ஒற்றை ரோஜாமூன்றாம் அத்தியாயம்திண்டுக்கல் ஸ்டேஷனில் வண்டி நின்றது. "சிறுமலை வாழைப்பழம்", "சாம்பார் சாதம்" "பிரியாணி" என்னும் கூக்குரல்கள் காதைத் துளைத்தன. அந்த மனிதர் இறங்கி அவசரமாகப் போனார். பெட்டியை வைத்து தொலைத்து விட்டுதான் போனார். அந்தப் பெண் ஒரு வேளை இந்த வண்டியில் ஏறிக் கொள்ளலாம் என்று வந்தால், இந்தப் பெட்டி ஒரு தடையாயிருக்கலாமல்லாவா? அவர் கூறியவற்றில் ஏதேனும் கொஞ்சமாவது உண்மையிருக்குமா? அந்தப் பெண்ணின் ஊர் கொழும்பு, அவள் பெயர் மனோகரி என்பவையேனும் நிஜமாயிருக்குமோ? அதிக நேரம் நான் யோசிக்க முடியவில்லை. அவளே வந்து விட்டாள். என் வண்டியின் அருகில் வந்து நின்றாள். நானும் மரியாதைக்காகக் கீழே இறங்கினேன். "இங்கே ரயில் எத்தனை நேரம் நிற்கும்?" என்று கேட்டாள். "ஐந்து நிமிஷந்தான் நிற்கும்." "அப்படியானால் என் சாமான்கள் இங்கே ஏற்ற முடியாது. திருச்சினாப்பள்ளியில் தான் மாற்ற வேண்டும். இந்த வண்டியில் வந்து ஒருவர் ஏறினாரே, அவர் இறங்கிப்போவதைப் பார்த்தேன். அவர் என்னைப் பற்றி ஏதாவது சொன்னாரா?" என்றாள். "ஆம் ஏதேதோ சொன்னார். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை." "அவர் என்னதான் சொன்னார்?" என்று கேட்டாள். "உங்கள் ஊர் கொழும்பு என்றும், பெயர் மனோகரி என்றும் சொன்னார். உங்களை அவருக்குப் பழக்கம் உண்டு என்றும் கூறினார்." "அவ்வளவு வரை அவர் கூறியவை உண்மைதான். வேறு ஒன்றும் சொல்லவில்லையா?" "இன்னும் ஏதோ உளறினார்! அதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்?" "ஆம், என்னைப் பற்றி ஏதாவது அவதூறு சொல்லியிருப்பார். அதையெல்லாம் நீங்கள் நம்பாததற்கு ரொம்ப வந்தனம்! நான் பயந்தது உண்மை ஆயிற்று. அங்கே புஷ்கோட் மனிதர்கள் மூன்று பேர்; இங்கே ஸுட் போட்ட ஒருவர். ஆக, நாலு பேர் என்னைத் தொடர்ந்து இந்த வண்டியில் வருகிறார்கள். நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்!""எதற்காக உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள்? எதற்காக நீங்கள் பயப்பட வேண்டும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! உண்மையில் அபாயம் ஏற்படுவதாயிருந்தால், சும்மா இருந்து என்ன பயன்? ரயில்வே போலீஸாரிடம் சொல்லலாமே!" என்றேன். "வேண்டாம், வேண்டாம்! போலீஸாரிடம் மட்டும் சொல்ல வேண்டாம். அதைக் காட்டிலும்..." இவ்விதம் கூறிய மனோகரி, பேச்சை நடுவில் நிறுத்தி, என் வண்டிக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே வைத்திருந்த பெட்டி அவளுடைய கவனத்தை அடியோடு கவர்ந்துவிட்டதாகத் தெரிந்தது. அதை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றாள். அப்போது அந்த அழகிய பால் வடியும் முகத்தில் பீதியின் சாயை பரவியதைப் பார்த்தேன். எனக்கு அவளிடம் பரிதாபமும் உண்டாயிற்று; ஒரு வித வியப்பும் உண்டாயிற்று."ஆமாம்; அது அந்த மனிதருடைய பெட்டிதான். பிற்பாடு வந்து எடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டுப் போனார்!" என்றேன். "திருச்சியில் உங்கள் வண்டியில் வந்து ஏறிக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். அதுவும் முடியாது போலிருக்கிறது!" என்றாள். "ஏன் முடியாது? அந்த ஆசாமி மறுபடி வந்தால் அவரை விரட்டியடித்து விடுகிறேன். அல்லது இரண்டு பேரும் வேறொரு வண்டியைப் பார்த்து ஏறுவோம். மூன்றாம் வகுப்பில் வேண்டுமானாலும் ஏறிக்கொண்டு போவோம். நீங்கள் கொஞ்சங்கூட பயப்பட வேண்டாம். நான் இருக்கும்போது உங்களுக்கு ஒருவித அபாயமும் வருவதற்கு விடமாட்டேன்!" என்றேன். "சரி, எல்லாவற்றுக்கும் திருச்சி ஜங்ஷனில் யோசித்துக் கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு, மனோகரி திரும்பி அவள் வண்டிக்குப் போனாள். அவள் தலையிலிருந்த ஒற்றை ரோஜாப்பூ மீண்டும் என் கண்ணில் பட்டது. இந்தத் தடவை அது ஏதோ மர்மம் நிறைந்த பொருளாக எனக்குத் தோன்றியது. பெட்டியை எடுத்துக்கொண்டு போக அந்த மனிதர் வரவேயில்லை. ரயில் புறப்பட்டுவிட்டது. கொந்தளிக்கும் கடலில் அலைகள் எழுந்து விழுவது போல், என் மனத்தில் எண்ண அலைகள் வந்து மோதின. மனோகரியும் அவளைத் தொடர்ந்து அதே ரயிலில் வருவதாக அவள் கூறிய நான்குபேரும் அந்த அலைகளில் புரண்டு புரண்டு எழுந்தார்கள். ஏதோ ஒரு மர்மச் சுழலில் நான் சிக்கிக் கொண்டு விட்டதாகத் தோன்றியது. அது என்னவாயிருக்குமென்று எவ்வளவோ யோசித்தும் தலைகால் ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண் ஏதோ ஒரு சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் நிச்சயம். எது எப்படியிருந்தாலும் அவளுக்கு ஆதரவாக நின்று, உதவி செய்ய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். அந்த முயற்சியில் உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் சரிதான். பாபநாசம் அருவியில் விழுந்து உயிர் துறந்து அநாதைப் பிணமாவதைக் காட்டிலும் இப்படிப்பட்ட ஒரு நிராதரவான பெண்ணுக்கு உதவி செய்து உயிரை விடுவது மேல் அல்லவா? ஒரு வேளை, அதற்காகவே தான் கடவுள் பாபநாசத்தில் நம்முடைய புத்தியை மாற்றி அருளினாரோ என்னவோ? ஆனால் மனோகரி கொஞ்சம் நம்மிடம் அதிக நம்பிக்கை வைத்து எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னால், நம்முடைய அறிவைப் பூரணமாகப் பயன்படுத்தி அவளுக்கு உதவி செய்யப் பார்க்கலாம். எல்லாவற்றுக்கும் திருச்சினாப்பள்ளி வரட்டும்; பார்ப்போம். கேட்டால் சொல்லாமலா போகிறாள்? இப்படியெல்லாம் நான் எண்ணிக்கொண்டிருக்கையில் அந்த ஒற்றை ரோஜாப்பூ மட்டும் என் மனக்கண் முன்னால் இடைவிடாமல் தோன்றிக் கொண்டே இருந்தது. திருச்சி ஜங்ஷன் வந்தது. ஐந்தாம் நம்பர் பிளாட்பாரத்தில் இன்ன வண்டி வந்திருக்கிறது என்றும், ஆறாம் நம்பர் பிளாட்பாரத்திலிருந்து இன்ன வண்டி புறப்படப்போகிறது என்றும் ஒலிப்பெருக்கி அலறிக்கொண்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கி நின்றேன். என் கண்கள் இரண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தன. பெட்டிக்கு உடைய மனிதர் வருகிறாரோ என்று ஒரு பக்கம் பார்த்தன; ஒற்றை ரோஜாப் பூவை இன்னொரு பக்கம் ஆவலுடன் எதிர் பார்த்தன. முதல் வகுப்புப் பெண்கள் வண்டியிலிருந்து அவளுடைய முகம் எட்டிப் பார்த்தது. பிறகு அவள் வண்டியிலிருந்து இறங்கினாள். பிளாட்பாரத்தில் அதிக வெளிச்சமில்லாதிருந்த ஓர் இடத்துக்குப் போய் நின்றாள். அப்படியும் இப்படியும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு நின்றாள். சற்று நேரம் நான் பொறுத்துப் பார்த்துவிட்டு இறங்கிப் போனேன். அவளருகில் சென்று "என்ன தீர்மானம் செய்தீர்கள்?" என்று கேட்டேன். "இன்னமும் யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை." "எனக்கு என்னவோ, நீங்கள் அநாவசியமாகப் பயப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது." "அப்படித்தான் எனக்கும் ஒரு சமயம் தோன்றுகிறது. இன்னொரு சமயம், ... அந்த மூன்று புஷ்கோட் ஆசாமிகளை நினைத்தால் பயமாயிருக்கிறது." "எதுவாயிருந்தாலும் இருக்கட்டும். உங்களுக்கு அப்படிப் பயமாயிருந்தால் என் வண்டியில் வந்து ஏறிக் கொள்ளுங்கள்..." "வந்துவிடலாம். ஆனால், அந்தப் பெட்டிக்காரர் வந்து, பெட்டியை எடுத்துக்கொண்டு போய் விட்டாரா?" "இன்னுமில்லை!" "அதனால்தான் யோசிக்கிறேன். வண்டி புறப்படும் சமயத்தில் அவர் திடீரென்று வந்து ஏறிக் கொண்டால்?" "ஏறிக்கொண்டால் என்ன, நான் இருக்கும்போது?" "அதைவிடப் பெண்கள் வண்டியில் நான் தனியாக இருப்பதே நல்லது." "உங்களுக்கு என்னதான் தோன்றுகிறது? எதற்காக இவர்கள் எல்லோரும் உங்களைத் தொடர்கிறார்கள்? ஒரு காரணமும் ஊகிக்க முடியவில்லையா?" "மதுரை ஜங்ஷனில் அவர்களுடைய பேச்சில் இரண்டொரு வார்த்தை என்காதில் விழுந்தது." "ஆ! அதிலிருந்து ஏதாவது ஊகிக்க முடிந்ததா?" "ஏதோ விலை உயர்ந்த வைரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அவர்கள் சுங்க இலாகா அதிகாரிகள் என்று தோன்றுகிறது. நான் ஏதோ வைரங்களை ஒளித்து எடுத்துப் போகிறேன் என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள் போலிருக்கிறது" என்றாள் மனோகரி. இதைக் கேட்டு நான் சிரித்து விட்டேன். மனோகரியும் சிரித்தாள்; அவள் சிரித்த அந்தச் சிரிப்பு என் காதில் கிண்கிணி நாதமாக ஒலித்தது. "என்ன முட்டாள் தனம்! நீங்கள் தான் அது விஷயத்தில் மிகப் பரிசுத்தமாக இருக்கிறீர்களே! ஒரு குன்றிமணி எடை தங்கமோ ஒரு சிறிய மூக்குத் திருகு வைரமோ உங்கள் உடம்பில் இல்லையே! அதனாலேயே உங்களை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. மதராஸில் சில பணக்கார வீட்டு ஸ்திரீகள் உடம்பெல்லாம் வைரமாக வருகிறார்கள். அந்த அவலட்சணத்தைப் பார்த்துக்கூசிய என் கண்களுக்கு உங்களைப் பார்த்தால்...சேச்சே! என்னமோ சொல்லிக் கொண்டு போகிறேனே!" "எல்லாம் சரியாகத்தான் சொல்கிறீர்கள். பாக்கியையும் சொல்லி முடியுங்கள்? ஆ! அதோ!-"திரும்பிப் பார்த்தேன். என் வண்டிக்குப் பக்கத்தில் இருவர் வந்து நின்றார்கள். ஒருவர் பெட்டியை வைத்துவிட்டுப் போனவர். இன்னொருவர், புது மனிதர். பெட்டிக்குரியவர் இன்னொருவரிடம் ஏதோ சொன்னார். இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள்! பிறகு அங்கிருந்து அகன்றார்கள். பெட்டி, வண்டிக்குள்ளேயே இருந்தது. ஆர்வத்துடன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மனோகரி, "நான்கு பேருடன் இன்னொருவரும் சேர்ந்தாயிற்று!" என்றாள். அவளுடைய, அழகியமுகத்தில் பீதி ததும்ப அங்குமிங்கும் அவள் மிரண்டு பார்த்தபோது நான்கு புறமும் வேடுவர்களால் சூழப்பட்ட மானின் மருண்ட பார்வை என் நினைவுக்கு வந்தது. சுற்றிலும் வலைகள் நெருங்கி வருவதை உணர்ந்த மீன் துவண்டு துடிப்பதைப் போல் அவளுடைய நயனங்கள் துடித்துக் கொண்டிருந்தன.எனக்கும் சிறிது கலக்கமாகத் தானிருந்தது. ஆயினும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவளுக்குத் தைரியம் கூறவும், கூடுமான உதவி செய்யவும் விரும்பினேன். "ரயில்வே ஜங்ஷனில் எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள், எல்லாரும் உங்களைத் தேடுவதாக ஏன் எண்ணிக்கொள்கிறீர்கள்?" என்று கேட்டேன். "காரணமில்லாமல் பயப்படும்படியான அவ்வளவு பெரிய அசடு என்று என்னைப் பார்த்தால் தோன்றுகிறதாக்கும்." "மன்னிக்க வேண்டும். அப்படி நான் சொல்லவில்லை. அவர்கள் - தங்களைத் தேடி வருகிறவர்கள் - மூடர்களாக இருக்கலாம் அல்லவா?" "அவர்கள் எல்லாரையுமே மூடர்கள் என்று நான் ஒத்துக் கொள்ள முடியாது." "ஏன்?" "அவர்களில் ஒருவர் என் தகப்பனார்!" "என்ன! என்ன!" "ஆமாம் கடைசியாக வந்தவர் என் தகப்பனார். அவர் பெயர் எழுதிய பெட்டிதான் தங்கள் வண்டியில் இருந்தது. திண்டுக்கல்லில் இறங்கியவர் என் தகப்பனாரின் உதவிக்கு வந்தவராயிருக்க வேண்டும்." "எனக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போலிருக்கிறது. தங்கள் தகப்பனார் தங்களை எதற்காகத் தேடி வரவேண்டும்?" என்றேன். "மகளிடம் தகப்பனாருக்கு இருக்கக்கூடிய வாஞ்சையினால்தான். 'நான் என் காதலனுடன் இந்தியாவுக்குப் போகிறேன். கவலைப்பட வேண்டாம்' என்று அப்பாவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு வந்தேன். உடனே புறப்பட்டு ஓடி வந்திருக்கிறார். இவ்வளவு சீக்கிரம் வந்துவிடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆகாய விமானம் ஒன்று இருக்கிறது என்பதையே மறந்துவிட்டேன்." ஆகாயம் இடிந்து என் தலையில் விழுந்தது போலிருந்தது. ஆனாலும் அதில் என்ன வியப்பு? இப்படிப்பட்ட அழகிக்கு ஒரு காதலன் இருப்பதில் வியப்பில்லைதான்! கொம்புத் தேனுக்கு முடவன் ஆசைப்பட்டு ஆவதென்ன? "அப்படியானால், நான் விடைபெற்றுக் கொள்ளட்டுமா?" என்றேன். அப்பொழுது என்னை அறியாமலே என் குரலில் ஒருவித ஏக்கம் தொனித்தது. "நீங்கள் உதவி செய்வீர்கள் என்று நினைத்தேன். என்னைக் கைவிட்டுவிடப் போகிறீர்களா?" "நான் என்ன உதவி செய்ய முடியும், உங்கள் தந்தையே வந்திருக்கும் போது?" "ஓர் உதவி உங்களால் செய்ய முடியும்." "முடிந்தால் அவசியம் செய்கிறேன்." "சிறிது நேரத்துக்கு என் காதலனாக நடிக்க வேண்டும். அதாவது, என் தந்தையின் முன்னிலையில்..."இதெல்லாம் நிஜமாக நடக்கிறதா, அல்லது ஆங்கில நாவல் ஆசிரியர் வோட் ஹவுஸின் கதை படித்துக் கொண்டிருக்கிறேனா என்று எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. "முன் பின் காதலனாக நடித்து எனக்குப் பழக்கம் இல்லை. முயன்று பார்க்கிறேன். ஆனால், இதெல்லாம் எதற்காக? உங்கள் அசல் காதலன் எங்கே?" "அசல் காதலனுமில்லை; அப்பீல் காதலனுமில்லை. அப்பாவுக்காக அப்படி வெறுமனே எழுதி வைத்துவிட்டு வந்தேன். இப்போது அதை உண்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. தங்களைத்தான் நம்பியிருக்கிறேன்." "நம்பினவர்களை நான் கைவிடுவதில்லை. என்னாலியன்ற உதவி செய்கிறேன், பரிசு என்ன தருவீர்கள்?" "பரிசா? என்னிடம் என்ன இருக்கிறது கொடுப்பதற்கு?" என்றாள் மனோகரி. "தங்கள் தலையில் சூடியிருக்கும் ரோஜாப்பூவைக் கொடுத்தால் போதும். இன்றைய சம்பவத்தின் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வேன்..." மனோகரியின் பால்வடியும் முகத்தில் அப்போது ஒரு இலேசான நிழல் சாயை படர்ந்ததைக் கவனித்தேன். அப்போது என் உள்ள நிறைவிலும் ஒரு கள்ளம் புகுந்தது. இவள் உண்மையாக அபாயத்தில் சிக்கிக்கொண்டிருப்பவள்தானா? அல்லது எல்லாம் வெறும் நடிப்பா? ஒரு பெரிய கபட நாடகத்தின் அங்கமா?... மனோகரி அந்த ஒற்றை ரோஜாவைத் தன் கூந்தலிலிருந்து எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, "இது வெறும் வர்ணக் காகிதம். தங்களுடைய உதவிக்கு இதையா பரிசாகக் கொடுப்பது? தயவு செய்து மன்னியுங்கள். நான் மட்டும் பத்திரமாகச் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தால் புத்தம் புதிய மணமுள்ள ரோஜா மலர்களை வாங்கி மாலையாகத் தொடுத்துத் தருகிறேன்!" என்றாள். எனக்கு மெய் சிலிர்த்தது. அவள் தன் தங்கள் கையினால் என் கழுத்தில் ரோஜாமாலை சூட்டுவதாகவே கற்பனை செய்துகொண்டு மகிழ்ந்தேன். உண்மையாகச் செய்யட்டும், செய்யாமற் போகட்டும். இவ்வளவு ரசனையுடன் பேசும் பெண்ணுக்காக என்னதான் செய்யக்கூடாது? "தங்களைப் பத்திரமாகச் சென்னை கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு. சிறிதும் அதைப் பற்றிக் கவலை வேண்டாம்" என்றேன். இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏழெடுப் பேர் எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்படி வருபவர்களில் இரண்டு பேர் போலீஸ்காரர்கள் என்பதும் தெரிந்தது. எனக்குத் திக், திக் என்று அடித்துக் கொண்டது. ஆயினும் பக்கத்தில் மனோகரியிருப்பதை முன்னிட்டு மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டேன். அவர்கள் எங்கள் அருகில் வருவதைப் பார்த்ததும் மனோகரி அவர்களை எதிர்கொள்பவளைப் போல் முன் நோக்கி நடந்தாள். நானும் சென்றேன். இருவரும் தூண் ஓரத்து நிழலிலிருந்து நல்ல வெளிச்சத்துக்கு வந்து விட்டோம். கைப்பெட்டிக்காரர் என்னைப் போலீஸ்காரர்களுக்குச் சுட்டிக் காட்டினார். "இந்த ஆள்தான்; இவனைக் கைது செய்யுங்கள்!" என்றார். "எதற்காக?" என்று மனோகரி, பெண் சிங்கத்தைப்போல் கம்பீரமாக முன்னால் நின்று கேட்டாள். "உன்னை உன் தகப்பனாருக்குத் தெரியாமல் ஏமாற்றி அழைத்து வந்ததற்காகத்தான்!" "அது பொய்! நான் என் இஷ்டத்தினால் வந்தேன்!" இப்படி அவர்கள் வாதமிட்டுக் கொண்டிருக்கும் போதே போலீஸார் இருவரும் என் இருபக்கத்திலும் வந்து நின்று, "மரியாதையாக வந்துவிடு!" என்றார்கள். நானும் மரியாதையாக அவர்களுடன் நடந்தேன். போலீஸ் விவகாரங்களில் சிக்கி வழக்கமில்லாதவனாதலால், ஒரு பக்கம் திகிலாயிருந்தது. மற்றொரு பக்கத்தில், மனோகரிக்காக இதைச் செய்கிறோம் என்ற திருப்தியும் ஏற்பட்டது. சீக்கிரத்தில் இந்தக் குழப்பம் நீங்கிவிடும்; நம்மைப் போலீஸார் ஒன்றும் செய்துவிட முடியாது என்று திடப்படுத்திக் கொண்டு நடந்தேன்.