பலிபீடம்.36
காட்டாற்றங்கரையோடு மேற்கு நோக்கி இரண்டு நாழிகை வழி தூரம் போனதும் குள்ளன் தென்புறமாகத் திரும்பி அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றான். காட்டைத் தாண்டியதும் அப்பால் ஒரு பெரிய மேடு இருந்தது. அந்த மேட்டின் மேல் குள்ளன் வெகு லாவகமாக ஏறினான். குதிரைகள் ஏறுவதற்குக் கொஞ்சம் சிரமப்பட்டன. மேட்டின் மேல் ஏறியதும், அது ஒரு ஏரிக்கரை என்று தெரிந்தது. “அதோ!” என்று குள்ளன் சுட்டிக் காட்டிய இடத்தை விக்கிரமனும் பொன்னனும் நோக்கினார்கள். மொட்டை மொட்டையான மலைக்குன்றுகளும், அவற்றின் அடிவாரத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த குட்டையான மரங்களும் நூற்றுக்கணக்கான தீவர்த்திகளின் வெளிச்சத்தில் அரைகுறையாகத் தெரிந்தன. அந்த மலையடிவாரக் காட்டில் நடமாடிக் கொண்டிருந்த உருவங்கள் மனிதர்களாய்த்தானிருக்க வேண்டுமென்றாலும் தூரத்திலிருந்து பார்க்கும்போது பேய் பிசாசுகள் தான் நடமாடுகின்றனவோ என்று எண்ணும்படியிருந்தது. பயங்கரத்தை அதிகமாக்குவதற்கு அந்த இடத்திலிருந்து தாரை தப்பட்டைகளின் முழக்கம், உடுக்கு அடிக்கும் சத்தம் - இவையெல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தன.
விக்கிரமன், பொன்னன் இருவருக்குமே உள்ளுக்குள் திகிலாய்த்தானிருந்தது. ஆனாலும் அவர்கள் திகிலை வெளிக்குக் காட்டாமல் குள்ளனைப் பின்பற்றி ஏரிக்கரையோடு சென்றார்கள். குள்ளனுடைய நடை வேகம் இப்போது இன்னும் அதிகமாயிற்று. அவன் ஏரிக் கரையோடு சற்றுத் தூரம் போய் ஜலம் வறண்டிருந்த இடத்தில் இறங்கி, குறுக்கே ஏரியைக் கடந்து செல்லலானான். அவனைப் பின் தொடர்ந்து விக்கிரமனும் பொன்னனும் குதிரைகளைச் செலுத்தினார்கள். குதிரைகளும் பீதி அடைந்திருந்தன என்பது அவற்றின் உடல் நடுக்கத்திலிருந்து தெரிய வந்தது.
இன்னொரு கால் நாழிகைக்கெல்லாம் அவர்கள் குன்றின் அடிவாரத்துக் காட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே குதிரைகள் நடுக்கம் அதிகமானபடியால் விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீதிருந்து இறங்கி அவற்றை மரத்தில் கட்டினார்கள். பிறகு காட்டுக்குள் பிரவேசித்தார்கள்.
தீவர்த்திகளின் வெளிச்சத்தில் ஆங்காங்கே ஜனங்கள் ஆவேசம் வந்ததுபோல் ஆடுவதையும் சிலர் மஞ்சள் வஸ்திரம் தரித்துக் கண் மூடித் தியானத்தில் இருப்பதையும், சிலர் அடுப்பு மூட்டிப் பொங்கல் வைப்பதையும், இன்னும் சிலர் கத்திகளைப் பாறைகளில் தீட்டிக் கொண்டிருப்பதையும், சிலர் உடுக்கு அடிப்பதையும் பார்த்துக் கொண்டு போனார்கள். திடீரென்று மரங்கள் இல்லாத வெட்டவெளி தென்பட்டது. அந்த வெட்டவெளியில் வலது புறத்தில் ஒரு மொட்டைக் குன்று நின்றது. அதில் பயங்கரமான பெரிய காளியின் உருவம் செதுக்கப்பட்டு, அதன்மேல் பளபளப்பான வர்ணங்கள் பூசப்பட்டிருந்தன. காளியின் கண்கள் உருட்டி விழித்துப் பார்ப்பது போலவே தோற்றமளித்தன. அந்த உருவத்துக்குப் பக்கத்தில் சிலர் கும்பலாக நின்றார்கள். அவர்களுக்கு நடு மத்தியில் எல்லாரையும் விட உயர்ந்த ஆகிருதியுடனும், தலையில் செம்பட்டை மயிருடனும், கழுத்தில் கபால மாலையுடனும், நெற்றியில் செஞ்சந்தனமும் குங்குமமும் அப்பிக் கொண்டு, கபால பைரவர் நின்றார். அவருக்குப் பின்னால் ஒருவன் நின்று உடுக்கை அடித்துக் கொண்டிருந்தான். கபால பைரவருடைய கண்கள் அப்போது மூடியிருந்தன. அவருடைய வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவருடம்பு லேசாக முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தது.
மகாக் கபால பைரவர் நின்ற குன்றின் அடிவாரத்துக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு சிறு பாறை இருந்தது. இயற்கையாகவே அது பலி பீடம்போல் அமைந்திருந்தது. அந்தப் பலி பீடத்தின்மேல் சிவனடியார் கையும் காலும் உடம்பும் கயிறுகளால் கட்டப்பட்டுக் கிடந்தார். அவருடைய கண்கள் நன்றாகத் திறந்திருந்தன. அங்குமிங்கும் அவருடைய கூரிய கண்கள் சுழன்று சுழன்று பார்த்துக் கொண்டிருந்தன.
பலி பீடத்துக்குப் பக்கத்தில் ஒரு ராட்சத உருவம் கையிலே பிரம்மாண்டமான கத்தியுடன் ஆயத்தமாய் நின்றது. மகா கபால பைரவர் கண்ணைத் திறந்து பார்த்து ஆக்ஞை இடவேண்டியதுதான். உடனே சிவனடியாரின் கழுத்தில் கத்தி விழுந்துவிடச் சித்தமாயிருந்தது! மேலே விவரித்த காட்சியையெல்லாம் விக்கிரமன் ஒரு நொடிப் பொழுதில் பார்த்துக் கொண்டான். பின்னர், ஒரு கணங்கூட அவன் தாமதிக்கவில்லை. கையில் கத்தியை எடுத்து வீசிக் கொண்டு ஒரே பாய்ச்சலில் பலி பீடத்துக்கருகில் சென்றான். அந்த ராட்சத உருவத்தின் கையிலிருந்த கத்தியைத் தன் கத்தியினால் ஓங்கி அடிக்கவும், அது தூரத்தில் போய் விழுந்தது. உடனே, சிவனடியாரின் பக்கத்திலே வந்து நின்று கொண்டான். தன்னைப் பின் தொடர்ந்து வந்திருந்த பொன்னனைப் பார்த்து, “பொன்னா! ஏன் நிற்கிறாய்? கட்டுக்களை உடனே அவிழ்த்து விடு!” என்றான்.
இவ்வளவும் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டது. சுற்றிலும் நின்றவர்கள் எல்லோரும், “ஹா! ஹா!” என்று கூச்சலிட்டதைக் கேட்டு கபால பைரவர் கண்விழித்துப் பார்த்தார். நிலைமை இன்னதென்று தெரிந்து கொண்டார். நிதானமாக நடந்து பலிபீடத்துக்கு அருகில் வந்து விக்கிரமனை உற்றுப் பார்த்தார்.
“ஹா ஹா ஹா!” என்று அவர் நகைத்த ஒலி குன்றுகளும் பாறைகளும் அடர்ந்த அந்த வனாந்திரப் பிரதேசமெல்லாம் பரவி எதிரொலி செய்தது. அதைக் கேட்பவர்களுக்கெல்லாம் மயிர்க் கூச்சு உண்டாயிற்று. இதற்குள் என்னவோ மிகவும் நடக்கிறது என்று அறிந்து நாலாபக்கத்திலிருந்தும் ஜனங்கள் ஓடிவந்து பலி பீடத்தைச் சூழ ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட மகாக் கபால பைரவர் தமது ஒற்றைக் கையைத் தூக்கி, “ஹ_ம்!” என்று கர்ஜனை செய்தார். அவ்வளவுதான் எல்லோரும் சட்டென்று விலகிச் சென்று சற்று தூரத்திலேயே நின்றார்கள். கீழே விழுந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்த ராட்சதனும் அந்த ஹ_ங்காரத்துக்குக் கட்டுபட்டுத் தூரத்தில் நின்றான். பொன்னனும் நின்ற இடத்திலேயே செயலிழந்து நின்றான்.
மகாக் கபால பைரவர் விக்கிரமனை உற்றுப் பார்த்த வண்ணம் கூறினார் :- “பிள்ளாய்! நீ பார்த்திப சோழனின் மகன் விக்கிரமன் அல்லவா? தக்க சமயத்தில் நீ வந்து சேர்வாய் என்று காளிமாதா அருளியது உண்மையாயிற்று, மாதாவின் மகிமையே மகிமை!” காந்த சக்தி பொருந்திய அவருடைய சிவந்த கண்களின் பார்வையிலிருந்து விலகிக் கொள்ள முடியாதவனாய் விக்கிரமன் பிரமித்து நின்றான். “பிள்ளாய்! உன்னைத் தேடிக் கொண்டு நான் மாமல்லபுரத்துக்கு வந்தேன். அதற்குள் அந்தப் பித்தன் மாரப்பன் தலையிட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட்டான். ஆனாலும் இன்றிரவு நீ இங்கு எப்படியும் வருவாய் என்று எதிர்பார்த்தேன்!”
மந்திரத்தினால் கட்டுண்ட நாக சர்ப்பத்தின் நிலைமையிலிருந்த விக்கிரமன், விம்முகின்ற குரலில், “நீர் யார்? எதற்காக என்னை எதிர்பார்த்தீர்?” என்றான். “எதற்காகவா? இன்றிரவு இந்தத் தக்ஷிண பாரத தேசத்தில் காளிமாதாவின் சாம்ராஜ்யம் ஸ்தாபிதமாகப் போகிறது. இந்த சாம்ராஜ்யத்திற்கு உனக்கு இளவரசுப் பட்டம் கட்டவேண்டுமென்று மாதாவின் கட்டளை!” என்றார் கபால பைரவர்.
அப்போது எங்கிருந்தோ ‘க்ளுக்’ என்று பரிகாசச் சிரிப்பின் ஒலி எழுந்தது. கபால பைரவரும் விக்கிரமனும் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் சிரித்தது யார் என்பதைக் கண்டுபிடிக்க யாதொரு வழியும் தென்படவில்லை.
விக்கிரமனை அத்தனை நேரமும் கட்டியிருந்த மந்திர பாசமானது மேற்படி சிரிப்பின் ஒலியினால் அறுபட்டது. அவன் சிவனடியாரை ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பிக் கபால பைரவரை நேருக்கு நேர் நோக்கினான்: “நீர் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. எனக்கு இளவரசுப் பட்டம் கட்டப் போவதாகச் சொல்கிறீர். அது உண்மையானால், முதலில் நான் செய்யப்போகும் காரியத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம். இதோ இந்தப் பலிபீடத்தில் கட்டுண்டு கிடக்கும் பெரியார் எங்கள் குலத்தின் நண்பர். எனக்கும் என் அன்னைக்கும் எவ்வளவோ பரோபகாரம் செய்திருக்கிறார். அவரை விடுதலை செய்வது என் கடமை. என் கையில் கத்தியும் என் உடம்பில் உயிரும் இருக்கும் வரையில் அவரைப் பலியிடுவதற்கு நான் விடமாட்டேன்!” என்று சொல்லி விக்கிரமன் பலிபீடத்தை அணுகி, சிவனடியாரின் கட்டுக்களை வெட்டிவிடயத்தனித்தான்.
“நில்...!” என்று பெரிய கர்ஜனை செய்தார் கபால பைரவர். அஞ்சா நெஞ்சங் கொண்ட விக்கிரமனைக்கூட அந்தக் கர்ஜனை சிறிது கலங்கச் செய்துவிட்டது. அவன் துணுக்குற்று ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். சிவனடியாரின் கட்டுக்களை வெட்டுவதற்காக அவன் நீட்டிய கத்தி நீட்டியபடியே இருந்தது.
கபால பைரவர் மறுபடியும் உரத்த குரலில், “பிள்ளாய் விக்கிரமா! இந்தப் போலிச் சிவனடியார் - இந்த வஞ்சக வேஷதாரி - இந்தப் பொய் ஜடாமகுடதாரி யார் என்று அறிந்தால், இவ்விதம் சொல்லமாட்டாய்! இவரைக் காப்பாற்றுவதற்கு இவ்வளவு முனைந்து நிற்கமாட்டாய்!” என்றார். அவருடைய குரலில் தொனித்த ஆத்திரமும் அழுத்தமும் விக்கிரமனைத் திகைப்படையச் செய்தன. சிவனடியார் பல்லவ ராஜ்யத்தின் ஒற்றர் தலைவன் என்று தான் முன்னமே சந்தேகித்ததும் அவனுக்கு நினைவு வந்தது. கபால பைரவர் மீண்டும், “இந்த வேஷதாரியையே கேள், “நீ யார்?’ என்று; தைரியமிருந்தால் சொல்லட்டும்!” என்று அடித் தொண்டையினால் கர்ஜனை செய்தார்.
விக்கிரமன் சிவனடியாரைப் பார்த்தான். அவருடைய முகத்தில் புன்னகை தவழ்வதைக் கண்டான். அதே சமயத்தில், “விக்கிரமா! கபால மாலையணிந்த இந்த வஞ்சக வேஷதாரி யார் என்று முதலில் கேள்; தைரியமிருந்தால் சொல்லட்டும்!” என்று இடிமுழக்கம் போன்ற ஒரு குரல் கேட்டது. இவ்வாறு கேட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்த பாறையின் மறைவிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. அங்கிருந்தவர்கள் அத்தனை பேருடைய கண்களும் அந்த உருவத்தின் மேல் விழுந்தன. தீவர்த்தி வெளிச்சம் அந்த முகத்தில் விழுந்தபோது, “ஆ!” என்ற வியப்பொலி ஏககாலத்தில் அநேகருடைய வாயிலிருந்து எழுந்தது. விபூதி ருத்திராட்சமணிந்து, முகத்தில் ஞான ஒளி வீசித் தோன்றிய அப்பெரியாரைப் பார்த்ததும் விக்கிரமனுக்கு என்றுமில்லாத பயபக்தி உண்டாயிற்று. வந்தவர் வேறு யாருமில்லை; பல்லவ சாம்ராஜ்யத்தின் பழைய சேனாதிபதியும், வாதாபி கொண்ட மகாவீரருமான சிறுத் தொண்டர்தான்.
நீலகேசி.37
பாறை மறைவிலிருந்து சிறுத் தொண்டர் வெளிப்பட்ட சில வினாடிகளுக்கெல்லாம் இன்னும் சில அதிசயங்கள் அங்கே நிகழ்ந்தன. பாறைகளின் பின்னாலிருந்தும் மரங்களின் மறைவிலிருந்தும், இன்னும் எங்கிருந்துதான் வந்தார்கள் என்று சொல்லமுடியாதபடியும், இந்திர ஜாலத்தினால் நிகழ்வதுபோல், திடீர் திடீரென்று ஆயுத பாணிகளான போர் வீரர்கள் அங்கே தோன்றிக் கொண்டிருந்தார்கள். இதைவிடப் பெரிய மகேந்திர ஜாலவித்தை ஒன்றும் அங்கே நடந்தது. பலி பீடத்தில் கட்டுண்டு கிடந்த சிவனடியார் எப்படியோ திடீரென்று அக்கட்டுக்களிலிருந்து விடுபட்டு எழுந்து பலிபீடத்திலிருந்து கீழே குதித்தார்.
இதற்கிடையில், சிறுத்தொண்டர் நேரே மகா கபால பைரவர் நின்ற இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், கபால பைரவரின் முகத்தில் தோன்றிய பீதி நம்ப முடியாதாயிருந்தது. சிறுத்தொண்டர் அருகில் நெருங்க நெருங்க, அவருடைய பீதி அதிகமாயிற்று. அவருடைய உடம்பெல்லாம் நடுங்கிற்று. இன்னும் சிறுத்தொண்டர் அவருடைய சமீபத்தில் வந்து நேருக்கு நேராக முகத்தை ஏறிட்டுப் பார்த்து, “ஓ கபாலிக வேஷதாரியே! மகா காளியின் சந்நிதியில் நீ யார் என்று உண்மையைச் சொல்!” என்று கேட்டபோது கபால பைரவர் இரண்டடி பின்வாங்கி, பிறகு நடக்கவும் நிற்கவும் சக்தியற்றவராய்த் தள்ளாடித் தொப்பென்று கீழே விழுந்தார்.
அப்போது அங்கே சூழ்ந்திருந்த காளி உபாசகர்களிடையில் “ஹாஹாகாரம்” உண்டாயிற்று. வெறியில், மூழ்கிக் கிடந்த அந்தக் கபாலிகர்களால் என்ன விபரீதம் நேரிடுமோ என்று விக்கிரமன் கூடச் சிறிது துணுக்கமடைந்தான். பொன்னனோ, வியப்பு, பயபக்தி முதலிய பலவித உணர்ச்சிகள் பொங்க, தன்னை மறந்து செயலற்று நின்றான். கபால பைரவர் கீழே விழுந்து நாலாபுறமிருந்தும் கபாலிகர்கள் ஓடிவரத் தொடங்கிய சமயத்தில், சிறுத்தொண்டர் சட்டென்று பலிபீடத்தின் மீது ஏறிக் கொண்டார்.
“மகா ஜனங்களே! காளி மாதாவின் பக்தர்களே! நெருங்கி வாருங்கள். ‘மகா கபால பைரவர்’ என்று பொய்ப் பெயருடன் உங்களையெல்லாம் இத்தனை காலமும் ஏமாற்றி வஞ்சித்து வந்த ஒற்றைக் கை மனிதனைப் பற்றிய உண்மையைச் சொல்லுகிறேன்” என்றார். சிறுத்தொண்டரைப் பார்த்தவுடனே கபால பைரவர் பீதியடைந்து கீழே விழுந்ததினால் ஏற்கனவே அக்கபாலிகர்களின் மனத்தில் குழப்பம் உண்டாயிருந்தது. எனவே, சிறுத்தொண்டர் மேற்கண்டவாறு சொன்னதும், அவர்கள் பலிபீடத்தைச் சூழ்ந்து கொண்டு, அவரையே பார்த்த வண்ணமாய் நின்றார்கள்.
சிறுத்தொண்டர் கம்பீரமான குரலில், காடு மலையெல்லாம் எதிரொலி செய்யுமாறு பேசினார். ஹகேளுங்கள்! நாம் பிறந்த இந்தத் தமிழகமானது மகா புண்ணியம் செய்த நாடு. எத்தனையோ மகா புருஷர்கள் இந்நாட்டிலே தோன்றி மெய்க் கடவுளின் இயல்பையும் அவரை அடையும் மார்க்கத்தையும் நமக்கு உபதேசித்திருக்கிறார்கள்.
திருமூல மகரிஷி, அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார். என்று அருளியிருக்கிறார். வைஷ்ணவப் பெரியார், அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இத்தகைய மகோன்னதமான தர்மங்களுக்கு உறைவிடமாயுள்ள நமது நாட்டில், கபாலிகம், பைரவம் என்னும் அநாசாரக் கோட்பாடுகளையும், நரபலி, மாமிசப்பட்சணம் முதலிய பயங்கர வழக்கங்களையும் சிலர் சிறிது காலமாகப் பரப்பி வருகிறார்கள். அன்பே உருவமான சிவபெருமானும் கருணையே வடிவமான பராசக்தியும் நரபலியை விரும்புகிறார்கள் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறியாமை? சிவபெருமான் கையில் மண்டை ஓட்டை வைத்திருப்பதாகவும், பராசக்தி கபால மாலையைத் தரிப்பதாகவும் புராணங்களில் சொல்லியிருப்பதெல்லாம் தத்வார்த்தங் கொண்டவை என்பதை நமது பெரியோர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவ்விதமிருக்க இப்புண்ணிய நாட்டில் நரபலியென்னும் கொடிய வழக்கம் பரவுவதற்குக் காரணம் என்ன? இந்தத் தீய பிரசாரத்தின் மூலவேர் எங்கே இருக்கிறது? - இதைக் கண்டுபிடிப்பதற்காக நானும் சற்றுமுன் இந்தப் பலி பீடத்தில் கட்டுண்டு கிடந்த என் தோழர் சிவனடியாரும் பெருமுயற்சி செய்து வந்தோம். கடைசியாக, அந்த முயற்சியில் என் தோழர் வெற்றி பெற்றார்; உண்மையைக் கண்டுபிடித்தார்....”
அப்போது ஒரு குரல், “அவர் யார்?” என்று கேட்டது. “அவர் எங்கே?” என்று பல குரல்கள் கூவின. உண்மை என்னவெனில், சிறுத்தொண்டர் திடீரென்று தோன்றியவுடன் ஏற்பட்ட குழப்பத்தில் சிவனடியார் ஒருவரும் கவனியாதபடி அந்த இடத்தைவிட்டு அகன்று விட்டார். சிறுத்தொண்டர் மேலும் சொல்வார்:- “இன்னும் இரண்டு நாளில் உறையூரில் நடக்கப்போகும் வைபவத்துக்கு நீங்கள் வந்தால், அந்த மகான் யார் என்பதை அறிவீர்கள். தற்போது இதோ இங்கே கீழே விழுந்து பயப்பிராந்தியினால் நடுங்கிக் கொண்டிருக்கும் கபால பைரவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். புகழ் பெற்ற நமது மகேந்திரச் சக்கரவர்த்தியின் காலத்தில் - இருபது வருஷத்துக்கு முன்னால் - வாதாபி அரசன் புலிகேசி நமது தமிழகத்தின் மேல் படையெடுத்து வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா...” என்று சிறுத்தொண்டர் கேட்டு நிறுத்தியபோது பல குரல்கள், “ ஞாபகம் இருக்கிறது!” என்று கூவின.
“அந்த ராட்சதப் புலிகேசியும் அவனுடைய படைகளும் நம்பிக்கைத் துரோகம் செய்து, இச்செந்தமிழ் நாட்டின் பட்டணங்களிலும் கிராமங்களிலும் செய்து விட்டுப் போன அட்டூழியங்களையெல்லாம் நீங்கள் மறந்திருக்க முடியாது. மகேந்திரச் சக்கரவர்த்தி காலமான பிற்பாடு தரும ராஜாதிராஜ நரசிம்மப் பல்லவரும், நானும் பெரும்படை கொண்டு புலிகேசியைப் பழிவாங்குவதற்காக வாதாபிக்குப் படையெடுத்துச் சென்றதையும் நீங்கள் அறிவீர்கள். வாதாபி நகரத்தின் முன்னால் நடந்த கொடிய யுத்தத்தில், நமது வீரத்தமிழ்ப்படைகள் புலிகேசியின் படைகளையெல்லாம் ஹதா ஹதம் செய்தன. யுத்தக் களத்துக்கு வந்த புலிகேசியின் படைகளிலே ஒருவராவது திரும்பிப் போக விடக்கூடாது என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருந்தார். ஆனால், அவருடைய கட்டளைக்கு மாறாக ஒரே ஒருவனை மட்டும் திரும்பிப் போகும்படி நான் அனுமதித்தேன். போரில் கையை இழந்து, “சரணாகதி” என்று காலில் விழுந்தவனைக் கொல்வதற்கு மனமில்லாமல் அவனை ஓடிப்போக அனுமதித்தேன். அந்த ஒற்றைக் கை மனிதன் தான் இதோ விழுந்து கிடக்கும் நீலகேசி. புலிகேசியை விடக்கொடிய அவனுடைய சகோதரன் இவன்!”
இதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்தில், “ஆகா!” “அப்படியா?” “என்ன மோசம்!” “என்ன வஞ்சகம்!” என்ற பலவிதமான பேச்சுக்கள் கலகலவென்று எழுந்தன. சிறிது பேச்சு அடங்கிய பிறகு சிறுத்தொண்டர் மீண்டும் கூறினார்: “இவனை நான் மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினேன் என்று தெரிவித்தபோது சக்கரவர்த்தி, ‘நீ பிசகு செய்தாய்; இதனால் ஏதாவது விபரீதம் விளையும்’ என்று சொன்னார். அது உண்மையாகிவிட்டது. இந்த நீலகேசி, கபாலிக வேஷத்தில் நமது புண்ணியத் தமிழகத்தில் வந்து இருந்துகொண்டு, பஞ்சத்தினால் ஜனங்களுடைய புத்தி கலங்கியிருந்த காலத்தில் கபாலிகத்தையும், நரபலியையும் பரப்பத் தொடங்கினான். எதற்காக? வீரத்தினால் ஜயிக்க முடியாத காரியத்தைச் சூழ்ச்சியினால் ஜயிக்கலாம் என்றுதான். கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களுக்கெல்லாம் புகழ் பரவியிருக்கும் நமது மாமல்லச் சக்கரவர்த்திக்கு விரோதமாக உங்களையெல்லாம் ஏவி விட்டுச் சதி செய்விக்கலாம் என்றுதான். இந்த உத்தேசத்துடனேயே இவன் கொல்லி மலையின் உச்சியிலுள்ள குகைகளில் ஆயிரக்கணக்கான கத்திகளையும் கோடாரிகளையும் சேர்த்து வைத்திருந்தான்....”
“ஆ!” என்று கபால பைரவனின் கோபக்குரல் கேட்டது. “ஆம்; அந்த ஆயுதங்களையெல்லாம் சக்கரவர்த்தியின் கட்டளையினால் இன்று அப்புறப்படுத்தியாகிவிட்டது. இன்னும் இந்தச் சோழநாட்டு இளவரசன் விக்கிரமனையும் தன்னுடைய துர்நோக்கத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள எண்ணியிருந்தான். அதற்காகவே பார்த்திப சோழ மகாராஜாவின் வீரபத்தினி அருள்மொழித் தேவியைச் சிறைப்படுத்தி வைத்திருந்தான்...” அப்போது மகாக் கபால பைரவர் தரையிலிருந்து சட்டென்று எழுந்து நின்று, “எல்லாம் பொய்; கட்டுக்கதை; இதற்கெல்லாம் சாட்சி எங்கே?” என்று கேட்டார். அப்போது ஒருவாறு அவருடைய பீதி தெளிந்ததாகக் காணப்பட்டது.
கபால பைரவர் “சாட்சி எங்கே?” என்று கேட்டதும் “இதோ நான் இருக்கிறேன், சாட்சி!” என்றது ஒரு குரல். திடீரென்று ஒரு வெள்வேல மரத்தின் மறைவிலிருந்து மாரப்ப பூபதி தோன்றினான். “ஆமாம், நான் சாட்சி சொல்கிறேன். இந்தக் கபால பைரவர் என்னும் நீலகேசி உண்மையில் கபாலிகன் அல்ல, வேஷதாரி. இவன் மகா ராஜாதிராஜ நரசிம்மப் பல்லவச் சக்கரவர்த்திக்கு எதிராகச் சதி செய்தான். அந்தச் சதியில் என்னையும் சேரும்படிச் சொன்னான். நான் மறுத்துவிட்டேன். அதன்மேல், இந்தத் தேசப்பிரஷ்ட இளவரசனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள விரும்பினான். சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காஞ்சிக்கு நான் அனுப்பிய இந்த இளவரசனை இவன் வழியில் மறித்து இங்கே கொண்டுவர ஏற்பாடு செய்தான்.”
அப்போது சிறுத்தொண்டர், “போதும், மாரப்பா! உன் சாட்சியம் போதும்!” என்றார். மாரப்பன் மனத்திற்குள் என்ன உத்தேசித்தானோ தெரியாது. தன்னைப் புறக்கணித்துவிட்டு மகாக் கபால பைரவர் விக்கிரமனுக்கு யுவராஜா பட்டம் கட்டுவதாகச் சொன்னதைக் கேட்டு அவனுக்கு ஆத்திரம் உண்டாகியிருக்கலாம். அல்லது சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்த குற்றம் தன் பேரில் ஏற்படாமலிருக்க வேண்டுமென்று எண்ணியிருக்கலாம்.
அவன் உத்தேசம் எதுவாயிருந்தாலும், அப்போது யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தை அவன் செய்தான். கையில் உருவிய கத்தியுடன் மகாக் கபால பைரவர் நின்ற இடத்தை அணுகினான். “சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்த இந்தச் சாம்ராஜ்யத் துரோகி இன்று காளிமாதாவுக்குப் பலியாகட்டும்!” என்று கூறிய வண்ணம் யாரும் தடுப்பதற்கு முன்னால் கத்தியை ஓங்கி வீசினான். அவ்வளவுதான்; கபால பைரவனின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் கீழே விழுந்தன.
எல்லாரும் பிரமித்துத் திகைத்து நிற்கும்போது மாரப்ப பூபதி பலி பீடத்தண்டை வந்து சிறுத்தொண்டருக்கு முன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, “பிரபோ! ஆத்திரத்தினால் செய்து விட்டேன். நான் செய்தது குற்றமானால் மன்னிக்க வேண்டும்” என்றான். அச்சமயம் யாரும் எதிர்பாராத இன்னொரு காரியம் நிகழ்ந்தது. கையில் கத்தியுடன் சித்திரகுப்தன் எங்கிருந்தோ வந்து பலி பீடத்தருகில் குதித்தான். படுத்திருந்த மாரப்பனுடைய கழுத்தில் அவன் வீசிய கத்தி விழுந்தது! அக்குள்ளனை உடனே சில பல்லவ வீரர்கள் பிடித்துக் கொண்டார்கள். குள்ளனோ ஹஹீஹீஹீ’ என்று சிரித்தான்.
சில நிமிஷ நேரத்தில் நடந்துவிட்ட இக்கோர சம்பவங்களைப் பார்த்த விக்கிரமன் மிகவும் அருவருப்பை அடைந்தான். யுத்தகளத்தில் நேருக்கு நேர் நின்று போரிட்டு ஒருவரையொரு வர் கொல்லுவது அவனுக்குச் சாதாரண சம்பவமானாலும், இம்மாதிரி எதிர்பாராத கொலைகள் அவனுக்கு வேதனையளித்தன. உடனே, அருகில் நின்ற பொன்னனைப் பார்த்து, “பொன்னா! நாம் போகலாம் வா!” என்றான். அப்பொழுதுதான் தன்னையும் பொன்னனையும் சூழ்ந்து நின்ற பல்லவ வீரர்களை அவன் கவனிக்க நேர்ந்தது.
அந்த வீரர்களின் தலைவன் தன் கையிலிருந்த ஓலையை விக்கிரமனிடம் காட்டினான். அதில் நரசிம்மச் சக்கரவர்த்தியின் முத்திரை பதித்த கட்டளை காணப்பட்டது. உறையூரிலிருந்து காஞ்சிக்கு வந்து கொண்டிருக்கும் சோழ இளவரசன் விக்கிரமனை வழியில் திருப்பி உறையூருக்கே மீண்டும் கொண்டு போகும் படிக்கும் விசாரணை உறையூரிலேயே நடைபெறுமென்றும் அவ்வோலையில் கண்டிருந்தது.
விக்கிரமன் அந்த ஓலையைப் பார்த்துவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தான். அவனுடைய கையானது உடைவாளின் மேல் சென்றது. அப்போது பொன்னன், “மகாராஜா! பதற வேண்டாம்!” என்றான். இதையெல்லாம் கவனித்த சிறுத்தொண்டர், பல்லவ வீரர் தலைவனைப் பார்த்து, “என்ன ஓலை?” என்று கேட்டார். வீரர் தலைவன் அவரிடம் கொண்டுபோய் ஓலையைக் கொடுத்தான். சிறுத் தொண்டர் அதைப் படித்து பார்த்துவிட்டு, “விக்கிரமா! நீ இந்தக் கட்டளையில் கண்டபடி உறையூருக்குப் போ! நானும் உன் தாயாரை அழைத்துக் கொண்டு உறையூருக்குத்தான் வரப் போகிறேன். இன்று நீ புரிந்த வீரச்செயலைச் சக்கரவர்த்தி அறியும்போது, அவருடைய மனம் மாறாமல் போகாது. அவசரப்பட்டு ஒன்றும் செய்ய வேண்டாம்!” என்றார்.
அடுத்த நிமிஷம் விக்கிரமனும் பொன்னனும் பல்லவ வீரர்கள் புடைசூழ அந்த மயான பூமியிலிருந்து கிளம்பிச் சென்றார்கள். அப்புறம் சிறிது நேரம் அங்கே கூடியிருந்தவர்களுக்கு மெய்க் கடவுளின் ஸ்வரூபத்தையும், நரபலியின் கொடுமையையும் பற்றிச் சிறுத்தொண்டர் விரித்துரைத்தார். அதன் பயனாக, அன்று பலியாக இருந்தவர்களும், பலி கொடுக்க வந்தவர்களும் மனம் மாறி, தங்களைத் தடுத்தாட்கொண்ட மகானைப் புகழ்ந்து கொண்டே தத்தம் ஊர்களுக்குச் சென்றார்கள். பலிபீடத்தில் கட்டுண்டு கிடந்த சிவனடியார் யாராயிருக்கலாமென்று அவர்கள் பலவாறு ஊகித்துப் பேசிக்கொண்டே போனார்கள்
என்ன தண்டனை?.38
அமாவாசையன்றைக்கு மறுநாள் பொழுது புலர்ந்ததிலிருந்து மாமல்லபுரத்து அரண்மனையில் குந்தவி தேவிக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது. அடிக்கடி அரண்மனை உப்பரிகை மாடத்தின் மேல் ஏறுவதும், நாலாபுறமும் பார்ப்பதும், மறுபடி அவசரமாகக் கீழிறங்குவதும், பணியாட்களுக்கு ஏதேதோ கட்டளையிடுவதும், உறையூரிலிருந்து அவளுடன் வந்திருந்த வள்ளியிடம் இடையிடையே பேசுவதுமாயிருந்தாள். என்ன பேசினாலும், எதைச் செய்தாலும் அவளுடைய செவிகள் மட்டும் குதிரைக் குளம்படியின் சத்தத்தை வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தன. பணியாட்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று பேச்சை நிறுத்தி காதுகொடுத்துக் கேட்பாள். விக்கிரமனையும் பொன்னனையுந்தான் அவள் அவ்வளவு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்று சொல்லவேண்டியதில்லை.
விக்கிரமனும் பொன்னனும் வந்தவுடனேயே என்ன செய்ய வேண்டுமென்று குந்தவி தீர்மானித்து வைத்திருந்தாள். விக்கிரமனுடன் அதே கப்பலில் தானும் போய்விடுவது என்ற எண்ணத்தை அவள் மாற்றிக் கொண்டு விட்டாள். அதனால் பலவிதச் சந்தேகங்கள் தோன்றி மறுபடியும் விக்கிரமன் பிடிக்கப்படுவதற்கு ஏதுவாகலாம். இது மட்டுமல்ல; தந்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் அவ்விதம் ஓடிப் போவதற்கும் அவளுக்கு மனம் வரவில்லை! நரசிம்மச் சக்கரவர்த்தியின் பரந்த கீர்த்திக்குத் தன்னுடைய செயலால் ஒரு களங்கம் உண்டாகலாமா! அதைக் காட்டிலும் விக்கிரமன் முதலில் கப்பலேறிச் சென்ற பிறகு, தந்தையிடம் நடந்ததையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விக்கிரமனையே தான் பதியாக வரித்து விட்டதையும் தெரிவிப்பதே முறையல்லவா? அப்போது சக்கரவர்த்தி தன்னை கட்டாயம் மன்னிப்பதுடன், கப்பலில் ஏற்றித் தன்னைச் செண்பகத் தீவுக்கும் அனுப்பிவைத்துவிடுவார். `உன்னுடைய கல்யாணத்துக்காக நான் ஒரு பிரயத்தனமும் செய்யப் போவதில்லை. உன்னுடைய பதியை நீயேதான் ஸ்வயம்வரம் செய்து கொள்ளவேண்டும்' என்று சக்கரவர்த்தி அடிக்கடி கூறிவந்திருக்கிறாரல்லவா? அப்படியிருக்க, இப்போது தன் இஷ்டத்திற்கு அவர் ஏன் மாறு சொல்ல வேண்டும்?
இத்தகைய தீர்மானத்துடன் குந்தவி விக்கிரமனுடைய வரவுக்கு வழி நோக்கிக் கொண்டிருந்தாள். வானவெளியில் சூரியன் மேலே வர வர, குந்தவியின் பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. கடைசியாக, கிட்டதட்ட நடு மத்தியானத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டபோது, குந்தவியினுடைய இருதயம் விம்மி எழுந்து தொண்டையை அடைத்துக் கொண்டது. மறுபடியும் ஒரு தடவை விக்கிரமனைக் கப்பலில் ஏற்றி அனுப்பி விட்டுத் தான் பின் தங்குவதா? கதையிலே, காவியத்திலே வரும் வீரப் பெண்மணிகள் எல்லாரும் அவ்விதந்தானா செய்திருக்கிறார்கள்? அர்ச்சுனனோடு சுபத்திரை கிளம்பிப் போய்விடவில்லையா? கிருஷ்ணனோடு ருக்மணி போகவில்லையா? தான் மட்டும் எதற்காகப் பின்தங்க வேண்டும்? விக்கிரமனுக்கு விடை கொடுத்தனுப்புவது தன்னால் முடியாத காரியம் என்று அவளுக்குத் தோன்றிற்று. குதிரைகளின் காலடிச் சத்தம் நெருங்க நெருங்க அவளுடைய மனக்குழப்பம் அதிகமாயிற்று.
வந்த குதிரைகள் அரண்மனை வாசலில் வந்து நின்றன. வாசற்காப்பாளருக்கு, இரத்தின வியாபாரி தேவசேனர் வந்தால் உடனே தன்னிடம் அழைத்து வரும்படிக் குந்தவி கட்டளையிட்டிருந்தாள். இதோ, குதிரையில், வந்தவர்கள் இறங்கி உள்ளே வருகிறார்கள். அடுத்த வினாடி அவரைப் பார்க்கப் போகிறோம்! ஆகா! இதென்ன? உள்ளே வருகிறது யார்! சக்கரவர்த்தியல்லவா? குந்தவியின் தலை சுழன்றது. எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்துக் கொண்டாள். சிறிது தடுமாற்றத்துடன், "அப்பா! வாருங்கள்! வாருங்கள்! இத்தனை நாளாய் எங்கே போயிருந்தீர்கள்?" என்றாள்.
சக்கரவர்த்தி ஆவலுடன் குந்தவியின் அருகில் வந்து அவளைத் தழுவிக் கொண்டார். உடனே, திடுக்கிட்டவராய், "ஏன் அம்மா! உன் உடம்பு ஏன் இப்படிப் பதறுகிறது?" என்று கேட்டார். "ஒன்றுமில்லை, அப்பா! திடீரென்று வந்தீர்களல்லவா?" என்றாள் குந்தவி.
"இவ்வளவுதானே? நல்லது, உட்கார், குழந்தாய்! நீ உறையூரிலிருந்து எப்போது வந்தாய்? எதற்காக இவ்வளவு அவசரமாய் வந்தாய்?" என்று கேட்டுக் கொண்டே சக்கரவர்த்தி அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். குந்தவிக்கு அப்போது ஏற்பட்ட இதயத் துடிப்பைச் சொல்ல முடியாது. `அப்பா இங்கே இருக்கும்போது அவர் வந்து விட்டால் என்ன செய்கிறது? இப்பொழுது வருகிற சமயமாச்சே! அரண்மனைக்குள் வராமல் நேரே போய்க் கப்பலேறச் செய்வதற்கு வழி என்ன?' என்றெல்லாம் எண்ணி அவள் உள்ளம் தவித்தது. அவளுடைய தவிப்பைக் கவனியாதவர் போல் சக்கரவர்த்தி, "குழந்தாய்! இன்று சாயங்காலம் நான் உறையூருக்குக் கிளம்புகிறேன். நீயும் வருகிறாயா? அல்லது உறையூர் வாசம் போதுமென்று ஆகிவிட்டதா?" என்றார். "உறையூருக்கா? எதற்காக அப்பா?" என்றாள் குந்தவி. "ரொம்ப முக்கியமான காரியங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன, அம்மா! அருள்மொழித்தேவி அகப்பட்டு விட்டார்." "ஆகா!" என்று அலறினாள் குந்தவி.
"ஆமாம், அருள்மொழித் தேவியைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தது யார் தெரியுமா? நீ அடிக்கடி சொல்வாயே, யாரோ வேஷதாரிச் சிவனடியார் என்று, அவர்தான்!" "என்ன! என்ன!.. தேவி எங்கே இருந்தார்? யார் கொண்டு போய் வைத்திருந்தார்கள்? அந்தப் போலிச் சிவனடியார்... ஒருவேளை அவரேதான்..."
சக்கரவர்த்தி புன்னகையுடன், "இன்னும் உனக்குச் சந்தேகம் தீரவில்லையே, அம்மா! இல்லை. அந்தச் சிவனடியார் அருள்மொழி ராணியை ஒளித்து வைத்திருக்கவில்லை. ராணியைக் கொண்டு போய் வைத்திருந்தவன் நான் முன்னமேயே ஒரு தடவை சொன்னேனே - அந்தக் கபாலிகக் கூட்டத்தின் பெரிய பூசாரி - மகாக் கபால பைரவன். சிவனடியார் அருள்மொழி ராணியைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததின் பலன், அவருடைய உயிருக்கே ஆபத்து வருவதாயிருந்ததாம். நேற்று இராத்திரி மகாக் கபால பைரவன் சிவனடியாரைக் காளிக்குப் பலிகொடுப்பதாக இருந்தானாம். அவரைக் கட்டிப் பலிபீடத்தில் கொண்டு வந்து போட்டாகிவிட்டதாம். கழுத்தில் கத்தி விழுகிற சமயத்தில் சிவனடியாரை யார் வந்து காப்பாற்றினார்களாம் தெரியுமா?" "யார் அப்பா?"
"செண்பகத் தீவிலிருந்து வந்திருந்தானே - இரத்தின வியாபாரி தேவசேனன் - அவனும் படகோட்டி பொன்னனும் நல்ல சமயத்தில் வந்து காப்பாற்றினார்களாம்!" குந்தவி ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் வார்த்தை ஒன்றும் வெளியில் வரவில்லை. அவளுடைய அழகிய வாய், மாதுளை மொட்டின் இதழ்கள் விரிவது போல் விரிந்து அப்படியே திறந்தபடியே இருந்தது. "