மோகினித் தீவு.7/8

18 Jun,2011
 

சௌந்தர்யராணி.7

 இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த மோகினித் தீவின் சௌந்தர்யராணி குறுக்கிட்டு கூறலுற்றாள்:- "ஆமாம், ஆமாம்! ஆண்பிள்ளைகள் மிக்க மன இளக்கமுள்ளவர்கள். அதிலும் சுகுமார சோழனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. புவனமோகினியை நினைத்து நினைத்து அவன் உருகிக் கொண்டே போனான். அங்கே, பாண்டிய குமாரிக்கு அன்றெல்லாம் கவலையாகவே இருந்தது. யாரோ ஊர் பேர் நிச்சயமாகத் தெரியாதவனிடம், முத்திரை மோதிரத்தைக் கொடுத்து விட்டோ மே, அது சரியோ தவறோ, அதனால் என்ன விளையுமோ என்ற கவலை அவள் மனதை அரித்தது. இதைக் காட்டிலும் அதிகக் கவலை அளித்த ஒரு விஷயமும் இருந்தது. ஒற்றர் தலைவன் தினகரன், தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான் என்பது புவனமோகினிக்குத் தெரிந்திருந்தது. அதைக் குறித்துத் தந்தையிடம் சொல்லவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குச் சில சமயம் தோன்றியிருப்பினும், குற்றமுள்ள நெஞ்சு காரணமாக அதற்குத் தைரியம் உண்டாகவில்லை. இப்போது அந்தத் தினகரனால் மதிவாணனுக்கு ஏதாவது அபாயம் உண்டாகலாம் அல்லவா? இந்தக் கவலை காரணமாக அரண்மனைச் சேவகர்களில் தன்னிடம் மிக்க பக்தியுள்ளவன் ஒருவனை அழைத்துத் தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்குப் போய்ப் பார்த்துவிட்டு வரச் சொன்னாள். அப்படிப் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பி வந்தவன், இளஞ் சிற்பியும் ஒற்றர் தலைவனும் சேர்ந்து குதிரை லாயத்துக்குப் போய், இரண்டு குதிரைகளில் ஏறிக் கொண்டு திருப்பரங்குன்றத்தை நோக்கிப் போனார்கள் என்று தெரிவித்தான். இதனால் புவனமோகினியின் மனக்கலக்கம் மேலும் அதிகமாயிற்று. அரண்மனையில் இருப்புக் கொள்ளவில்லை. தான் செய்துவிட்ட தவறினால், ஏதோ ஒரு விபத்து நடக்கப் போகிறது என்று, அவளுடைய உள் மனத்தில் வேதனை நிறைந்த ஒரு மௌனக் குரல் அடிக்கடி இடித்துக் கூறிக் கொண்டிருந்தது. தினகரன் ஒற்றர் தலைவன் என்பது இளஞ்சிற்பிக்குத் தெரியாது தானே? அவனை நம்பி மோசம் போகிறானோ என்னமோ? அல்லது, ஒரு வேளை அந்த இளஞ்சிற்பியும் ஒரு வஞ்சகனோ? இருவரும் ஒத்துப் பேசிக் கொண்டு, ஏதாவது தீங்கு இழைக்கப் போகிறார்களோ? உத்தம சோழர் மீது ஏதேனும் புதிய பழியைச் சுமத்தி, அவருடைய உயிருக்கே உலை வைத்து விடுவார்களோ? இப்படிப் பலவாறு எண்ணி வேதனைப் பட்டாள். கடைசியில் அவளால் பொறுக்க முடியாமற் போயிற்று. அரண்மனை ரதத்தை அவசரமாக எடுத்துவரச் செய்து, இரவு இரண்டாம் ஜாமத்தில், திருப்பரங்குன்றத்துச் சிறைக்கூடத்தை நோக்கிச் சென்றாள். முன்னும் பின்னும் அரண்மனைக் காவலர்கள், பாண்டிய குமாரியைத் தொடர்ந்து வந்தார்கள்.

சிறைக்கூடத்து வாசலுக்குப் பாண்டிய குமாரி வந்து சேர்ந்ததும், சிறைக் காவலர்கள் வியப்புடனே வந்து வணங்கி நின்றார்கள். "யாராவது இங்கு வந்தார்களா? சிறைக்குள்ளிருக்கும் சோழ மன்னனைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்களா?" என்று அவர்களைக் கேட்டாள். "ஆம், தாயே! இரண்டு பேர் வந்தார்கள். முத்திரை மோதிரத்தைக் காட்டி விட்டு உள்ளே போனார்கள். சோழ மகாராஜாவைப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பியும் போய் விட்டார்கள்! வந்தவர்களில் ஒருவனைப் பார்த்தால், ஒற்றர் தலைவன் தினகரன் மாதிரி இருந்தது!" என்று சிறைக் காவலர்களின் தலைவன் கூறினான்.

இதைக் கேட்டதும், புவனமோகினிக்கு ஓரளவு மன நிம்மதி ஏற்பட்டது. அதே சமயத்தில், சிறையிலே கிடந்து வாடும் உத்தம சோழரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. காவலர்கள் முன்னும் பின்னும் தீவர்த்தி பிடித்துக் கொண்டு வர, புவனமோகினி சிறைக்குள் சென்று, உத்தம சோழரை அடைத்திருந்த அறையை அடைந்தாள். அறைக்குள்ளே கருங்கல் மேடையில் சோழ மன்னர் தலைகுனிந்து உட்கார்ந்திருந்த காட்சியைப் பார்த்ததும் புவனமோகினிக்குச் சொல்ல முடியாத ஆச்சரியம் உண்டாயிற்று. ஏனெனில் நிமிர்ந்து பார்த்த முகம் உத்தம சோழரின் முகம் அல்ல; அது பாண்டிய நாட்டு ஒற்றர் தலைவன் தினகரனுடைய முகம்!

பாண்டிய குமாரியும் மற்றவர்களும் வருவதை நிமிர்ந்து பார்த்துத் தெரிந்து கொண்ட ஒற்றர் தலைவன் "மோசம்! மோசம்! என்னை அவிழ்த்து விடுங்கள்! சீக்கிரம் அவிழ்த்து விடுங்கள்! இத்தனை நேரம் அவர்கள் வெகு தூரம் போயிருப்பார்கள்! உடனே அவர்களைத் தொடர்ந்து பிடிக்கக் குதிரை வீரர்களை அனுப்ப வேண்டும்!" என்று கத்தினான். சிறைக் காவலர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார்கள். புவனமோகினி, இன்னது நடந்திருக்க வேண்டும் என்று ஒருவாறு யூகித்துக் கொண்டாள். தினகரனுடைய நிலைமையையும், அவனுடைய பதட்டத்தையும் கண்டதும், முதலில் அவளுக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்தது. "ஆமாம் அம்மணி! இன்றைக்குச் சிரிப்பீர்கள், நாளைக்கு அரசர் திரும்பி வந்தால் அப்போது தெரியும்; எத்தனை பேருடைய தலை உருளப் போகிறதோ?" என்றான். இதைக் கேட்ட புவனமோகினிக்கு நெஞ்சில் சிறிது பீதி உண்டாயிற்று. ஆயினும் வெளிப்படையாக வேண்டுமென்றே அதிகமாகச் சிரித்தாள். அன்றைக்கு இந்தத் தினகரன் சிற்பக்கூடத்தில் தன்னுடைய வேஷத்தைக் கலைத்து அவமானப்படுத்தியதற்கு, இது தக்க தண்டனையென்று கருதினாள். பிறகு, "ஒற்றா! வெறுமனே பதட்டப்படுவதில் என்ன பிரயோஜனம்? நடந்ததை நிதானமாகச் சொல்லு!" என்றாள். "நிதானமாகச் சொல்லச் சொல்லுகிறீர்களே! அவர்கள் இத்தனை நேரமும் மதுரையைத் தாண்டிப் போயிருப்பார்களே? சீக்கிரம் அம்மா, சீக்கிரம்!" என்றான் தினகரன். "அவர்கள் என்றால் யார்?" என்று புவனமோகினி கேட்டாள். "உத்தம சோழரும் அவருடைய புதல்வர் சுகுமாரனுந்தான். வேறு யார்?" என்றான் தினகரன்.

அப்போதுதான் புவனமோகினிக்குத் தான் செய்த தவறு எவ்வளவு பெரிது என்று தெரிந்தது. ஆயினும் தன்னுடைய கலக்கத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், "அவர்கள் ஓடிப்போகும்படி நீ எப்படி விட்டாய்? ஒற்றர் தலைவன் என்ற உத்தியோகம் வேறு பார்க்கிறாயே?" என்றாள். "ஆம் அம்மணி. என் பேரில் குற்றம் சொல்ல மாட்டீர்களா? ஊர் பேர் தெரியாத சிற்பியிடம் பாண்டிய சாம்ராஜ்யத்தின் முத்திரை மோதிரத்தைக் கொடுத்தது நானா, நீங்களா?" என்றான் தினகரன்.

"வாயை மூடிக்கொள்! முத்திரை மோதிரத்தை யாருக்காவது கொடுக்கிறேன். அதைக் குறித்துக் கேட்க நீ யார்? உத்தம சோழர் தப்பிச் செல்வதற்கு நீ உடந்தையாயிருந்தாய் என்று நான் சொல்கிறேன். இல்லாவிட்டால் எதற்காக அந்தப் பையனுடன் நீ இங்கே வந்தாய்? உன்னைச் சங்கிலியில் கட்டிப் போடும் வரையில் என்ன செய்தாய்? நீயும் அந்த இளஞ்சிற்பியும் சேர்ந்து சதி செய்துதான் உத்தம சோழரை விடுதலை செய்திருக்கிறீர்கள்" என்று புவனமோகினி படபடவென்று பொறிந்துக் கொட்டினாள்.

"அம்மணி! என் மீது என்ன குற்றம் வேண்டுமானாலும் சாட்டுங்கள்! என்ன தண்டனை வேண்டுமானாலும் விதியுங்கள்! ஆனால், அவர்களைத் தொடர்ந்து, பிடிப்பதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்! நாலாபுறமும் குதிரை வீரர்களை அனுப்புங்கள். முக்கியமாகத் தஞ்சாவூர்ச் சாலையில் அதிகம்பேரை அனுப்புங்கள்! நான் வேண்டுமானால், இந்தச் சிறையிலேயே அடைபட்டுக் கிடக்கிறேன் - மகாராஜா திரும்பி வரும் வரையில்!" என்றான் தினகரன்.

"ஓகோ! சிறையில் அடைப்பட்டுக் கிடந்தேன். அதனால் ஓடியவர்களைப் பிடிக்க முடியவில்லை என்று சாக்குச் சொல்லப் பார்க்கிறாயோ? அதெல்லாம் முடியாது. உன்னாலேதான் அவர்கள் தப்பித்துச் சென்றார்கள். நீதான் அவர்களைப் பிடிக்க வேண்டும்" என்று பாண்டிய குமாரி சொல்லி, அவனை விடுவிக்கும்படி காவலர்களிடம் கூறினாள். விடுதலையடைந்ததும், தினகரன் தலைதெறிக்க ஓடினான்.

ஒற்றர் தலைவனிடம் அவ்விதம் படாடோபமாகப் பேசினாளே தவிர, உண்மையில் புவனமோகினியின் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தான் செய்த காரியத்தினால் விளைந்ததையெண்ணி ஒரு பக்கம் கலங்கினாள். இளஞ்சிற்பி உண்மையில் சோழ ராஜகுமாரன் என்பதை எண்ணிய போது, அவள் சொல்ல முடியாத அவமான உணர்ச்சியை அடைந்தாள். அவன் தன்னை ஏமாற்றியதை நினைத்து, அளவில்லாத கோபம் கொண்டாள். இரவுக்கிரவே முதன் மந்திரியை வரவழைத்து நடந்ததை அவரிடம் சொல்லி, நாலாபக்கமும் குதிரை வீரர்களை அனுப்பச் செய்தாள். இத்தனைக்கும் நடுவில் அந்தப் பெண்ணின் பேதை உள்ளம் சுகுமாரனும் அவன் தந்தையும் தப்பித்துச் சென்றது குறித்து உவகை அடைந்தது. குதிரை வீரர்களுக்குக் கட்டளை தந்து அனுப்பும் போதே அவளுடைய இதய அந்தரங்கத்தில் அவர்கள் அகப்படாமல் தப்பித்துக் கொண்டு போய்விட வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. வீரர்கள் நாலா பக்கமும் சென்ற பிறகு, 'தாயே மீனாக்ஷி! அவர்கள் அகப்படாமல் தப்பித்துச் செல்ல வேண்டும்' என்று அவள் உள்ளம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தது..." இந்தச் சமயத்தில், அந்தப் பெண்மணியின் நாயகன் குறுக்கிட்டு, "புவன மோகினியின் பிரார்த்தனை நிறைவேறியது. சோழர்கள் இருவரும் அகப்படவே இல்லை. முத்திரை மோதிரத்தின் உதவியால், பாண்டிய நாட்டின் எல்லையைக் கடந்து, பத்திரமாகக் கொல்லிமலைச் சாரலுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்!" என்றான்.

பெண்மணி தொடர்ந்து கூறினாள்:-

"அவர்கள் தப்பிப் போய்விட்டார்கள் என்று தெரிந்ததும், தினகரன் புவனமோகினி மேல் தனக்கு வந்த கோபத்தைத் தேவேந்திரச் சிற்பியின் பேரில் காட்டினான். சோழநாட்டு இளவரசனுக்குச் சிற்ப கூடத்தில் இடம் கொடுத்து வைத்திருந்ததற்காக அவரைச் சிறையிலிட்டான். உத்தம சோழர் இருந்த அதே அறையில், தேவேந்திரச் சிற்பியை அடைத்து வைத்தான். உத்தம சோழர் தப்பிச் சென்ற செய்தியை முதன் மந்திரி உடனே ஓலையில் எழுதி, அவசரத் தூதர்கள் மூலம், குடகு நாட்டில் போர் நடத்திக் கொண்டிருந்த பராக்கிரம பாண்டியருக்கு அனுப்பி வைத்தார்.

பாண்டிய மன்னர் ஏற்கெனவே போரில் காயம் பட்டிருந்தார். இந்தச் செய்தி அவரை மனமிடிந்து போகும்படி செய்துவிட்டது. உள்ளமும் உடலும் புண்பட்டு, மிகவும் பலவீனமான நிலையில் பராக்கிரம பாண்டியர் மிகவும் கஷ்டத்துடன் பிரயாணம் செய்து, மதுரைக்கு விரைந்து வந்தார். உத்தம சோழர் தப்பிச் சென்ற விவரங்களையெல்லாம் அறிந்ததும், அவரும் மகள் பேரில் வந்த கோபத்தைத் தேவேந்திரச் சிற்பியின் பேரில் காட்டினார். நாற்சந்தியில் அவரை நிறுத்திச் சவுக்கினால் அடிக்கும்படி கட்டளையிட்டார். புவனமோகினி அவர் காலில் விழுந்து வேண்டிக் கொண்டும் பயனில்லை. தேவேந்திரச் சிற்பிக்குப் பதிலாகத் தன்னைத் தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டது அவருடைய கோபத்தை அதிகமாக்கியது.

எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போன்ற ஒரு செய்தி அப்போது வந்தது. அது, உத்தம சோழரும் சுகுமாரனும் பெரிய படை திரட்டிக் கொண்டு, பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறார்கள் என்பதுதான். இதைக் கேட்ட பாண்டியர், தன் தேக நிலையைப் பொருட்படுத்தாமல் போர்க்களம் செல்ல ஆயத்தமானார். புவனமோகினிக்கு அப்போது தான் செய்த குற்றத்துக்குப் பரிகாரம் செய்ய ஒரு வழி தோன்றியது. "அப்பா! நீங்கள் படுத்திருந்து உடம்பைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு அனுமதி தாருங்கள். நான் சைன்யத்துக்குத் தலைமை வகித்துச் சென்று சோழர்களை முறியடித்து, அவர்களுடைய கர்வத்தை ஒடுக்குகிறேன். அந்தச் சோழ ராஜகுமாரனை எப்படியாவது சிறைப்பிடித்து வருகிறேன்!" என்றாள். பராக்கிரம பாண்டியர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். "நீ என்னுடைய உண்மையான வீரப்புதல்வி தான்; சந்தேகமில்லை. அப்படியே செய்!" என்று அனுமதி கொடுத்துத் தேவேந்திரச் சிற்பியை விடுதலை செய்தார். புவனமோகினி பாண்டிய சைன்யத்துக்குத் தலைமை வகித்துப் போர்முனைக்குப் புறப்பட்டுச் சென்றாள்..."


பாண்டிய குமாரி.8

பூரணச் சந்திரன், உச்சிவானத்தைத் தாண்டி மேற்குத் திசையில் சற்று இறங்கி நின்றான். சந்திரன் நின்ற நிலை, அந்த அதிசயத் தம்பதிகள் கூறி வந்த கதையைக் கேட்டுவிட்டுப் போகலாம் என்று தயங்கி நிற்பது போலத் தோன்றியது. காற்று அடித்த வேகம், வரவரக் குறைந்து இப்போது நிச்சலனமாகியிருந்தது. அந்த மோகினித் தீவின் காவலர்களைப் போல் நின்ற மரங்கள், அச்சமயம் சிறிதும் ஆடவில்லை. இலைகள் சற்றும் அசையவில்லை. கடலும் அப்போது அலை ஓய்ந்து மௌனம் சாதித்தது. சுகுமாரன் புவனமோகினியின் கதையைக் கேட்பதற்காகப் பிரகிருதியே ஸ்தம்பித்து நிற்பது போலக் காணப்பட்டது.

இப்போது நான் அந்த வரலாற்றைத் திருப்பிச் சொல்லும்போது, வார்த்தைகள் உயிரற்றும் உணர்ச்சியற்றும் வருவது எனக்கே தெரிந்துதானிருக்கிறது. ஆனால், அவர்கள் மாற்றி மாற்றிக் கதை சொல்லி வந்த போது, ஒவ்வொரு சம்பவத்தையும் என் கண் முன்னால் நேரில் காண்பது போலவே இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றி அந்தத் தம்பதிகளில் ஒருவர் கூறியபோது, நான் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன். கதாபாத்திரங்கள் அனுபவித்த இன்பதுன்பங்களையெல்லாம் நானும் சேர்ந்து அனுபவித்தேன்.

இடையிடையே சில சந்தேகங்களும் கேள்விகளும் என் மனத்தில் உதித்துக் கொண்டு வந்தன. இந்தச் சுந்தர புருஷன் யார்? இவனுடைய காதலியான வனிதாமணி யார்? எப்போது இந்தத் தீவுக்கு இவர்கள் வந்தார்கள்? இவர்கள் தங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல், இந்தப் பழைய காலக் கதையைச் சொல்லிவரும் காரணம் என்ன? அந்தக் கதைக்கும் இவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? அல்லது அக்கதைக்கும் இந்தத் தீவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்க முடியுமா? 'புவனமோகினி' என்ற பாண்டிய குமாரியின் பெயருக்கும் 'மோகினித் தீவு' என்னும் இத்தீவின் பெயருக்கும் பொருத்தம் உண்டா! இம்மாதிரியான கேள்விகளும் ஐயங்களும் அடிக்கடி தோன்றி வந்தன. ஆனால் அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டுச் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பெண்மணி மூச்சு விடுவதற்காகக் கதையை நிறுத்தினால், ஆடவன் கதையைத் தொடர்ந்து ஆரம்பித்து விடுகிறான். ஆடவன் சற்று நிறுத்தினால் பெண்மணி உடனே ஆரம்பித்து விடுகிறாள்.

இப்படி மாற்றி மாற்றி மூச்சுவிடாமல் சொல்லி வந்த போதிலும், அவர்கள் கதை சொன்ன முறையில் ஒரு 'பாணி' இருந்தது. ஒரு 'உத்தி' இருந்தது என்பதைக் கண்டு கொண்டேன். பாண்டிய குமாரிக்கு நிகழ்ந்த சம்பவங்கள், அவளுடைய ஆசாபாசங்கள், அவளுடைய உள்ளத்திலே நிகழ்ந்த போராட்டங்கள் இவற்றையெல்லாம் அந்த மோகினித்தீவின் அழகி கூறி வந்தாள். சோழநாட்டு இளவரசனைப் பற்றியும், அவனுடைய மனோ நிகழ்ச்சிகள், செய்த காரியங்கள் - இவற்றைப் பற்றியும், அந்த அழகியின் காதலன் சொல்லி வந்தான்.

இப்படிப் பங்குபோட்டுக் கொண்டு அவர்கள் கதை சொன்ன விசித்திர முறை எனக்கு ஒரு பக்கத்தில் வியப்பு அளித்துக் கொண்டு வந்தது. மற்றொரு பக்கத்தில் கதையை மேலே தெரிந்து கொள்ள ஆசை வளர்ந்து வந்தது.

பாண்டிய குமாரி போர்க்களத்துக்குப் போனாள் என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணி கதையை நிறுத்திய போது, வழக்கம் போல ஆடவன் குறுக்கிடாமலிருந்ததைக் கண்டேன். ஆனால், அந்த இடத்தில் என் மனதில் மேலே நடந்ததைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பொங்கிற்று.

"போர்க்களத்திலே என்ன நடந்தது? யுத்தம் எப்படி நடந்தது? பாண்டிய குமாரி போரில் வெற்றி பெற்றாளா?" என்று பரபரப்புடன் கேட்டேன்.

என்னுடைய கேள்வியிலிருந்தும், குரலில் தொனித்த கவலையிலிருந்தும், அந்தத் தம்பதிகள் என்னுடைய அனுதாபம் புவனமோகினியின் பக்கந்தான் என்பதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இருவருடைய முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அந்தச் சுந்தரப் புருஷன் தன் நாயகியின் முகவாயைச் சற்றுத் தூக்கிப் பிடித்து, நிலா வெளிச்சத்தில் அவளுடைய முகத்தை உற்று நோக்கினான்.

"கண்மணி! பார்த்தாயா? இந்த மனிதர் பாண்டிய குமாரியைப் பற்றி எவ்வளவு கவலை கொண்டு விட்டார் என்று தெரிகின்றதல்லவா! இவருடைய நிலைமையே இப்படி இருக்கும்போது சோழ நாட்டு வீரர்கள் போர் முனையில் புவன மோகினியைப் பார்த்ததும், திணறித் திண்டாடிப் போய்விட்டதில் வியப்பு என்ன?" அவன் ஆசையோடு முகத்தைப் பிடித்திருந்த கையை, அந்தப் பெண்ணரசி மெதுவாய் அகற்றி விட்டு, "ஏதாவது இல்லாததும் பொல்லாததும் சொல்லாதீர்கள்!" என்றாள். பிறகு என்னைப் பார்த்துச் சொன்னாள்:- "சோழநாட்டு வீரர்கள் ஒன்றும் திண்டாடிப் போகவில்லை. புவனமோகினிதான் திணறித் திண்டாடிப் போனாள். அந்தப் பேதைப் பெண் அது வரையில் போர்க்களம் என்பதையே பார்த்ததில்லை. அவளுக்கு யுத்த தந்திரம் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அன்றுவரையில், அவள் ஆடல் பாடல்களிலும் வேடிக்கை விளையாட்டுகளிலும் கோயில் குளங்களுக்குப் போவதிலும் உல்லாசமாகக் காலங்கழித்து வந்தவள் தானே; திடீரென்று யுத்த களத்தில் கொண்டு போய் நிறுத்தியதும், அவளுக்குத் திக்கு திசை புரியவில்லை. பெரியவர்களுடைய புத்திமதியைக் கேட்காமல் வந்து விட்டதைக் குறித்து வருந்தினாள். அவள் போர்க்களத்துக்குச் செல்வதை மந்திரிகள், பிரதானிகள், மற்றப் படைத் தலைவர்களில் யாரும் விரும்பவில்லை. ஒற்றர் தலைவன் தினகரன் 'அவள் போனால் நிச்சயம் தோல்விதான்!' என்று சபதம் கூறினான். வயது முதிர்ந்த பெரியவர்கள், "அரசர் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கையில் பாண்டிய குமாரிக்குப் போர்க்களத்தில் ஏதாவது நேர்ந்துவிட்டால் பாண்டிய ராஜ்யம் என்ன ஆவது!" என்று கவலைப்பட்டார்கள். இவ்வளவு பேருடைய கருத்துக்கும் மாறாகவே, புவனமோகினி யுத்தகளத்துக்குப் புறப்பட்டுப் போனாள். அதற்குத் தூண்டுகோலாக அவளுடைய இதய அந்தரங்கத்தில் மறைந்து கிடந்த சக்தி என்னவென்பதை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். சிற்ப மாணவன் வேடம் பூண்டு வந்து, அவளை வஞ்சித்து விட்டுச் சென்ற சோழ ராஜகுமாரனைப் போர்க்களத்திலே நேருக்கு நேர் பார்க்கலாம் என்ற ஆசைதான். அந்தப் பாழும் விருப்பமே, அவளைப் போர்க்களத்தின் முன்னணியில் கொண்டு போய் நிறுத்தியது. ஒரு பெண் போர்க்கோலம் பூண்டு, பாண்டிய சைன்யத்தின் முன்னணியில் வந்து சண்டைக்கு ஆயத்தமாக நிற்பதைப் பார்த்துவிட்டுச் சோழ நாட்டு வீரர்கள் குலுங்கச் சிரித்தார்கள். வஞ்சக நெஞ்சங் கொண்ட சுகுமாரன், சோழர் படைக்குப் பின்னால் எங்கேயோ நின்று, தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்..."

இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணின் நாயகன் ஆத்திரத்துடன் குறுக்கிட்டுப் பேசினான்:- "இவள் சொல்லுவதை நீங்கள் நம்ப வேண்டாம். சோழ நாட்டு வீரர்கள் பாண்டிய குமாரியைப் பார்த்துச் சிரிக்கவில்லை. அவர்கள் திகைத்துப் போய் நின்றார்கள்! சுகுமாரன் பின்னால் நின்று தனக்குள் சிரித்துக் கொண்டிருக்கவும் இல்லை. அந்த அபாக்கியசாலி, தன்னுடைய இதயத்தைக் கவர்ந்த புவனமோகினியுடன் எதிர்த்து நின்று யுத்தம் செய்யும்படி ஆகிவிட்டதே என்று மனம் நொந்து வேதனைப்பட்டான். ஒருவரும் பாராத தனி இடத்தைத் தேடிச் சென்று கண்ணீர் வடித்தான். முதலில் சில நாள் அவன் போர்க்களத்தில் முன்னணிக்கே வரவில்லை. பாண்டிய குமாரியை நேருக்கு நேர் சந்திப்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டுதான், அவன் பின்னால் நின்றான். ஆனால், சுகுமாரன் முன்னணிக்கு வர வேண்டிய அவசியம் சீக்கிரத்திலே ஏற்பட்டு விட்டது. பாண்டிய குமாரிக்கு யுத்த தந்திரம் ஒன்றும் தெரிந்திருக்கவில்லையென்று இவள் சொன்னாள் அல்லவா? அது என்னமோ உண்மைதான்! அதுவரையில், அவள் போர்க்களத்தையே பார்த்ததில்லை யென்பதும் மெய்தான். ஆனால் அவ்விதம் அவள் அதுவரை யுத்த களத்தைப் பாராமலிருந்ததே, அவளுக்கு மிக்க உதவியாய்ப் போய் விட்டது. போர் முறைகளைப் பற்றிய அவளுடைய அறியாமையே ஒரு மகத்தான யுத்த தந்திரம் ஆகிவிட்டது.

போர் முறைகள் தெரிந்தவர்கள் சாதாரணமாய்ப் போவதற்குத் தயங்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் பாண்டிய குமாரி சர்வ சாதாரணமாகப் போகலுற்றாள். பெண்களிடம் சாதாரணமாகக் காணமுடியாத நெஞ்சுத் துணிவையும் தைரியத்தையும் அவள் காட்டினாள். அந்தத் துணிச்சலும் தைரியமும் சிறந்த கவசங்களாகி, அவளைக் காத்தன. அவள் காட்டிய தீரம், பாண்டிய வீரர்களுக்கு அபரிமிதமான உற்சாகத்தை ஊட்டியது; போர்க்களத்தில் பாண்டிய குமாரி எந்தப் பக்கம் தோன்றினாலும், அந்தப் பக்கத்திலுள்ள பாண்டிய வீரர்கள், வீர கோஷத்தை எழுப்பிக் கொண்டு சோழர் படையின் பேரில் பாய்ந்தார்கள். அதற்கு மாறாகச் சோழ வீரர்களோ, புவனமோகினியைச் சற்றுத் தூரத்தில் கண்டதுமே வில்லையும் அம்பையும் வாளையும் வேலையும் கீழே போட்டு விட்டு, அந்த அழகுத் தெய்வத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
பயம் என்பதே அறியாமல், புவனமோகினி அங்குமிங்கும் சஞ்சரித்ததைப் பார்த்த சோழ நாட்டு வீரர்களில் பலர், மதுரை மீனாக்ஷி அம்மனே மானிடப் பெண் உருவம் எடுத்துப் பாண்டிய நாட்டைப் பாதுகாப்பதற்காக வந்திருக்கிறாள் என்று நம்பினார்கள். அவளைத் தூரத்தில் கண்டதும் சிலர் கையெடுத்துக் கும்பிட்டார்கள். சிலர் பயந்து பின் வாங்கி ஓடினார்கள். சிலர் பின் வாங்கி ஓடுவதற்கும் சக்தியில்லாமல் திகைத்துப் போய் நின்றார்கள். அப்படி நின்றவர்களைச் சிறை பிடிப்பது பாண்டிய வீரர்களுக்கு மிகவும் எளிதாய்ப் போய் விட்டது. இதையெல்லாம் அறிந்த உத்தம சோழர் மனம் கலங்கினார். சுகுமாரனை அழைத்து வரச் செய்து அவனுடைய கோழைத் தனத்தைக் குறித்து நிந்தனை செய்தார். "நீயே ஒரு பெண்ணுக்குப் பயந்து பின்னால் சென்று ஒளிந்து கொண்டால், மற்ற வீரர்கள் எப்படிப் போர் செய்வார்கள்?" என்று கேட்டார். "இப்படி அவமானத்துடன் தோல்வியடைந்து, சோழ குலத்துக்கு அழியாத அப கீர்த்தியை உண்டு பண்ணவா என்னைப் பாண்டியன் சிறையிலிருந்து விடுவித்துக் கொண்டு வந்தாய்? அதைக் காட்டிலும், நான் சிறைக் கூடத்திலேயே சாகும்படியாக விட்டிருக்கலாம்!" என்றார். அப்போது சுகுமாரன் தான் போர்க்களத்தின் முன்னணிக்குப் போய்த் தீர வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். சோர்ந்து போயிருந்த சோழ வீரர்களைத் திரட்டி உற்சாகப் படுத்தினான். தான் முன்னால் போர்க்களத்துக்குப் போவதாகவும், தன்னைப் பின் தொடர்ந்து மற்றவர்கள் வரும்படியும் சொன்னான். இளவரசனிடம் அளவில்லாத விசுவாசம் கொண்டிருந்த சோழ நாட்டு வீரர்கள், இனி ஊக்கத்துடன் யுத்தம் செய்வதாக அவனுக்கு வாக்களித்தார்கள். போர் முனையின் முன்னணிக்குப் போய், அவன் அநாவசியமான அபாயத்துக்கு உள்ளாகக் கூடாது என்று வருந்திக் கேட்டுக் கொண்டார்கள்.

அன்றைக்கே சோழர்களின் பக்கம் அதிர்ஷ்டம் திரும்பி விட்டதாகத் தோன்றியது. சோழ வீரர்கள் உற்சாகத்துடன் பாண்டியர் படையைத் தாக்குவதற்குப் போன சமயத்தில், பாண்டிய வீரர்கள் சோர்வுற்றிருந்தார்கள். பாண்டிய குமாரி போர்க்களத்திலிருந்து திடீரென்று மறைந்து விட்டதாகவும் தெரிய வந்தது.

எனவே, சோழர் படையின் தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாமல், பாண்டிய வீரர்கள் பின் வாங்கி ஓடத் தொடங்கினார்கள். அவ்விதம் ஓடியவர்களைத் துரத்தியடிப்பது சோழ வீரர்களுக்கு மிகவும் சுலபமாய்ப் போய்விட்டது. இதன் பேரில், உத்தம சோழரும் மற்றவர்களும் சுகுமாரனைக் கொண்டாடினார்கள். ஆனால் அவனுடைய மனத்தில் நிம்மதி ஏற்படவில்லை. பாண்டிய குமாரியின் கதி என்ன ஆயிற்றோ என்று எண்ணி எண்ணி அவன் மனங் கலங்கினான்..."

 



Share this:

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies