பேச்சுலர் ரெசிபி: உருளைக்கிழங்கு மசாலா
21 Oct,2013
வீட்டை விட்டு வெளியூர்களில் தங்கியிருக்கும் பேச்சுலர்களுக்கு ஒரு சூப்பரான மற்றும் எளிமையான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் உருளைக்கிழங்கு மசாலா. பொதுவாக இந்த ரெசிபியானது அனைவருக்குமே பிடிக்கும். மேலும் உருளைக்கிழங்கு மசாலாவை பலவாறு சமைப்பார்கள். இப்போது அதில் எளிமையான ஒரு செய்முறையைத் தான் கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி, இந்த ரெசிபி வேலைக்கு செல்வோர் காலை அல்லது மாலையில் சீக்கிரம் செய்யக்கூடியவாறு இருக்கும். சரி, இப்போது அந்த பேச்சுலர் ரெசிபியான உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்!!! பேச்சுலர் ரெசிபி: உருளைக்கிழங்கு மசாலா
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 5-6 வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பூண்டு - 5-6 பற்கள் சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1/2 கப்
செய்முறை: முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கை போட்டு, தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம் மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகம், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரை திறந்து, உருளைக்கிழங்கின் தோலை உரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பிரியாணி இலையை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5-8 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து தக்காளியையும் அரைத்து ஊற்றி, உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் உருளைக்கிழங்கை சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.