P3பார்த்தீபன் கனவு...நிறைவேறியது.. 38 /39/40

04 Jul,2011
 

என்ன தண்டனை?.38அமாவாசையன்றைக்கு மறுநாள் பொழுது புலர்ந்ததிலிருந்து மாமல்லபுரத்து அரண்மனையில் குந்தவி தேவிக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது. அடிக்கடி அரண்மனை உப்பரிகை மாடத்தின் மேல் ஏறுவதும், நாலாபுறமும் பார்ப்பதும், மறுபடி அவசரமாகக் கீழிறங்குவதும், பணியாட்களுக்கு ஏதேதோ கட்டளையிடுவதும், உறையூரிலிருந்து அவளுடன் வந்திருந்த வள்ளியிடம் இடையிடையே பேசுவதுமாயிருந்தாள். என்ன பேசினாலும், எதைச் செய்தாலும் அவளுடைய செவிகள் மட்டும் குதிரைக் குளம்படியின் சத்தத்தை வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தன. பணியாட்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று பேச்சை நிறுத்தி காதுகொடுத்துக் கேட்பாள். விக்கிரமனையும் பொன்னனையுந்தான் அவள் அவ்வளவு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்று சொல்லவேண்டியதில்லை.

விக்கிரமனும் பொன்னனும் வந்தவுடனேயே என்ன செய்ய வேண்டுமென்று குந்தவி தீர்மானித்து வைத்திருந்தாள். விக்கிரமனுடன் அதே கப்பலில் தானும் போய்விடுவது என்ற எண்ணத்தை அவள் மாற்றிக் கொண்டு விட்டாள். அதனால் பலவிதச் சந்தேகங்கள் தோன்றி மறுபடியும் விக்கிரமன் பிடிக்கப்படுவதற்கு ஏதுவாகலாம். இது மட்டுமல்ல; தந்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் அவ்விதம் ஓடிப் போவதற்கும் அவளுக்கு மனம் வரவில்லை! நரசிம்மச் சக்கரவர்த்தியின் பரந்த கீர்த்திக்குத் தன்னுடைய செயலால் ஒரு களங்கம் உண்டாகலாமா! அதைக் காட்டிலும் விக்கிரமன் முதலில் கப்பலேறிச் சென்ற பிறகு, தந்தையிடம் நடந்ததையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விக்கிரமனையே தான் பதியாக வரித்து விட்டதையும் தெரிவிப்பதே முறையல்லவா? அப்போது சக்கரவர்த்தி தன்னை கட்டாயம் மன்னிப்பதுடன், கப்பலில் ஏற்றித் தன்னைச் செண்பகத் தீவுக்கும் அனுப்பிவைத்துவிடுவார். `உன்னுடைய கல்யாணத்துக்காக நான் ஒரு பிரயத்தனமும் செய்யப் போவதில்லை. உன்னுடைய பதியை நீயேதான் ஸ்வயம்வரம் செய்து கொள்ளவேண்டும்' என்று சக்கரவர்த்தி அடிக்கடி கூறிவந்திருக்கிறாரல்லவா? அப்படியிருக்க, இப்போது தன் இஷ்டத்திற்கு அவர் ஏன் மாறு சொல்ல வேண்டும்?

இத்தகைய தீர்மானத்துடன் குந்தவி விக்கிரமனுடைய வரவுக்கு வழி நோக்கிக் கொண்டிருந்தாள். வானவெளியில் சூரியன் மேலே வர வர, குந்தவியின் பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. கடைசியாக, கிட்டதட்ட நடு மத்தியானத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டபோது, குந்தவியினுடைய இருதயம் விம்மி எழுந்து தொண்டையை அடைத்துக் கொண்டது. மறுபடியும் ஒரு தடவை விக்கிரமனைக் கப்பலில் ஏற்றி அனுப்பி விட்டுத் தான் பின் தங்குவதா? கதையிலே, காவியத்திலே வரும் வீரப் பெண்மணிகள் எல்லாரும் அவ்விதந்தானா செய்திருக்கிறார்கள்? அர்ச்சுனனோடு சுபத்திரை கிளம்பிப் போய்விடவில்லையா? கிருஷ்ணனோடு ருக்மணி போகவில்லையா? தான் மட்டும் எதற்காகப் பின்தங்க வேண்டும்? விக்கிரமனுக்கு விடை கொடுத்தனுப்புவது தன்னால் முடியாத காரியம் என்று அவளுக்குத் தோன்றிற்று. குதிரைகளின் காலடிச் சத்தம் நெருங்க நெருங்க அவளுடைய மனக்குழப்பம் அதிகமாயிற்று.

வந்த குதிரைகள் அரண்மனை வாசலில் வந்து நின்றன. வாசற்காப்பாளருக்கு, இரத்தின வியாபாரி தேவசேனர் வந்தால் உடனே தன்னிடம் அழைத்து வரும்படிக் குந்தவி கட்டளையிட்டிருந்தாள். இதோ, குதிரையில், வந்தவர்கள் இறங்கி உள்ளே வருகிறார்கள். அடுத்த வினாடி அவரைப் பார்க்கப் போகிறோம்! ஆகா! இதென்ன? உள்ளே வருகிறது யார்! சக்கரவர்த்தியல்லவா? குந்தவியின் தலை சுழன்றது. எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்துக் கொண்டாள். சிறிது தடுமாற்றத்துடன், "அப்பா! வாருங்கள்! வாருங்கள்! இத்தனை நாளாய் எங்கே போயிருந்தீர்கள்?" என்றாள்.

 நல்லது, உட்கார், குழந்தாய்! நீ உறையூரிலிருந்து எப்போது வந்தாய்? எதற்காக இவ்வளவு அவசரமாய் வந்தாய்?" என்று கேட்டுக் கொண்டே சக்கரவர்த்தி அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். குந்தவிக்கு அப்போது ஏற்பட்ட இதயத் துடிப்பைச் சொல்ல முடியாது. `அப்பா இங்கே இருக்கும்போது அவர் வந்து விட்டால் என்ன செய்கிறது? இப்பொழுது வருகிற சமயமாச்சே! அரண்மனைக்குள் வராமல் நேரே போய்க் கப்பலேறச் செய்வதற்கு வழி என்ன?' என்றெல்லாம் எண்ணி அவள் உள்ளம் தவித்தது. அவளுடைய தவிப்பைக் கவனியாதவர் போல் சக்கரவர்த்தி, "குழந்தாய்! இன்று சாயங்காலம் நான் உறையூருக்குக் கிளம்புகிறேன். நீயும் வருகிறாயா? அல்லது உறையூர் வாசம் போதுமென்று ஆகிவிட்டதா?" என்றார். "உறையூருக்கா? எதற்காக அப்பா?" என்றாள் குந்தவி. "ரொம்ப முக்கியமான காரியங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன, அம்மா! அருள்மொழித்தேவி அகப்பட்டு விட்டார்." "ஆகா!" என்று அலறினாள் குந்தவி.

"ஆமாம், அருள்மொழித் தேவியைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தது யார் தெரியுமா? நீ அடிக்கடி சொல்வாயே, யாரோ வேஷதாரிச் சிவனடியார் என்று, அவர்தான்!" "என்ன! என்ன!.. தேவி எங்கே இருந்தார்? யார் கொண்டு போய் வைத்திருந்தார்கள்? அந்தப் போலிச் சிவனடியார்... ஒருவேளை அவரேதான்..."

சக்கரவர்த்தி புன்னகையுடன், "இன்னும் உனக்குச் சந்தேகம் தீரவில்லையே, அம்மா! இல்லை. அந்தச் சிவனடியார் அருள்மொழி ராணியை ஒளித்து வைத்திருக்கவில்லை. ராணியைக் கொண்டு போய் வைத்திருந்தவன் நான் முன்னமேயே ஒரு தடவை சொன்னேனே - அந்தக் கபாலிகக் கூட்டத்தின் பெரிய பூசாரி - மகாக் கபால பைரவன். சிவனடியார் அருள்மொழி ராணியைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததின் பலன், அவருடைய உயிருக்கே ஆபத்து வருவதாயிருந்ததாம். நேற்று இராத்திரி மகாக் கபால பைரவன் சிவனடியாரைக் காளிக்குப் பலிகொடுப்பதாக இருந்தானாம். அவரைக் கட்டிப் பலிபீடத்தில் கொண்டு வந்து போட்டாகிவிட்டதாம். கழுத்தில் கத்தி விழுகிற சமயத்தில் சிவனடியாரை யார் வந்து காப்பாற்றினார்களாம் தெரியுமா?" "யார் அப்பா?"

"செண்பகத் தீவிலிருந்து வந்திருந்தானே - இரத்தின வியாபாரி தேவசேனன் - அவனும் படகோட்டி பொன்னனும் நல்ல சமயத்தில் வந்து காப்பாற்றினார்களாம்!" குந்தவி ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் வார்த்தை ஒன்றும் வெளியில் வரவில்லை. அவளுடைய அழகிய வாய், மாதுளை மொட்டின் இதழ்கள் விரிவது போல் விரிந்து அப்படியே திறந்தபடியே இருந்தது. "இன்னும் ஒரு பெரிய அதிசயத்தைக் கேள், குழந்தாய்! இரத்தின வியாபாரி தேவசேனன் என்பது உண்மையில் யார் தெரியுமா? அவனும் ஒரு வேஷதாரிதான். தேசப் பிரஷ்டனான சோழநாட்டு இளவரசன் விக்கிரமன்தான் அம்மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு அவனுடைய தாயாரையும் தாய்நாட்டையும் பார்ப்பதற்காக வந்தானாம்! என்ன தைரியம், என்ன துணிச்சல், பார்த்தாயா குழந்தாய்!" குந்தவி விம்மிய குரலுடன், "அப்பா! அவர்கள் எல்லாரும் இப்போது எங்கே?" என்று கேட்டாள். "யாரைக் கேட்கிறாய், அம்மா! விக்கிரமனையும், பொன்னனையுமா? அவர்களை உறையூருக்குக் கொண்டு போகச் சொல்லியிருக்கிறேன். நானே நேரில் வந்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறேன். அதற்காகத் தான் முக்கியமாக உறையூருக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?"

இத்தனை நேரமும் குந்தவி அடக்கி வைத்துக் கொண்டிருந்த துக்கமெல்லாம் இப்போது பீறிக்கொண்டு வெளியில் வந்தது. தந்தையின் மடியில் தலையை வைத்துக் கொண்டு `கோ' என்று கதற ஆரம்பித்தாள். இவ்வளவு நேரமும் புன்னகையுடன் பொலிந்து கொண்டிருந்த சக்கரவர்த்தியின் முகபாவத்தில் இப்போது மாறுதல் காணப்பட்டது. அவருடைய கண்களின் ஓரத்தில் ஒரு துளி ஜலம் முத்துப்போல் பிரகாசித்தது. குந்தவியின் தலையையும் முதுகையும் அவர் அன்புடன் தடவிக் கொடுத்து, "குழந்தாய்! உனக்கு என்ன துக்கம்? உன் மனத்தில் ஏதோ வைத்துக் கொண்டு சொல்லாமலிருக்கிறாய். என்னிடம் மறைப்பானேன்! எதுவாயிருந்தாலும் சொல்!" என்றார்.

குந்தவி கொஞ்சங் கொஞ்சமாக எல்லாவற்றையும் சொன்னாள். காஞ்சி நகரின் வீதியில் சங்கிலிகளால் கட்டுண்டு சென்ற விக்கிரமனைச் சந்தித்ததிலிருந்து தன்னுடைய உள்ளம் அவனுக்கு வசமானதைத் தெரிவித்தாள். பிறகு, மகேந்திர மண்டபத்தில் ஜுரத்துடன் உணர்வு இழந்து கிடந்த விக்கிரமனைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்றதிலிருந்து இன்று அவனைக் கப்பலேற்றி அனுப்ப உத்தேசித்திருந்த வரையில் எல்லாவற்றையும் கூறினாள். கடைசியில், "அப்பா! அந்தச் சோழ ராஜ குமாரனையே என் நாதனாக வரித்து விட்டேன். மற்றொருவரை மனதிலும் நினைக்கமாட்டேன்" என்று கூறி விம்மினாள்.

சக்கரவர்த்தி அப்போது அன்பு கனிந்த குரலில் கூறினார். "குழந்தாய், இந்த உலகில்  அன்பு வடிவமான கடவுளே சாந்நித்தியமாயிருக்கிறார். அவ்விதம் அன்பினால் சேர்ந்த உள்ளங்களுக்கு மத்தியில் நின்று தடைசெய்ய யாருக்குமே பாத்தியதை கிடையாது; தாய் தகப்பனுக்குக்கூடக் கிடையாதுதான். ஆகையால், நீ சோழ நாட்டு இளவரசனை மணம் புரிய விரும்பினாயானால், அதை ஒரு நாளும் நான் தடை செய்யேன். ஆனால், குழந்தாய்! நமது பல்லவ வம்சம் நீதிநெறி தவறாது என்று புகழ் பெற்றது. பல்லவ சாம்ராஜ்யத்தில் ராஜகுலத்தினருக்கும் ஒரு நீதிதான்; ஏழைக் குடியானவனுக்கும் ஒரு நீதிதான். ஆகையால், சோழ ராஜகுமாரன் விஷயத்தில் ராஜ்ய நீதிக்கிணங்க விசாரணை நடைபெறும். குற்றத்துக்குத் தகுந்த தண்டனை கிடைக்கும். அதற்குப் பிறகும், நீ அந்த ராஜகுமாரனை மணக்க விரும்பினால், நான் குறுக்கே நிற்கமாட்டேன்."

இதைக் கேட்ட குந்தவி, "அப்பா! தேசப்பிரஷ்டமானவர்கள் திரும்பி வந்தால் தண்டனை என்ன?" என்றாள். "சாதாரணமாக, மரண தண்டனைதான்; ஆனால், சோழ ராஜகுமாரன் விஷயத்தில் யோசிக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன." "என்ன அப்பா?" "நீதான் அடிக்கடி சொல்வாயே, அந்த ராஜகுமாரனுடைய காரியங்களுக்கெல்லாம் அவன் பொறுப்பாளியல்ல - போலிச் சிவனடியாருடைய போதனைதான் காரணம் என்று. அது உண்மைதான் என்று தோன்றுகிறது. அந்தச் சிவனடியாரும் இப்போது அகப்பட்டிருக்கிறார். அவரையும் விசாரித்து உண்மையறிய வேண்டும்."

அப்போது குந்தவி, மனதிற்குள், `ஆமாம், அந்தப் போலிச் சடை சாமியாரால் தான் எல்லா விபத்துக்களும் வருகின்றன. அவர் அநாவசியமாக நேற்றிரவு ஒரு ஆபத்தில் சிக்கிக் கொண்டிராவிட்டால், இத்தனை நேரம் அந்த வீரராஜகுமாரர் கப்பலில் ஏறி இருப்பாரல்லவா?" என்று எண்ணமிட்டாள். "அதோடு இன்னும் ஒரு விஷயமும் யோசிக்க வேண்டியிருக்கிறது. செண்பகத் தீவின் இரத்தின வியாபாரிக்குக் குதிரை கொடுத்துச் சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தது யார்? ஞாபகம் இருக்கிறதா, குழந்தாய்?"

"அப்பா!" என்று வியப்பும் ஆனந்தமும் கலந்த குரலில் குந்தவி கூச்சலிட்டாள். ஒற்றர் தலைவன் வேஷத்திலிருந்த சக்கரவர்த்தி குதிரை கொடுத்து அனுப்பித்தானே விக்கிரமன் சோழ நாட்டுக்குப் போனானென்பது அவளுக்கு நினைவு வந்தது. "அப்படியானால் எப்படி தண்டனை ஏற்படும் அப்பா?" என்றாள். "எல்லாம், விசாரிக்கலாம் குழந்தாய்! விசாரித்து எது நியாயமோ, அப்படிச் செய்யலாம். பல்லவ ராஜ்யத்தில் நீதி தவறி எதுவுமே நடக்காது" என்றார் சக்கரவர்த்தி.

சிரசாக்கினை.39

ஆகா இது உறையூர்தானா?" என்று பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதமாகச் சோழ நாட்டின் தலைநகரம் அன்று அலங்கரிக்கப்பட்டு விளங்கிற்று. பார்த்திப மகாராஜா போர்க்களத்துக்குப் புறப்பட்ட போது அவருடன் புடை பெயர்ந்து சென்ற லக்ஷ்மி தேவி மீண்டும் இன்றுதான் உறையூருக்குத் திரும்பி வந்திருக்கிறாள் என்று சொல்லும்படியிருந்தது. உறையூர் வாசிகளிடையே வெகுகாலத்திற்குப் பிறகு இன்று கலகலப்பும் உற்சாகமும் காணப்பட்டன. வெளியூர்களிலிருந்து ஜனங்கள் வண்டிகளிலும், பலவித வாகனங்களிலும் கால்நடையாகவும் வந்து கொண்டிருந்தார்கள். வீதிகளில் ஆங்காங்கு ஜனங்கள் கூட்டமாய் நின்று கிளர்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்று காஞ்சி நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தி உறையூரில் பொது ஜன சபை கூட்டுகிறார் என்றும், இதற்காகச் சோழ நாட்டின் பட்டினங்களிலும் கிராமங்களிலும் உள்ள பிரமுகர்களையெல்லாம் அழைத்திருக்கிறார் என்றும் பிரஸ்தாபமாயிருந்தது. அன்று நடக்கப்போகும் சபையில் பல அதிசயங்கள் வெளியாகுமென்றும் பல விசேஷ சம்பவங்கள் நிகழுமென்றும் ஜனங்கள் எதிர்பார்த்தார்கள். அருள்மொழித் தேவியும், இளவரசர், விக்கிரமரும் உறையூருக்குத் திரும்பி வந்திருக்கிறார்களென்றும் செய்தி பரவியிருந்தது. இன்னும் இளவரசர் இரத்தின வியாபாரி வேஷத்தில் வஸந்த மாளிகையில் வந்திருந்தாரென்றும், குந்தவி தேவிக்கும் அவருக்கும் காதல் உண்டாகிக் கல்யாணம் நடக்கப் போகிறதென்றும் இதனால் உறையூரும் காஞ்சியும் நிரந்தர உறவு கொள்ளப்போகிறதென்றும் சிலர் சொன்னார்கள். வேறு சிலர் இதை மறுத்து, "தேசப் பிரஷ்டத் தண்டனைக்குள்ளான இளவரசரைச் சக்கரவர்த்தி விசாரணை செய்து பொதுஜன அபிப்பிராயத்தையொட்டித் தீர்ப்புக் கூறப்போகிறார்" என்றார்கள். நாலு நாளைக்கு முன்னால், அமாவாசை இரவில், கொல்லி மலைச்சாரலில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், மாரப்ப பூபதியின் மரணத்தைப் பற்றியும் ஜனங்கள் கூட்டியும் குறைத்தும் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். பொன்னனும் வள்ளியும் அன்று உறையூர் வீதிகளின் வழியாக வந்த போது, ஆங்காங்கே ஜனங்கள் அவர்களை நிறுத்தி, "பொன்னா! இன்று என்ன நடக்கப் போகிறது?" என்று விசாரித்தார்கள். பொன்னனோ, தலையை ஒரே அசைப்பாக அசைத்து "எனக்கு ஒன்றும் தெரியாது, சாயங்காலமானால், தானே எல்லாம் வெளியாகிறது. ஏன் அவசரப்படுகிறீர்கள்?" என்றான். வள்ளியை அழைத்துக் கேட்ட பெண் பிள்ளைகளிடம் வள்ளியும் அதே மாதிரிதான் மறுமொழி சொன்னாள். பொன்னனுக்கும், வள்ளிக்கும் அன்று இருந்த கிராக்கிக்கும் அவர்களுக்கு அன்று ஏற்பட்டிருந்த பெருமைக்கும் அளவேயில்லை.

தேவலோகத்தில் தேவேந்திரனுடைய சபை கூடியிருப்பதைப் பார்த்தவர்கள் "தேவேந்திரனுடைய சபை கிட்டதட்ட இந்த மாதிரிதான் இருக்க வேண்டும்!" என்று ஏகமனதாக முடிவு கட்டினார்கள். அவ்வளவு விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருந்த சபா மண்டபத்தில் சபை கூடிற்று. குறிப்பிட்ட நேரத்திற்குள் `தேவேந்திரனைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனத்துக்கு ஒரு பக்கத்தில், வசிஷ்டரையும் வாமதேவரையும்போல், சிவனடியாரும், சிறுத்தொண்டரும் வீற்றிருந்தார்கள். சிம்மாசனத்தின் மற்றொரு பக்கத்தில் சக்கரவர்த்தியின் குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அடுத்தாற்போல் அருள்மொழித்தேவியும் சிறுத்தொண்டரின் தர்ம பத்தினி திருவெண்காட்டு நங்கையும் காணப்பட்டனர். அவர்களுக்கு மத்தியில் சிறுத்தொண்டரின் அருமைப் புதல்வன் சீராள தேவன் உட்கார்ந்து, அதிசயத்தினால் விரிந்த கண்களினால், நாலாபுறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். இவர்களுக்குப் பின்னால் பொன்னனும் வள்ளியும் அடக்க ஒடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனத்துக்கு நேர் எதிரே, சற்றுத் தூரத்தில் பல்லவ சேனாதிபதியும் இன்னும் சில பல்லவ வீரர்களும் சூழ்ந்திருக்க விக்கிரமன் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான். குந்தவி இருந்த பக்கம் பார்க்கக் கூடாதென்று அவன் எவ்வளவோ பிடிவாதமாக மனத்தை உறுதிப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தானென்றாலும் சில சமயம் அவனை அறியாமலே அவனுடைய கண்கள் அந்தப் பக்கம் நோக்கின. அதே சமயத்தில் குந்தவியும் தன்னை மீறிய ஆவலினால் விக்கிரமனைப் பார்க்கவும், இருவரும் திடுக்கிட்டுத் தங்களுடைய மன உறுதி குலைந்ததற்காக வெட்கப்பட்டுத் தலை குனிய வேண்டியதாயிருந்தது.

இன்னும் அந்த மகத்தான சபையில், மந்திரிகளும் படைத்தலைவர்களும் தனாதிகாரிகளும் பண்டிதர்களும் கலைஞர்களும் கவிராயர்களும் பிரபல வர்த்தகர்களும் கிராமங்களிலிருந்து வந்த நாட்டாண்மைக்காரர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் எல்லாரையும் காட்டிலும் அந்தச் சபையில் அதிகமாக அனைவருடைய கவனத்தையும் கவர்ந்த ஒருவர் சக்கரவர்த்தி குமாரன் மகேந்திரனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அவருடைய உருவமும் உடையும் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரல்லர் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறின. சபையினர் அவரைச் சுட்டிக் காட்டி தங்களுக்குள்ளேயே, "சீன தேசத்திலிருந்து வந்திருக்கும் உலக யாத்திரிகர் இவர்தான்!" என்று பேசிக் கொண்டார்கள் யுவான் சுவாங்க் என்றும் அவருடைய பெயரைப் பலரும் பலவிதமாக உச்சரித்து நகையாடினார்கள்.

இந்தச் சீன யாத்திரிகரைத் தவிர இன்னும் சில அயல் நாட்டாரும் அந்த மகாசபையில் ஒரு பக்கத்தில் காணப்பட்டார்கள். அவர்கள் நடை உடையினால் அயல்நாட்டாராகத் தோன்றினாலும், அவர்கள் பேசுகிற பாஷை தமிழாகத்தான் தெரிந்தது. சற்றே அவர்களை உற்றுப் பார்த்தோமானால், ஏற்கெனவே பார்த்த முகங்கள் என்பது நினைவு வரும். ஆம்; செண்பகத் தீவிலிருந்து வந்த கப்பலில் இரத்தின வியாபாரி தேவசேனனுடன் வந்தவர்கள் தான் இவர்கள். அச்சபையில் நடக்கவிருந்த விசாரணையின் முடிவாகத் தங்கள் மகாராஜாவுக்கு என்ன கதி நேரப் போகிறதோ என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அவர்களுக்கிருப்பது இயற்கையேயல்லவா?

சபை முழுவதிலும் ஆங்காங்கு பணியாட்களும் பணி பெண்களும் நின்று வெண்சாமரங்களினால் விசிறியும் சந்தனம் தாம்பூலம் முதலியவை வழங்கியும் சபையினருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட நேரம் ஆகியும் சக்கரவர்த்தி வராதிருக்கவே சபையில், "ஏன் சக்கரவர்த்தி இன்னும் வரவில்லை?" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் சப்தம் எழுந்தது. இவ்விதம் பல குரல்கள் சேர்ந்து பேரிரைச்சலாகிவிடுமோ என்று தோன்றிய சமயத்தில், சிறுத்தொண்டர் எழுந்திருந்து, கையமர்த்தி, "சபையோர்களே! சக்கரவர்த்தி சபைக்கு வருவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என்று செய்தி வந்திருக்கிறது. அதுவரையில், இந்தச் சபை கூடியதின் நோக்கம் இன்னதென்பதை உங்களுக்கு எடுத்து உரைக்கும்படி எனக்குச் சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார்!" என்று இடி முழக்கம் போன்ற குரலில் கூறியதும், சபையில் நிசப்தம் உண்டாயிற்று. எல்லாரும் பயபக்தியுடன் சிறுத்தொண்டருடைய முகத்தையே பார்க்கலானார்கள்.

சிறுத்தொண்டர் மேலும் கூறினார்:- "வீர சொர்க்கமடைந்த என் அருமைத் தோழரான பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வர் விக்கிரம சோழர், இன்று உங்கள் முன்னால் குற்ற விசாரணைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார். சக்கரவர்த்தியின் தேசப்பிரஷ்டத் தண்டனையை மீறி அவர் இந்நாட்டுக்குள் பிரவேசித்துக் கையும் மெய்யுமாய்க் கண்டுபிடிக்கவும் பட்டார். அவர் இவ்விதம் சக்கரவர்த்தியின் ஆக்ஞையை மீறி வந்ததின் காரண காரியங்களை விசாரணை செய்து, உங்கள் எல்லாருடைய அபிப்பிராயத்தையும் கேட்டு, சர்வ சம்மதமான நியாயத் தீர்ப்புக் கூறவேண்டுமென்பது சக்கரவர்த்தியின் விருப்பம். இதற்காகத்தான் இந்தச் சபை கூடியிருக்கிறது. நீங்கள் அபிப்பிராயம் கூறுவதற்கு முன்னால் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். விக்கிரம சோழர் சக்கரவர்த்தியின் கட்டளையை மீறியது குற்றமானாலும், அதற்கு அவர் மட்டும் பொறுப்பாளியல்ல. இதோ என் பக்கத்தில் வீற்றிருக்கும் என் தோழர் அதற்குப் பெரும்பாலும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கிறார்!" என்று சிறுத்தொண்டர் கூறியதும் சபையில் எல்லாருடைய கவனமும் சிவனடியார் மேல் திரும்பியது. அவருடைய முகத்தில் குடிகொண்டிருந்த தேஜஸைப் பார்த்து அனைவரும் பிரமித்தார்கள். "இவர் யார் இந்தப் பெரியவர்? அப்பர் பெருமானோ இறைவன் பதமடைந்துவிட்டார். சம்பந்த சுவாமியோ இளம் பிராயத்தவர். மஹான் சிறுத்தொண்டரோ இங்கேயே இருக்கிறார். வேறு யாராக இருக்கும்? விக்கிரம சோழர் விஷயத்தில் இவர் பொறுப்பு ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன?" என்று எண்ணமிட்டனர்.

பிறகு சிறுத்தொண்டர், பத்து வருஷங்களுக்கு முன் பார்த்திப மகாராஜா போர்க்கோலம் பூண்டு உறையூரிலிருந்து கிளம்பியதையும் வெண்ணாற்றங்கரையில் நடந்த பயங்கர யுத்தத்தையும் சபையோருக்கு ஞாபகப்படுத்தினார். பார்த்திப மகாராஜாவுடன் கிளம்பிய பத்தாயிரம் பேரில் ஒருவர்கூடத் திரும்பாமல் போர்க்களத்திலேயே மடிந்ததைச் சொன்னபோது சபையோர் புளகாங்கிதம் அடைந்தனர். அந்தப் புரட்டாசிப் பௌர்ணமியன்றிரவு, இந்தச் சிவனடியார் போர்க்களத்தில் வீரமரணமடைந்த தீர மன்னரின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று அவருடைய உடலைத் தேடியலைந்ததை எடுத்துக் கூறினார். கடைசியில் இவர் தம் முயற்சியில் வெற்றியடைந்ததையும், பார்த்திப மகாராஜாவின் உடலில் இன்னும் உயிர் இருந்ததையும், மகாராஜா சிவனடியாரிடம், "என் மகனை வீர சுதந்திரப் புருஷனாக வளர்க்க வேண்டும்" என்று வரங்கேட்டதையும்; சிவனடியார் அவ்விதமே வரங்கொடுத்ததையும் எடுத்துச் சொன்னபோது, அந்தப் பெரிய சபையின் நாலா பக்கங்களிலும் `ஆஹா'காரம் உண்டானதுடன், அநேகருடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிற்று.

பின்னர், சிவனடியார் உறையூருக்கு வந்து அருள்மொழித் தேவியைப் பார்த்துத் தேற்றியது முதல், விக்கிரமன் சுதந்திரக் கொடியை நாட்ட முயன்றது, தேசப் பிரஷ்டத் தண்டனைக்குள்ளானது, செண்பகத் தீவின் அரசானது, தாயாரையும் தாய் நாட்டையும் பார்க்க வேண்டுமென்ற ஆசையினால் திரும்பி வந்தது, வழியில் அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகள் எல்லாவற்றையும் சிறுத்தொண்டர் விவரமாகக் கூறினார். இதற்கிடையில், நீலகேசி `மகா கபால பைரவர்' என்ற வேஷத்தில் செய்த சூழ்ச்சிகளையும், ராணி அருள்மொழித் தேவியை அவன் கொண்டுபோய் மலைக் குகையில் வைத்திருந்ததையும், சிவனடியாரின் தளரா முயற்சியினால் அவனுடைய சூழ்ச்சிகள் வெளிப்பட்டதையும் சென்ற அமாவாசை இரவில் நடந்த சம்பவங்களையும் விக்கிரமன் தன் உயிரைப்பொருட்படுத்தாமல் சிவனடியாரைக் காப்பாற்ற முன்வந்ததையும் விவரித்தார். இவ்வளவையும் சொல்லிவிட்டுக் கடைசியாக, "சபையோர்களே, உங்களையெல்லாம் ஒன்று கேட்க விரும்புகிறேன். என் தோழர் சிவனடியார் போர்க்களத்தில் பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக - நீங்கள் அபிப்பிராயப்படுகிறீர்களா? பார்த்திப மகாராஜாவின் குமாரர் விக்கிரமர் வீர சுதந்திரப் புருஷராக வளர்க்கப்பட்டிருக்கிறாரா?" என்று கேட்டார்.

அப்போது சபையில் ஏகமனதாக, "ஆம், ஆம்" என்ற மகத்தான பெருங்கோஷம் எழுந்து அந்த விசாலமான மண்டபம் முழுவதும் வியாபித்து, வெளியிலும் சென்று முழங்கியது. கோஷம் அடங்கியதும், சிறுதொண்டர் கையமர்த்தி, "இன்னும் ஒரு முக்கிய விஷயம் உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். போர்க்களத்தில் பார்த்திப மகாராஜாவுக்கு இந்த மகா புருஷர் வாக்குறுதி கொடுத்த பிறகு மகாராஜா இவரைப் பார்த்து, `சுவாமி! தாங்கள் யார்?' என்று கேட்டார். அப்போது இந்த வேஷதாரி, தமது பொய் ஜடாமகுடத்தை எடுத்துவிட்டு உண்மை ரூபத்துடன் தோன்றினார். இவர் யார் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு பார்த்திப மகாராஜா தம் மனோரதம் நிறைவேறும் என்ற பூரண நம்பிக்கை பெற்று நிம்மதியாக வீர சொர்க்கம் அடைந்தார்!" என்று கூறியபோது சபையிலே ஏற்பட்ட பரபரப்பைச் சொல்லி முடியாது.

மீண்டும் சிறுத்தொண்டர், "இந்த வேஷதாரியின் உண்மை வடிவத்தைப் பார்க்க நீங்கள் எல்லாருமே ஆவலாகயிருக்கிறீர்கள் இதோ பாருங்கள்!" என்று கூறி, சிவனடியார் பக்கம் திரும்பி, ஒரு நொடியில் அவருடைய ஜடாமகுடத்தையும் தாடி மீசையையும் தமது இரண்டு கையினாலும் நீக்கிவிடவே, மாமல்ல நரசிம்ம சக்ரவர்த்தியின் தேஜோ மயமான கம்பீர முகத்தை எல்லாரும் கண்டார்கள். அப்போது அச்சபையில் மகத்தான அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. குந்தவி தன் ஆசனத்திலிருந்து எழுந்து, "அப்பா!" என்று கதறிக் கொண்டே ஓடிவந்து வேஷம் பாதி கலைந்து நின்ற சக்கரவர்த்தியின் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உணர்ச்சி மிகுதியினால் மூர்ச்சையாகி விழும் நிலைமையில் இருந்த அருள்மொழித் தேவியைச் சிறுத் தொண்டரின் பத்தினி தாங்கிக் கொண்டு ஆசுவாசம் செய்தாள். விக்கிரமன் கண்ணிமைக்காமல், பார்த்தவண்ணம் நின்றான். அந்தப் பரபரப்பில் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் பொன்னன், வள்ளியின் கையைப்பிடித்துக் குலுக்கினான்.

"தர்ம ராஜாதி ராஜ மாமல்ல நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தி வாழ்க" என்று ஒரு பெரிய கோஷம் எழுந்தது. "ஜெய விஜயீ பவ!" என்று சபையினர் அனைவரும் ஒரே குரலில் முழங்கினார்கள். சிறிது நேரம் இத்தகைய கோஷங்கள் முழங்கிக்கொண்டிருந்த பிறகு பொன்னனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, திடீரென்று உரத்த குரலில், "விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!" என்று கோஷித்தான். அதையும் சபையோர் அங்கீகரித்து, "ஜய விஜயீ பவ!" என்று முழங்கினார்கள்.

அந்தக் குழப்பமும் கிளர்ச்சியும் அடங்கியபோது இத்தனை நேரமும் சிவனடியார் அமர்ந்திருந்த இடத்தில் அவர் இல்லை என்பதைச் சபையோர் கண்டார்கள். சிறுத்தொண்டர், "சபையோர்களே! நீங்கள் கலைந்து போவதற்கு முன்னால் இன்னும் ஒரே ஒரு காரியம் பாக்கியிருக்கிறது. மாமல்லச் சக்கரவர்த்தி தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்து விக்கிரம சோழரின் குற்றத்தைப் பற்றி முடிவான தீர்ப்புக் கூறுவார்!" என்றார்.

சிறிது நேரத்துக்கெல்லாம் நரசிம்மச் சக்கரவர்த்தி தமக்குரிய ஆடை ஆபரணங்களைத் தரித்தவராய்க் கம்பீரமாக அச்சபைக்குள் பிரவேசித்தார். அவர் சபைக்குள் பிரவேசித்த போதும், சபையில் நடுநாயகமாக இருந்த தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்தபோதும், "ஜய விஜயீ பவ!" என்னும் முழக்கம் வானளாவ எழுந்தது. சத்தம் அடங்கியதும், சக்கரவர்த்தி எழுந்து, "விக்கிரம சோழரைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் இன்னதென்பதைத் தெரிந்து கொண்டேன். தேசப் பிரஷ்ட தண்டனைக்குள்ளானவர்கள் திரும்பி வந்தால், அதற்குத் தண்டனை சிரசாக்கினையாகும். எனவே, இதோ புராதனமான சோழ மன்னர்களின் மணிமகுடத்தை விக்கிரம சோழர் இனிமேல் தனியாகவே தலைமேல் தாங்க வேண்டுமென்னும் சிரசாக்கினையை விதிக்கிறேன்! இன்று முதல் சோழ நாடு சுதந்திர ராஜ்யமாகிவிட்டது. இதன் பாரம் முழுவதையும் விக்கிரம சோழரும் அவருடைய சந்ததிகளும் தான் இனிமேல் தாங்கியாக வேண்டும்!" என்று கூறியபோது, சபையிலே உண்டான கோலாகல ஆரவாரத்தை வர்ணிப்பதற்குப் புராண இதிகாசங்களில் சொன்னது போல், ஆயிரம் நாவுள்ள ஆதிசேஷன்தான் வந்தாக வேண்டும்!

கனவுநிறைவேறியது.40
 நல்ல சுபயோக, சுப லக்கினத்தில் விக்கிரமன் சோழ நாட்டின் சுதந்திர அரசனாக முடிசூட்டப்பட்டான். அவ்விதமே சுப முகூர்த்தத்தில் விக்கிரமனுக்கும் குந்தவிக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. திருமணத்துக்குப் பிறகு விக்கிரமன் நரசிம்மப் பல்லவரிடம் சென்று அவருடைய ஆசியைக் கோரியபோது, சக்கரவர்த்தி, "குழந்தாய்! எக்காலத்திலும் `பார்த்திப மகாராஜாவின் புதல்வன்' என்னும் பெருமைக்குப் பங்கமில்லாமல் நடந்துகொள்வாயாக, அதற்கு வேண்டிய மனோதிடத்தைப் பகவான் உனக்கு அருளட்டும்" என்று ஆசீர்வதித்தார். அவ்விதமே குந்தவி அருள்மொழித் தேவியை நமஸ்கரித்தபோது, "அம்மா! உனக்குச் சகல சௌபாக்கியங்களும் உண்டாகட்டும். `நரசிம்ம சக்கரவர்த்தியின் திருமகள், பார்த்திப மகாராஜாவின் மருமகள்' என்னும் பெருமைக்கு உரியவளாக எப்போதும் நடந்துகொள்" என்று ஆசி கூறினாள்.

விக்கிரமனும், குந்தவியும் உறையூர் சிங்காதனத்தில் வீற்றிருந்த போது, சோழ வளநாடு எல்லாத் துறைகளிலும் செழித்தோங்கியது. மாதம் மும்மாரி பொழிந்து நிலங்கள் மூன்று போகம் விளைந்தன. கிராமந்தோறும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டன. சிற்பம், சித்திரம் முதலிய கலைகள் சிறந்தோங்கின. திருமகளும் கலைமகளும் காவேரி நதிக்கரையில் கைகோத்துக் குலாவினார்கள்.

ஆனாலும், பார்த்திப மகாராஜாவின் கனவு விக்கிரமனுடைய காலத்தில் பூரணமாக நிறைவேறவில்லை. சூரியனுக்குப் பக்கத்தில் மற்றக் கிரகங்களெல்லாம் ஒளி மங்கிவிடுவதுபோல் காஞ்சி நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்தியின் மகிமையானது விக்கிரமனுடைய புகழ் ஓங்குவதற்குப் பெரிய தடையாயிருந்தது. பார்த்திப மகாராஜாவின் வீரமரணமும், விக்கிரமனுடைய வீரச் செயல்களும் கூட மாமல்லரின் புகழ் மேலும் வளர்வதற்கே காரணமாயின.

நரசிம்மவர்மருக்குப் பின்னரும் வெகுகாலம் பல்லவர் பெருமை குன்றவில்லை. சோழநாடு ஒரு குறுகிய எல்லைக்குள் கட்டுப்பட்டுத்தான் கிடந்தது. ஆனால், விக்கிரமனும் அவனுடைய சந்ததியர்களும் பார்த்திப மகாராஜாவின் கனவை மட்டும் மறக்கவில்லை. வழிவழியாக அவரவர்களுடைய புதல்வர்களுக்குப் பார்த்திப மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றிச் சொல்லி, உறையூர் சித்திர மண்டபத்தில் தீட்டியிருந்த பார்த்திப மன்னரின் கனவுச் சித்திரங்களைக் காண்பித்து வந்தார்கள்.

சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சோழ நாட்டின் வீரசிம்மாசனம் ஏறிய இராஜராஜ சோழன், அவனுடைய புதல்வனான இராஜேந்திர சோழன் - இவர்களுடைய காலத்திலேதான் பல்லவர் பெருமை குன்றிச் சோழ நாடு மகோன்னதமடையத் தொடங்கியது. சோழநாட்டு வீரர்கள் வடக்கே கங்கை வரையிலும், தெற்கே இலங்கை வரையிலும், கிழக்கே கடல்களுக்கு அப்பாலுள்ள கடாரம் வரையிலும் சென்று வீரப்போர் புரிந்து புலிக்கொடியை வானளாவப் பறக்கவிட்டார்கள். புலிக்கொடி தாங்கிய கப்பல்களில் சோழநாட்டு வீரர்கள் கடல்களில் நெடுந்தூரம் பிரயாணம் செய்து சாவகம், புஷ்பகம் முதலிய தீவுகளைக் கைப்பற்றி சோழர்களின் ஆதிக்கத்துக்கு உட்படுத்தினார்கள். சோழவள நாடெங்கும் அற்புதமான கோயில்களும், கோபுரங்களும் சோழ மன்னர்களின் வீரப் புகழைபோல் வானளாவி எழுந்து, அக்காலத்திய சோழ சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்துக்கு அழியாத ஞாபகச் சின்னங்களாக இன்றைக்கும் விளங்குகின்றன. இவ்வாறு, பார்த்திப சோழன் கண்ட கனவு, அவன் வீர சொர்க்கம் அடைந்து முந்நூறு வருஷங்களுக்குப் பிறகு பரிபூரணமாக நிறைவேறியது.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies