நிஜமாக நீதானா?.22
மரத்தடியில் வந்து நின்ற குந்தவிதேவி சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள். விக்கிரமன் திரும்பிப் பார்க்கும் வழியாக இல்லை. காவேரியின் நீர்ப் பிரவாகத்திலிருந்து அவன் கண்களை அகற்றவில்லை. ஒரு சிறு கல்லை எடுத்து விக்கிரமனுக்கு அருகில் ஜலத்தில் போட்டாள். 'கொடக்' என்ற சத்தத்துடன் கல் அப்பிரவாகத்தில் விழுந்து முழுகிற்று. சிறு நீர்த் துளிகள் கிளம்பி விக்கிரமன் மேல் தெறித்தன.
குந்தவியின் யுக்தி பலித்தது. விக்கிரமன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய கண்கள் அகல விரிந்தன. கண் கொட்டாமல் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கண்களாலேயே அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான். அவனுடைய உதடுகள் சற்றுத் திறந்தன. ஏதோ பேச யத்தனிப்பது போல். ஆனால், வார்த்தை ஒன்றும் வரவில்லை.
ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் திரும்பிக் காவேரியின் பிரவாகத்தை நோக்கினான். குந்தவி இன்னும் சற்று நேரம் நின்றாள். பிறகு மரத்தடியிலிருந்து வந்து நதிக்கரையில் விக்கிரமனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த பிறகு விக்கிரமனும் இரண்டு மூன்று தடவை அவள் பக்கம் திரும்பினான். ஒவ்வொரு தடவையும் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
சிறிது நேரத்துக்குப் பிறகு குந்தவி, "நான் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்திருந்தாள். விக்கிரமன் மிகவும் அதிசயமடைந்தவனைப் போல் அவளைத் திரும்பிப் பார்த்து, "நீ பேசினாயா?" என்று கேட்டான். "ஆமாம். நான் ஊமையில்லை! என்றாள் குந்தவி. குன்றாத அதிசயத்துடன் விக்கிரமன் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். குந்தவி மறுபடியும் போகத் தொடங்கினாள்.
"ஏன் போகிறாய்?" என்றான் விக்கிரமன் தழுதழுத்த குரலில். "நீர் பேசுகிற வழியைக் காணோம். அதனால்தான் கிளம்பினேன்" என்று சொல்லிக் கொண்டே குந்தவி மறுபடியும் விக்கிரமனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள். "எனக்குப் பயமாயிருந்தது!" என்றான் விக்கிரமன். "என்ன பயம்? ஒரு அபலைப் பெண்ணைக் கண்டு பயப்படுகிற நீர் தனி வழியே கிளம்பலாமா?" "உன்னைக் கண்டு பயப்படவில்லை." "பின்னே?" "நான் காண்பது கனவா அல்லது ஜுர வேகத்தில் தோன்றும் சித்தப்பிரமையோ என்று நினைத்தேன். பேசினால் ஒரு வேளை பிரமை கலைந்துவிடுமோ என்று பயந்தேன்." குந்தவி புன்னகையுடன், "இப்பொழுது என்ன தோன்றுகிறது? கனவா, பிரமையா?" என்றாள். "இன்னமும் சந்தேகமாய்த்தானிருக்கிறது. நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால்....?" "இருந்தால் என்ன?" "நிஜமாக நீதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வேன்."
இவ்விதம் சொல்லி விக்கிரமன் தன்னுடைய கையைக் குந்தவியின் கன்னத்தின் அருகே கொண்டு போனான். ஜுரக் கனவுகளில் நிகழ்ந்தது போல் அந்த முகம் உடனே மறைந்து போகவில்லை. குந்தவி தன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் இல்லை. விக்கிரமனுடைய உள்ளங்கை, மலரின் இதழ் போல் மென்மையான குந்தவியின் கன்னத்தைத் தொட்டது. பிறகு, பிரிய விருப்பமில்லாதது போல் அங்கேயே இருந்தது. குந்தவி அந்தக் கையைப் பிடித்து அகற்றி, பழையபடி அவனுடைய மடிமீது வைத்தாள். புன்னகையுடன், "உம்முடைய சந்தேகம் தீர்ந்ததா? நிச்சயம் ஏற்பட்டதா?" என்றாள். "சந்தேகம் தீர்ந்தது! பல விஷயங்கள் நிச்சயமாயின" என்றான் விக்கிரமன். "என்னென்ன?" "நிஜமாக நீதான் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் வெறும் பிரமையோ கனவோ அல்ல என்பது ஒன்று." "அப்புறம்?" "நீ கையினால் தொட முடியாத தெய்வ கன்னிகையல்ல; உயிரும் உணர்ச்சியுமில்லாத தங்க விக்கிரகமும் அல்ல; சாதாரண மானிடப் பெண்தான் என்பது ஒன்று." "இன்னும் என்ன?" "இனிமேல் உன்னைப் பிரிந்து உயிர் வாழ்வது எனக்கு அசாத்தியமான காரியம் என்பது ஒன்று."
குந்தவி வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிறகு விக்கிரமனைப் பார்த்து, "என்னை உமக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டாள். "ஞாபகமா? நல்ல கேள்வி கேட்டாய்! உன்னைத் தவிர வேறு எந்த ஞாபகமாவது உண்டா என்று கேட்டிருந்தால் அதிகப் பொருத்தமாயிருக்கும். பகலிலும், இரவிலும், பிரயாணத்திலும், போர்முனையிலும், கஷ்டத்திலும், சுகத்திலும் உன் முகம் என் மனத்தை விட்டு அகன்றதில்லை. மூன்று வருஷ காலமாக நான் எங்கே போனாலும், எது செய்தாலும், என் இருதய அந்தரங்கத்தில் உன் உருவம் இருந்து கொண்டுதானிருந்தது."
"என்ன சொல்கிறீர்? நான் உம்மை மாமல்லபுரத்து வீதியில் சந்தித்துப் பத்து நாள்தானே ஆயிற்று? மூன்று வருஷமா?...." என்றாள் குந்தவி கள்ளச் சிரிப்புடனும் அவ நம்பிக்கையுடனும். விக்கிரமன் சற்று நேரம் திகைத்துப் போய் மௌனமாயிருந்தான். பிறகு, "ஓஹோ! பத்து நாள்தான் ஆயிற்று?" என்றான். "பின்னே, மூன்று வருஷம் ஜுரம் அடித்துக் கிடந்தீரா?" "சரிதான்; ஜுரத்தினால்தான் அத்தகைய பிரமை எனக்கு உண்டாகியிருக்கிறது. உனக்கும் எனக்கும் வருஷக்கணக்கான சிநேகிதம் என்று தோன்றுகிறது!"
"ஒரு வேளை மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்ததற்கு முன்னாலேயே எப்போதாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதோ?" என்று குந்தவி கேட்டாள். விக்கிரமன் சற்று யோசித்து, "எனக்கு இன்னும் நல்ல ஞாபகசக்தி வரவில்லை. மனம் குழம்பியிருக்கிறது, அதிலும்...." என்று தயங்கினான். "அதிலும் என்ன?" என்று கேட்டாள் குந்தவி. "அதிலும் உன்னுடைய நீண்ட கரிய விழிகளைப் பார்த்தேனானால் நினைவு அடியோடு அழிந்து போகிறது. என்னையும், நான் வந்த காரியத்தையும், இவ்வுலகத்தையும் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்! வருஷம், மாதம், நாள் எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது?" "உமக்கு இன்னும் ஜுரம் குணமாகவில்லை. அதனால்தான் இப்படிப் பிதற்றுகிறீர். நீர் இங்கே தனியாக வந்திருக்கக் கூடாது?" "இல்லை; எனக்கு ஜுரமே இப்போது இல்லை. நீ வேணுமானால் என் கையைத் தொட்டுப்பார்!" என்று விக்கிரமன் கையை நீட்டினான். குந்தவி கையை லேசாகத் தொட்டுவிட்டு, "அப்பா, கொதிக்கிறதே!" என்றாள். "இருக்கலாம்; ஆனால் அது ஜுரத்தினால் அல்ல...."
"இருக்கட்டும்; கொஞ்சம் என் கண்களைப் பாராமல் வேறு பக்கம் பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்லும். நீர் யார், எங்கிருந்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கிறதா? எல்லாமே மறந்து போய்விட்டதா?" என்று குந்தவி கேட்டாள். "ஆமாம்; இங்கே வந்து நதிக்கரையில் உட்கார்ந்து அதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டேன். செண்பகத் தீவிலிருந்து கப்பலில் வந்தேன். இரத்தின வியாபாரம் செய்வதற்காக....."
"மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்த விஷயமும் ஞாபகம் இருக்கிறதல்லவா?" "இருக்கிறது." "அரண்மனைக்கு வாரும்; சக்கரவர்த்தியின் மகள் இரத்தினம் வாங்குவாள், என்று சொன்னேனே, அது நினைவிருக்கிறதா?" "இப்போது நினைவு வருகிறது." "நீர் ஏன் அரண்மனைக்கு வரவில்லை? ஏன் சொல்லாமல் கிளம்பி இரவுக்கிரவே தனி வழி நடந்து வந்தீர்?" விக்கிரமன் சற்று நிதானித்து "உண்மையைச் சொல்லட்டுமா?" என்று கேட்டான். "இரத்தின வியாபாரிகள் எப்போதாவது உண்மையைச் சொல்லும் வழக்கம் உண்டு என்றால் நீரும் உண்மையைச் சொல்லும்."
"சத்தியமாய்ச் சொல்லுகிறேன் உன்னை இன்னொரு தடவை பார்த்தேனானால், மறுபடியும் உன்னைப் பிரிந்து வருதற்கு மனம் இடங்கொடாது என்ற காரணத்தினால்தான். அது ரொம்பவும் உண்மையான பயம் என்று இப்போது தெரிகிறது...." "செண்பகத் தீவில் இப்படியெல்லாம் புருஷர்கள் பெண்களிடம் பேசி ஏமாற்றுவது வழக்கமா? இதை அங்கே ஒரு வித்தையாகச் சொல்லிக் கொடுக்கிறார்களா?" என்று குந்தவி ஏளனமாகக் கேட்டாள். "நீ ஒன்றை மறந்து விடுகிறாய். நான் செண்பகத் தீவிலிருந்து வந்தேனென்றாலும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்தச் சோழ நாட்டில்தான். இந்தப் புண்ணியக் காவேரி நதியின் கரையில்தான் நான் ஓடியாடி விளையாடினேன். இந்த நதியின் பிரவாகத்தில்தான் நீந்தக் கற்றுக் கொண்டேன். இந்த அழகிய சோழநாட்டின் குளிர்ந்த மாந்தோப்புகளிலும் தொன்னந்தோப்புகளிலும் ஆனந்தமாக எத்தனையோ நாட்கள் உலாவினேன்! ஆகா! நான் செண்பகத் தீவிலிருந்த நாட்களில் எத்தனை நாள் இந்த நாட்டை நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டேன்! இந்தக் காவேரி நதிதீரத்தை நினைத்துக் கொண்டு எத்தனை முறை கண்ணீர் விட்டேன்! மறுபடியும் இந்நாட்டைக் காணவேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டேன்!... அந்த ஆசை இப்போது நிறைவேறியது; உன்னால்தான் நிறைவேறியது! உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?" என்று விக்கிரமன் ஆர்வத்துடன் கூறினான்.
"எனக்கு நீர் நன்றி செலுத்துவதில் என்ன பிரயோஜனம்? உண்மையில் நீர் நன்றி செலுத்த வேண்டியது கோமகள் குந்தவிக்கு..." "யார்?" "சக்கரவர்த்தியின் மகள் குந்தவி தேவியைச் சொல்லுகிறேன். உம்மை இங்கே அழைத்து வருவதற்கு அவர்தானே அனுமதி தந்தார்? அவருக்குத்தான் நீர் கடமைப்பட்டிருக்கிறீர்."
"அப்படியா? எனக்குத் தெரியவேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. என் மனம் ஒரே குழப்பத்தில் இருக்கிறது. இந்த இடத்துக்கு நான் வந்து சேர்ந்திருக்கிறேன்; காவேரி நதிக்கரையில் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தாலே ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கி விடுகிறேன். வேறு ஒன்றிலும் மனம் செல்லவில்லை. நான் எவ்விதம் இங்கு வந்து சேர்ந்தேன் என்பதை விவரமாய்ச் சொல்ல வேண்டும். முதலில், நீ யார் உன் பெயர் என்னவென்று தெரிவித்தால் நல்லது." "மாமல்லபுரத்தில் சொன்னேனே, ஞாபகம் இல்லையா?"
"உன்னைப் பார்த்த ஞாபகம் மட்டுந்தான் இருக்கிறது; வேறொன்றும் நினைவில் இல்லை." "என் பெயர் ரோகிணி சக்கரவர்த்தித் திருமகள் குந்தவி தேவியின் தோழி நான்." உண்மையில், அந்தச் சந்திப்பின் போது குந்தவி தன் பெயர் மாதவி என்று சொன்னாள். அவசரத்தில் சொன்ன கற்பனைப் பெயர் ஆனதால் அவளுக்கே அது ஞாபகமில்லை. இப்போது தன் பெயர் `ரோகிணி' என்றாள்.
அதைக் கேட்ட விக்கிரமன் சொன்னான்: "ரோகிணி! - என்ன அழகான பெயர்? - எத்தனையோ நாள் அந்தச் செண்பகத் தீவில் நான் இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததுண்டு. பிறைச் சந்திரனுக்கு அருகில் ரோகிணி நட்சத்திரம் ஜொலிக்கும் அழகைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், உன்னுடைய கண்களின் ஜொலிப்பிற்கு அந்த ரோகிணி நட்சத்திரங்களின் ஜொலிப்பு கொஞ்சமும் இணையாகாது." "உம்முடைய வேஷத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்...."என்றாள் குந்தவி. விக்கிரமன் சிறிது திடுக்கிட்டு, "வேஷமா?....' என்றான். "ஆமாம்; உண்மையில் நீர் இரத்தின வியாபாரி அல்ல, நீர் ஒரு கவி. ஊர் சுற்றும் பாணன், உம்முடைய மூட்டையில் இருந்தது இரத்தினம் என்றே நான் நம்பவில்லை!" விக்கிரமன் சற்றுப் பொறுத்துச் சொன்னான்! - "இப்போது உன்னை நம்பும்படி செய்ய என்னால் முடியாது. ஆனால் அந்த மூட்டையில் இருந்தவை இரத்தினங்கள்தான் என்று ஒரு நாள் உனக்கு நிரூபித்துக் காட்டுவேன். நான் கவியுமல்ல, என்னிடம் அப்படி ஏதாவது திடீரென்று கவிதா சக்தி தோன்றியிருக்குமானால், அதற்கு நீதான் காரணம். உன்னுடைய முகமாகிய சந்திரனிலிருந்து பொங்கும் அமுத கிரணங்களினால்...."
"போதும், நிறுத்தும் உம்முடைய பரிகாசத்தை இனிமேல் சகிக்க முடியாது" என்றாள் குந்தவி. "பரிகாசமா?" என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பிறகு, "உனக்குப் பிடிக்காவிட்டால் நான் பேசவில்லை. நான் எப்படி இங்கே வந்து சேர்ந்தேன் என்பதைச் சொன்னால் ரொம்பவும் நன்றி செலுத்துவேன்" என்றான். "காஞ்சியிலிருந்து உறையூர் வரும் பாதையில் மகேந்திர மண்டபம் ஒன்றில் ஜுர வேகத்தினால் பிரக்ஞை இழந்து நீர் கிடந்தீர். அங்கு எப்படி வந்து சேர்ந்தீர்? அதற்கு முன்னால் என்னென்ன நேர்ந்தது என்று நீர் சொன்னால், பிறகு நடந்ததை நான் சொல்லுகிறேன்."
விக்கிரமன் தனக்கு நேர்ந்ததையெல்லாம் ஒருவாறு சுருக்கமாகச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குந்தவி தேவி கூறினாள்: "சக்கரவர்த்தியின் மூத்த குமாரர் மகேந்திரரும், குந்தவி தேவியும் காஞ்சியிலிருந்து உறையூருக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். தேவியுடன் நானும் வந்தேன், அந்தக் காட்டாற்றைத் தாண்டி வந்தபோது, மகேந்திர மண்டபத்துக்குள்ளிருந்து 'அம்மா அம்மா' என்று அலறும் குரல் கேட்டது. நான் அம்மண்டபத்துக்குள் வந்து பார்த்தேன். மாமல்லபுரத்தில் பார்த்த இரத்தின வியாபாரி நீர்தான் என்று அடையாளம் கண்டு கொண்டேன். பிறகு குந்தவி தேவியிடம் உம்மையும் அழைத்து வர அனுமதி கேட்டேன். அவர் கருணை செய்து சம்மதித்தார். உமக்கு உடம்பு பூரணமாகக் குணமாகும் வரையில் இங்கேயே உம்மை வைத்திருக்கவும் அனுமதித்திருக்கிறார்."
"ஜுரக் கனவுகளில் நான் அடிக்கடி உன்னுடைய முகத்தைக் கண்டேன். அதெல்லாம் கனவல்ல; உண்மையிலேயே உன்னைத் தான் பார்த்தேன் என்று இப்போது தெரிகிறது." "இருக்கலாம்; நீர் ஜுரமடித்துக் கிடக்கையில் அடிக்கடி உம்மை நான் வந்து பார்த்தது உண்மைதான். இவ்வளவுக்கும் குந்தவி தேவியின் கருணைதான் காரணம்." விக்கிரமன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். குந்தவி கேட்டாள்: "சக்கரவர்த்தியின் மகளைப் பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன். ஒரு வார்த்தையாவது நீர் நன்றி தெரிவிக்கவில்லையே? அவ்வளவு கல் நெஞ்சமா உமக்கு?" "பல்லவ குலத்தைச் சேர்ந்த யாருக்கும் நான் நன்றி செலுத்த முடியாது!" "குந்தவி தேவியை நேரில் பார்த்தால் இப்படிச் சொல்லமாட்டீர். பிறகு என்னைக்கூட உடனே மறந்து விடுவீர்." "சத்தியமாய் மாட்டேன். ஆயிரம் குந்தவி தேவிகள் உனக்கு இணையாக மாட்டார்கள்! இருக்கட்டும்; இப்போது இந்த மாளிகையில் அவர்கள் இருவரும் இருக்கிறார்களா?" "யார் இருவரும்?" "அண்ணனும் தங்கையும்."
"யுவராஜா மகேந்திரர் இங்கே இல்லை. அவர் திரும்பவும் காஞ்சிக்குப் போய்விட்டார். சீன தேசத்திலிருந்து யாரோ ஒரு யாத்திரிகர் வந்திருக்கிறாராம். அவர் இந்தப் பாரதநாடு முழுவதும் யாத்திரை செய்து விட்டுக் காஞ்சிக்கு வருகிறாராம். 'யுவான் சுவாங்' என்ற விசித்திரமான பெயரையுடையவராம். சக்கரவர்த்திக்கு இச்சமயம் முக்கிய வேலை வந்திருப்பதால், அந்த யுவான் சுவாங்கை உபசரித்து வரவேற்பதற்காக யுவராஜா உடனே வரவேண்டுமென்று செய்தி வந்தது. இங்கு வந்த இரண்டாம் நாளே மகேந்திரர் புறப்பட்டுப் போய்விட்டார். பார்த்தீரா, எங்கள் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் கடல்களுக்கப்பால் வெகு தூரத்திலுள்ள தேசங்களில் எல்லாம் கூடப் பரவியிருப்பதை? நீர் போயிருந்த நாடுகளில் எல்லாம் எப்படி?" என்று கேட்டாள் குந்தவி.
"ஆம்; அங்கேயெல்லாம் கூடப் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் பரவித்தான் இருக்கிறது." "அப்படிப்பட்ட சக்கரவர்த்தியின் ஆளுகையில் இருப்பது இந்தச் சோழ நாட்டுக்குப் பெருமையில்லையா? இந்த நாட்டு அரசகுமாரன் பல்லவ சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்ட மறுத்து அந்தச் செண்பகத் தீவில் போய்க் காலம் கழிக்கிறானாமே? அது நியாயமா? உம்முடைய அபிப்பிராயம் என்ன?" என்று குந்தவி கேட்டு விக்கிரமனுடைய முகத்தை ஆவலுடன் நோக்கினாள்.
விக்கிரமன் அவளை நிமிர்ந்து நோக்கி, "என்னைப் பொறுத்த வரையில் நான் இந்தச் சோழநாட்டில் அடிமையாயிருப்பதைக் காட்டிலும், செண்பகத் தீவில் சுதந்திரப் பிரஜையாக இருப்பதையே விரும்புவேன்" என்றான். "நிச்சயமாகவா? என் நிமித்தமாகக்கூட நீர் இங்கே இருக்கமாட்டீரா?" என்று குந்தவி கேட்டபோது விக்கிரமன் அவளை இரக்கத்துடன் பார்த்து, "அத்தகைய சோதனைக்கு என்னை உள்ளாக்க வேண்டாம்!" என்றான். இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அறிந்து கொள்ளாதது போல் நடித்தார்கள். இந்த நாடகம் எத்தனை காலம் நீடித்திருக்க முடியும்!
அருவிப் பாதை.23
உதய சூரியனின் பொற்கிரணங்களால் கொல்லி மலைச்சாரல் அழகு பெற்று விளங்கிற்று. பாறைகள் மீதும் மரங்கள் மீதும் ஒரு பக்கத்தில் சூரிய வெளிச்சம் விழுவதும், இன்னொரு பக்கத்தில் அவற்றின் இருண்ட நிழல் நீண்டு பரந்து கிடப்பதும் ஒரு விசித்திரமான காட்சியாயிருந்தது. வான வெளியெங்கும் எண்ணிறைந்த பட்சிகளின் கலகல தொனி பரவி ஒலித்தது. அதனுடன் மலையிலிருந்து துள்ளிக் குதித்து ஆடிப்பாடி வந்த அருவியின் இனிய ஒலியும் சேர்ந்து வெகு மனோகரமாயிருந்தது.
இந்த நேரத்தில் அந்த மலைச்சாரலுக்கு அருகில் இரண்டு உயர்ஜாதி வெண்புரவிகள் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது ஆரோகணித்திருந்தவர்கள் நமக்கு ஏற்கெனவே பழக்கமுள்ளவர்களான சிவனடியாரும் பொன்னனுந்தான். அவர்கள் அந்தக் காட்டாற்றின் கரையோரமாகவே வந்து கொண்டிருந்தார்கள்; பேசிக் கொண்டு வந்தார்கள். சிவனடியார், சற்றுத் தூரத்தில் மொட்டையாக நின்ற பாறையைச் சுட்டிக் காட்டி, "பொன்னா! அந்தப் பாறையைப் பார்! அதைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்டார். "ஒன்றும் தோன்றவில்லை. சுவாமி! மொட்டைப் பாறை என்று தோன்றுகிறது. அவ்வளவுதான்."
"எனக்கு என்ன தோன்றுகிறது, தெரியுமா? காலை மடித்துப் படுத்துத் தலையைத் தூக்கிக் கொண்டிருக்கும் நந்தி பகவானைப் போல் தோன்றுகிறது. இப்போது அந்தப் பாறையின் நிழலைப் பார்!" பொன்னன் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "சுவாமி நந்தி மாதிரியே இருக்கிறதே!" என்றான். "சாதாரணக் கண்ணுக்கும், சிற்பியின் கண்ணுக்கும் இதுதான் வித்தியாசம். பொன்னா! சிற்பி ஒரு பாறையைப் பார்த்தானானால் அதில் ஒரு யானையையோ, சிங்கத்தையோ அல்லது ஒரு தெய்வீக வடிவத்தையோ காண்கிறான். இன்னின்ன மாதிரி வேலை செய்தால் அது அத்தகைய உருவத்தை அடையும் என்று சிற்பியின் மனதில் உடனே பட்டு விடுகிறது...."
பொன்னன் குறுக்கிட்டு, "சுவாமி! தாங்கள்...." என்றான். "ஆமாம்! நான் ஒரு சிற்பிதான்! உலகத்தில் வேறு எந்த வேலையைக் காட்டிலும் சிற்ப வேலையிலேதான் எனக்கும் பிரியம் அதிகம்... இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை மட்டும் பூர்த்தி செய்துவிட்டேனானால்... இருக்கட்டும், பொன்னா! மாமல்லபுரம் நீ பார்த்திருக்கிறாயா?" என்று சுவாமியார் கேட்டார்.
"ஒரே ஒரு தடவை பார்த்திருக்கிறேன். சுவாமி!" "அதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?" "சொப்பன லோகத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது...." "ஆனால் அந்தச் சிற்பங்கள் உண்மையில் சொப்பனமில்லை! நாம் உயிரோடிருப்பதைவிட அதிக நிஜம். கல்லிலே செதுக்கிய அச்சிற்ப வடிவங்கள் நம்முடைய காலமெல்லாம் ஆன பிறகு, எத்தனையோ காலம் அழியாமல் இருக்கப் போகின்றன; நமக்கு ஆயிரம் வருஷத்துக்குப் பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து மகிழப் போகிறார்கள். ஆகா! ஒரு காலத்தில், பொன்னா! மாமல்லபுரம் மாதிரியே இந்தத் தமிழகம் முழுவதையும் ஆக்க வேண்டுமென்று நான் கனவு கண்டு கொண்டிருந்தேன்...."
"என்ன, தாங்களும் கனவு கண்டீர்களா?" என்றான் பொன்னன். "ஆமாம்; உங்கள் பார்த்திப மகாராஜா மட்டுந்தான் கனவு கண்டார் என்று நினைக்கிறாயா? அவர் சோழ நாட்டின் பெருமையைப் பற்றி மட்டுமே கனவு கண்டார். நானோ தமிழகத்தின் பெருமையைக் குறித்துக் கனவு கண்டு கொண்டிருந்தேன்.... பார், பொன்னா! புண்ணிய பூமியாகிய இந்தப் பரத கண்டம் வடநாடு, தென்னாடு என்று பிரிவுபட்டிருக்கிறது. கதையிலும், காவியத்திலும் இதிகாசத்திலும் வடநாடுதான் ஆதிகாலத்திலிருந்து பெயர் பெற்று விளங்குகிறது. வடநாட்டு மன்னர்களின் பெயர்கள்தான் பிரசித்தியமடைந்திருக்கின்றன. பாடலிபுரத்துச் சந்திர குப்தன் என்ன, அசோகச் சக்கரவர்த்தி என்ன, விக்கிரமாதித்தன் என்ன! இவர்களுக்குச் சமமாகப் புகழ் பெற்ற தென்னாட்டு ராஜா யார் இருந்திருக்கிறார்கள்? நம்முடைய காலத்திலேதான் வட நாட்டு ஹர்ஷ சக்கரவர்த்தியின் புகழ் உலகெல்லாம் பரவியிருப்பது போல் மகேந்திர பல்லவரின் புகழ் பரவியிருந்தது என்று சொல்ல முடியுமா? தென்னாடு இவ்விதம் பின்னடைந்திருப்பதின் காரணம் என்ன? இந்தத் தென்னாடானது ஆதிகாலம் முதல் சோழ நாடு, சேர நாடு, பாண்டிய நாடு என்று பிரிந்து கிடந்ததுதான், காரணம். பெரிய இராஜ்யம் இல்லாவிட்டால், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. பெரிய காரியங்களைச் சாதிக்காமல் பெரிய புகழ் பெறவும் முடியாது. வட நாட்டில் ஹர்ஷ சக்கரவர்த்தியின் இராஜ்யமானது. நீளத்திலும் அகலத்திலும் இருநூறு காததூரம் உள்ளதாயிருக்கிறது. இந்தத் தென்னாட்டிலோ பத்துக் காதம் போவதற்குள்ளாக மூன்று ராஜ்யத்தை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலைமை அதாவது - தமிழகம் முழுவதும் ஒரே மகாராஜ்யமாயிருக்க வேண்டும் - தமிழகத்தின் புகழ் உலகெல்லாம் பரவ வேண்டும் என்று மகேந்திர பல்லவர் ஆசைப்பட்டார். நானும் அந்த மாதிரி கனவுதான் கண்டு கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் அந்தக் கனவு நிறைவேறலாம் என்று ஆசையுடன் நம்பியிருந்தேன். ஆனால், அந்த ஆகாசக் கோட்டையானது ஒரே ஒரு மனுஷனின் சுத்த வீரத்துக்கு முன்னால் இடிந்து, தகர்ந்து போய்விட்டது."
"சுவாமி! யாரைச் சொல்லுகிறீர்கள்?" என்றான் பொன்னன். "எல்லாம் உங்கள் பார்த்திப மகாராஜாவைத்தான்! ஆகா! அந்த வெண்ணாற்றங்கரைப் போர்க்களம் இப்போது கூட என் மனக்கண் முன்னால் நிற்கிறது. என்ன யுத்தம்! என்ன யுத்தம்! வெண்ணாறு அன்று இரத்த ஆறாக அல்லவா ஓடிற்று? பூரண சந்திரன் வெண்ணிலாவைப் பொழிந்த அந்த இரவிலே, அந்தப் போர்க்களந்தான் எவ்வளவு பயங்கரமாயிருந்தது? உறையூரிலிருந்து கிளம்பி வந்த பத்தாயிரம் வீரர்களில் திரும்பிப் போய்ச் செய்தி சொல்வதற்கு ஒருவன் கூட மிஞ்சவில்லை என்றால், அந்தப் போர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்!" என்று சுவாமியார் ஆவேசத்துடன் பேசினார்.
"ஐயோ! அந்தப் பத்தாயிரம் வீரர்களில் ஒருவனாயிருக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே!" என்றான் பொன்னன். "போரில் உயிரை விடுவதற்கு வீரம் வேண்டியதுதான் பொன்னா! ஆனால், உயிரோடிருந்து உறுதி குலையாமல் இருப்பதற்கு அதைக் காட்டிலும் அதிக தீரம் வேண்டும். அந்தத் தீரம் உன்னிடம் இருக்கிறது! உன்னைக் காட்டிலும் அதிகமாக வள்ளியிடம் இருக்கிறது; நீங்களும் பாக்கியசாலிகள்தான்!" என்றார் சுவாமியார். "சுவாமி! வெண்ணாற்றங்கரைப் போரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்!" என்றான் பொன்னன். இந்த வீரப்போரைக் குறித்தும், பார்த்திப மகாராஜா அந்திம காலத்தில் சிவனடியாரிடம் கேட்ட வரத்தைப் பற்றியும் எவ்வளவு தடவை கேட்டாலும் அவனுக்கும் அலுப்பதில்லை. சிவனடியாரும் அதைச் சொல்ல அலுப்பதில்லையாதலால், அந்தக் கதையை மறுபடியும் விவரமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.
சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள், காட்டாறானது சிற்றருவியாகி மலைமேல் ஏறத் தொடங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். இதற்குமேல் குதிரைகளின் மீது போவது இயலாத காரியம். எனவே மலைச்சாரலில் மரங்கள் அடர்த்தியாயிருந்த ஓர் இடத்தில் குதிரைகளை அவர்கள் விட்டார்கள். இவற்றை "மரத்திலே கட்ட வேண்டாமா?" என்று பொன்னன் கேட்டதற்கு "வேண்டாம்" என்றார் சிவனடியார்.
"இந்த உயர்ஜாதிக் குதிரைகளின் அறிவுக் கூர்மை அநேக மனிதர்களுக்குக்கூட வராது பொன்னா! உங்கள் இளவரசன் ஆற்று வெள்ளத்தில் போனதும் உனக்கு முன்னால் இந்தப் புஷ்பகம் வந்து எனக்குச் செய்தி சொல்லிவிடவில்லையா? இவ்விடத்தில் நாம் இந்தக் குதிரைகளை விட்டுவிட்டுப் போனோமானால், அந்தண்டை இந்தண்டை அவை அசையமாட்டா. கட்டிப் போட்டால்தான் ஆபத்து, துஷ்டமிருகங்கள் ஒருவேளை வந்தால் ஓடித் தப்ப முடியாதல்லவா?" என்று கூறிவிட்டு இரண்டு குதிரைகளையும் முதுகில் தடவிக் கொடுத்தார். பிறகு இருவரும் அருவி வழியைப் பிடித்துக் கொண்டு மலை மேலே ஏறினார்கள்.
பெரிதும் சிறிதுமாய், முண்டும் முரடுமாயும் கிடந்த கற்பாறைகளை வெகு லாவகமாகத் தாண்டிக் கொண்டு சிவனடியார் சென்றார். தண்ணீரில் இறங்கி நடப்பதிலாவது ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டுவதிலாவது அவருக்கு ஒருவிதமான சிரமமும் இருக்கவில்லை. அவரைப் பின்தொடர்ந்து போவதற்குப் பொன்னன் திணற வேண்டியதாக இருந்தது. "சுவாமி! தங்களுக்குத் தெரியாத வித்தை இந்த உலகத்தில் ஏதாவது உண்டா?" என்று பொன்னன் கேட்டான். "ஒன்றே ஒன்று உண்டு. பொன்னா! கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பது என்னால் முடியாத காரியம்" என்றார் சிவனடியார். அவர் கூறியதைப் பொன்னன் சரியாகத் தெரிந்து கொள்வதற்குள், "ஆமாம்.உங்கள் பார்த்திப மகாராஜாவுக்கு நான் கொடுத்த வாக்கினால் என்னுடைய வாழ்க்கை - மனோரதமே எப்படிக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டது. பார்!" என்றார். "அதெப்படி, சுவாமி! முன்னேயும் அவ்விதம் சொன்னீர்கள்! பார்த்திப மகாராஜாவினால் உங்களுடைய காரியம் கெட்டுப் போவானேன்?" என்று கேட்டான் பொன்னன்.
"வாதாபியிலிருந்து திரும்பி வந்தபோது, தென்னாடு முழுவதையும் ஒரு பெரிய மகாராஜ்யமாக்கிவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே வந்தேன். இந்தச் சின்னஞ் சிறு தமிழகத்தில் ஒரு ராஜாவுக்கு மேல் - ஒரு இராஜ்யத்துக்கு மேல் இடங்கிடையாது என்று கருதினேன். சோழ, சேர, பாண்டியர்களின் நாமதேயமே இல்லாமல் பூண்டோடு நாசம் செய்து விட்டுத் தமிழகத்தில் பல்லவ இராஜ்யத்தை ஏகமகா ராஜ்யமாகச் செய்துவிட வேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், என்ன பிரயோஜனம்? பார்த்திபனுடைய சுத்த வீரமானது என் சங்கல்பத்தை அடித்துத் தள்ளிவிட்டது. அவனுடைய மகனைக் காப்பாற்றி வளர்க்க - சுதந்திர வீர புருஷனாக வளர்க்க - வாக்குக் கொடுத்து விட்டேன். சுதந்திர சோழ இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு நானே முயற்சி செய்ய வேண்டியதாகிவிட்டது! இப்போது நினைத்தால், ஏன் அந்தப் புரட்டாசிப் பௌர்ணமி இரவில் போர்க்களத்தில் பிரவேசித்து பார்த்திபனுடைய உடலைத் தேடினோம் என்று தோன்றுகிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது."
இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் சிவனடியாரும் மேலே மேலே ஏறி சென்றார்கள். சூரியன் உச்சி வானத்தை அடைந்தபோது செங்குத்தான பாறையிலிருந்து அருவி `ஹோ' என்ற இரைச்சலுடன் விழுந்து கொண்டிருந்த இடத்தை அவர்கள் அடைந்தார்கள். அதற்குமேல் அருவிப் பாதையில் போவதற்கு வழியில்லை என்பதைப் பொன்னன் தெரிவிக்க, சிவனடியார் சிந்தனையில் ஆழ்ந்தவராய் அங்குமிங்கும் பார்க்கத் தொடங்கினார். அருவி விழுந்தோடிய இடத்துக்கு இரு புறமும் கூர்ந்து பார்த்ததில் காட்டுவழி என்று சொல்லக்கூடியதாக ஒன்றும் தென்படவில்லை. இருபுறமும் செங்குத்தாகவும் முண்டும் முரடுமாகவும் மலைப்பாறைகள் உயர்ந்திருந்ததுடன், முட்களும் செடிகளும் கொடிகளும் நெருங்கி வளர்ந்து படர்ந்திருந்தன. அந்தச் செடி கொடிகளையெல்லாம் சிவனடியார் ஆங்காங்கு விலக்கிப் பார்த்துக் கொண்டு கடைசியாக அருவி விழுந்து கொண்டிருந்த இடத்துக்குச் சமீபமாக வந்தார். அருவியின் தாரை விழுந்த இடம் ஒரு சிறு குளம் போல் இருந்தது. அந்தக் குளத்தின் ஆழம் எவ்வளவு இருக்குமோ தெரியாது. தாரை விழுந்த வேகத்தினால் அலைமோதிக் கொண்டிருந்த அந்தக் குளத்தைப் பார்க்கும் போதே மனதில் திகில் உண்டாயிற்று. குளத்தின் இருபுறத்திலும் பாறைச் சுவர் செங்குத்தாக இருந்தபடியால் நீர்த்தாரை விழும் இடத்துக்கு அருகில் போவது அசாத்தியம் என்று தோன்றிற்று. ஆனால் சிவனடியார் அந்த அசாத்தியமான காரியத்தைச் செய்யத் தொடங்கினார்.
அந்த அருவிக் குளத்தின் ஒரு பக்கத்தில் ஓரமாக பாறைச் சுவரைக் கைகளால் பிடித்துக் கொண்டும் முண்டு முரடுகளில் காலை வைத்துத் தாண்டியும், சில இடங்களில் தண்ணீரில் இறங்கி நடந்தும் சில இடங்களில் நீந்தியும் அவர் போனார். இதைப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்ற பொன்னன், கடைசியாகச் சிவனடியார் தண்ணீர் தாரைக்குப் பின்னால் மறைந்ததும், "ஐயோ!" என்று அலறிவிட்டான். "ஒருவேளை போனவர் போனவர் தானா? இனிமேல் திரும்ப மாட்டாரோ?" என்று அவன் அளவில்லாத ஏக்கத்துடனும் திகிலுடனும் நின்றான். நேரமாக ஆக அவனுடைய தவிப்பு அதிகமாயிற்று. சாமியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னென்ன விபரீதங்கள் விளையும் என்பதை நினைத்தபோது அவனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. `அவரை விட்டு விட்டு நாம் திரும்பிப் போவதா? முடியாத காரியம். நாமும் அவர் போன இடத்துக்கே போய்ப் பிராணனை விடலாம். எது எப்படிப் போனாலும் போகட்டும்' என்று துணிந்து பொன்னனும் அந்தக் கிடுகிடு பள்ளமான குளத்தில் இறங்கினான்.