புதையல்.27
கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான். அந்த அடிக்கிளையின் பட்டையில் சிறு கத்தியினால் ஓர் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. நன்றாக உற்றுப் பார்த்தால் அது ஒரு புலியின் உருவம் என்று தெரிந்து கொள்ளலாம்.
பொன்னன் அதைப் பார்த்துவிட்டு நின்றான். அந்தப் புலி உருவத்துக்கடியில் தரையில் கிடந்த மாஞ் சருகுகளையெல்லாம் ஒதுக்கினான். பிறகு அங்கே தரையைத் தோண்டத் தொடங்கினான். விக்கிரமன் பரபரப்புடன் தானும் மண்வெட்டியை எடுத்த போது பொன்னன் கைமறித்து, "மகாராஜா! தங்களுக்கு உடம்பு இன்னும் சரியாகவில்லை. இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்வதற்கு இருக்கின்றன. சற்றும் நேரம் மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும்" என்றான்.
அவ்விதமே விக்கிரமன் மரத்தடிக்குச் சென்று வேரின் மேல் உட்கார்ந்தான். அவனுடைய உள்ளத்தில் எத்தனையோ எண்ணங்கள் அலை அலையாக எழுந்தன. குழந்தைப் பருவத்தில் இந்த வஸந்தத் தீவில் எவ்வளவு ஆனந்தமாக நாட்கள் கழிந்தன! இதே இடத்தில் ஒரு அன்னியப் பெண்ணின் தயவில் தங்கவேண்டிய காலமும் வந்ததல்லவா? - நல்ல வேளை, இன்றோடு அந்த அவமானம் தீர்ந்துவிடும். பெட்டியை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பிவிட வேண்டியதுதான்.... இனிமேல் ஒரு விநாடி நேரமும் இங்கே தங்கக்கூடாது... செண்பத் தீவிலிருந்தபோது இந்தத் தாய் நாட்டைப் பார்க்க வேணுமென்று தனக்கு ஏற்பட்டிருந்த ஆவலையும், இப்போது இங்கிருந்து கிளம்பினால் போதுமென்று இருப்பதையும் நினைத்தபோது விக்கிரமனுக்குச் சிரிப்பு வந்தது. "இங்கே எதற்காக வந்தோம்? என்ன பைத்தியகாரத்தனம்?" என்று தோன்றியது. பார்த்திப மகாராஜா சுதந்திரமாக ஆண்ட அந்தச் சோழ நாடு அல்ல இது. பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் மிதிபட்டுக் கிடக்கும் நாடு. தேசத் துரோகியும் குலத்துரோகியும் கோழையுமான மாரப்ப பூபதியைச் சேனாதிபதியாகப் பெற்றிருக்கும் நாடு. இப்படிப்பட்ட நாட்டின் மண்ணை உதறிவிட்டு எவ்வளவு சீக்கிரத்தில் போகிறோமோ, அவ்வளவுக்கு நல்லது!
"நாடு என்ன செய்யும்? - மனுஷ்யர்கள் கேடுகெட்டுப் போயிருந்தால்?" என்ற எண்ணம் தோன்றியதும் விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்புவதற்கு முன் தன்னைச் சித்திர மண்டபத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் அவருடைய கனவுச் சித்திரங்களையெல்லாம் காட்டியதை நினைத்துக் கொண்டான். அந்தக் கனவு நிறைவேறப் போகிறதா? இல்லை கனவாகத்தான் போய்விடுமோ? இங்கே எல்லாரும் பல்லவ சக்கரவர்த்தியின் புகழிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். நேற்றுத்தான் காஞ்சியிலிருந்து ஒரு ஆள் வந்தான். சீன தேசத்திலிருந்து வந்த ஒரு தூதனுக்குக் காஞ்சியில் நடந்த வரவேற்பு வைபவங்களைப் பற்றியெல்லாம் அவன் வர்ணித்தான். விக்கிரமன் கேட்டுக் கொண்டிருந்தான். கேட்கக் கேட்க அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்தச் சீன தேசத்துத் தூதன் தான் போகுமிடங்களிலெல்லாம் பல்லவ சக்கரவர்த்தியின் அருமை பெருமைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போவான். சீன தேசத்திலும் போய்ச் சொல்வான். சோழ நாட்டைப் பற்றியோ, சோழ நாட்டின் சுதந்திரத்துக்காக வீரப்போர் புரிந்து மரணமடைந்த பார்த்திப மகாராஜாவின் பெயரையோ யார் கேட்கப் போகிறார்கள்?
"மகாராஜா!" என்ற குரலைக் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டு எழுந்தான். குழியில் நின்ற பொன்னன் குனிந்தான். அவன் மறுபடி நிமிர்ந்தபோது அவனுடைய கைகளில் கெட்டியான தோலினால் சுற்றப்பட்ட பெட்டி இருந்தது. பொன்னன் அந்தத் தோலை எடுத்தெறிந்தான். பழைய ஆயுதப் பெட்டி - சித்திர வேலைப் பாடமைந்த பெட்டி காணப்பட்டது.
விக்கிரமன் விரைந்து சென்று கையை நீட்டி அந்தப் பெட்டியை ஆவலுடன் வாங்கித் திறந்தான். உள்ளே சிறிதும் மலினமடையாமலிருந்த ஓலைச் சுவடியைக் கண்ணில் ஒத்திக்கொண்டு பெட்டிக்குள் வைத்தான். பிறகு பட்டாக்கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டான். பொன்னனைப் பார்த்துச் சொன்னான்: "பொன்னா! சற்று முன்னால் என் மனத்தில் தகாத கோழை எண்ணங்கள் எல்லாம் உண்டாயின. இந்தச் சோழ நாட்டின் மேலேயே வெறுப்பு உண்டாயிற்று. "இந்த நாட்டுக்கு விமோசனம் ஏது? எப்போதும் பல்லவர்களின் கீழ் அடிமைப்பட்டிருக்க வேண்டியதுதான்!" என்று எண்ணினேன். எதற்காக இவ்வளவு அபாயங்களுக்குத் துணிந்து, இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்தோம் என்று நினைத்தேன் - அந்த மயக்கம், மாயை எல்லாம் இந்தக் கத்தியைக் கண்டவுடன் மாயமாய்ப்போய் விட்டது. பொன்னா! இந்தக் கத்தி ஒரு காலத்தில் உலகை ஆண்டது. கரிகாலச் சோழரும் நெடுமுடிக் கிள்ளியும் இந்தக் கத்தியினால் கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களையெல்லாம் வென்று சோழ மகாராஜ்யத்தை ஸ்தாபித்தார்கள். கரிகாலச் சக்கரவர்த்தியின் காலத்தில் செண்பகத் தீவில் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள் தான் அந்தத் தீவில் இன்று வசிக்கிறார்கள். அத்தகைய மகாவீர புருஷர்களுடைய சந்ததியில் பிறந்தவன் நான். அவர்கள் கையில் பிடித்த வீரவாள் இது. அவர்களால் முடிந்த காரியம் என்னால் ஏன் முடியாது? பொன்னா! இந்தக் கத்தியுடனே என் தந்தை எனக்கு அளித்த இந்தத் தமிழ்மறை என்ன சொல்கிறது? `முயற்சி திருவினையாக்கும்!' ஆகா? அந்தப் புனித வாக்கைக்கூட அல்லவா மறந்துவிட்டேன்! இந்தச் சோழ நாட்டுக்கு இப்போது என்னவோ நேர்ந்துவிட்டது. இங்கே அடிக்கும் காற்றே மனச்சோர்வு தருகிறது. இங்கே இனி ஒரு கணங்கூட நிற்கமாட்டேன். வா, போகலாம்!"
இவ்விதம் விக்கிரமன் பேசிக் கொண்டிருந்தபோது பொன்னன் அவனுடைய முகத்தைப் பார்த்தவண்ணமே பிரமித்து நின்றான். அப்போது விக்கிரமனுடைய முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்த வீரதேஜஸ் அவ்விதம் அவனைப் பிரமிக்கச் செய்தது. பிறகு சட்டென்று அந்தப் பிரமையிலிருந்து நீங்கினவனாய், மளமளவென்று மண்ணைத் தள்ளிக் குழியை மூடினான். அந்த இடத்தின் மேல் மாஞ் சருகுகளைப் பரப்பிய பிறகு இருவரும் காவேரியை நோக்கி விரைந்து சென்றார்கள். நதிக்கரையையடைந்து படகு கட்டியிருந்த இடத்தைப் பார்த்ததும் அவர்களுக்குப் பகீர் என்றது. "இதென்ன, பொன்னா! படகு! எங்கே?" என்றான் விக்கிரமன்.
"ஒருவேளை இடம்மாறி வந்து விட்டோமோ?" என்று பொன்னன் திகைப்புடன் கூறி அங்குமிங்கும் நோக்கினான். ஆனால், வேரில் கட்டிய கயிறு இருப்பதைப் பார்த்ததும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் போயிற்று. கயிற்றின் முடிச்சு எப்படியோ அவிழ்ந்து படகு ஆற்றோடு போயிருக்க வேண்டுமென்றுதான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. "பொன்னா! என்ன யோசிக்கிறாய்? நீந்திப் போய் விடலாமா?" என்றான் விக்கிரமன். "கொஞ்சம் பொறுங்கள், மகாராஜா! கரையோடு ஓடிப்போய் எங்கேயாவது படகு தங்கியிருக்கிறதா என்று இதோ பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டுப் பொன்னன் நதிக்கரையோடு ஓடினான்.
குந்தவியின் நிபந்தனை.28
பொன்னன் மறைந்த கணம் இலைச் சருகுகள் அலையும் சத்தம் கேட்டு விக்கிரமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குந்தவி மரங்களின் மறைவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சற்று நேரம் மௌனமாய் நின்றார்கள். "சோழநாட்டாரின் யோக்கியதை நன்றாய்த் தெரிந்து போய்விட்டது. இப்படித்தான் சொல்லிக் கொள்ளாமல் கூட ஓடிப் போகப் பார்ப்பார்களா?" என்றாள் குந்தவி. விக்கிரமன் மறுமொழி சொல்லாமல் சும்மா இருந்தான்." "வள்ளுவர் பெருமான், `முயற்சி திருவினையாக்கும்' என்று மட்டுந்தானா சொல்லியிருக்கிறார்? `நன்றி மறப்பது நன்றன்று' என்று சொல்லியிருப்பதாக எனக்குக் கேள்வியாயிற்றே?" என்று குந்தவி சொன்னபோது, விக்கிரமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. "உனக்கு எப்படி தெரியும்? ஒருவேளை ...." என்று மேலே பேசத் திணறினான். "ஆமாம்; நீங்கள் குழி தோண்டிப் புதையல் எடுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; எல்லாம் கேட்டுக் கொண்டுமிருந்தேன்." "உண்மையாகவா?" "ஆமாம்; உங்கள் பொய் வேஷத்தையும் தெரிந்து கொண்டேன்."
விக்கிரமன் சற்று யோசித்து, "அப்படியானால் நான் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போக நினைத்ததில் என்ன ஆச்சரியம்? தேசப் பிரஷ்டன் - மரண தண்டனைக்குத் துணிந்து தாய் நாட்டுக்கு வந்தவன் - சொல்லாமல் திரும்பி ஓடப் பார்ப்பது இயல்பல்லவா?" என்றான். "உயிர் இழப்பதற்குப் பயந்துதானே?" "ஆமாம்; இந்த உயிர் இன்னும் கொஞ்சகாலத்துக்கு எனக்குத் தேவையாயிருக்கிறது. என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும், இந்தத் தாய்த் திருநாட்டுக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்வதற்கும் இந்த உயிர் வேண்டியிருக்கிறது...."
"ஆனால் உங்களுடைய உயிர் இப்போது உங்களுடையதல்லவே? மகேந்திர மண்டபத்தில் அந்தப் பழைய உயிர் போய்விட்டது. இப்போது இருப்பது நான் கொடுத்த உயிர் அல்லவா? இது எனக்கல்லவா சொந்தம்?" என்றாள் குந்தவி. விக்கிரமன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு குந்தவியை உருக்கத்துடன் நோக்கி, "நீ சொல்லியது ஒரு விதத்தில் அல்ல; பல விதத்திலும் உண்மை. இந்த உயிர் உன்னுடையதுதான். மகேந்திர மண்டபத்தில் நீ என்னைப் பார்த்துக் காப்பாற்றியதனால் மட்டும் அல்ல; மூன்று வருஷத்துக்கு முன்பு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உன்னைப் பார்த்தபோதே என் உயிரை உன்னுடைய தாக்கிக் கொண்டாய்...." என்றான். "ஆ! இது உண்மையா?" என்றாள் குந்தவி. "ஆமாம். ஆகையினால் உன்னுடைய உயிரையே தான் நீ காப்பாற்றிக் கொண்டாய்...."
"இது உண்மையானால், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடப் பார்த்தீர்களே, அது எப்படி? என்ன நியாயத்தில் சேர்ந்தது?" என்று குந்தவி கடுமையான குரலில் கேட்டாள். "அது தவறுதான். ஆனால், காரணம் உனக்குத் தெரியாதா? உன்னிடம் சொல்லிக் கொண்டால் பிரிய மனம் வராது என்ற பயந்தான் காரணம். நீ விடை கொடுக்காவிட்டால் போக முடியாதே என்ற எண்ணந்தான் காரணம்..." "என்னைப்பற்றி அவ்வளவு கேவலமாக ஏன் எண்ணினீர்கள்? நீங்கள் போவதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்களுடைய கடமையைச் செய்வதற்கு நான் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?" "நான் எண்ணியது பிசகு என்று இப்போது தெரிகிறது. உன்னிடம் நான் எல்லாவற்றையும் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். சொல்லி உன்னுடைய உதவியைக் கோரியிருக்க வேண்டும். மறைக்க முயன்றது பிசகுதான்." "போனது போகட்டும்; இனிமேல் நடக்க வேண்டியதைப் பேசுவோம். உங்கள் படகோட்டி திரும்பிவரும் வரையில் இங்கே உட்காரலாம்" என்றாள் குந்தவி.
படகோட்டி என்றதும் விக்கிரமன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. குந்தவியைச் சிறிது வியப்புடன் நோக்கினான். "இங்கே கட்டியிருந்த படகு எங்கேயென்று தெரியுமா?" என்று கேட்டான். "தெரியும்; ஆற்றோடு போய்விட்டது. படகோட்டிக்கு வீண் அலைச்சல்தான்." "எப்படிப் போயிற்று? ஒரு வேளை நீ...."
"ஆம்; நான்தான் படகின் முடிச்சை அவிழ்த்து விட்டேன். என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போக நினைத்ததற்குத் தண்டனை!" விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "அது தான் முன்னமே சொன்னேனே. உன்னிடம் சொல்லிக் கொண்டால், பிரிந்து போக மனம் வருமோ, என்னவோ என்று பயந்தேன்" என்றான். "அம்மாதிரியெல்லாம் பயந்து கொண்டிருந்தால் உங்கள் மூதாதையான கரிகாலசோழர் தீவாந்திரங்களையெல்லாம் வென்றிருக்க முடியுமா?" என்று குந்தவி கேட்டாள். "முடியாது. ஆகையால்தான் இப்போது தைரியமாக உன்னிடம் விடை கேட்கிறேன், உதவியும் கேட்கிறேன். இந்த நதியைத் தாண்டுவதற்குப் படகும், அப்பால் மாமல்லபுரம் போவதற்குக் குதிரையும் கொடுத்து உதவ வேண்டும்." "கொடுக்கிறேன். ஒரு நிபந்தனை இருக்கிறது." "நிபந்தனையா?" "ஆமாம் கண்டிப்பான நிபந்தனை. போன தடவையைப் போல் என்னைக் கரையில் நிறுத்திவிட்டு நீங்கள் கப்பலில் போய்விடக் கூடாது. நீங்கள் போகும் கப்பலில் என்னையும் அழைத்துப் போக வேண்டும்."
விக்கிரமனுக்கு அளவில்லாத திகைப்பு உண்டாயிற்று. குந்தவியின் மெல்லிய கரத்தைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்த குரலில், "தேவி! என்ன சொன்னாய்? என் காதில் விழுந்தது உண்மையா? அவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கு நான் என்ன செய்து விட்டேன்! உலகமெல்லாம் புகழ் பரவிய மகாபல்லவச் சக்கரவர்த்தியின் ஏக புதல்வியாகிய நீ இந்த தேசப்பிரஷ்டனுடன் கூடக் கடல்கடந்து வருவாயா!" என்றான். குந்தவி காவேரியின் பிரவாகத்தை நோக்கிய வண்ணம், "உங்களுக்கென்ன இவ்வளவு சந்தேகம். பெண் குலத்தைப் பற்றி நீங்கள் இழிவாக நினைக்கிறீர்கள்; அதனாலே தான் சந்தேகப்படுகிறீர்கள்" என்றாள்.
"இல்லவே இல்லை. அருள்மொழியைத் தாயாகப் பெற்ற நான் பெண் குலத்தைப் பற்றி ஒரு நாளும் இழிவாக நினைக்கமாட்டேன். ஆனால் நீ என்னுடன் வருவது எப்படிச் சாத்தியம்? உன் தந்தை.. சக்கரவர்த்தி..சம்மதிப்பாரா?" "என் தந்தை நான் கேட்டது எதையும் இதுவரை மறுத்ததில்லை. இப்போதும் மறுக்கமாட்டார்..." அப்போது, "மகாராஜா!" என்ற குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அந்தக் குரல் பொன்னனுடையதுதான். அவர்கள் உலகை மறந்து பேசிக் கொண்டிருந்த சமயம் பொன்னன் மெதுவாகப் பின்புறமாக வந்து அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தான். கடைசியாக, அவர்கள் பேசிய வார்த்தைகளும் அவன் காதில் விழுந்தன.
விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, "எப்பொழுது வந்தாய், பொன்னா! படகு அகப்படவில்லையே? இந்தத் தேவிதான் படகை அவிழ்த்து விட்டு விட்டாராம். நமக்கு வேறு படகு தருவதாகச் சொல்கிறார்" என்றான். "காதில் விழுந்தது, மகாராஜா! ஆனால், இவ்வளவு தொல்லையெல்லாம் என்னத்திற்கு என்று தான் தெரியவில்லை. தேவி சொல்வதை ஒரு நாளும் சக்கரவர்த்தி தட்டமாட்டார். தங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி..."
குந்தவி வீராவேசத்துடன் எழுந்து பொன்னனுக்கு எதிராக நின்றாள் "என்ன சொன்னாய், படகோட்டி! உங்கள் மகாராஜாவை மன்னித்துக் காப்பாற்றும்படி சக்கரவர்த்தியிடம் நான் சொல்லவேண்டுமா? ஒரு தடவை அந்தத் தவறு நான் செய்தேன்; இனிமேல் செய்யமாட்டேன். இவர் தமது கையில் பிடித்த கத்தியின் வலிமையினால் ஒரு சாண் பூமியை வென்று ராஜாவானால் அந்த சாண் பூமிக்கு நான் ராணியாயிருப்பேன். இவர் உன்னைப்போல படகோட்டிப் பிழைத்து ஒரு குடிசையில் என்னை வைத்தால், உன் மனைவி வள்ளியைப்போல் நானும் அந்தக் குடிசையில் ராணியாயிருப்பேன். இவரை மன்னிக்கும்படியோ, இவருக்குச் சோழ ராஜ்யத்தைக் கொடுக்கும்படியோ சக்கரவர்த்தியை ஒருநாளும் கேட்கமாட்டேன். எனக்காக நான் என் தந்தையிடம் பிச்சை கேட்பேன். ஆனால் இவருக்காக எதுவும் கேட்டு இவருடைய வீரத்துக்கு மாசு உண்டாக்க மாட்டேன்!" என்றாள். பொன்னன், "தேவி" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அவனைப் பேசவிடாமல், குந்தவி மீண்டும் "ஆம் இன்றைய தினம் இவருடைய வேஷம் வெளிப்பட்டு, இவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டாலும் நான் உயிர்ப்பிச்சை கேட்கமாட்டேன். தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் என்னை இவருக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று மட்டும் வரம் கேட்பேன்!" என்றாள். "தேவி; தாங்கள் அவ்விதம் வரம் கேட்க வேண்டி வருமென்றே தோன்றுகிறது. அதோ பாருங்கள்! படகுகளில் வீரர்கள் வருவதை" என்றான் பொன்னன். விக்கிரமனும் குந்தவியும் துணுக்கமடைந்தவர்களாகப் பொன்னன் கை காட்டிய திசையை நோக்கினார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து நாலு படகுகள் வந்து கொண்டிருந்தன. வஸந்தத் தீவில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்கள் இத்தனை நேரமும் அப்படகுகளை மறைத்துக் கொண்டிருந்தன. இப்போதுதான் அவை ஒரு முடுக்கத்தில் திரும்பி அவர்களுடைய கண்ணுக்குத் தெரிந்தன. படகுகளில் பொன்னன் சொன்னபடியே வேல்தாங்கிய வீரர்கள் கும்பலாயிருந்தார்கள். படகுகள் கணத்துக்குக் கணம் கரையை நெருங்கி வந்து கொண்டிருந்தன.
சக்கரவர்த்தி கட்டளை.29
நெருங்கி வந்த படகுகளைப் பார்த்தபடி சற்று நேரம் திகைத்து நின்ற விக்கிரமன், சட்டென்று உயிர் வந்தவனைப் போல் துடித்துப் பொன்னனைப் பார்த்து, "பொன்னா! எடு வாளை!" என்று கூவினான். பொன்னனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். விக்கிரமனுடைய குரல் கேட்டதும், அவன் விரைந்து விக்கிரமன் அருகில் வந்து, "மகாராஜா! எனக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்" என்றான். "வரங்கேட்க நல்ல சமயம் பார்த்தாய், பொன்னா! சீக்கிரம் கேட்டுவிடு. ஆனால், என்னிடம் என்ன இருக்கிறது நீ கேட்பதற்கு?" என்று சிறிது வியப்புடன் கூறினான் விக்கிரமன். "மகாராஜா! மாரப்பபூபதியின் ஆட்களுடன் தாங்கள் சண்டையிடக்கூடாது. அவர்கள் ரொம்பப் பேர், நாமோ இரண்டு பேர்தான்..."
"பொன்னா! நீதானா இப்படிப் பேசுகிறாய்? உனக்கும் சோழ நாட்டு வீர வாசனை அடித்துவிட்டதா?" என்றான் விக்கிரமன். "இல்லை, மகாராஜா! என் உயிருக்கு நான் பயப்படவில்லை. இந்த அற்ப உயிரை எந்த விநாடியும் விட்டுவிடச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் வேறு காரணங்கள் இருக்கின்றன. நாம் இப்போது சண்டையிட்டால் எல்லாம் கெட்டுப் போய்விடும். மகாராஜா! தங்களுடைய அன்னை அருள்மொழித் தேவியைப் பார்க்க வேண்டாமா? இன்னொரு முக்கிய விஷயம். தங்களுடைய மூதாதைகளின் வீரவாளைக் கொண்டு முதன் முதலில் உங்களுடைய சொந்தக் குடிகளையா கொல்லுவீர்கள்?" என்று பொன்னன் கேட்டபோது, விக்கிரமனுடைய முகம் வாடியது.
"சரி பொன்னா! போதும், இனிமேல் ஒன்றும் சொல்ல வேண்டாம். நான் வாளைகூக தொடவில்லை" என்றான். பிறகு குந்தவியைப் பார்த்து, "தேவி! இந்தப் பெட்டியைப் பத்திரமாய் வைத்திருக்க வேண்டும். மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் கொடுக்க வேண்டும்" என்றான். ஆனால் குந்தவியின் செவிகளில் அவன் கூறியது விழுந்ததோ, என்னமோ தெரியாது. அவளுடைய முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. ஆவேசம் வந்தவள் போல் நெருங்கி வந்த படகுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
படகுகள் கரையை அடைந்தன. மாரப்ப பூபதி முதலில் படகிலிருந்து குதித்தான். மரியாதையாகக் குந்தவி தேவியை அணுகி, "பெருமாட்டி! தங்கள் அனுமதியில்லாமல் இங்கே வந்ததற்காக மன்னிக்க வேண்டும். சக்கரவர்த்தியின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக வந்தேன்" என்றான். குந்தவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, "எந்தச் சக்கரவர்த்தி? என்ன கட்டளை?" என்றாள்.
"தங்களுடைய சகோதரர் மகேந்திர பல்லவரின் கட்டளைதான். செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும் ஒற்றனைக் கைப்பற்றி ஜாக்கிரதையாகக் காஞ்சிக்கு அனுப்பும்படிக் கட்டளை இதோ பாருங்கள்!" என்று மாரப்பன் ஓர் ஓலையை நீட்டினான். அதில் மகேந்திரனின் முத்திரையுடன் மேற்கண்ட விதமான கட்டளை எழுதியிருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் குந்தவி, "செண்பகத்தீவின் ஒற்றன் யார்?" என்று கேட்டாள். "இதோ நிற்கிறானே, இவன் தான், தேவி!" "இல்லை; இவர் ஒற்றன் இல்லை. நீர் திரும்பிப் போகலாம்."
"தேவி! இவன் ஒற்றன் இல்லாவிட்டால் வேறு யார்? மனமுவந்து சொல்லவேண்டும்!" என்று மாரப்பன் கள்ள வணக்க ஒடுக்கத்துடன் கூறினான். "பூபதி! யாரைப் பார்த்துக் கேள்வி கேட்கிறாய்? உன்னை மறந்து விட்டாயா?" என்று கண்களில் கனல் பொறி பறக்கக் குந்தவி கேட்டாள். "இல்லை; என்னை நான் மறக்கவில்லை. எனக்கு அவ்வளவாக ஞாபக மறதி மட்டும் கிடையாது. இதோ இவனுடைய முகம்கூடப் பார்த்த முகமாக என் ஞாபகத்தில் இருக்கிறது. ஆம்; இதோ ஞாபகம் வந்துவிட்டது. தேவி! இவன், மகா மேன்மை பொருந்திய தர்ம ராஜாதிராஜ நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்தியினால் தேசப்பிரஷ்ட தண்டனைக்குள்ளானவன் என்பதாய் ஞாபகம் வருகிறது. இவன் ஒற்றன். இல்லையென்றால், தேசப்பிரஷ்டன்! தேசப்பிரஷ்டமானவன் திரும்பி வந்தால் என்ன தண்டனையென்று தங்களுக்கே தெரியும். தேவி! என் கடமையை நான் செய்ய வேண்டும். தர்ம ராஜாதி ராஜாவான பல்லவச் சக்கரவர்த்தி, தம் சொந்தப் புதல்வியின் வார்த்தைக்காகக்கூட நான் என் கடமையில் தவறுவதை ஒப்புக் கொள்ளமாட்டார்" என்றான். குந்தவியின் உடம்பெல்லாம் நடுங்கிற்று; அவளுடைய மார்பு விம்மிற்று.
"சேனாதிபதி! இவர் என் விருந்தினர், இவருக்கு நான் பாதுகாப்பு அளித்திருக்கிறேன். இவருக்கு ஏதாவது நேர்ந்தால்...." என்று கூறி, விக்கிரமனை மறைத்துக் கொள்பவள் போல் அவன் முன்னால் வந்து நின்றாள். மாரப்பன் கலகலவென்று சிரித்தான். "ஆகா! சோழ வம்சத்தின் பெருமையை விளங்க வைக்கப்போகும் வீரசிங்கம் ஒரு பெண்ணின் முந்தானையில் ஒளிந்து கொள்கிறான்!" என்று கூறி மீண்டும் சிரித்தான். நாணத்தினாலும் கோபத்தினாலும் விக்கிரமனுடைய கண்கள் சிவந்தன. அவன் நாலு எட்டாக நடந்து குந்தவிக்கு முன்னால் வந்து நின்று மாரப்பனைப் பார்த்து, "சித்தப்பா! இதோ நான் வரச் சித்தமாயிருக்கிறேன். அழைத்துப் போங்கள்!" என்றான்.
மாரப்பன் கேலிச் சிரிப்புடனே குந்தவியைப் பார்த்து, "ஏழைமேல் ஏன் இவ்வளவு கோபம்? இவனைக் காப்பாற்றித்தான் ஆகவேண்டுமென்றால், தங்கள் தந்தையையோ தமையனாரையோ வேண்டிக் கொண்டால் போகிறது. சக்கரவர்த்தி கருணையுள்ளவர், இவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கப்பமும் செலுத்த ஒப்புக் கொண்டால் கட்டாயம் மன்னித்து விடுவார்" என்றான். இந்த வார்த்தைகள் தான் எதிர்பார்த்தது போலவே விக்கிரமன், குந்தவி இருவருடைய முகங்களிலும் வேதனை உண்டாக்கியதை அறிந்த மாரப்பனுக்குக் குதூகலம் உண்டாயிற்று. விக்கிரமன் உடனே விரைவாகச் சென்று படகில் ஏறிக் கொண்டான்.
குந்தவி விக்கிரமனை மிகுந்த ஆவலுடன் நோக்கினான். தன்னை அவன் திரும்பிப் பார்ப்பானென்றும், தன் கண்களினால் அவனுக்குத் தைரியம் கூறலாமென்றும் அவள் எண்ணியிருக்கலாம். ஆனால் விக்கிரமன் திரும்பிப் பார்க்கவேயில்லை. மாரப்பன் இந்த நாடகத்தைச் சிறிது கவனித்து விட்டுப் பிறகு பொன்னன்மீது தன் பார்வையைச் செலுத்தினான். "அடே படகோட்டி! நீயும் வா; ஏறு படகில்" என்றான். "அவன் ஏன் வரவேண்டும்? பொன்னனைப் பிடிப்பதற்கும் கட்டளையிருக்கிறதா?" என்று குந்தவி கேட்டு மாரப்பனைக் கண்களால் எரித்து விடுபவள் போல் பார்த்தாள். மாரப்பன் அந்தப் பார்வையைச் சகிக்க முடியாமல், "கட்டளையில்லை தேவி! ஆனால், இந்த ஒற்றனுக்கு தேசப் பிரஷ்டனுக்கு இவன் ஒத்தாசை செய்திருகிறான்..." என்றான். "பொன்னன் என்னுடைய ஆள்; எனக்குப் படகோட்ட வந்திருக்கிறான். அவனைக் கொண்டு போக உனக்கு அதிகாரமில்லை, ஜாக்கிரதை!" என்றாள் குந்தவி. மாரப்பன் அவளுடைய தொனியைக் கேட்டுத் தயங்கினான்.
குந்தவி மறுபடியும், "தேசப் பிரஷ்டனுக்கு உதவி செய்ததற்காகப் பிடிப்பதென்றால், என்னை முதலில் பிடிக்க வேண்டும்!" என்றாள். "ஆம்; தேவி! சக்கரவர்த்தியின் கட்டளை வந்தால் அதுவும் செய்வேன்" என்றான் மாரப்பன். பிறகு அவன் படகோட்டிகளைப் பார்த்து, "விடுங்கள்" என்றான். படகுகள் உறையூரை நோக்கி விரைந்து சென்றன.