நைரோபி ஷாப்பிங் மாலில் 200 பிணை கைதிகளை மீட்க 3வது நாளாக போராட்டம் பலி எண்ணிக்கை 68 ஆனது
நைரோபி: கென்யாவின் நைரோபி ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 200 பிணை கைதிகளை மீட்க 3வது நாளாக பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர். இதற்கிடையில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலி எண்ணிக்கை 68 பேராக உயர்ந்துள்ளது.
கென்யாவின் நைரோபி நகரில் வெஸ்ட் கேட் ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் ஏராளமான மக்கள் வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் முகமூடி அணிந்து அங்கு நுழைந்தனர். நான்கு மாடி கொண்ட ஷாப்பிங் மாலில் 3வது மாடியில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அங்கு ஒவ்வொரு கடையாக புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் ரத்த வெள்ளத்தில் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். அந்த தளம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 2 இந்தியர்கள் உள்பட 68 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, தீவிரவாதிகள் பொதுமக்களோடு கலந்து தப்பியதாக கூறப்பட்டது. ஆனால், தீவிரவாதிகள் ஷாப்பிங் மாலின் ஒரு தளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தெரிய வந்தது.
அந்த மாடியில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை. எனினும் 200க்கும் அதிகமானோர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை பத்திரமாக மீட்க 3வது நாளாக பாதுகாப்பு படையினர் முயற்சித்து வருகின்றனர். இப்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை. அமைதியாக இருக்கின்றனர்.
அவர்கள் தப்ப முடியாது என்று கென்யா அதிபர் உகுரு கென்யாட்டா ஆவேசமாக நாட்டு மக்களிடம் பேசினார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். பிணை கைதிகளை மீட்க முயற்சித்து வருகிறோம் என்று கென்யாட்டா தெரிவித்தார். மீட்பு பணியில் இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சோமாலியாவில் தீவிரவாதிகளை அடக்குவதற்காக கென்யா தனது துருப்புகளை அனுப்பி உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோமாலிய தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷேக் அலி முகமது ரேஜ் கூறுகையில், சோமாலியாவில் இருந்து கென்ய படைகள் முழுவதும் வாபஸ் பெறும் வரை இதுபோல் தாக்குதல் தொடரும் என்று டுவிட்டரில் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பிணை கைதிகளின் கதி என்ன என்ற பீதி நிலவுகிறது.