம்பி தன் குழலை அதனிடம் கொடுக்க, அந்த நய வஞ்சக காக்கை, விடு ஜூட்... காக்கையின் வருகைக்காக காந்திருந்து அலுத்துப்போனவன், மறுபடியும் ஒரு புல்லாங்குழல் தயாரித்து அதில் வாசிக்க ஆரம்பித்தான். அவனின் அந்த நெஞ்சை அள்ளும் இசையைக் கேட்க வழக்கம்போல் ஏக கூட்டம் என்று சொல்லத் தேவையில்லை அல்லவா?
மிகவும் பரிவோடு அவனை நெருங்கியது ஒரு முள்ளம்பன்றி. ""தம்பி! உன்னைப் போன்றதொரு இசை மேதையை இதுவரை யாருமே பார்த்ததில்லை. இதுபோன்ற இசையை கேட்டதும் இல்லை. உன் நிலையைக் கண்டு நான் வருந்துகிறேன். உன் மனைவி எங்கு இருக்கிறாள் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். நான் அவளை சந்தித்து விபரத்தை கூறி, தைரியப்படுத்திவிட்டு, நாளைக் காலை வந்து மிக சமத்காரமாக உன்னை இங்கிருந்து அழைத்துப் போய் அவளிடம் சேர்த்துவிடுகிறேன். ஓகேயா?'' என்றது.
வேலுவின் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்.
""சகோதரா! நான் உன்னை முழுமையாக நம்புகிறேன். நானும் என் மனைவியுமாக சேர்ந்து நீ என்ன பரிசு கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்!'' என்றான்.
""அட போடா தம்பி! பரிசு என்னடா பரிசு. நீயும், உன் மனைவியும் ஒன்று சேர்ந்துவிட்டால் அதுவே எனக்குப் போதும்!'' என்று சொல்லி பாகாய் உருகிற்று.
""தம்பி! என்னை தப்பாய் புரிந்து கொள்ளாதே. நான் உன் மனைவியை சந்திக்க செல்லும் போது. வெறுங்கையுடன் சென்றால் அவள் என்னை நம்புவாளா? ஆகையால் நீதான் என்னை அனுப்பினாய் என்பதற்கு அடையாளமாக, அந்த புல்லாங்குழலை என்னிடம் கொடு. அதனை எடுத்துச் சென்று அவளிடம் காண்பித்தால் மட்டுமே அவள் என்னை நம்புவாள் அல்லவா?'' என்றது.
""ஆம் சகோதரா! நீ சொல்வதும் சரிதான். இந்தா இந்த குழலை எடுத்து செல். நாளை காலை நல்ல செய்தியுடன் வா. உன் வரவிற்காக மிக மிக ஆவலுடன் காத்திருப்பேன்!'' என்று சொல்லி வழி அனுப்பினான்.
"அட இந்த முட்டாள் பயலுடன் படாதபாடுடா!' என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டே, வெற்றி நடைப்போட்டு, போயே போய் விட்டது அந்த அயோக்கிய முள்ளம்பன்றி.
இவர்களின் துரோகச் செயலை கண்டு உண்மையாகவே மனம் நொந்து போனது அந்த குயில் மட்டுமே. தன் நிலையை நினைத்து அழுது கொண்டு உட்கார்ந்திருந்த வேலுவை அணுகிய அந்த நல்ல உள்ளம் படைத்த குயில், ""சகோதரா! அழாதே, உண்மையாகவே உனக்கு உதவ வேண்டும் என்ற உள்ளத்துடன்தான் உன்னை சந்திக்க வந்திருக்கிறேன். தயை செய்து என்னை நம்பு. உன் மனைவியை உன்னுடைய அயோக்கிய நண்பன் எங்கு ஒளித்து வைத்திருக்கிறான் என்று எனக்கு நன்றாக தெரியும். சற்று பொழுது சாயட்டும், நான் என் நண்பர்களுடன் வந்து உன்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுகிறேன்!'' என்றது.
""சகோதரா! உன்னை நான் முழுமையாக நம்புகிறேன். உனக்கு நான் எவ்வாறு கைமாறு செய்ய வேண்டும் என்றே எனக்குப் புரியவில்லை!'' என்றது.
""வேண்டாம் சகோதரா! உன்னிடம் கைமாறு எதிர்பார்த்து உனக்கு உதவ முன் வரவில்லை. உன் தெய்வீக இசைக்காகத்தான் இதை செய்கிறேன். தயை கூர்ந்து எனக்காக ஒரே ஒரு பாடல் பாடிக் காண்பிப்பாயா?'' என்றது குயில்.
மிக மனநிறைவோடு குழல் ஊத அப்படியே அந்த இசையில் மிக குளிர்ந்து மகிழ்ந்தது குயில். பாட்டு முடிந்ததும், ""சகோதரா! தூங்கிவிடாதே. இதோ நான் போய்விட்டு சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன்!''
""நிச்சயமாக வருவாய் அல்லவா?''
""சத்யமாக திரும்பிவிடுவேன். நான் வார்த்தை தவறமாட்டேன். நான் இசையை ஆராதிப்பவன்; இசை தேவதையை ஆராதிப்பவன்; பொய் சொல்லமாட்டேன். இசை தெய்வீகம் அல்லவா?'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டது.
சிறிது நேரத்தில் பத்து பதினைத்து குயில்களுடன் ஒரு பெரிய மரக்கிளையை தூக்கிக் கொண்டு வந்து, ""சகோதரா கிளம்பு! சீக்கிரம் காவலாளிகளின் கண்களில் படாமல் புறப்பட இதுதான் தக்க தருணம்!'' என்றது.
""எதற்காக இந்த மரக்கிளை?'' என்றான் வேலு.
""எதற்காகவா? சொல்கிறேன். உன் மனைவியை மிக தூரத்திலுள்ள காட்டில் ஒரு மரத்தில் கட்டி போட்டு வைத்திருக்கிறான் அந்த அயோக்கியன். அவ்வளவு தூரம் இக்காட்டினுள் உள்ள முள்ளிலும், கல்லிலும் உன்னால் வேகமாக நடக்க முடியாது. நீ இம்மரக்கிளையில் உட்கார்ந்து கொள். நானும் என் இனிய நண்பர்களும் உன்னை அப்படியே தூக்கிப்போய் உன் மனைவியிடம் சேர்த்துவிடுகிறோம்!'' என்றது.
வேலு கையெடுத்து கும்பிட்டான். ""நீங்கள் சாதாரண குயில்கள் அல்ல. தெய்வீக குயில்கள்!'' என்று சொல்லி, அவைகளின் விருப்பப்படியே அந்த மரக்கிளையில் ஏறி அமர, இரவு முழுவதும் பயணித்து பொழுது புலரும் தருணத்தில், அவள் மனைவி கட்டப்பட்டிருக்கும் மரத்தின் முன் கொண்டு போய் நிறுத்தின.
வேலுவைக் கண்டதும், ""நீங்கள் ஏன் என்னை தனியாக விட்டுவிட்டு சென்றீர்கள்? நான் அவனுடன்தான் வாழ வேண்டுமாம். நான் மறுத்ததினால் என்னை இழுத்து வந்து இந்த மரத்தில் கட்டிவிட்டு போய்விட்டான்!'' என்று கதறியவளை சமாதானப்படுத்தி, கயிற்றை அவிழ்த்து விடுவித்தான்.
""இதோ பார் ஜிக்கி! இதோ இந்த நல்ல உள்ளம் படைத்த இந்த சகோதரர்கள் மட்டும் உதவவில்லை என்றால், அந்த பாதாள சிறையிலிருந்து தப்பிக்க வழியின்றி அங்கே இறந்திருப்பேன். முதலில் இவர்கள் காலில் விழுந்து வணங்கு!'' என்றான். கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட, அப்படியே அக்கூட்டத்தை வணங்கினாள்.
""சகோதரா! இந்த இனிய நேரத்தில் நாங்கள் இங்கு இருப்பது நியாயமில்லை. நாங்கள் புறப்படுகிறோம்!'' என்று குயில் நண்பன் சொன்னதும், அவனை கட்டி அணைத்த வேலு, ""உன் அளவற்ற அன்பிற்கு ஈடாக உனக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்?'' என்று குரல் கம்ம சொன்னவன், தன் கையிலிருந்த புல்லாங்குழலை எடுத்தான்.
""சகோதரா! என் நெஞ்சாழத்திலிருந்து எழும் இசை வெள்ளத்துடன் சேர்ந்தே முழுமனதுடன் இக்குழலை உனக்குத் தருகிறேன். இன்றிலிருந்து இக்குழலுக்கு இணையாக உன் குரல் இனிமை பெருகும். குழலின் இனிமையா, குயிலின் இனிமையா என்று வரும் காலத்தில் மக்கள் உனக்கு புகழாரம் சூட்டுவார்கள்!'' என்று சொல்லி கட்டி அணைத்து விடை கொடுத்தான்.
ஓ அன்றிலிருந்தான் குயிலின் குரலுக்கு இத்தனை இனிமையா என்று சொல்லத் தேவை இல்லை அல்லவா?