ஒரே செடியில் விளையும் தக்காளி, உருளை கிழங்கு : பிரிட்டன் நிறுவனம் அறிமுகம்
29 Sep,2013
ஒரே செடியில் விளையும் தக்காளி, உருளை கிழங்கு : பிரிட்டன்
நிறுவனம் அறிமுகம்
தக்காளியும், உருளைக் கிழங்கும் ஒரே செடியில் விளையும் புதிய முறை, பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த, "தாம்சன் அண்டு மார்கன்' என்ற நிறுவனம், விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரே செடியில், இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை, இந்நிறுவனம் கையாண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி, உருளைக் கிழங்கையும், தக்காளியையும், ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவன தலைவர், பவுல் ஹான்சர்டு கூறியதாவது: இரு வெவ்வேறு காய்கறிகளை, ஒரே செடியில் விளைவிப்பது, மிகவும் கடினமான காரியம். மரபியல் மாற்றங்களை செய்து, இதற்கு முன், இது போன்ற செயல்களில், விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். எனினும், அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில், இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில், முதல் முறையாக விளைவித்துள்ளோம். இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து, ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின், இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன. இதன் பின், சரியான நேரத்தில், தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப் பகுதியில், உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. இயற்கை முறையில் முதன் முதலாக ஒரே தாவரத்தில் இரு வேறு காய்கறிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. சோதனை முறையில் மட்டுமின்றி, வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது. இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால், மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பிரிட்டனில் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, இந்த புதிய முறையை, நியூசிலாந்து நாட்டு விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்