
பணம்; கள்ளக்காதல்; பாதி எரிந்த பெண் பிணம்; குற்றவாளி கைது
கோவையில் கடந்த 1 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் பிணம் கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
கோவை போத்தனூர், செட்டிப்பாளையம் சவுடாம் பிகாநகர் பகுதியில் கடந்த 1 ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. இது தொடர்பாக செட்டிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் பிணத்தை கைப்பற்றினர்.
அந்த பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. அடையாளம் தெரியாத அளவுக்கு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருந்தது. அந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த போலீசார் அந்த பெண் யார்? என்பது தொடர்பான விசாரணையில் இறங்கினர்.
இதற்காக போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் பேரூர் டி.எஸ்.பி. தங்கதுரை மேற்பார்வையில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். பெண்ணின் புகைப்படம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. ஆனால் நேற்று வரை அந்த பெண் யார்? என்பது பற்றிய தகவல் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று கோவை பட்டணம்புதூர் பகுதியில் பெண்ணின் பிணம் குறித்து தண்டரோ போடப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த தீபக்குமார் என்பவரது மனைவி செர்லின் பினிதா ஜெனீபர் (வயது 29) மாயமாகி இருப்பது தெரிய வந்தது. தண்டோரா மூலம் பெண் பிணம் கிடப்பதை அறிந்த தீபக்குமாரும் அந்த பெண் தனது மனைவியாக இருக்கலாம் என்று சந்தேகித்தார். எனவே இது தொடர்பாக செட்டிப்பாளையம் போலீசாரை தொடர்பு கொண்டார். இதற்கிடையே பெண்ணின் பிணத்தை அடையாளம் காட்ட யாரும் வராததால் அந்த பிணத்தை அடக்கம் செய்ய ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் மற்றும் குழுவினர் தயார் ஆனார்கள். பிணத்தை அவர்கள் சிங்கா நல்லூர் மயானத்திற்கு கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் செட்டிப்பாளையம் போலீசார் ஆத்மா அறக்கட்டளையினரை தொடர்பு கொண்டு பிணத்தை அடக்கம் செய்வதை தவிர்த்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் பிணம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. செட்டிப்பாளையம் போலீசாரும் தீபக்குமாருடன் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு பெண்ணின் பிணத்தை பார்த்த தீபக்குமார் தனது மனைவி ஜெனீபர்தான் அந்த பெண் என்பதை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து ஜெனீபரை கொலை செய்தது யார்? என்பது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கினர்.
முதலில் தீபக்குமாரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவருக்கு ஜெனீபரின் கொலைக்கு தொடர்பு இல்லாதது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஜெனீபரின் செல்போன் மூலம் துப்பு துலக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி தீபக்குமாரிடம் ஜெனீபரின் செல்போன் எண்ணை பெற்றனர். அந்த எண் மூலம் விசாரணை நடத்தியபோது ஜெனீபரிடம் சுந்தராபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை பிடித்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது ஜெனீபரை கொலை செய்ததை கிருஷ்ணமூர்த்தி ஒப்புக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறுஜெனீபரின் கணவர் தீபக்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதேபோல ஈரோடு பள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஜெனீபரும் கணவரை பிரிந்திருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தீபக்குமாரும், ஜெனீபரும் திருமணம் செய்து கொண்டனர்.
பட்டணம்புதூரில் வசித்து வந்த தீபக்குமார் டிரைவராக வேலை பார்த்தார். ஜெனீபர் சிங்காநல்லூரியில் உள்ள தனியார் கம்பெனியில் பணி புரிந்தார்.
சுந்தராபுரத்தில் ஜெனீபர் நிலம் வாங்க நினைத்தார். இதற்காக பத்திர பேப்பர் விற்பனையாளரான கிருஷ்ணமூர்த்தியின் தந்தையை சந்திக்க ஜெனீபர் அடிக்கடி செல்வார். அப்போது ஜெனீபருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணமூர்த்தி திருமணம் ஆனவர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இருவரும் செல்போனில் பேசி தங்கள் பழக்கத்தை வளர்த்தனர். தனிமையிலும் சந்தித்து கொண்டனர். கடந்த 6 மாதமாக இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. திடீரென ஒருநாள் கிருஷ்ணமூர்த்தியிடம், ஜெனீபர் ரூ.5 லட்சம் கேட்டார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி பணம் கொடுக்க மறுத்தார்.
இருந்த போதிலும் கிருஷ்ண மூர்த்தியிடம் பணம் கேட்பதை ஜெனீபர் நிறுத்தவில்லை. தொடர்ந்து பணம் கேட்டு நச்சரித்தார். கிருஷ்ணமூர்த்தி ஆத்திரமடைந்து ஜெனீபரை கொலை செய்ய நினைத்தார். சம்பவத்தன்று பட்டணம்புதூருக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி காரில் ஜெனீபரை அழைத்து வந்தார்.
கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஜெ.ஜெ.நகர், சவுடாம்பிகா நகருக்கு அவர்கள் வந்தனர். அந்த நேரத்திலும் கிருஷ்ண மூர்த்தியிடம் ஜெனீபர் பணம் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தி சவுடாம்பிகா நகர் பகுதியில் ஜெனீபரை கொலை செய்தார்.
அப்போது ஆக்ஷா பிளேடால் ஜெனீபரின் கழுத்தையும் அறுத்துள்ளார். பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது