பொன்னன் பிரிவு.24
பொன்னன் அந்த அதல பாதாளமான அருவிக் குளத்தில் இறங்கிய அதே சமயத்தில், சிவனடியார் அருவியின் தாரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டார். பொன்னனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்லி முடியாது. அவன் மேலே போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றபோது, சிவனடியார் அவனைப் பார்த்து ஏதோ கூறியதுடன் சமிக்ஞையினால் "வா" என்று அழைத்தார். அருவியின் பேரோசையினால் அவர் சொன்னது என்னவென்று பொன்னன் காதில் விழவில்லை ஆனால், சமிக்ஞை புரிந்தது. முன்னால் சுவாமியார் போன மாதிரியே இவனும் குளத்தின் ஓரமாகப் பாறைகளைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறிச் சென்று அவர் நின்ற இடத்தை அடைந்தான். தூரத்தில் நின்று பார்த்தபோது குறுகலாகத் தோன்றிய அருவியின் தாரை உண்மையில் முப்பது அடிக்குமேல் அகலமுள்ளது என்பதைப் பொன்னன் இப்போது கண்டான். சாமியார் அவனுடைய கையைப் பிடித்துப் பாறைச் சுவருக்கும் அருவியின் தாரைக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அழைத்துச் சென்றார். இந்த இடைவெளி சுமார் ஐந்து அடி அகலமுள்ளதாயிருந்தது. மிகவும் மங்கலான வெளிச்சம்; கீழே பாறை வழுக்கல்; கொஞ்சம் கால் தவறினால் அருவியின் தாரையில் அகப்பட்டுக் கொண்டு, அந்தப் பாதாளக் குளத்திற்குள் போகவேண்டியதுதான்! ஆகவே இரண்டு பேரும் நிதானமாகக் காலை ஊன்றி வைத்து நடந்தார்கள்.
நாலைந்து அடி நடந்ததும் சிவனடியார் நின்று பாறைச் சுவரில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே கிட்டதட்ட வட்ட வடிவமாக ஒரு பெரிய துவாரம் தெரிந்தது. அந்தத் துவாரம் சாய்வாக மேல் நோக்கிச் செல்வதாகத் தெரிந்தது. ஓர் ஆள் அதில் கஷ்டமில்லாமல் புகுந்து செல்லலாமென்று தோன்றியது. ஆனால் அந்தத் துவாரம் எங்கே போகிறது? எவ்வளவு தூரம் போகிறது? ஒன்றும் தெரியவில்லை. ஐந்தாறு அடிக்கு மேல் ஒரே இருட்டாயிருந்தது.
சிவனடியார் பொன்னனுக்குச் சைகை காட்டித் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லிவிட்டு அந்தத் துவார வழியில் ஏறத் தொடங்கினார். சாய்வான மலைப்பாறையில் ஏறுவது போல் கைகளையும் கால்களையும் உபயோகப்படுத்தி ஏறினார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறினான். இன்னதென்று தெரியாத பயத்தினால் அவனுடைய நெஞ்சு பட், பட் என்று அடித்துக் கொண்டது. சற்று ஏறியதும் ஒரே காரிருளாயிருந்த படியால் அவனுடைய பீதி அதிகமாயிற்று. ஆனால், கையினால் பிடித்துக் கொள்ளவும், காலை ஊன்றிக் கொள்ளவும் சௌகரியமாக அங்கங்கே பாறை வெட்டப்பட்டிருப்பதாகத் தெரிந்த போது, கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. இவ்விதம் சிறிது நேரம் சென்ற பிறகு அந்தக் குகை வழியில் மேலேயிருந்து கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. பிறகு வெளிச்சம் நன்றாய்த் தெரிந்தது. சிவனடியார் மேலே ஏறி அப்பால் நகர்ந்தார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறி, அடுத்த நிமிஷம் வெட்ட வெளியில் மலைப்பாறை மீது நின்றான். சுற்று முற்றும் பார்த்தான் ஆகா, அது என்ன அற்புதக் காட்சி!
மலை அருவி விழுந்த செங்குத்தான பாறையின் விளிம்பின் அருகில் அவர்கள் நின்றார்கள். அங்கே பாறையில் கிணறு மாதிரி வட்ட வடிவமாக ஒரு பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தின் நடுமத்தியில்தான் குகை வழி ஆரம்பமாகிக் கீழே சென்றது. பள்ளத்துக்கு இடதுபுறத்தில் கொஞ்சம் தூரத்தில் அருவி 'சோ' என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தது. அருவி விழுந்த திசைக்கு எதிர்ப்புறமாகப் பார்த்தால், கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. மூன்று பக்கமும் சுவர் வைத்தாற் போன்ற மலைத்தொடர்கள். நடுவில் விஸ்தாரமான சமவெளி அந்தச் சமவெளியில் கண்ணுக்கெட்டிய தூரம் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட காட்டுக் கொன்றை மரங்கள். எங்கே பார்த்தாலும் பூ! பொன்னிற பூ!
"பார்த்தாயா, பொன்னா! எப்பேர்ப்பட்ட அருமையான இடம்! இந்த இடத்தைக் கொண்டு போய்க் கடவுள் எவ்வளவு இரகசியமான இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறார், பார்த்தாயா?" என்றார் சிவனடியார். "ஆமாம், சுவாமி! எங்கள் பார்த்திப மகாராஜாவின் சித்திர மண்டபத்தைப் போல!" என்றான் பொன்னன். சிவனடியார் குறுநகை புரிந்தார். "ஆனால் பொன்னா! பகவான் இவ்வளவு அழகைச் சேர்த்து ஒளித்து வைத்திருக்கும் இந்த இடத்தில், மகா பயங்கரமான கோர கிருத்யங்கள் எல்லாம் நடக்கின்றன." "ஐயோ! சுவாமி! ஏன் அவ்விதம் சொல்கிறீர்கள்?" "ஆமாம்; வெகு நாளாய் நான் அறிய விரும்பியதை இப்போது அறிந்தேன். மகா கபால பைரவரின் இருப்பிடம் இந்த மலை சூழ்ந்த பள்ளத்தாக்கில்தான் எங்கேயோ இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து விட்டுத்தான் நான் இங்கிருந்து திரும்பி வருவேன், நீ ...."
"நானுந்தான் சுவாமி! உங்களைத் தனியே விட்டு விட்டு நான் போய் விடுவேன் என்று நினைத்தீர்களா?" "இல்லை பொன்னா! நீ போக வேண்டும். உனக்கு வேறு காரியம் இருக்கிறது. மிகவும் முக்கியமான காரியம்...." "எங்கள் ராணியைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் முக்கியமான காரியம் என்ன சுவாமி?"
"அதற்குத்தானே நான் வந்திருக்கிறேன், பொன்னா! ஆனால் ராணியைக் காப்பாற்றினால் மட்டும் போதுமா? 'என் பிள்ளை எங்கே?' என்று அவர் கேட்டால் என்ன பதில் சொல்வது? இளவரசரும் இப்போது பெரிய அபாயத்தில்தான் இருக்கிறார். மாரப்பனுக்கும் மகா கபால பைரவருக்கும் நடந்த சம்பாஷணையை ஞாபகப்படுத்திக் கொள். மாரப்பனுக்கு ஒருவேளை தெரிந்து போனால், அவன் என்ன செய்வானோ?..."
"சக்கரவர்த்தித் திருக்குமாரியின் இஷ்டத்துக்கு விரோதமாய் என்ன நடந்துவிடும், சுவாமி?" "ஏன் நடக்காது? தேவியின் சகோதரன் மகேந்திரன் கூட உறையூரில் இல்லை, பொன்னா! மாரப்பன் இப்போது சக்கரவர்த்தி பதவிக்கல்லவா ஆசை கொண்டிருக்கிறான்? அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். மேலும் குந்தவியே ஒருவேளை அவரைச் சோழநாட்டு இளவரசர் என்று தெரிந்து கொண்டு மாரப்பனிடம் ஒப்படைத்து விடலாமல்லவா?" "ஐயோ!" "அதனால்தான் நீ உடனே உறையூருக்குப் போக வேண்டும்." "ஆனால், உங்களை விட்டுவிட்டு எப்படிப் போவேன்? ஆ! அந்த மகாகபால பைரவன் உங்களைப் பலிக்குக் கொண்டு வரும்படி சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது." "என்னைப் பற்றிக் கவலை வேண்டாம், பொன்னா! என் வாழ்நாளில் இதைப்போல எத்தனையோ அபாயங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அந்தக் கபால பைரவனை நேருக்கு நேர் நான் தனியாகப் பார்க்கத்தான் விரும்புகிறேன். அவனைப் பற்றி நான் கொண்ட சந்தேகத்தை ருசுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்!" "என்ன சந்தேகம், சுவாமி?"
"சமயம் வரும்போது உனக்குச் சொல்வேன், பொன்னா! இப்போது நீ உடனே வந்த வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். நேரே உறையூருக்குப் போக வேண்டும். இளவரசரைப் பற்றிச் சந்தேகம் தோன்றாமலிருந்தால், அவர் அங்கேயே இருக்கட்டும். ஏதாவது அபாயம் ஏற்படும் என்று தோன்றினால், அவரை ஜாக்கிரதையாக நீ அழைத்துக் கொண்டு மாமல்லப்புரத்துக்கருகில் என்னை நீ சந்தித்த சிற்ப மண்டபத்துக்கு வந்து சேர வேண்டும். அங்கே வந்து உங்களை நான் சந்திக்கிறேன்!"
"தாங்கள் வராவிட்டால்....?" "அடுத்த பௌர்ணமி வரையில் பார். அதற்குள் நான் உறையூரிலாவது மாமல்லபுரத்துச் சிற்ப மண்டபத்திலாவது வந்து உங்களைச் சந்திக்காவிட்டால், நீ என்னைத் தேடிக் கொண்டு வரலாம்." "அப்படியே சுவாமி!" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரிடம் பிரியாவிடை பெற்று அந்தத் துவாரத்துக்குள் இறங்கிச் சென்றான். கீழே வந்து அருவிக் குளத்தைத் தாண்டிக் கரையேறியதும் மேலே ஏறிட்டுப் பார்த்தான். அருவிப் பாறையின் விளிம்பில் சிவனடியார் நின்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் அவரை நோக்கிக் கைகூப்பி நமஸ்கரிக்க, அவரும் கையை நீட்டி ஆசீர்வதித்தார். பிறகு பொன்னன் விரைவாக அருவி வழியில் கீழே இறங்கிச் செல்லலுற்றான்
வள்ளி சொன்ன சேதி.25
வழியில் எவ்வித அபாயமும் இன்றிப் பொன்னன் உறையூர் போய்ச் சேர்ந்தான். முதலில் தன் அத்தை வீட்டில் விட்டு வந்த வள்ளியைப் பார்க்கச் சென்றான். வள்ளி இப்பொழுது பழைய குதூகல இயல்புள்ள வள்ளியாயில்லை. ரொம்பவும் துக்கத்தில் அடிபட்டு உள்ளமும் உடலும் குன்றிப் போயிருந்தாள். அவள் பக்தியும் மரியாதையும் வைத்திருந்த சோழ ராஜ குடும்பத்துக்கு ஒன்றன்பின் ஒன்றாய் நேர்ந்த விபத்துக்களெல்லாம் ஒருபுறமிருக்க, இப்போது கொஞ்ச நாளாய்ப் பொன்னனையும் பிரிந்திருக்க நேர்ந்தபடியினால் அவள் அடியோடு உற்சாகம் இழந்திருந்தாள். எனவே, பல தினங்களுக்குப் பிறகு பொன்னனைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது.
"வா! வா!" என்று சொல்லி அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, "இளவரசர் போனது போல் நீயும் எங்கே கப்பல் ஏறிப் போய்விட்டாயோ, அல்லது ஒருவேளை உன்னை யாராவது காளிக்குத்தான் பலிகொடுத்து விட்டார்களோ என்று பயந்து போனேன். தினம் காளியம்மன் கோயிலுக்குப் போய், 'என் உயிரை எடுத்துக் கொண்டு என் புருஷனைக் காப்பாற்று' என்று வேண்டிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாய் வந்தாயே! என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய்? நல்ல சேதிதானே?" என்று மூச்சு விடாமல் பேசினாள். "நல்ல சேதி, கெட்ட சேதி, கலப்படமான சேதி எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இப்போது சொல்ல முடியாது. பசி பிராணன் போகிறது, வள்ளி! உன் கையால் கம்பு அடை தின்று எவ்வளவு காலம் ஆகிவிட்டது! அகப்பட்டபோது அகப்பட்டதைத் தின்று...."
"அப்படியெல்லாம் பட்டினி கிடந்ததினால்தான் இன்னும் ஒரு சுற்று அதிகமாய்ப் பெருத்துவிட்டாயாக்கும். பாவம்! கவலை ஒரு பக்கம்; நீ என்ன செய்வாய்?" என்று பொன்னனை ஏற இறங்கப் பார்த்தாள். "அப்படியா சமாசாரம்? நான் பெருத்திருக்கிறேனா, என்ன? ஆனாலும் நீ ரொம்பவும் இளைத்திருக்கிறாய் வள்ளி! ரொம்பக் கவலைப்பட்டாயா, எனக்காக?" என்றான் பொன்னன்.
"ஆமாம்; ஆனால் என்னத்துக்காகக் கவலைப்பட்டோம் என்று இப்போது தோன்றுகிறது. அதெல்லாம் அப்புறம் ஆகட்டும். நீ போய்விட்டு வந்த சேதியை முதலில் சொல்லு. சொன்னால் நானும் ஒரு முக்கியமான சேதி வைத்திருக்கிறேன்" என்றாள். "சுருக்கமாகச் சொல்லுகிறேன். நமது விக்கிரம மகாராஜா தாய்நாட்டுக்குத் திரும்பி, வந்திருக்கிறார்...."
"என்ன? என்ன? நிஜமாகத்தானா?" என்று சொல்லி ஆவலுடன் கேட்டாள். "ஆமாம்; நானே இந்தக் கண்களால் அவரைப் பார்த்துப் பேசினேன்..." "இப்போது எங்கேயிருக்கிறார்...?" "அதுதான் சொல்ல மாட்டேன், இரகசியம்." "சரி, அப்புறம் சொல்லு."
"ராணி உள்ள இடத்தைக் கிட்டதட்டக் கண்டு பிடித்தாகிவிட்டது. இப்போது சிவனடியார் ராணியைத் தேடிக் கொண்டிருக்கிறார். இதற்குள் அவசியம் கண்டுபிடித்திருப்பார்." "ஆகா! சிவனடியாரா?" "வள்ளி! நீ பொல்லாத கள்ளி! சிவனடியார் யார் என்று என்னிடம் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றினாயல்லவா? அவருடைய பொய் ஜடையைப் பிய்த்து எறிந்து அவர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்!" "நிஜமாகவா? யார் அவர்?" என்றாள் வள்ளி. "யாரா? வேறு யார்? செத்துப் போனானே உன் பாட்டன் வீரபத்திர ஆச்சாரி, அவன்தான்!"
வள்ளி புன்னகையுடன், "இப்படியெல்லாம் சொன்னால் போதாது, நீ இங்கேயிருந்து கிளம்பினாயே, அதிலிருந்து ஒவ்வொன்றாய்ச் சொல்லு, ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டும்" என்றாள். "நீ அடுப்பை மூட்டு" என்றான் பொன்னன். வள்ளி அடுப்பை மூட்டிச் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பொன்னன் தான் போய் வந்த வரலாற்றையெல்லாம் விவரமாகக் கூறினான். கடைசியில், "நீ என்னமோ சேதி சொல்லப் போகிறேன் என்றாயே, அதைச் சொல்லு!" என்றான்.
வள்ளி சொன்னாள்; - "நாலு நாளைக்குள் மாரப்பன் இங்கே ஐந்து தடவை வந்து விட்டான். அவன்தான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதியாம். அவனுடைய ஜம்பம் பொறுக்க முடியவில்லை. `வஸந்த மாளிகையில் யாரோ ஒரு இரத்தின வியாபாரி வந்திருக்கிறானாமே? அவன் செண்பகத் தீவிலிருந்து வந்தவனாமே?' என்று என்னவெல்லாமோ கேட்டு என் வாயைப் பிடுங்கிப் பார்த்தான். எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்து விட்டேன். அப்புறம் இங்கே அடிக்கடி வந்து, நீ திரும்பி வந்து விட்டாயா என்று விசாரித்து விட்டு போனான். இன்றைக்கும் கூட ஒருவேளை வந்தாலும் வருவான்."
இதைக் கேட்ட பொன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, "வள்ளி! தாமதிப்பதற்கு நேரமில்லை. இன்று சாயங்காலமே நான் வஸந்தத் தீவுக்குப் போக வேண்டும். நம்முடைய குடிசையைப் பூட்டி வைத்திருக்கிறாயல்லவா! குடிசையில் படகு - ஜாக்கிரதையாயிருக்கிறதல்லவா?" என்று கேட்டான். "இருக்கிறது. ஆனால் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தீவுக்குப் போவாய்?" என்றாள். "குந்தவி தேவி இங்கே வந்தால் நான் படகு செலுத்த வேண்டும் என்று முன்னமே சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்காகக் கேட்டுப் போக வந்தேனென்று சொல்கிறேன்." "ஆனால், சாமியார் இன்னும் எதற்காக இம்மாதிரி சங்கடங்களை எல்லாம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. அவருடைய வேஷம் எப்போது நீங்குமோ?"
"நானும் இதையேதான் கேட்டேன். பார்த்திப மகாராஜாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான் இன்னமும் வேஷம் போடுவதாகச் சொல்கிறார்." பிறகு பொன்னனும், வள்ளியும் சீக்கிரத்திலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு, உறையூரிலிருந்து புறப்பட்டுக் காவேரி நதிப்பாதையில் சென்றார்கள். அவர்களுடைய குடிசையை அடைந்ததும், கதவைத் திறந்து, உள்ளே இருந்த படகை இரண்டு பேருமாகத் தூக்கிக் கொண்டுபோய் நதியில் போட்டார்கள். பொன்னன், "பொழுது சாய்வதற்குள் திரும்பி வந்துவிடுவேன் வள்ளி, கவலைப்படாதே" என்று சொல்லிவிட்டுப் படகைச் செலுத்தினான்.
பல தினங்களுக்குப் பிறகு மறுபடியும் காவேரியில் படகு விட்டது பொன்னனுக்கு மிகுந்த உற்சாகத்தையளித்தது. ஆனாலும் பார்த்திப மகாராஜாவின் காலத்தில் இராஜ குடும்பத்துக்குப் படகு செலுத்தியது நினைவுக்கு வந்து அவனுடைய கண்களைப் பனிக்கச் செய்தது. தீவிலே இளவரசரைப் பார்ப்போமா? அவருக்கு உடம்பு சௌகரியமாகி இருக்குமா? அவரைத் தனியாகப் பார்த்துப் பேச முடியுமா? - இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்தவனாய்ப் படகு விட்டுக் கொண்டே போனவன் திடீரென்று கரைக்கு அருகே வந்து விட்டதைக் கவனித்தான். படகு வந்த இடம் தீவில் ஒரு மூலை. ஜனசஞ்சாரம் இல்லாத இடம். அந்த இடத்தில் படகை கட்டிவிட்டுத் தீவுக்குள் ஜாக்கிரதையாகப் போய் புலன் விசாரிப்பதென்று அவன் தீர்மானித்திருந்தான்.
மறுதடவை அவன் தீவின் கரைப்பக்கம் பார்த்தபோது அவனுடைய கண்களை நம்ப முடியவில்லை. அங்கே விக்கிரம மகாராஜாவே நின்று கொண்டிருந்தார். ஒரு கால் தண்ணீரிலும் ஒரு கால் கரையிலுமாக நின்று படகையும் பொன்னனையும் ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தார். பொன்னன் கோலை வாங்கிப் போட்டு இரண்டே எட்டில் படகை அவர் நின்ற இடத்துக்குச் சமீபமாகக் கொண்டு வந்தான்.
படகு நகர்ந்தது!.26
படகு கரையோரமாக வந்து நின்றதும் பொன்னன் கரையில் குதித்தான். விக்கிரமன் தாவி ஆர்வத்துடன் பொன்னனைக் கட்டிக் கொண்டான். "மகாராஜா! மறுபடியும் தங்களை இவ்விதம் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைத்திருந்ததே!" என்று சொல்லிப் பொன்னன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். விக்கிரமன், "பொன்னா! சமய சஞ்சீவி என்றால் நீதான். இங்கு நின்றபடியே உன்னுடைய குடிசையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு உன் படகைப் பார்த்திராவிட்டால், நீந்தி அக்கரைக்கு வருவதற்கு முயன்றிருப்பேன்.... அதோ பார், பொன்னா! படகு நகர்கிறது முதலில் அதைக் கட்டு" என்றான்.
பொன்னன் ஓடிப்போய்ப் படகைப் பிடித்து இழுத்துக் கரையோரமிருந்த ஒரு மரத்தின் வேரில் அதைக் கயிற்றினால் கட்டிவிட்டு வந்தான். இருவரும் ஜலக்கரையில் மரத்தடியில் உட்கார்ந்தார்கள். "பொன்னா! அப்புறம் என்ன செய்தி சொல்லு! அந்தக் காட்டாற்றங்கரையில் நடந்ததெல்லாம் எனக்குச் சொப்பனம்போல் தோன்றுகிறது. இன்னுங்கூட நான் கனவு காண்கிறேனா அல்லது உண்மையாகவே நமது அருமைக் காவேரி நதிக்கரையில் இருக்கிறேனா என்று சந்தேகமாயிருக்கிறது. நீ எப்போது என்னைப் பிரிந்து சென்றாய்? ஏன் பிரிந்து போனாய்?" என்று விக்கிரமன் கேட்டான்.
"ஐயோ, மகாராஜா; நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்து வைத்தியனை அழைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது, உங்களைக் காணவில்லை, அப்போது எனக்கு எப்படியிருந்தது தெரியுமா?" "வைத்தியனை அழைத்துவரப் போனாயா? எப்போது? எல்லாம் விவரமாய்ச் சொல்லு, பொன்னா!" "அன்று ராத்திரி மகேந்திர மண்டபத்தில் நாம் படுத்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா, மகாராஜா?" "ஆமாம், ஞாபகம் இருக்கிறது, ஐயோ! அன்றிரவை நினைத்தாலே என்னவோ செய்கிறது, பொன்னா!"
"மறுநாள் காலையில், நாம் உறையூருக்குக் கிளம்புவதென்று தீர்மானித்துக் கொண்டல்லவா படுத்தோம்? அவ்விதமே மறுநாள் அதிகாலையில் நான் எழுந்திருந்தேன்; உங்களையும் எழுப்பினேன். ஆனால் உங்களுக்குக் கடும் ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. உங்களால் நடக்க முடியவில்லை; சற்று நடந்து பார்த்துவிட்டுத் திரும்பி வந்து மண்டபத்தில் படுத்துக் கொண்டீர்கள். நேரமாக ஆக, உங்களுக்கு ஜுரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. நான் என்ன தவியாய்த் தவித்தேன் தெரியுமா? தங்களைத் தனியாய் விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. பக்கத்தில் சும்மா இருப்பதிலும் உபயோகமில்லை. கடைசியில், பல்லைக் கடித்துக் கொண்டு வைத்தியனைக் கூட்டிவரக் கிளம்பினேன். வைத்தியன் லேசில் கிடைத்தானா? எப்படியோ தேடிப் பிடித்து ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால், மண்டபத்தில் உங்களைக் காணோம்! எனக்குப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டது..."
"அப்புறம் என்னதான் செய்தாய்?" என்று விக்கிரமன் கேட்டான். பொன்னன் பிறகு தான் அங்குமிங்கும் ஓடி அலைந்தது, குள்ளனைக் கண்டது, குந்தவிதேவி தன் பல்லக்கில் அவரை ஏற்றிக் கொண்டு போனதைத் தெரிந்து கொண்டது. பராந்தகபுரம் வரையில் தொடர்ந்து வந்து கண்ணால் பார்த்துத் திருப்தியடைந்து, பிறகு மாமல்லபுரம் போய்ச் சிவனடியாரை சந்தித்தது. அவரும் தானுமாகக் கொல்லி மலைச்சாரலுக்கு போனது. இரகசிய வழியைக் கண்டுபிடித்தது, சிவனடியாரை மலைமேல் விட்டுவிட்டுத் தான் மட்டும் உறையூர் வந்தது ஆகிய விவரங்களை விவரமாகக் கூறினான். பொன்னன் சிவனடியாரைச் சிற்ப மண்டபத்தில் சந்தித்த செய்தி விக்கிரமனுக்கு வியப்பை அளித்தது. "பொன்னா! அந்தச் சிற்ப மண்டபத்தில்தானே ஒற்றர் தலைவன் வீரசேனனுடன் நான் தங்கியிருந்தேன்? அதே இடத்தில் நீ சிவனடியாரைச் சந்தித்தது வியப்பாயிருக்கிறது பொன்னா! எனக்கு ஒரு சந்தேகங்கூட உண்டாகிறது" என்றான் விக்கிரமன். "என்ன மகாராஜா, சந்தேகம்?" "அந்த ஒற்றர் தலைவன் ஒரு வேளை நமது சிவனடியார் தானோ என்று."
"ஆம், மகாராஜா! ஒற்றர் தலைவன் வீரசேனர்தான் சிவனடியார். நான் மாமல்லபுரத்துச் சாலையிலிருந்து குறுக்குவழி திரும்பியபோது எனக்கு முன்னால் ஒரு குதிரை வீரன் போவதைப் பார்த்தேன். தாங்கள் சொன்ன அடையாளங்களிலிருந்து அவர்தான் வீரசேனர் என்று ஊகித்துக் கொண்டேன். அவரே சிற்ப வீட்டுக்குள் நுழைந்துவிட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம் வெளியே வந்தபோது ஜடாமகுடத்துடன் சிவனடியாராக வந்தார்!"
"ஐயோ! அப்படியானால் நான் உண்மையில் யார் என்று பல்லவச் சக்கரவர்த்தியின் ஒற்றர் தலைவனுக்குத் தெரியும்.... ஆனால் ஆதி முதல் நமக்கு உதவி செய்து வந்திருப்பவர் அவர்தான் அல்லவா? இப்போது என்னைக் காட்டிக்கொடுத்து விடுவாரா?" "ஒரு நாளும் மாட்டார், சுவாமி! அவர் பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றர் படைத்தலைவரான போதிலும், போர்க்களத்தில் தங்கள் தந்தைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவரால் ஒரு அபாயமும் இல்லை ஆனால்...." "ஆனால் என்ன, பொன்னா?"
"வேறொரு பெரும் அபாயம் இவ்விடத்தில் இருக்கிறது. மாரப்ப பூபதிதான் இப்போது சோழ நாட்டின் சேனாதிபதி, தெரியுமல்லவா? அவருக்குத் தாங்கள் இங்கு வந்திருப்பது பற்றி எவ்விதமோ சந்தேகம் உதித்திருக்கிறது மகாராஜா! நாம் உடனே கிளம்பிப் போக வேண்டும்." "இங்கே இருப்பதில் அதைவிடப் பெரிய அபாயம் வேறொன்று இருக்கிறது. பொன்னா! நாம் உடனே கிளம்ப வேண்டியதுதான்" என்று விக்கிரமன் கூறிய போது அவனுடைய முகத்தில் ஒரு விதமான கிளர்ச்சியைப் பொன்னன் கண்டான். "அது என்ன அபாயம், மகாராஜா?" என்று கேட்டான்.
"ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளில் உள்ள அபாயந்தான்" என்று கூறி விக்கிரமன் காவேரி நதியைப் பார்த்தான். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு விக்கிரமன் சொன்னான்:- "உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்? பொன்னா! மூன்று வருஷத்துக்கு முன்னால் என்னை இங்கிருந்து சிறைப்படுத்திக் கொண்டு போன போது காஞ்சி நகரின் வீதியில் பல்லக்கில் சென்ற ஒரு பெண் என்னைப் பார்த்தாள். அவளே மறுபடியும் மாமல்லபுரத்தில் நான் கப்பல் ஏறியபோதும் கடற்கரையிலே நின்று என்னைக் கனிவுடன் பார்த்தாள். செண்பகத்தீவுக்குப் போய் மூன்று வருஷ காலமான பிறகும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. அதிசயத்தைக் கேள், பொன்னா! அதே பெண்தான் மகேந்திர மண்டபத்தில் நான் ஜுரமடித்துக் கிடந்தபோது என்னைப் பார்த்து இங்கே எடுத்து வந்து காப்பாற்றினாள்."
"மகாராஜா! அப்பேர்ப்பட்ட புண்யவதி யார்? அந்தத் தேவியைப் பார்க்க எனக்கு ஆவலாயிருக்கிறது! பார்த்து எங்கள் மகாராஜாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக நன்றி செலுத்த வேண்டும்." "பொன்னா! விஷயத்தை அறிந்தால் நன்றி என்கிற பேச்சையே எடுக்கமாட்டாய்." "ஐயோ, அது என்ன?" "மூன்று நாளாக என் மனதில் ஒரு பெரிய போராட்டம் நடந்து வருகிறது, பொன்னா! கதைகளிலே நான் கேட்டிருக்கிறேன், காவியங்களிலே படித்திருக்கிறேன், பெண் மோகத்தினால் அழிந்தவர்களைப்பற்றி! அந்தக் கதி எனக்கும் நேர்ந்துவிடும் போலிருக்கிறது. மேனகையின் மோகத்தினால் விசுவாமித்திரர் தபஸை இழந்தாரல்லவா? அம்மாதிரி நானும் ஆகிவிடுவேனோ என்று பயமாயிருக்கிறது. அந்தப் பெண் பொன்னா, அவ்வாறு என்னை அவளுடைய மோக வலைக்கு உள்ளாக்கி விட்டாள்...!" பொன்னன் குறுக்கிட்டு, "மகாராஜா! நான் படிக்காதவன்; அறியாதவன் இருந்தாலும் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், அனுமதி தரவேண்டும்" என்றான். "சொல்லு பொன்னா? உனக்கு அனுமதி வேண்டுமா?" "விசுவாமித்திர ரிஷி மேனகையினால் கெட்டதை மட்டும் சொல்கிறீர்கள். ஆனால், பெண்களால் மேன்மையடைந்தவர்கள் இல்லையா, மகாராஜா! சீதையால் ராமர் மேன்மையடையவில்லையா? கிருஷ்ணன் போய் ருக்மணியை எதற்காகக் கவர்ந்து கொண்டு வந்தார்? அர்ச்சுன மகாராஜா சுபத்திரையையடைந்ததினால் கெட்டுப் போய் விட்டாரா? முருக்கடவுள் வள்ளியைத் தேடித் தினைப்புனத்துக்கு வந்தது ஏன்? அதனால் அவர் கெடுதலை அடைந்தாரா?"
"பொன்னா! சரியான கேள்விதான் கேட்கிறாய். சீதையினால் ராமரும், ருக்மணியால் கிருஷ்ணனும், சுபத்திரையினால் அர்ச்சுனனும், வள்ளியினால் முருகனும் மேன்மையடைந்தது மட்டுமல்ல. அருள்மொழி ராணியினால் பார்த்திப மகாராஜாவும், வள்ளியினால் பொன்னனும் மேன்மையடைகிறார்கள்." "அப்படிச் சொல்லுங்கள்! பின்னே, பெண் மோகம் பொல்லாதது என்றெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்?"
"கேள், பொன்னா! பெண் காதலினால் மனிதர்கள் சிலர் தேவர்களாகியிருக்கிறார்கள், அவர்கள் பாக்கியசாலிகள். ஆனால், தேவர்கள் சிலர் பெண் காதலினால் தேவத்தன்மையை இழந்து மனுஷ்யர்களிலும் கேடு கெட்டவர்களாகியிருக்கிறார்கள். நான் அத்தகைய துர்ப்பாக்கியன். என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட பெண் அத்தகையவளாயிருக்கிறாள். நான் என்னுடைய தர்மத்தையும், என்னுடைய பிரதிக்ஞையையும் கைவிடுவதற்கு அவளுடைய காதல் தூண்டுகோலாயிருக்கிறது. ஜுரம் குணமானதிலிருந்து எனக்கு அந்தப் பெண்ணின் நினைவைத் தவிர வேறு நினைவேயில்லை. அவளைப் பிரிந்து ஒரு நிமிஷமாவது உயிர் வாழ முடியாதென்று தோன்றுகிறது. அவளுக்காக சுவர்க்கத்தைக்கூடத் தியாகம் செய்யலாமென்று தோன்றும் போது, சோழ நாடாவது சுதந்திரமாவது? அவளுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் காஞ்சி நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டினால்தான் என்ன?"
பொன்னனுக்கு தூக்கி வாரிப் போட்டது. "விக்கிரமனுக்கு இது கடைசித் சோதனை" என்று சிவனடியார் கூறியது அவனுக்கு நினைவு வந்தது. "ஐயோ! என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? உறையூர்ச் சித்திர மண்டபத்தில் பார்த்திப மகாராஜாவிடம் தாங்கள் செய்த சபதம் ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டான்.
"ஞாபகம் இருக்கிறது பொன்னா! இன்னும் மறந்து போகவில்லை. ஆனால், எத்தனை நாளைக்கு ஞாபகம் இருக்குமோ, தெரியாது. தினம் தினம் என்னுடைய உறுதிகுலைந்து வருகிறது. ஆகையினால்தான் உடனே கிளம்பி விடவேண்டுமென்று சொல்கிறேன். இப்போதே உன்னுடன் வரச் சித்தமாயிருக்கிறேன்; கிளம்பலாமா?" என்றான் விக்கிரமன்.
"கிளம்பலாம் சுவாமி! ஆனால் இந்தத் தீவில் நமக்கு ஒரு காரியம் இருக்கிறதே! மகாராணி கொடுத்த பெட்டியை இங்கே புதைத்து வைத்திருக்கிறேன்...." "பார்த்தாயா! அதைக்கூட மறந்துவிட்டேன். இன்னும் இரண்டு நாள் போனால் வந்த காரியத்தையே மறந்து விடுவேன், என்னையேகூட மறந்துவிடுவேன்! இன்றைக்கு அந்தப் பெண் வருவதற்குள் நாம் போய்விட வேண்டும். பெட்டியை எங்கே புதைத்திருக்கிறாய்?" என்று விக்கிரமன் பரபரப்புடன் கேட்டான். "சமீபத்தில் தான் இருக்கிறது, சுவாமி!" "தோண்டி எடுக்க வேண்டுமல்லவா?" "முன் ஜாக்கிரதையாக மண் வெட்டியும் கடப்பாறையும் கொண்டு வந்திருக்கிறேன்" என்று சொல்லிப் பொன்னன் படகின் அடியிலிருந்து அவற்றை எடுத்துக் கொண்டு வந்தான். இரண்டு பேரும் விரைவாக நடந்து அந்த அடர்ந்த மாந்தோப்புக்குள்ளே போனார்கள்.
அவர்கள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் சமீபத்திலிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து குந்தவிதேவி வெளியில் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நதிக் கரையில் படகு கட்டியிருந்த இடத்துக்குச் சென்றாள். இன்னும் ஒரு கள்ளப் பார்வை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, படகை மரத்தின் வேருடன் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டாள். படகு மெதுவாக நகர்ந்தது. பிறகு வேகமாய் நகர்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் வெள்ளப் பிரவாகத்தில் அகப்பட்டுக் கொண்டு அதிவேகமாய்ச் சுழன்று செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவியின் முகத்தில் குறுநகை பூத்தது.