
பிரான்ஸ், பாரிஸில் பட்டப்பகலில் நடந்த ஒரு மில்லியன் யூரோ நகை கொள்ளை!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பட்டப்பகலில் நடந்த 1 மில்லியன் யூரோ நகை கொள்ளை தொடர்பாக புலனாய்வு செய்துவரும் பிரெஞ்ச் போலீஸ், 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளது. இவர்கள் ஐவருமே, கிழக்கு ஐரோப்பியர்கள். யாரிடமும் பாஸ்போர்ட்டோ, வேறு அடையாள ஆவணங்களோ கிடையாது.
நன்கு திட்டமிடப்பட்ட இந்த துணிகரக் கொள்ளை பாரிஸ் நகரில் உள்ள ஆடம்பர கைக்கடிகார ஷோரூமில் நடந்தது.
பிரஸ்டீஜ் வாட்ச்களை தயாரிக்கும் சுவிட்சலாந்து நிறுவனமான Vacheron Constantinக்கு சொந்தமான ஷோரூம் அது. கோடீஸ்வரர்கள் மட்டுமே ஷாப்பிங் செய்யும் அந்த ஷோரூமுக்கு பலத்த காவல் உள்ளது. வாட்ச் வாங்க வரும் நபர்களின் தோற்றத்தை பார்த்து ஆளை எடைபோட்ட பின்னரே, காவலர்கள் ஷோரூமுக்குள் நுழைய கதவை திறப்பார்கள்.
அதுவரை கதவு, லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். வெளியேயிருந்து திறக்க முடியாது.
வெள்ளிக்கிழமை மதிய நேரம், டிப்டாப்பாக உடை அணிந்த இருவர் ஷோரூம் வாயிலுக்கு வந்தனர். அவர்களது பகட்டான தோற்றத்தைப் பார்த்து, இவர்கள் பெரும் பணக்காரர்கள் என எடைபோட்ட காவலர்கள், இருவருக்கும் கதவைத் திறந்து விட்டனர்.
உள்ளே நுழைந்த இருவரும் காவலர்களை தள்ளிவிட்டு கதவுகளை திறந்து பிடிக்க, வீதியின் மறுபுறத்தில் பதுங்கியிருந்த 10க்கு மேற்பட்டவர்கள் கடையை நோக்கி திபுதிபுவென ஓடி வந்தார்கள் (செக்யூரிட்டி கேமராவில் பதிவான காட்சிகள், 3-வது, 4-வது போட்டோக்களில் உள்ளன)
இவர்கள் அனைவருமாக சேர்ந்து ஷோரூமில் இருந்த 20 வாட்ச்சுகளை அடித்துச் சென்று விட்டார்கள். வைரக்கற்கள் பதிக்கப்பட்ட அந்த வாட்ச்சுகளின் பெறுமதி, சுமார் 1 மில்லியன் யூரோ.
இதில் தமாஷ் என்னவென்றால், இவர்களில் யாருடைய கைகளிலும் ஒரு துப்பாக்கிகூட கிடையாது. உள்ளே புகுந்தவர்கள் கையில் இருந்த இரும்பு தடியால் ஷோகேஸை உடைத்து வாட்ச்களை எடுக்க, கடைக்கு வெளியே நின்ற ஒருவர் கையெறி குண்டு ஒன்றை வீச, அந்தப் பரபரப்பில் மின்னலென மறைந்து விட்டார்கள் இவர்கள்.
கடைக்கு வெளியே வீசப்பட்டதுகூட, வெறும் சத்தமும் புகையும் மட்டும் வரும் டம்மி கையெறி வெடிகுண்டுதான்!
புலன் விசாரணையில் ஈடுபட்ட போலீஸ், 5 கிழக்கு ஐரோப்பியர்களை கைது செய்துள்ளது. இவர்கள், ரொமேனியா, பல்கேரியா நாடுகளை சேர்ந்தவர்கள். மேலும் 10 பேரை போலீஸ் தேடுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட வாட்ச்சுகள் இன்னமும் மீட்கப்படவில்லை.
அவை, இதற்கிடையே பிரான்ஸூக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.