அமாவாசை முன்னிரவு.33
அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது. அதில் விக்கிரமன் ஏறிக்கொண்டான். அவனுக்கு முன்னும் பின்னும் வண்டியில் சில வீரர்கள் ஏறிக் கொண்டார்கள். அவ்விதமே வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் சிலர் நின்றார்கள்.
சிறைவாசலில் மாரப்பன் அந்த வீரர்களின் தலைவனாகத் தோன்றியவனைக் கூப்பிட்டு அவன் காதோடு ஏதோ இரகசியமாகச் சொன்னான். பிறகு உரத்த குரலில், "கிளம்பலாம்!" என்றான். உடனே வண்டிக்காரன் வண்டியை ஓட்ட, முன்னாலும் பின்னாலும் நின்ற வீரர்களும் போகத் தொடங்கினார்கள். உறையூர் வீதிகளின் வழியாக வண்டி போய்க் கொண்டிருந்தது. முன்னெல்லாம்போல் இப்போது இரவில் விளக்குகள் எரியாமல் நகரம் இருளடைந்து கிடப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு என்னமோ செய்தது! ஆகா! சோழ நாட்டுத் தலைநகரமான உறையூர்தானா இது?
"ஏனுங்க சாமிங்களே! இந்தப் பிள்ளையாண்டான் யாரு? இவனை எங்கே அழைத்துப் போறீங்க!" என்ற பேச்சைக் கேட்ட விக்கிரமன் திடுக்கிட்டான். பேசியவன் வண்டிக்காரன்தான் ஆனால், அந்தக் குரல் பொன்னன் குரலாக அல்லவா? இருக்கிறது? அப்படியும் இருக்க முடியுமா? வீரர்களில் ஒருவன், "உனக்கு ஏன் அப்பா இந்த வம்பு? பேசாமல் வண்டியை ஓட்டு!" என்றான். அதற்கு வண்டிக்காரன் "எனக்கு ஒன்றுமில்லை, அப்பா! ஆனால் ஊரெல்லாம் பேசிக் கிட்டிருக்காங்க, யாரோ செண்பகத் தீவிலிருந்து வந்த ஒற்றனாம்! இரத்தின வியாபாரி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்தானாம். சக்கரவர்த்தி மகள் குந்தவி தேவியையே ஏமாற்றி விட்டானாம். அப்பேர்பட்டவனை நம்ம சேனாதிபதி கண்டுபிடித்துவிட்டாராம். அப்படியெல்லாம் ஊரிலே பேச்சாயிருக்கே. அவன் தானா இவன் என்று கேட்டேன்" என்றாள். "ஆமாம். அவன்தான் என்று வைத்துக் கொள்ளேன்" என்றான் ஒரு வீரன்.
"எங்கே அழைத்துக் கொண்டு போறீங்களோ?" என்று வண்டிக்காரன் கேட்க, "எங்கே அழைத்துக் கொண்டு போவாங்க? காஞ்சிமா நகருக்குத்தான்" என்று மறுமொழி வந்தது. "அடே அப்பா! அவ்வளவு தூரமா போக வேண்டும்? நீங்கள் ஏழெட்டுப் பேர் காவலுக்குப் போறீர்களே, போதுமா? வழியிலே இவனுக்கு யாரளூறூவது ஒத்தாசை செய்து தப்பிச்சுவிட்டு விட்டாங்கன்னா என்ன செய்வீங்க?" என்றான் வண்டிக்காரன். பேசுகிறவன் உண்மையில் பொன்னன்தானோ? தனக்குத்தான் சமிக்ஞைச் செய்தி தெரிவிக்கிறானோ? வழியில் வந்து ஒத்தாசை செய்வதாகக் கூறுகிறானோ? இவ்விதம் விக்கிரமன் வியப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சற்றுப்பின்னால் வந்த வீரர் தலைவன், "யார் அங்கே? என்ன பேச்சு!" என்று அதட்டவே மௌனம் குடிகொண்டது. பிறகு வண்டிக்காரனாவது வீரர்களாவது பேசவில்லை.
காவேரிக் கரைக்கு வந்ததும் வண்டி நின்றது. விக்கிரமனும் வண்டியிலிருந்த வீரர்களும் இறங்கினார்கள். ஆற்றங்கரையோரமாக ஒரு படகு ஆயத்தமாயிருந்தது. அங்கே ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான்.
எல்லாரும் கீழிறங்கியதும் வண்டிக்காரன் வண்டியைத் திருப்பிக் கொண்டே, "போயிட்டு வரீங்களா? ஒற்றனை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தியிடம் சேருங்கள், ஐயா! வழியில் ஒரு காட்டாறு இருக்கிறது. பத்திரம்!" என்றான். அப்போது தீவர்த்தி வெளிச்சம் அவன் முகத்தின்மேல் அடித்தது. விக்கிரமனுக்கு அந்த முகத்தைப் பார்த்ததும் பெரும் ஏமாற்றமுண்டாயிற்று. ஏனெனில், அவன் பொன்னன் இல்லை. ஆனால் அவனுடைய கண்களில் அந்த ஒளி - எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே? சட்டென்று உண்மை புலனாயிற்று. பொன்னன்தான் அவன் முகத்தில் பொய் மீசை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவன்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன? வழியில் காட்டாற்றின் சமீபத்தில் தன்னை விடுவிக்க வருவதாகத்தான் சொல்லியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தினால் விக்கிரமனுக்கு மிகுந்த உற்சாகம் உண்டாயிற்று.
படகில் ஏறி ஆற்றைக் கடந்தபின் அவர்கள் நடுஜாமம் வரையில் கால்நடையாகப் பிரயாணம் செய்தார்கள். பிறகு சாலையோரம் இருந்த ஒரு மண்டபத்தில் படுத்துத் தூங்கினார்கள். மீண்டும் அதிகாலையில் எழுந்து மாட்டுவண்டி பிடித்துக் கொண்டு பிரயாணமானார்கள். அன்று பொழுது சாயும் சமயத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டினார்கள்.
இனிச் சிறிது தூரத்தில் காட்டாறு வந்துவிடும் என்று விக்கிரமன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அந்த வண்டிக்காரன் பொன்னனாயிருக்கும் பட்சத்தில், இங்கே தான் தனக்கு உதவிக்கு வரவேண்டும் "யார் வருவார்கள்; எப்போது வருவார்கள்?" என்றெல்லாம் எண்ணி விக்கிரமனுடைய உள்ளம் பரபரப்பை அடைந்தது. அஸ்தமித்து இரண்டு நாழிகை இருக்கும். அந்த அமாவாசை இருட்டில் சாலையில் ஜனநடமாட்டம் அதிகமாயிருந்ததைக் கண்டு விக்கிரமன் வியந்தான். ஆங்காங்கு சிறுசிறு கும்பலாக ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கோயிலுக்குப் போகிறவர்களைப் போல் அவர்கள் காணப்பட்டார்கள். வெறிபிடித்தவர்களைப்போல் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் போனார்கள். சிலர் மஞ்சள் வஸ்திரம் அணிந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கும்பலிலும் ஒருவன் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தான். இன்னும் இந்தக் கும்பல்களில் சிலர் நீண்ட கத்திகளை எடுத்துச் சென்றது விக்கிரமனுக்கு ஒருவாறு பயங்கரத்தையளித்தது. இவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்? கையில் கத்திகள் என்னத்திற்குக் கொண்டு போகிறார்கள்?
இந்தக் காட்சிகளைப் பார்த்த மாரப்பனுடைய வீரர்கள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டதில் சில வார்த்தைகள் விக்கிரமனுடைய காதிலும் விழுந்தன. "பத்திரகாளி", "நரபலி", "கபால பைரவர்" என்னும் சொற்கள் அவனுக்குத் திகைப்பையும் பயத்தையும் உண்டாக்கின. மகேந்திர மண்டபத்தின் வாசலில் மகாக் கபால பைரவரும், மாரப்பனும் பேசிக் கொண்டது அவனுக்கு நினைவு வந்தது. ஓஹோ! இன்றைக்கு அமாவாசை இரவல்லவா? மாரப்பன் ஒருவேளை தன்னைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லி உண்மையில் கபால பைரவனின் பலிக்குத் தான் அனுப்பியிருப்பானோ! இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே "ஓம் காளி ஜய காளி!" என்ற பல குரல்களின் ஏகோபித்த கோஷம் அவன் காதில் விழுந்து, மயிர்க்கூச்சு உண்டாகிற்று. அவ்விதம் கோஷித்தவர்கள் அடுத்த நிமிஷம் விக்கிரமன் இருந்த வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கையில் நீண்ட கூரிய கத்திகள் நட்சத்திர வெளிச்சத்தில் மின்னியது தெரிந்தது. "ஓம் காளி, ஜய காளி" என்ற கோஷங்களுக்கு மத்தியில் "எங்கே பலி?" என்று ஒரு பயங்கரமான குரல் கேட்டது.
இதற்குள் வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் வந்த உறையூர் வீரர்கள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார்கள். வண்டியில் இருந்தவர்களும் தொப்புத் தொப்பென்று குதித்து ஓட்டம் பிடித்தார்கள். வண்டிக்காரன் அந்தர்த்தானமாகிவிட்டான். விக்கிரமன் கைகள் சங்கிலிகளால் வண்டியின் சட்டத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் அவனால் மட்டும் வண்டியிலிருந்து குதிக்க முடியவில்லை. அப்போது வண்டியின் பின்புறத்தில் ஒரு குரல், "மகாராஜா! பதற வேண்டாம்! நான்தான்" என்றது. உடனே பொன்னன் வண்டியில் ஏறிச் சங்கிலிகளை அவிழ்த்தெறிந்தான். விக்கிரமன் வண்டியிலிருந்து குதித்ததும், இரண்டு உயர்ஜாதிக் குதிரைகள் சித்தமாய் நிற்பதைக் கண்டான். "மகாராஜா ! ஏறுங்கள் குதிரை மேல்; ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை!" என்றான் பொன்னன்.
ஆகா! இதென்ன?.34
விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீது தாவி ஏறிக் கொண்டார்கள். "பொன்னா! முண்டாசு கட்டி மீசை வைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரன் யார்? நீதானே!" என்று குதிரைகள் போய்க் கொண்டிருக்கும்போதே விக்கிரமன் கேட்டான். "ஆமாம், மகாராஜா!" "சிறைக்குள்ளிருந்தபோது நீ என்னை மறந்து விட்டாயாக்கும் என்று நினைத்தேன்." "நான் ஒருவேளை மறந்தாலும், என்னை மறக்க விடாதவர் ஒருவர் இருக்கிறாரே!" "யார் அது?" "வேறு யார்? தங்களை யமன் வாயிலிருந்து மீட்ட தேவிதான்." இதைக் கேட்டதும் விக்கிரமனுடைய உள்ளம் மகிழ்ச்சியினால் துள்ளிற்று. குந்தவியைப் பற்றி மேலும் விசாரிக்க வேண்டுமென்கிற ஆவல் உண்டாயிற்று. ஆனால் சிறிது தயக்கமாகவுமிருந்தது.
சற்றுப் பொறுத்து, "எங்கே போகிறோம் இப்போது?" என்றான் விக்கிரமன். "மாமல்லபுரத்துக்கு, மகாராஜா!" "பொன்னா!" "என்ன, மகாராஜா?" "நாளைக் காலைக்குள் மாமல்லபுரம் போய்விட வேண்டும்." "ஆமாம், மகாராஜா! அதனால்தான் ஒரு கணம் கூடத் தாமதிப்பதற்கில்லை என்று நான் சொன்னேன்." "நாளை மத்தியானம் வரையில் அங்கே கப்பல் காத்துக் கொண்டிருக்கும்."
"அதற்குள் நாம் போய்விடலாம், மகாராஜா!" விக்கிரமன் சற்றுப் பொறுத்து மறுபடியும், "தேவி எங்கே இருக்கிறார், பொன்னா! அவரிடம் கடைசியாக ஒரு தடவை விடை பெற்றுக்கொண்டு கிளம்பியிருந்தால், எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும்!" என்றான். "அது முடியாது, மகாராஜா!" "எது முடியாது?" "தேவியிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புவது." "ஆமாம்; முடியாதுதான்! இனி உறையூருக்கு மறுபடியும் எப்படிப் போக முடியும்?" "தேவி உறையூரில் இல்லை, மகாராஜா!" "தேவி உறையூரில் இல்லையா? பின் எங்கே?" "மாமல்லபுரத்தில்!" "ஆ!" என்றான் விக்கிரமன். சில நாட்களாகச் சிறைப்பட்டிருந்த பிறகு விடுதலையடைந்த உற்சாகம், குளிர்ந்த இரவு நேரத்தில் குதிரைமீது செல்லும் கிளர்ச்சி, இவற்றுடன், `குந்தவி மாமல்லபுரத்தில் இருக்கிறாள்' என்னும் செய்தியும் சேர்ந்து அவனுக்கு எங்கேயோ ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று.
"அப்படியானால் அவரிடம் விடைபெற முடியாது என்று சொன்னாயே, ஏன்? பொன்னா! ஒரு கண நேரமாவது அவரை நான் அவசியம் பார்க்க வேண்டும். பார்த்து நன்றி செலுத்த வேண்டும். அதோடு என் தாயாரைக் கண்டுபிடித்துப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்புவிக்க வேண்டும்." "அதுதான் முடியாது!" என்றான் பொன்னன். "ஏன் அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறாய்?" "தேவியின் உறுதி எனக்கும் தெரிந்திருப்பதினாலே தான். தங்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் உத்தேசம் அவருக்குக் கிடையாது. தங்களோடு அவரும் புறப்படச் சித்தமாயிருக்கிறார்."
"ஆகா! நிஜமாகவா? - இவ்வளவு முக்கியமான செய்தியை முன்னமே எனக்கு ஏன் சொல்லவில்லை?" "இப்போதுகூட நான் சொல்லியிருக்கக்கூடாது. தாங்கள் கப்பல் ஏறிய பிறகு தங்களை அதிசயப்படுத்த வேண்டும் என்று தேவி உத்தேசித்திருந்தார் அவசரப்பட்டுச் சொல்லி விட்டேன்." விக்கிரமன் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடீரென்று, "அதோ பாருங்கள் மகாராஜா!" என்று பொன்னன் கூறியதும் விக்கிரமன் சிறிது திடுக்கிட்டுப் பார்த்தான். சாலையில் ஒரு பக்கத்து மரத்தடியில் பத்துப் பன்னிரண்டு பேர் கும்பலாக நின்றார்கள். அவர்களில் ஒருவன் தீவர்த்தி வைத்துக் கொண்டிருந்தான். தீவர்த்தி வெளிச்சத்தில் அவர்களுடைய உருவங்கள் கோரமான காட்சி அளித்தன. அவர்களுடைய கழுத்தில் கபால மாலைகள் தொங்கின. அவர்களுடைய கைகளில் கத்திகள் மின்னின. நெற்றியில் செஞ்சந்தனமும் குங்குமமும் அப்பிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் நின்ற இடத்தைக் குதிரைகள் தாண்டிய போது ஒரு கணம் விக்கிரமனுக்கு உடம்பு நடுங்கிற்று. அவர்களைக் கடந்து சிறிது தூரம் சென்றது, "அப்பா! என்ன கோரம்" என்றான் விக்கிரமன். "மகாராஜா! தங்களுக்காகத்தான் இங்கே இவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்களிடம் தங்களை ஒப்பிவித்துவிடும்படிதான் மாரப்ப பூபதி கடைசியாகத் தம் ஆட்களுக்குக் கட்டளையிட்டார். நான் இவர்களை முந்திக் கொண்டேன். தாங்கள் குதிரை மேல் இவ்விதம் தனியாகப் போவீர்கள் என்று இவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இன்னும் ரொம்ப நேரம் காத்திருப்பார்கள். பிறகு கபால பைரவரிடம் போய்த் தாங்கள் வரவில்லையென்று தெரிவிப்பார்கள். இன்று கபால பைரவருக்கு மாரப்பபூபதி மேல் பிரமாதமான கோபம் வரப்போகிறது!" என்றான் பொன்னன்.
"பொன்னா! சக்கரவர்த்தியின் சிரஸாக்கினை, கபாலிகர்கள் பலி இந்த இரண்டுவித ஆபத்துக்களிலிருந்துமல்லவா என்னை நீ தப்புவித்திருக்கிறாய்? முன்னே காட்டாற்றில் போனவனை எடுத்து உயிர் கொடுத்துக் காப்பாற்றினாய். சோழ வம்சத்தின் குலதெய்வம் உண்மையில் நீதான். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நாளைய தினம் உன்னைவிட்டுப் பிரிவேன். மறுபடியும் எப்போது காண்பேனோ, என்னவோ?" "லட்சணந்தான்!" என்றான் பொன்னன். "என்ன சொல்கிறாய்?" "என்னை விட்டாவது தாங்கள் பிரியவாவது?" "ஏன் அப்படிச் சொல்கிறாய்?"
"இன்னொரு தடவை தங்களைக் கப்பலில் அனுப்பிவிட்டு நான் இங்கே இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? இங்கே எனக்கு என்ன வேலை? வள்ளி ஏற்கெனவே குந்தவி தேவியுடன் மாமல்லபுரத்தில் இருக்கிறாள். நானும் அவளும் தங்களுடன் வரப்போகிறோம்."
விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "பொன்னா! நீ சொல்வது எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியளிக்கிறது. நீயும் வள்ளியும் என்னுடன் வந்தால், சோழ நாடே வருகிற மாதிரிதான். ஆனால் , ஒரு விஷயந்தான் என் மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது. மகாராணியின் கதி என்ன? அவரை யார் தேடிக் கண்டுபிடிப்பார்கள்? அவருக்கு யார் உன்னைப் பற்றிச் சொல்வார்கள்? - நான் தாய்நாட்டுக்கு வந்ததின் முக்கிய நோக்கம் மகாராணியைப் பார்ப்பதற்கு, அவரைப் பார்க்காமலே திரும்பிப் போகிறேன். அவருக்கு என்னைப் பற்றிச் செய்தி சொல்லவாவது யாரேனும் இருக்க வேண்டாமா!" என்றான்.
பொன்னனுடைய மனத்திலும் அந்த விஷயம் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியாரிடம் தான் சொன்னபடி ஒன்றுமே செய்யவில்லை. அவர் என்ன ஆனாரோ, என்னவோ? மகாராணியை ஒருவேளை கண்டுபிடித்திருப்பாரோ? பொன்னனுடைய மனத்தில் சமாதானம் இல்லாவிட்டாலும், வெளிப்படையாக, "மகாராணியைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம். மகாராஜா! அவரைச் சிவனடியார் பாதுகாப்பார். சிவனடியாரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. மகாசக்தி வாய்ந்தவர்" என்றான்.
"ஆமாம்; அவர் நம்மை மாமல்லபுரத்துக்கருகிலுள்ள சிற்ப வீட்டில் சந்திப்பதாகச் சொன்னாரல்லவா?" "அது இப்போது முடியாத காரியம்; சிவனடியாரைப் பார்க்கத் தங்கினோமானால், கப்பலைப் பிடிக்க முடியாது." "உண்மைதான். ஆனாலும் அன்னையையும் சிவனடியாரையும் பார்க்காமல் போவதுதான் மனத்திற்கு வேதனை அளிக்கிறது" என்றான் விக்கிரமன். அப்போது "ஆகா! இதென்ன?" என்று வியப்புடன் கூவினான் பொன்னன்.
இதற்குள் அவர்கள் காட்டாற்றைச் சமீபித்து அதன் இக்கரையிலுள்ள மகேந்திர மண்டபத்துக்கருகில் வந்து விட்டார்கள். அந்த மண்டபத்தின் வாசலில் தோன்றிய காட்சிதான் பொன்னனை அவ்விதம் வியந்து கூவச் செய்தது. அங்கே ஏழெட்டு ஆட்கள் ஆயுதபாணிகளாக நின்றார்கள். இரண்டு பேர் கையில் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள். மண்டபத்தின் வாசல் ஓரமாக ஒரு பல்லக்கு வைக்கப்பட்டிருந்தது.
"இன்று ராத்திரி என்னவெல்லாமோ ஆச்சரிய சம்பவங்கள் நடைபெறுகின்றன!" என்று பொன்னன் முணுமுணுத்தான். "இந்த வேளையில் இங்கே யார், பொன்னா?" என்றான் விக்கிரமன். "தெரியவில்லை, மகாராஜா!" "இவர்கள் கபாலிகர்கள் இல்லை, நிச்சயம். வேறு யாராயிருக்கலாம்?"
"ஒரு வேளை குந்தவி தேவிதான் நமக்கு உதவிக்காக இன்னும் சில ஆட்களை அனுப்பியிருக்கிறாரோ, என்னவோ? ஆனால் பல்லக்கு என்னத்திற்கு?" இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மகேந்திர மண்டபத்தின் வாசல் வந்துவிட்டது. குதிரைகளை இருவரும் நிறுத்தினார்கள். அங்கு நின்ற ஆட்களில் ஒருவனை எங்கேயோ பார்த்ததாகப் பொன்னனுக்கு நினைவு வந்தது. எங்கே பார்த்திருக்கிறோம்? - ஆகா! திருச்செங்காட்டாங்குடியில்! பரஞ்சோதி அடிகளின் ஆள் குமரப்பன் இவன். அந்த மனிதனும் பொன்னன் முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டான். "ஓ! பொன்னனா? என்று அவன் ஆச்சரியத்துடன் கூறி, "பொன்னா! சமாசாரம் தெரியுமா? உறையூர் மகாராணி அகப்பட்டு விட்டார்! இதோ இந்த மண்டபத்துக்குள்ளே இருக்கிறார். உன்னைப் பற்றிக்கூட விசாரித்தார்" என்றான்
தாயும் மகனும்.35
"மகாராணி அகப்பட்டுவிட்டார்" என்று வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமனுக்கும் பொன்னனுக்கும் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. இருவரும் குதிரை மேலிருந்து கீழே குதித்தார்கள். அப்போது உள்ளேயிருந்து, "குமாரப்பா! யார் அங்கே? பொன்னன் குரல் மாதிரி இருக்கிறதே!" என்று ஒரு பேச்சுக்குரல் கேட்டது. அது மகாராணி அருள்மொழி தேவியின் குரல். "அம்மா!" என்று அலறிக்கொண்டு விக்கிரமன் மகேந்திர மண்டபத்துக்குள் நுழைந்தான். பொன்னனும் பின்னோடு சென்றான். அப்போது அந்த இருளடைந்த மண்டபத்துக்குள்ளேயிருந்து ஒரு பெண் உருவம் வெளியே வந்தது. அது அருள்மொழி ராணியின் உருவந்தான். ஆனால், எவ்வளவு மாறுதல்? விக்கிரமன் கடைசியாக அவரைப் பார்த்தபோது இன்னும் யௌவனத்தின் சோபை அவரை விட்டுப் போகவில்லை. இப்போதோ முதுமைப் பருவம் அவரை வந்தடைந்துவிட்டது. மூன்று வருஷத்துக்குள் முப்பது வயது அதிகமானவராகக் காணப்பட்டார்.
விக்கிரமன் ஒரே தாவலில் அவரை அடைந்து சாஷ்டாங்கமாய்க் கீழே விழுந்து அவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டான். அருள்மொழி ராணி கீழே உட்கார்ந்து விக்கிரமனுடைய தலையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். விக்கிரமனைப் பின்தொடர்ந்து மண்டபத்துக்குள் நுழைந்த பொன்னன் மேற்படி காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாக அவனுடைய பார்வை மண்டபத்தின் ஒரு பக்கத்தில் கட்டுண்டு கிடந்த உருவத்தின் மேல் விழுந்தது; மங்கலான தீவர்த்தியின் வெளிச்சத்தில் அது குள்ளனுடைய உருவம் என்பதைப் பொன்னன் கண்டான்.
பொன்னனுடைய பார்வை குள்ளன்மீது விழுந்ததும் குள்ளன், "ஹீஹீஹீ" என்று சிரித்தான். அந்தச் சிரிப்பைக் கேட்டு விக்கிரமனும் அவனைப் பார்த்தான். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து, "பொன்னா!" என்றான். "ஆம், மகாராஜா! மாமல்லபுரத்திலிருந்து தங்களுக்கு வழிகாட்டி வந்த சித்திரக்குள்ளன்தான் இவன்!" என்றான். குள்ளன் மறுபடியும் "ஹீஹீஹீ" என்று சிரித்தான்.
அருள்மொழி ராணி எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தாள். யாரை என்ன கேட்பது என்று தெரியாமல் திகைப்பவளாகக் காணப்பட்டாள். கடைசியில் "பொன்னனைப் பார்த்து, பொன்னா எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போலிருக்கிறது. அந்த மலைக்குகையில் எத்தனை நாள் இருந்தேன் என்பதே தெரியாது. கடைசியில் அருவியில் விழுந்து உயிரை விடலாம் என்று எத்தனித்தபோது சிவனடியார் வந்து தடுத்துக் காப்பாற்றினார். 'உன் மகன் திரும்பி வந்திருக்கிறான், அவனை எப்படியும் பார்க்கலாம்' என்று தைரியம் கூறினார். பொன்னா, காட்டாற்று வெள்ளத்திலிருந்து விக்கிரமனை நீ காப்பாற்றினாயாமே?" என்று கேட்டாள்.
அப்போது விக்கிரமன், "வெள்ளத்திலிருந்து காப்பாற்றியதுதானா? சக்கரவர்த்தியின் சிரசாக்ஞையிலிருந்து - காளிக்குப் பலியாவதிலிருந்து - இன்னும் எவ்வளவோ விதத்தில் பொன்னன் என்னைக் காப்பாற்றினான்" என்றான். "காளிக்குப் பலியா?" என்று சொல்லிக் கொண்டு அருள்மொழி நடுநடுங்கினாள். குள்ளன் மறுபடியும் "ஹீஹீஹீ" என்று பயங்கரமாய்ச் சிரித்தான்.
"பலி! பலி! இன்று ராத்திரி ஒரு பெரிய பலி - விழப்போகிறது! காளியின் தாகம் அடங்கப் போகிறது!" என்றான். எல்லோரும் அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். "இன்று அர்த்த ராத்திரியில் சிவனடியார் பலியாகப் போகிறார்! மகாபத்திர காளியின் இராஜ்யம் ஆரம்பமாகப் போகிறது! அப்புறம் ஹா ஹா ஹா!.. அப்புறம் ... மண்டை ஓட்டுக்குப் பஞ்சமே இராது!" என்றான் குள்ளன். விக்கிரமன் அப்போது துள்ளி எழுந்து, "பொன்னா! இவன் என்ன உளறுகிறான்? சிவனடியாரைப் பற்றி...." என்றான்.
"ஹிஹிஹி! உளறவில்லை, உண்மையைத்தான் சொல்கிறேன். அந்தக் கபடச் சாமியாரை இத்தனை நேரம் காலையும் கையையும் கட்டிப் பலிபீடத்தில் போட்டிருப்பார்கள். நடுநிசி ஆச்சோ, இல்லையோ, கத்தி கழுத்திலே விழும்" என்றான்.
அப்போது அருள்மொழித் தேவி விக்கிரமனைப் பார்த்து, "குழந்தாய்! இவன் முன்னேயிருந்து இப்படித்தான் சொல்லி என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஐந்தாறு நாளைக்கு முன்னால் நான் குகையிலிருந்து தப்பி அருவியில் விழப்போன போது சிவனடியார் தோன்றி, சீக்கிரத்தில் என்னை மீட்டுக் கொண்டுபோக ஆட்கள் வருவார்கள் என்று தெரிவித்தார். அந்தப்படியே இவர்கள் வந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தார்கள். வழியில் மறைந்து நின்ற இந்தக் குள்ளனையும், பிடித்துக் கொண்டு வந்தார்கள். இங்கு வந்து சேர்ந்தது முதல் இவன் இன்று ராத்திரி சிவனடியாரைக் கபாலிகர்கள் பலிகொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஐயோ! எப்பேர்ப்பட்ட மகான்! நமக்கு எத்தனை ஒத்தாசை செய்திருக்கிறார்....! அவருக்கா இந்தப் பயங்கரமான கதி!" என்று அலறினாள்.
விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, "பொன்னா! நீ என்ன சொல்கிறாய்? இந்தக் கொடும் பாதகத்தைத் தடுக்காவிட்டால் நாம் இருந்து என்ன பிரயோஜனம்?" என்றான். "அதெப்படி முடியும், மகாராஜா! உங்கள் நிலைமையை மறந்து பேசுகிறீர்களே! நாளைப் பொழுது விடிவதற்குள் நாம் மாமல்லபுரம் போய்ச் சேராமற்போனால்..." சேராமற்போனால் என்ன? கப்பல் போய்விடும், அவ்வளவுதானே?"
அப்போது பொன்னன் அருள்மொழி ராணியைப் பார்த்து, "அம்மா, இவரைப் பெரும் அபாயம் சூழ்ந்திருக்கிறது. தேசப் பிரஷ்டமானவர் திரும்பி வருவதற்குத் தண்டனை என்னவென்று தங்களுக்குத் தெரியாதா? இவர் இங்கே வந்திருப்பது மாரப்ப பூபதிக்குத் தெரிந்து காஞ்சிச் சக்கரவர்த்திக்கும் தெரியப்படுத்தி விட்டார். நாளைக் காலைக்குள் இவர் மாமல்லபுரம் போய்க் கப்பலில் ஏறியாக வேண்டும். இல்லாவிட்டால் தப்புவது அரிது. இப்போது சிவனடியாரைக் காப்பாற்றுவதற்காகப் போனால், பிறகு இவருடைய உயிருக்கே ஆபத்துதான். நீங்களே சொல்லுங்கள் இவர் என்ன செய்யவேணுமென்று?" என்றான்.
அருள்மொழி ராணி பெருந் திகைப்புக்குள்ளானாள். விக்கிரமன் அன்னையைப் பார்த்து, "அம்மா! பார்த்திப மகாராஜாவின் வீரபத்தினி நீ! இந்த நிலைமையில் நான் என்ன செய்யவேண்டும், சொல்! நமக்குப் பரோபகாரம் செய்திருக்கும் மகானுக்கு ஆபத்து வந்திருக்கும்போது, என்னுடைய உயிருக்குப் பயந்து ஓடுவதா? என் தந்தை உயிரோடிருந்தால் இப்படி நான் செய்வதை விரும்புவாரா?" என்றான்.
"சுவரை வைத்துக் கொண்டு தான் சித்திரம் எழுத வேண்டும். இவர் பிழைத்திராவிட்டால் பார்த்திப மகாராஜாவின் கனவுகளை நிறைவேற்றுவது எப்படி?" என்றான் பொன்னன். அருள்மொழி ராணி இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தாள். கடைசியில், பொன்னனைப் பார்த்து, "பொன்னா! என்னைக் கல்நெஞ்சமுடையவள், பிள்ளையிடம் பாசமில்லாதவள் என்று ஒருவேளை நினைப்பாய். ஆனாலும் என் மனத்திலுள்ளதைச் சொல்கிறேன். நமக்கு எவ்வளவோ உபகாரம் செய்திருக்கும் ஒருவருக்கு ஆபத்து வந்திருக்கும்போது என் பிள்ளை உயிருக்குப் பயந்து ஓடினான் என்ற பேச்சைக் கேட்க நான் விரும்பவில்லை!" என்றாள்.
உடனே விக்கிரமன், தாயாரின் பாதங்களில் நமஸ்கரித்து, எழுந்து, "அம்மா! நீதான் வீரத்தாய்! பார்த்திப மகாராஜாவுக்குரிய வீர பத்தினி!" எனக் குதூகலத்துடன் உரைத்தான். பிறகு பொன்னனைப் பார்த்து, "கிளம்பு, பொன்னா! இன்னும் என்ன யோசனை?" என்றான். "எங்கே கிளம்பிப் போவது? பலி எங்கே நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்?" என்றான் பொன்னன். "ஹீஹீஹீ! நான் வழி காட்டுகிறேன்; என்னைக் கட்டவிழ்த்து விடுங்கள்" என்று சித்திரக் குள்ளன் குரல் கேட்டது. குள்ளனுடைய கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. அவன் கையில் ஒரு தீவர்த்தியைக் கொடுத்தார்கள். விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மேல் ஏறிக் கொண்டார்கள். குள்ளன் கையில் தீவர்த்தியுடன் மேற்கு நோக்கிக் காட்டு வழியில் விரைந்து செல்ல, விக்கிரமனும் பொன்னனும் அவனைத் தொடர்ந்து பின்னால் சென்றார்கள்.