மோகினித் தீவு
சுந்தர யௌவன புருஷன்.3
அந்தச் சுந்தர யௌவன புருஷன் சொல்லத் தொடங்கினான்:-
"முன்னொரு சமயம் உம்மைப் போலவே சில மனிதர்கள் இங்கே திசை தவறி வந்து விட்ட கப்பலில் வந்திருந்தார்கள். அவர்களிடம் என்னுடைய கதையைத் தொடங்கியபோது, 'எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால்' என்று ஆரம்பித்தேன். அவர்கள் எதனாலோ மிரண்டு போய் ஓட்டம் எடுத்தார்கள். அப்படி நீர் ஓடி விடமாட்டீர் என்று நம்புகிறேன். அந்த மனிதர்களைப் போலன்றி நீர் ரசிகத் தன்மையுள்ளவர் என்று நன்றாய்த் தெரிகிறது. என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, உம்முடைய கண்கள் என் வாழ்க்கைத் துணைவியின் முகத்தை அடிக்கடி நோக்குவதிலிருந்து உம்முடைய ரசிகத் தன்மையை அறிந்து கொண்டேன்..."
இதைக் கேட்டதும் நான் வெட்கித் தலைகுனிந்தேன். அந்த மனிதனிடம் ஏதோ ஓர் அதிசய சக்தி இருக்க வேண்டும். என் அந்தரங்க எண்ணத்தை அவன் தெரிந்து கொண்டு விட்டான். அவன் நான் ஓடிப் போக மாட்டேன் என்று நம்புவதாகச் சொன்னபோது என் மனதிற்குள் 'நானாவது? ஓடுவதாவது? புது மலரை விட்டு வண்டு ஓடுவதுண்டா? ரதியை நிகர்த்த அந்த அழகியின் முகம் என்னை ஓடிப் போவதற்கு விடுமா?' என்று நான் எண்ணியது உண்மைதான். அந்தச் சமயத்தில் என்னையறியாமல் என் கண்கள் அந்தப் பெண்ணின் முகத்தை நோக்கியிருக்க வேண்டும். அதைக் கவனித்து விட்டான், அந்த இளைஞன். இனி அத்தகைய தவறைச் செய்யக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டேன்.
அந்த யுவன் தொடர்ந்து கூறினான்:- "நீர் வெட்கப்படவும் வேண்டாம்; பயப்படவும் வேண்டாம். உம் பேரில் தவறு ஒன்றுமில்லை. இவளை இப்படிப்பட்ட அழகியாகப் படைத்துவிட்ட பிரம்மதேவன் பேரிலேதான் தவறு. இவள் காரணமாக நான் எத்தனை தவறுகள் செய்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால்... சரி, சரி! அதையெல்லாம் பற்றிச் சொன்னால், இவளுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்து விடும். கதைக்குத் திரும்பி வருகிறேன். எழுநூறு வருஷத்துக்கு முன்னால் தஞ்சாவூரில் உத்தம சோழர் என்னும் மன்னர் அரசு புரிந்துவந்தார். அப்போது சோழராஜ்யம் அவ்வளவு விசாலமான ராஜ்யமாக இல்லை. ராஜராஜ சோழன் காலத்திலும் ராஜேந்திர சோழன் காலத்திலும் இலங்கை முதல் விந்திய மலை வரையில் பரவியிருந்த சோழ ராஜ்யம், அப்போது குறுகிச் சிறுத்துத் தஞ்சாவூரைச் சுற்றிச் சில காத தூரத்துக்குள் அடங்கிப் போயிருந்தது. ஆனாலும் உத்தம சோழர் தம்முடைய குலத்தின் பழைய பெருமையை மறக்கவேயில்லை. அந்தப் பெருமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய காரியம் எதையும் செய்ய விரும்பவில்லை. உத்தம சோழருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் பெயர் சுகுமாரன்; இன்னொருவன் பெயர் ஆதித்தன். மூத்தவனாகிய சுகுமாரன் பட்டத்து இளவரசனாக விளங்கினான்.
அதே சமயத்தில் மதுரையில் பராக்கிரம பாண்டியர் என்னும் அரசர் ஆட்சி புரிந்தார். ஆனால், அவர் புராதன பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர் அல்லர்; தென் பாண்டிய நாட்டைச் சேர்ந்த பாளையக்காரர். தம்முடைய போர்த்திறமையினால் மதுரையைக் கைப்பற்றி பராக்கிரம பாண்டியர் என்ற பட்டமும் சூட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு ஆண் சந்ததி கிடையாடு. ஒரே ஓர் அருமைப் புதல்வி இருந்தாள். அவள் பெயர் புவனமோகினி. அந்த ராஜகுமாரியின் அழகு, குணம், அறிவுத் திறன் முதலியவற்றைக் குறித்து, நான் இப்போது அதிகமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. சொல்லுவது சாத்தியமும் இல்லை. அப்படிச் சொன்னாலும், இதோ இவள் குறுக்கிட்டுத் தடுத்து விடுவாள்-"
இவ்விதம் கூறிவிட்டு அந்த யுவன் தன் காதலியின் அழகு ஒழுகும் முகத்தைக் கடைக் கண்ணால் பார்த்தான். அவளுடைய செவ்விதழ்கள் குமுத மலரின் இதழ்கள் விரிவன போல் சிறிது விரிந்து, உள்ளேயிருந்த முல்லைப் பல் வரிசை தெரியும்படி செய்தன.
பின்னர் இளைஞன் கதையைத் தொடர்ந்து சொன்னான்:-
"பராக்கிரம பாண்டியர் குமரி முனையிலிருந்து திருச்சிராப்பள்ளி வரையில் வியாபித்திருந்த பெரிய ராஜ்யத்தை ஆண்டார். ஆயினும் அவருடைய மனத்தில் நிம்மதி இல்லை. பழமையான ராஜகுலத்துடன் கலியாண சம்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசை அவருக்கு உண்டாயிருந்தது.
ஒரு சமயம் பராக்கிரம பாண்டியர் தஞ்சாவூருக்கு வந்திருந்தார். உத்தமசோழரின் அரண்மனையில் விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அவருக்குச் சகலவிதமான ராஜோபசாரங்களும் நடந்தன. உத்தமசோழரின் மூத்த புதல்வன் சுகுமாரனை அவர் பார்க்க நேர்ந்தது. அவனிடம் எத்தகைய குணாதிசயங்களை அவர் கண்டாரோ எனக்குத் தெரியாது"
இந்தச் சமயத்தில் அந்த யுவதி குறுக்கிட்டு, "உங்களுக்குத் தெரியாவிட்டால் எனக்குத் தெரியும். நான் சொல்லுகிறேன்!" என்றாள்.
"கண்மணி! கொஞ்சம் பொறுத்துக் கொள். கதையில் நீ சொல்லவேண்டிய இடம் வரும்போது சொல்லலாம்" என்று கூறிவிட்டு மீண்டும் என்னைப் பார்த்துச் சொன்னான்.
"சோழ ராஜகுமாரனிடம் பராக்கிரம் பாண்டியர் என்னத்தைக் கண்டாரோ, தெரியாது. அவனுக்குத் தம் அருமைப் புதல்வி புவனமோகினியைக் கலியாணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற ஆசை அவர் மனத்தில் உதயமாகிவிட்டது. பழைமையான பெரிய குலத்தில் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவருடைய மனோரதம், அதனால் நிறைவேறுவதாயிருந்தது. ஆகவே உத்தம சோழரின் உத்தியான வனத்தில் ஒரு நாள் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, பராக்கிரம பாண்டியர் தம்முடைய கருத்தை வெளியிட்டார்.
அந்த நேரத்தில் உத்தம சோழரின் நாவில் சனீசுவரன் குடிபுகுந்திருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட நளமகாராஜாவைப் படாத பாடு படுத்தி வைத்த சனீசுவரன் உத்தம சோழரைச் சும்மா விட்டு விடுவானா? அவர் ஏதோ வேடிக்கைப் பேச்சு என்று நினைத்துச் சொல்லத்தகாத ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டார். "கரிகால் சோழனும், ராஜராஜ சோழனும் பிறந்து புகழ் வீசிய வம்சத்தில் என் புதல்வன் சுகுமாரன் பிறந்தவன். நீரோ தாயும் தகப்பனும் யார் என்று அறியாதவர். ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தினால் மதுரை ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆள்கிறீர், அப்படியிருக்க, உம்முடைய பெண்ணை என்னுடைய குமாரனுக்கு எப்படி விவாகம் செய்து கொள்ள முடியும்? உம்முடைய குமாரி இந்த அரண்மனைக்கு வர வேண்டும் என்று விரும்பினால், குற்றேவல் செய்யும் பணிப் பெண்ணாகத்தான் வரமுடியும். வேறு மார்க்கம் ஒன்றுமில்லை. உம்முடைய புதல்வியைப் பணிப் பெண்ணாக அனுப்ப உமக்குச் சம்மதமா?" என்றார்.
உத்தம சோழர், சாதாரணமாகப் பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடியவர் அல்லர்! அவருக்குத் தம் குலத்தைப் பற்றிய வீண் கர்வமும் கிடையாது; போதாத காலம். அப்படி விளையாட்டாகச் சொல்லிவிட்டார். பராக்கிரம பாண்டியர் அதைக் கேட்டுச் சிரித்து விட்டிருந்தால் எல்லாம் சரியாய்ப் போயிருக்கும். ஆனால் பராக்கிரம பாண்டியர் எத்தனையோ அரிய ஆற்றல்கள் படைத்தவராயினும், அவருக்குச் சிரிக்க மட்டும் தெரியாது. உத்தம சோழரின் வார்த்தைகளைக் கேட்டதும், அவருக்கு வந்துவிட்டது, ரௌத்ராகாரமான கோபம், "அப்படியா சொன்னீர்? இனி இந்த அரண்மனையில் ஒரு வினாடியும் தாமதியேன்; ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தேன்!" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். உத்தம சோழர் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. போனவர், சில நாளைக்குள் பெரும் படையுடன் திரும்பி வந்தார். உத்தம சோழர் இதை எதிர்பார்க்கவேயில்லை. சோழ ராஜ்யத்தில் அப்போது பெரும் சைன்யமும் இல்லை. ஆகையால் பராக்கிரம பாண்டியரின் நோக்கம் எளிதில் நிறைவேறியது. தஞ்சாவூரைக் கைப்பற்றி உத்தம சோழரையும் சிறைப்பிடித்தார். இளவரசர்களைத் தேடித் தேடிப் பார்த்தும் அவர்கள் அகப்படவில்லை. தகப்பனார் சொற்படி அவர்கள் முன்னாலேயே தஞ்சாவூரைவிட்டு வெளிக் கிளம்பிக் கொள்ளிமலைக் காட்டுக்குத் தப்பித்துக் கொண்டு போய்விட்டார்கள். இதற்காகப் பிற்பாடு அவர்கள் எவ்வளவோ வருத்தப்பட்டார்கள். பின்னால் வருத்தப்பட்டு என்ன பயன்? பராக்கிரம பாண்டியர், தம்முடைய கோபத்தையெல்லாம் உத்தம சோழர் மீது பிரயோகித்தார். அவர் செய்த காரியத்தை சொல்லவும் என் நாக்குக் கூசுகிறது"
"அப்படியானால் நீங்கள் சற்றுச் சும்மாயிருங்கள். மேலே நடந்ததை நான் சொல்லுகிறேன்!" என்று ஆரம்பித்தாள் அந்த யுவதி. பிறகு என்னைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினாள். அவளுடைய செந்தாமரை முகத்தையும் கருவண்டு நிகர்த்த கண்களையும் பார்த்த போது ஏற்பட்ட மயக்கத்தினால், சில சமயம் அவள் சொல்லிய வார்த்தைகள் என் காதில் ஏறவில்லை. எனினும் ஒருவாறு கதைத் தொடர்ச்சியை விடாமல் கவனித்து வந்தேன். அந்த மங்கை கூறினாள்:-
"பராக்கிரம பாண்டியருக்கு ஏற்கெனவே உத்தம சோழர் மீது கோபம் அதிகமாயிருந்தது. 'உங்களுடைய குமாரியை என் வீட்டுப் பணிப் பெண்ணாக அனுப்புங்கள்' என்று சொன்னாள் யாருக்குத் தான் கோபமாயிராது? சோழ இளவரசர்கள் இருவரும் தப்பித்துச் சென்றுவிட்டது பராக்கிரம பாண்டியரின் கோபத்தைக் கொழுந்து விட்டு எரியும்படி செய்தது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்னும் ஆத்திரம் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. தம்மை அவமதித்த சோழ மன்னரை அவர் அவமானப்படுத்த விரும்பினார். அவரைச் சிறைப்படுத்தி, மதுரைக்கு அழைத்துக் கொண்டு போனார். மதுரை சேர்ந்ததும், உத்தம சோழரைத் தம்முடைய ரதத்தின் அச்சில் கயிற்றினால் பிணைத்துக் கட்டும்படி செய்தார். தாமும் ரத்ததில் உட்கார்ந்து கொண்டு ரதத்தை ஓட்டச் சொன்னார். இந்தப் பயங்கரமான ஊர்வலம் மதுரை மாநகரின் வீதிகளில் சென்றபோது, இரு பக்கமும் நகர மாந்தர் நின்று வேடிக்கை பார்த்தார்கள். சிலர் தங்கள் அரசருடைய வீரத்தை வியந்து பாராட்டி ஜெயகோஷம் செய்தார்கள். ஒரு சிலர், உத்தம சோழனுடைய கர்வபங்கத்தை எண்ணிக் குதூகலப்பட்டார்கள். ஒரு சிலருக்கு அந்தக் காட்சி துக்க வருத்தத்தை அளித்தது. அப்படி வருத்தப்பட்டவர்களில் ஒருத்தி, பாண்டிய மன்னருடைய குமாரி புவனமோகினி. தன்னுடைய தந்தை வெற்றிமாலை சூடித் தஞ்சையிலிருந்து திரும்பி வந்த பிறகு, மதுரை நகரின் வீதிகளில் வலம் வருவதைப் பார்க்க அவள் விரும்பியது இயற்கை தானே?
பாண்டிய மன்னரின் அரண்மனை மேன்மாடத்தில் நின்று, புவனமோகினி ஊர்வலக் காட்சியைப் பார்த்தாள். தன் தந்தை ஏறியிருந்த ரதத்தின் அச்சில், யாரோ ஒரு வயதான பெரிய மனிதரைச் சேர்த்துக் கட்டியிருப்பதும், அவருடைய தேகத்தில் ஒரு பாதி தெருவில் கிடந்து தேய்ந்து கொண்டே வருவதும், அவள் கண்ணுக்குத் தெரிந்தது. அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு அவளுக்குச் சகிக்க வில்லை. 'இப்படியும் ஒரு கொடுமை உண்டா?' என்று பயங்கரமும் துயரமும் அடைந்தாள். உணர்ச்சி மிகுதியினால் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டாள். இதைப் பார்த்திருந்த சேடிகள், உடனே பாண்டியருக்குச் செய்தி அனுப்பினார்கள்.
பாண்டியர் ஊர்வலத்தை நிறுத்தி விட்டு அரண்மனைக்குத் திரும்பினார். புவனமோகினிக்கு மூர்ச்சை தெளிந்ததும், அவள் தந்தையிடம் தன் மனக் கருத்தை வெளியிட்டாள். "ஒரு பெரிய வம்சத்தில் பிறந்த அரசர் போரிலே தோல்வியடைந்தால், அவரை இப்படி ரதத்திலே சேர்த்துக் கட்டித் தெருவிலே இழுத்துக் கொண்டு போவது என்ன நியாயம்? இது அநாகரிகம் அல்லவா? இப்படி நீங்கள் செய்யலாமா?" என்று அவள் கேட்டதற்குப் பாண்டியர், "அவன் எத்தனை பெரிய வம்சத்தில் பிறந்தவனாயிருந்தால் என்ன? என் அருமைக் குமாரியை அவனுடைய அரண்மனையில் குற்றேவல் செய்ய அனுப்பும்படி சொன்னான். அப்படிப்பட்டவனுடைய அகம்பாவத்தை வேறு எந்த விதத்தில் நான் அடக்குவது? உத்தம சோழனுக்கு நீ பரிந்து பேசாதே. வேறு ஏதாவது சொல்லு!" என்றார். புவனமோகினி தந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லி அவருடைய கோபத்தைத் தணித்தாள். அதன் பேரில் உத்தம சோழரைத் தனிச்சிறையில் அடைக்கும்படியும், அவருக்கு மற்றபடி வேண்டிய சௌகரியங்கள் எல்லாம் செய்து கொடுக்கும் படியும் பராக்கிரம பாண்டியர் கட்டளையிட்டார்..."
இவ்விடத்தில் அம்மங்கையின் காதலன் குறுக்கிட்டு, "ஆஹாஹா! பாண்டிய நாட்டின் கருணையே கருணை!" என்றான். பிறகு அவனே கதையைத் தொடர்ந்தான்:-
"உத்தம சோழரின் புதல்வர்கள் இருவரும் பாண்டிய வீரர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு கொல்லிமலை போய்ச் சேர்ந்தார்கள். அவர்களுடன் இன்னும் சில சோழ நாட்டு வீரர்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள். கொல்லிமலை பிரதேசம் இப்போது எப்படி இருக்கிறதோ என்னமோ தெரியாது. அந்தநாளில் கொல்லிமலையும் அதன் அடிவாரமும் மிகச் செழிப்பான வனங்களால் சூழப்பட்டிருந்தன. அந்த வனப் பிரதேசத்தின் அழகைச் சொல்லி முடியாது. இது மோகினித் தீவு என்பது உண்மைதான். ஆனால், கொல்லிமலையின் வனப்புக்கு இது அருகிலேகூட வரமுடியாது. வருஷம் முந்நூற்றறுபத்தைந்து தினங்களும் கனிகள் தரக்கூடிய மாமரங்களும் நாரத்தை மரங்களும் அங்கு ஏராளமாயிருந்தன. அங்கிருந்த பலா மரங்களும் அவ்வளவு ஏராளமான பெரிய பலாப்பழங்களைக் கிளைகளில் சுமந்து கொண்டு, எப்படித்தான் விழாமல் நிற்கின்றன என்னும் வியப்பைப் பார்ப்பவர்களின் மனத்தில் உண்டாக்கும். உணவுக் கவலையேயின்றி ஒளிந்து வாழ்வதற்குக் கொல்லிமலையைப் போன்ற இடம் வேறு இல்லை என்றே சொல்லலாம். முற்காலத்தில் கரிகாற் சோழன் ஒளிந்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது, கொல்லிமலைக்குத் தான் போயிருந்ததாகச் சொல்லுவதுண்டு. இந்த மலையில் அப்போது சில சித்தர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். கரிகாலன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று சித்தர்களை வேண்டிக் கொண்டாராம். அவர்களும் ஆகட்டும் என்று ஒப்புக் கொண்டார்களாம். கரிகாலனைத் தேடிக் கொண்டு அவனுடைய விரோதிகளின் ஒற்றர்கள் கொல்லிமலைக்கு வர ஆரம்பித்தார்கள். சித்தர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? ஒரு அழகான பெண்ணின் வடிவமாக ஓர் இயந்திரப் பதுமையைச் செய்தார்கள். அந்தப் பதுமைக்குள்ளே ஒரு கூரிய வாளை ஒளித்து வைத்தார்கள். பதுமையைப் பார்ப்பவர்கள் அது உண்மையான பெண் என்றே நினைக்கும்படியிருந்தது. நினைப்பது மட்டுமல்ல; அந்தப் பதுமையின் அழகினால் கவரப்பட்டு, யாரும் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். கரிகாலனைத் தேடிக் கொண்டு வந்த ஒற்றர்கள் அந்தப் பதுமையைப் பார்த்ததும் அதன் அழகில் மயங்கி அருகில் வந்து, உயிருள்ள பெண்ணாகவே கருதி அதைத் தீண்டுவார்கள். அவ்வளவுதான், அந்தப் பதுமையின் எந்த அவயத்தில் மனிதனுடைய கை பட்ட போதிலும், உடனே அந்தப் பதுமையில் மறைந்துள்ள இயந்திரம் இயங்கி, அதன் வயிற்றுக்குள்ளேயிருந்து மிக வேகத்துடன் கூரிய வாள் வெளிவந்து, தன்னைத் தீண்டியவனைக் குத்திக் கொன்று விடுமாம்! இதனால் அந்தப் பதுமைக்குக் 'கொல்லியம் பாவை' என்று பெயர் வந்ததாம். அந்தக் கொல்லியம் பாவை அங்கே இருந்த காரணத்தினாலேயே, அந்த மலைக்குக் கொல்லிமலை என்று பெயர் வந்ததாகவும் சொல்வதுண்டு. ஆனால் அதெல்லாம் பழங்காலத்துக் கதை. சோழ நாட்டு இளவரசர்கள் இருவரும் அவர்களுடைய தோழர்களும் கொல்லி மலைக்குப் போனபோது, அங்கே 'கொல்லியம் பாவை' இருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் வாளும் வேலும் இருந்தன. சுகுமாரனும் ஆதித்தனும் பராக்கிரம பாண்டியன்மீது பழி வாங்கத் துடித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த சோழ நாட்டு வீரர்கள், இளவரசர்களைக் காட்டிலும் அதிக ஆத்திரங் கொண்டிருந்தார்கள். ஆனால், ஐம்பதினாயிரம் போர்வீரர்களும் யானைப்படை குதிரைப் படைகளும் உடைய சாம்ராஜ்யத்தை எதிர்த்து ஓர் இருபது வீரர்கள் என்ன செய்ய முடியும்? ஆகையால் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றிப் பல யோசனைகள் செய்தார்கள்; இரகசியமாகப் படை திரட்டிச் சேர்ப்பதற்குக் கொல்லிமலைக் காடு மிகவும் வசதியான இடம். அவர்களிலே சிலர் சந்நியாசிகளைப் போல் வேஷம் தரித்துச் சோழ நாடெங்கும் சுற்றிச் சோழகுலத்திடம் உண்மையான விசுவாசம் கொண்ட வீரர்களைத் திரட்ட வேண்டும். அப்படித் திரட்டியவர்களையெல்லாம் குறிப்பிட்ட அடையாளங்களுடன் கொல்லிமலைப் பிரதேசத்துக்கு அனுப்ப வேண்டும். இன்னும் ஆயுதங்கள், உணவுப் பொருள்கள் முதலியவையுங் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இவ்விதம் போதுமான படை சேர்ந்தவுடன் தஞ்சாவூர் மீது படையெடுத்துச் செல்ல வேண்டும் அங்கிருந்து மதுரைக்குப் போக வேண்டியதுதான். பராக்கிரம பாண்டியனைப் பூண்டோ டு அழித்து விட வேண்டியதுதான். இப்படியெல்லாம் அவர்கள் திட்டம் போட்டார்கள்.
ஆனால், எல்லாவற்றிற்கும் முதலிலே செய்ய வேண்டியது ஒன்று இருந்தது. அவர்களில் யாராவது ஒருவர் மாறுவேடம் பூண்டு மதுரைக்குப் போகவேண்டும். பாண்டியனுடைய சிறையிலிருந்து உத்தம சோழரை எப்படியாவது தந்திரத்தினால் விடுதலை செய்து அழைத்து வரவேண்டும். உத்தமசோழர் பத்திரமாய்க் கொல்லிமலைக்கு வந்து சேர்ந்த பிறகுதான், மற்றக் காரியம் எதுவும் செய்ய முடியும். அப்படியின்றி, உத்தம சோழர் பாண்டியனுடைய சிறையில் இருக்கும் போது சோழ இளவரசர்கள் படை திரட்டுவதாகத் தெரிந்தாற் கூட, அந்த மூர்க்கங் கொண்ட பாண்டியன் அவரைக் கொன்றுவிடக் கூடும் அல்லவா? மதுரைக்கு மாறுவேடம் பூண்டு சென்று, அந்த மகாசாகஸமான செயலை யார் புரிவது என்பது பற்றி அவர்களுக்குள் விவாதம் எழுந்தது. ஒவ்வொரு வீரனும் தான் போவதாக முன் வந்தான். ஆதித்தன் தன் தந்தையை விடுவித்துக் கொண்டு வரும் பொறுப்பு தன்னுடையது என்று சாதித்தான். பட்டத்து இளவரசனாகிய சுகுமாரன் மட்டும் போகக்கூடாது என்று மற்றவர்கள் அனைவரும் ஒரு முகமாகச் சொன்னார்கள். ஆனால், சுகுமாரனுக்கோ வேறு யாரிடத்திலும் அந்தக் கடினமான வேலையை ஒப்படைக்க விருப்பமில்லை. நீண்ட விவாதத்துக்குப் பிறகு, கடைசியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கொல்லிமலைப் பிரதேசத்தில் மர நெருக்கம் இல்லாத ஓர் இடத்தைக் கண்டு பிடித்து, அங்கே ஒவ்வொருவரும் அவரவருடைய வேலைப் பலம் கொண்ட மட்டும் வீசி எறிய வேண்டியது. யாருடைய வேல் அதிகமான தூரத்தில் போய் விழுகிறதோ அவன் மதுரைக்குப் போக வேண்டியது. ஒரு வருஷ காலத்துக்குள் அவன் உத்தம சோழரை விடுவித்துக் கொண்டு வந்து சேராவிட்டால், அடுத்தபடியாக நெடுந்தூரம் வேல் எறிந்த வீரன் மதுரைக்குப் போகவேண்டியது. இந்த யோசனையைச் சுகுமாரன் சொன்னதும், வேறு வழியின்றி எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் தன் உடம்பிலுள்ள சக்தி முழுவதையும் பிரயோகித்து, வெகு தூரத்தில் போய் விழும்படியாகத்தான் வேலை வீசி எறிந்தார்கள். ஆனால் சுகுமாரனுடைய வேல் தான் அதிக தூரத்தில் போய் விழுந்தது. அதனால் கடவுளுடைய விருப்பம் அப்படி இருக்கிறதென்று ஒப்புக் கொண்டு, மற்றவர்கள் சுகுமாரனுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். சுகுமாரன் மிக உற்சாகத்துடனே மதுரைக்குப் புறப்பட்டான்.
மதுரைமா நகரின் செல்வச் சிறப்புகளைப் பற்றியும், மீனாக்ஷி அம்மன் கோயிலின் மகிமையைப் பற்றியும், சுகுமாரன் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தான். முற்காலத்தில் சங்கப் புலவர்கள் வாழ்ந்ததும், தமிழ் வளர்த்த நகரம் மதுரை என்பதும் அவனுக்குத் தெரிந்துதானிருந்தது. அப்படிப்பட்ட மதுரை நகரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவன் மனத்தில் வெகு நாட்களாகக் குடி கொண்டிருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறப் போகிறதென்றால், அவன் உற்சாகம் கொள்வதற்குக் கேட்பானேன்? தன்னுடைய சாமர்த்தியத்தினால் தந்தையை விடுவித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையும் அவனுக்குப் பூரணமாய் இருந்தது. எனினும் பாண்டிய நாட்டுத் தலை நகரில் தன்னுடைய வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிடப் போகிற அனுபவம் கிட்டப் போகிறது என்பதைச் சுகுமாரன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மதுரை நகரில் ஒரு 'கொல்லியம்பாவை' இருக்கிறது என்றும், அந்த உயிர் பாவையின் முகத்தில் உள்ள இரண்டு கண்களாகிய வாளாயுதங்களும், அருகில் நெருங்கியவர்களின் நெஞ்சைப் பிளந்துவிடக் கூடியவையென்றும், அவன் கனவிலோ கற்பனையிலோ கூட எண்ணவில்லை!..."