ஒற்றை ரோஜா முதல் அத்தியாயம் ஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறிவிட்டேன். இதனால் வாழ்க்கை கசந்து போயிருந்தது. ஒரு மாதிரி பிராணத் தியாகம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். திடீர் திடீர் என்று நமக்குத் தெரிந்தவர்கள் யார் யாரோ இறந்து போய்விட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் பின்பற்றலாம் என்றால், அதற்கு வழிவகை தெரிவதில்லை. யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பாபநாசத்தில் கல்யாணி தீர்த்தம் என்பதாக ஓர் இடம் இருக்கிறதென்றும், அதிலேதான் ஆசிரியர் வ.வே.சு. ஐயர் விழுந்து உயிரை இழந்தார் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அந்தப் பெரியாரைப் பின்பற்றலாம் என்று எண்ணிக்கொண்டுதான் பாபநாசம் போனேன்.இரண்டு காரணங்களினால் நான் உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. முதலாவது, அந்தக் கல்யாணி தீர்த்தம் இருக்கிறதே, அது பார்க்க மிகப் பயங்கரமாயிருந்தது. தென்னைமர உயரத்திலிருந்து மூன்று தண்ணீர்த் தாரைகள் 'சோ' என்ற சத்தத்துடன் கீழேயுள்ள அகண்ட பள்ளத்தில் விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பள்ளத்தில் தண்ணீர் நிறைந்து ததும்பி அலை மோதிக்கொண்டிருந்தது. சிறிய மரக்கிளை ஒன்று அத்தடாகத்தில் விழுந்து அங்குமிங்கும் சுழன்று அலைக்கப்படுவதைப் பார்த்தேன். இதிலே விழுந்தால் நம்முடைய தேகமும் இப்படித்தானே அலைக்கப்படும் என்று நினைத்தபோது என் தைரியம் குலைந்துவிட்டது. அன்னை பெற்றெடுத்த நாளிலிருந்து எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்த உடம்பு இது! இதற்கு எத்தனை எண்ணெய், எத்தனை சோப்பு! எத்தனை ஆடை அலங்காரம், எத்தனை வகை வகையான அன்னபானம்-அடடா! இதைப் புகைப்படம் பிடிப்பதற்காக மட்டும் எத்தனை செலவு! இவ்வாறெல்லாம் பேணி வளர்த்த உடம்பு அந்தப் பயங்கரமான தடாகத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது என்னும் எண்ணத்தை என்னால் கொஞ்சங்கூடச் சகிக்கவே முடியவில்லை. அங்கிருந்து இறங்கி வந்து கீழே பாபநாசம் கோவிலுக்குப் பக்கத்தில் பளிங்கு போன்று தெளிந்த நீரோடும் நதியின் கரையில் உட்கார்ந்து யோசித்தபோது, எதற்காக உயிரை விடவேண்டும் என்றே தோன்றிவிட்டது. நதியின் வெள்ளத்தில் மந்தை மந்தையாகத் தங்கநிற மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. அவை மேலே வரும்போதும் புரண்டு விழும்போதும் என்னமாக ஜொலித்தன! இந்த மீன்கள் இவ்வளவு குதூகலமாக விளையாடிக் கொண்டு திரிகின்றனவே, பி.ஏ. பரீட்சையில் தேறாததனாலே இவற்றுக்கு என்ன குறைவு வந்துவிட்டது! இதோ இந்த மரங்களில் எத்தனை விதமான பட்சிகள் எவ்வளவு ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வாழ்கின்றன! இவை பி.ஏ. பரீட்சையில் தேறவில்லையே! இதோ இந்தக் குரங்குகளைத் தான் பார்க்கலாமே! பி.ஏ. பட்டம் பெறவில்லையே! என்று அவை கொஞ்சமாவது கவலைப்படுகின்றனவா? ஆணும் பெண்ணும் எவ்வளவு உல்லாசமாக மரங்களின் மீது ஏறியும் இறங்கியும் கிளைக்குக் கிளை பாய்ந்தும் வாழ்கின்றன! தாய்க்குரங்கு அந்தக் குட்டிக்குரங்கையும் சேர்ந்து அணைத்துக் கொண்டு மரத்துக்கு மரம் தாவுகிற அழகை என்னவென்று சொல்வது! அறிவில்லாத பிராணிகளும் பட்சிகளும் இவ்வளவு உல்லாசமாக வாழ்க்கை நடத்தும்போது நாம் மட்டும் பி.ஏ. பரீட்சை தேறவில்லை என்பதற்காக ஏன் உயிரை விட முயல வேண்டும்? இத்தகைய முடிவுக்கு வந்து திரும்பித் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். சென்னைக்கு இரண்டாம் வகுப்பு டிக்கட் எடுத்துக்கொண்டு ரயில் வண்டியில் ஏறினேன். ரயில் என்னமோ வேகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், என் மனம் அதைவிட வேகமாக எங்கெங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது! ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது கஷ்டமாயிருந்தது. அன்றைக்குப் பாருங்கள், என்ன காரணத்தினாலோ அந்த வண்டியில் கூட்டமே இல்லை. உயர்ந்த வகுப்பு வண்டிகளை வழக்கத்தைவிட அதிகமாகவே கோத்திருந்தார்கள், போலிருக்கிறது. நான் ஏறி இருந்த இரண்டாம் வகுப்பு வண்டியில் நான் ஒருவனேதான். ஆகையால், உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போய் விட்டது. ரயில் நின்ற ஒவ்வொரு நிலையத்திலும் வண்டியிலிருந்து கீழே இறங்கிப் பிளாட்பாரத்தில் சிறிது நேரம் உலாவிவிட்டு ரயில் புறப்படும் சமயத்தில் மறுபடியும் ஏறிக் கொண்டேன். ரயில் நிலையங்களில் சாதாரணமாய் நடமாடும் பலதரப்பட்ட ஜனங்களைப் பார்ப்பதில் ஒருவித உற்சாகம் ஏற்பட்டது.விருதுநகர் சந்திப்பில் அந்த உற்சாகம் சிகரத்தை அடைந்தது. ஆம்; முதலில் நான் பார்த்தது-என் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது-ஓர் ஒற்றை ரோஜாப்பூ தான்! அந்த ஒற்றை ரோஜாப்பூ ஒரு பெண்மணியின் எடுத்துக் கட்டிய கூந்தல் மீது வீற்றிருந்தது. 'கொலு வீற்றிருந்தது' என்றும் சொல்லலாம். அவ்வளவு இலட்சணமாயிருந்தது. தலைநிறைய ஒரு சுமைப் பூவைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அலையும் சென்னை நகர்ப் பெண்மணிகள் பலரை நான் பார்த்திருக்கிறேன். "என்ன அநாகரிகம்! தலையில் புல்லுக் கட்டைச் சுமப்பதுபோல் சுமக்கிறார்களே!" என்று எண்ணியிருக்கிறேன். அதற்கெல்லாம் மாறாக இவ்வளவு நாஸுக்காகவும் நாகரிகமாகவும் கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூ அணிந்திருக்கும் பெண்மணி யாரோ? என்று அறிய ஆவல் உண்டாயிற்று. ரயிலில் நான் இருந்த வண்டிக்கு இரண்டு வண்டிக்கு அப்பால் அவள் இருந்தாள். அவள் தலை வெளியில் நீட்டப்பட்டிருந்தது. ஆனால், முகம் எனக்கு நேர் எதிர்ப்புறமாகத் திரும்பியிருந்தது. அந்தப் பெண்மணியின் முகம் எப்படியிருக்குமோ, கூந்தலில் சூடிய ஒற்றை ரோஜாப்பூவினால் ஏற்பட்ட நல்ல அபிப்பிராயம் முகத்தைப் பார்த்ததும் மாறிவிடுமோ என்ற ஐயத்துடனேயே அந்தப் பக்கம் போனேன். ஏதோ ஒரு கதையில் படித்திருக்கிறேன். ஒருவன் ஒரு பெண்ணின் கரத்தைப் பார்த்து அதன் அழகில் சொக்கிப் போனான்! அவள் முகத்தைப் பார்த்ததும் பயங்கரமும் அருவருப்பும் அடைந்தான். இம்மாதிரி கதி எனக்கும் ஏற்பட்டுவிடுமோ?அருகில் சென்றபோது சட்டென்று அவள் முகம் என் பக்கம் திரும்பியது. ஆகா! நான் பயந்தது என்ன முட்டாள்தனம்! பார்க்கிறவர்களின் கண்ணில் வந்து தாக்கி வேதனை உண்டாக்கும் சௌந்தரியமும் உண்டோ ! அத்தகைய அபூர்வ சௌந்தரியமுள்ள முகத்தை அவள் என் பக்கம் திருப்பினாள். ஒரு புன்னகையும் புரிந்தாள். நிலா வெளிச்சத்தில் முல்லை பளீரென்று மலர்ந்தது போலிருந்தது. நான் எப்போதும் சங்கோசமோ கூச்சமோ அதிகம் இல்லாதவன் தான். ஆயினும், அவளிடம் அப்போது நானாக ஒரு வார்த்தை பேச முயன்றிருந்தால் என் பிராணனே போயிருக்கும். பாபநாசத்தில் நடந்திருக்க வேண்டியது விருதுநகர் ரயில்வே நிலையத்தில் நடந்திருக்கும். அந்த மாதரசி அதற்கு இடம் வையாமல் என்னிடம் அவளாகவே பேசிவிட்டாள். "தயவு செய்து சிற்றுண்டிச் சாலைக்காரனை எனக்கு ஒரு கப் டீ கொண்டுவரும்படி சொல்ல முடியுமா?" என்றாள். "பேஷாகச் சொல்கிறேன்!" என்று சொல்லி விட்டு, வேகமாக நடந்து போய் ஸ்பென்ஸர் ஆள் ஒருவனைப் பிடித்து, பிஸ்கோத்தும் டீயும் கொண்டுபோய்க் கொடுக்கும்படி சொன்னேன். அப்புறம் ஏதோ சந்தேகம் தோன்றவே இந்தியச் சிற்றுண்டிச் சாலைக்கும் போய்ச் சிற்றுண்டி காப்பி கொண்டு போய்க் கொடுக்கும்படியும் சொன்னேன். பிறகு சற்றுத் தூரம் பிளாட்பாரத்தில் நடந்துவிட்டுத் திரும்பினேன். திரும்புகையில் அந்தப் பெண்ணின் வண்டிக்கருகில் நின்று, "டீ வந்ததா?" என்று கேட்டேன். அவள் திரும்பிப் பார்த்து முகமலர்ச்சியுடன், "ஓ! ஒன்றுக்கு இரண்டு மடங்காக வந்தது. நீங்கள் கூட வந்து சாப்பிடலாம்!" என்றாள். ஒரு கணம் அந்த வண்டியில் ஏறிக்கொள்ளலாமா என்ற பைத்தியக்கார எண்ணம் உண்டாயிற்று. நல்ல வேளையாக, வண்டியின் வெளிப்புறத்தில் 'பெண்களுக்கு மட்டும்' என்று போட்டிருப்பதை பார்த்திருந்தேன். ஆகையால், "இல்லை! நான் சாப்பிட்டாயிற்று!" என்று சொல்லிவிட்டு என் வண்டியில் போய் ஏறிக்கொள்வதற்கு நகர்ந்தேன். அந்தப் பெண் மறுபடியும், "இன்னும் ஓர் உதவி எனக்காகச் செய்யமுடியுமா? இந்த ரயிலில் காக்கி புஷ்கோட் அணிந்த மூன்று மனிதர்கள் எந்த வண்டியிலாவது இருக்கிறார்களா? அவர்களில் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் மாதிரி தொப்பி அணிந்திருப்பார்! ஆனால்... ஒரு வேளை, வண்டி புறப்படும் சமயம் ஆகிவிட்டதோ, என்னவோ?" என்றாள். "வண்டி புறப்படப் போகிறது! அதனால் பாதகமில்லை. நீங்கள் சொல்வது போன்ற மூன்று ஆசாமிகள் இந்த வண்டியில் இருக்கிறார்கள். என்ஜினுக்குப் பக்கத்து வண்டியில் அவர்கள் இருப்பதைச் சற்று முன்னால் பார்த்தேன்!" என்றேன். நான் சொன்னது உண்மையேதான். அதைக் கேட்ட அந்தப் பெண்ணின் புருவங்கள் வெகு இலேசாக நெரிந்தன. "சரி, ரொம்ப வந்தனம்" என்றாள். நான் போய் என் வண்டியில் ஏறிக்கொண்டேன். விருதுநகரிலிருந்து மதுரைக்கு ரயில்போனதே எனக்குத் தெரியவில்லை. அப்படியாக என் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. என்ன சிந்தனை என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? அந்தப் பெண் யார்? எங்கிருந்து எங்கே போகிறாள்? தனியாகப் பிரயாணம் செய்வதன் காரணம் என்ன? பார்த்தால் நாகரிகமான, படித்த பெண்ணாகத் தோன்றுகிறாளே! 'புஷ்கோட்' அணிந்த மூன்று மனிதர்களைப் பற்றி எதற்காக விசாரித்தாள்?-என்றெல்லாம் எனக்கு நானே கேள்விகளைப் போட்டுக் கொண்டேன். ஆனால் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. எனினும், பொழுது மட்டும் சிறிதும் நில்லாமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.மதுரைச் சந்திப்பு வந்தது. நாட்டில் எத்தனையோ ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி உருவமும் இருக்கிறது. மதுரை நிலையம் ஒரு தனி ரகம். நிலையத்துக்குள் ரயில் வரும்போது ஜனங்கள் சுவர் வைத்த மாதிரி வரிசை வரிசையாக நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். என்னத்தைத்தான் பார்ப்பார்களோ தெரியாது. வந்த ரயிலில் ஏறுவோர் இறங்குவோர் அதிகம் உண்டா என்றால், அதுவும் இல்லை. மாலை நேரத்தில் பொழுது போகாமல் ரயில் நிலையத்துக்கு வந்து, வருகிற போகிற வண்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களைப் போலத் தோன்றும். சிறுபிள்ளைகள் சிலர் கையில் கையெழுத்து வாங்கும் சிறிய புத்தகங்களை வைத்துக் கொண்டு, ரயிலில் யாராவது பிரமுகர்கள் வருகிறார்களா என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டு போவார்கள். பத்திரிக்கை விற்பவர்கள், ஒரு நகரும் பெட்டியில் ஆபாசமான படங்கள் போட்ட மஞ்சள் இலக்கியங்களை வைத்துக்கொண்டு பிரயாணிகள் எதிரே நின்றுவிடுவார்கள். "பிச்சர் போஸ்டு வேண்டுமா?" "இல்லஸ்ட்ரேடட் வீக்லி வேண்டுமோ?" என்று கேட்டுக் கொண்டு நிற்பார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் போகமாட்டார்கள். பெட்டியிலுள்ள ஆபாச புத்தகங்களின் மேலட்டையைப் பிரயாணிகள் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு அட்டையில் மேல் அவர்களுக்கு ஆசை விழாதா என்ற நோக்கம்.என் முன்னால் அப்படி ஒரு பெட்டி வந்து நின்றதும் "இதேதடா தொல்லை?" என்று நான் கீழே இறங்கினேன். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் உலாவத் தொடங்கினேன். 'பெண்கள் வண்டி'யில் அந்தப் பெண்ணைக் காணவில்லை. சிறிது ஏமாற்றத்துடன் மேலே நடந்தேன். என்ஜினுக்கு அருகில் பிளாட்பாரத்தில் ஒரு சிறிய கும்பல் நின்றது. யாருக்கோ மாலை போட்டு வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள். 'ஹிப் ஹிப் ஹுரே!' என்ற கோஷமிட்டார்கள். அதில் என் கவனம் செல்லவில்லை. அந்தக் கும்பலுக்குச் சற்று அப்பால் நாலு பேர் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தில் என் கவனம் சென்றது. அவர்களில் மூன்று பேர் காக்கி 'புஷ்கோட்' ஆசாமிகள். நாலாவது நபர், என்னையறியாமல் என் கண்கள் தேடிக்கொண்டிருந்த பெண். அப்போது அவள் என்பக்கம் பார்க்கவில்லை. தலையில் அணிந்த ஒற்றை ரோஜாவிலிருந்துதான் அவள் என்று தெரிந்துகொண்டேன். அவள் ஏதோ வேடிக்கையாகப் பேசியிருக்கவேண்டும். மற்ற மூன்று பேரும் நகைத்தார்கள். எனக்கு ஒரே எரிச்சலாயிருந்தது. அவர்களிடையே போவதற்கும் தைரியமில்லை. அங்கிருந்து நகருவதற்கும் மனம் வரவில்லை. அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆவல் உண்டாயிற்று. நிற்கலாமா நகரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் திரும்பினாள். என்னைப் பார்த்துவிட்டாள். உடனே பழையபடி ஒரு முல்லைப்புன்னகை அவள் முகத்தில் பூத்தது. மறுபடி திரும்பி அவர்களுடன் பேசத் தொடங்கினாள். அங்கிருந்து அகல்வதே நலம் என்று தீர்மானித்தேன். திரும்பிப்போய் என் வண்டியில் ஏறிக்கொண்டேன். என்ஜின் இருந்த திக்கையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதற்காக என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா! வண்டி புறப்படும் நேரம் ஆகிவிட்டது. இன்னும் அவள் ஏன் திரும்பி வரவில்லை? அந்த 'புஷ்கோட்' மனிதர்களுடன் அவர்களுடைய வண்டியில் ஏறி விட்டாளா என்ன?... இல்லை, அதோ அவள் வருகிறாள். வேகமாகவே நடந்து வருகிறாள். என்ன அழகான நடை! அவள் நடப்பதாகவே தோன்றவில்லை; மிதப்பதாகத் தோன்றியது. என் வண்டிக்கு அருகில் வந்ததும் என்னைப் பார்த்தாள். சற்றுத் தயங்கி நின்றாள். "வண்டி புறப்படப் போகிறதே!" என்றேன். என்னத்தைச் சொல்ல. அவள் சட்டென்று வண்டிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். வந்தவள் எனக்கு எதிரில் உட்கார்ந்து, என்னை ஏறிட்டுப் பார்த்தாள். என் நெஞ்சு அபார வேகமுள்ள விமான என்ஜினைப் போல் அடித்துக் கொண்டது. "பாருங்கள்! இப்போதெல்லாம் ரயிலில் தனியாகப் பிரயாணம் செய்வது அபாயம் என்று சொல்கிறார்களே! பெண்கள் வண்டியில் இன்னும் யாராவது பெண்கள் ஏறுவார்கள் என்று பார்த்தேன். ஒருவரும் ஏறவில்லை. ரயிலில் கொலைகூட நடக்கிறது என்று சொல்லுகிறார்கள். நானும் இந்த வண்டிக்கே வந்துவிடலாமா என்று பார்க்கிறேன். நீங்கள் மதராசுக்குத் தானே போகிறீர்கள்!" என்று கேட்டாள். எல்லையில்லாத உற்சாகத்துடன் நான், "ஆமாம்; மதராஸுக்குத்தான் போகிறேன். நீங்கள் பேஷாக இந்த வண்டிக்கே வரலாம். சாமான்களை கொண்டுவரச் சொல்லட்டுமா? ஏ, போர்ட்டர்!" என்றேன். "இப்போது வேண்டாம்; அடுத்த ஸ்டேஷனில் பார்த்துக்கொள்ளலாம்!" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் இறங்கிச் சென்றாள்.அவள் இறங்கிய உடனே, யாரோ ஒருவர் சடக்கென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். கையில் ஒரு பிரயாணப் பெட்டியும் வைத்துக்கொண்டிருந்தார். பெட்டியைப் பலகையில் வைத்து விட்டு என்னையும் போய் கொண்டிருந்த பெண்ணையும் இரண்டு மூன்று தடவை மாற்றி மாற்றிப் பார்த்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு "மன்னிக்க வேண்டும்! ஒரு வேளை இந்த வண்டி ரிஸர்வ் ஆகியிருக்கிறதோ?" என்றார். "ஆமாம்" என்று ஒரு பொய் சொல்லி அவரை இறங்கிப் போகச் சொல்லலாமா என்று என் மனத்தில் ஒரு கெட்ட எண்ணம் உதித்தது. இதற்குள், கார்டு குழல் ஊதும் சத்தம் கேட்டது. ரயில் புறப்படுவதற்குள் அவள் வண்டியில் ஏறிவிடுகிறாளா என்று எட்டிப் பார்த்தேன். அந்த அழகிய ஒற்றை ரோஜாப்பூ கண்ணைக் கவர்ந்தது. அந்தப் பூவை அணிந்தவள் வண்டியில் ஏறியதும், ரயிலும் நகர்ந்தது. அமரர் கல்கி கல்கியின் கதைகள்