P3பார்த்தீபன் கனவு 18..19

04 Jul,2011
 

பராந்தக புரத்தில்.18

 சூனியமான அந்த மகேந்திர மண்டபத்தைப் பொன்னன் உள்ளும் புறமும் பலமுறை சுற்றிச் சுற்றித் தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப் போயிருப்பார் என்று சிந்தனை செய்தான். நேற்றுச் சாயங்காலம் காட்டு வெள்ளத்தில் கரை சேர்த்தது முதல் நடந்தனவெல்லாம் ஒருவேளை கனவோ, என்றுகூட அவனுக்குத் தோன்றியது. இதற்கிடையில் வைத்தியனும் வண்டிக்காரனும் அவனைத் தொந்தரவு செய்யத் தொடங்கினார்கள். தன்னிடம் ஆபத்துக் காலத்தில் செலவுக்காக வைத்திருந்த பொற்காசுகளில் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினான்.

இளவரசருக்கு ஜுரம் முற்றி ஜன்னியின் வேகத்தினால் எழுந்து ஓடிப் போயிருப்பாரோ என்று பொன்னன் மனத்தில் தோன்றிய போது, பகீர் என்றது. அவனும் பித்தம் கொண்டவனைப் போல் அங்குமிங்கும் அலையத் தொடங்கினான். குடுகுடுவென்று நதிக்கரைக்கு ஓடுவான். மறுபடியும் மகேந்திர மண்டபத்துக்கு வந்து ஆசையுடன், நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொள்ள, உள்ளே எட்டிப் பார்ப்பான். மனம் கலங்கியிருந்தபடியால் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் விக்கிரமன் படுத்திருந்த வைக்கோலை எடுத்து உதறுவான். பிறகு வெளியிலே வந்து, உறையூர் சாலையோடு கொஞ்ச தூரம் போவான், மறுபடியும் திரும்பி வருவான்.

இப்படி ஒரு தடவை அவன் திரும்பி மண்டபத்தை நோக்கி வந்தபோது, மண்டபத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்த ஒரு பெரிய இலுப்ப மரத்துக்குப் பின்னால் ஒரு உருவம் மறைவதைக் கண்டான். அது ஒரு சித்திரக்குள்ளனின் வடிவமாகத் தெரிந்தது. கொல்லி மலையில் அருவிப் பாதையில் தான் அன்று பார்த்த பயங்கர உருவங்கள் பொன்னனுக்கு ஞாபகம் வந்தன. நேற்றிரவு இருளில் நடந்த சம்பாஷனையும் நினைவு வந்தது. “ஓஹோ! மகாராஜா நரபலிக்காரர்களின் கையிலேதான் அகப்பட்டுக் கொண்டார்” என்று எண்ணியபோது, பொன்னனுக்கு வந்த ஆத்திரத்துக்கும் துயரத்திற்கும் அளவேயில்லை. இந்த ஆத்திரத்தையெல்லாம் அந்தக் குள்ளன் மேல் காட்டி விடுவது என்ற நோக்கத்துடன் பொன்னன் இலுப்ப மரத்தை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து சென்றான். தன்னைப் பிடிக்க வருகிறான் என்று தெரியாமல் மறைந்து நின்ற குள்ளன் மேல் திடீரெனப் பாய்ந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரண்டு குலுக்குக் குலுக்கினான்.

முதலில் சற்றுத் திகைத்த குள்ளன் விரைவில் சமாளித்துக் கொண்டு, “என்ன அப்பா! என்ன சமாசாரம்? எதற்காக இவ்வளவு ஆத்திரம்?” என்று கேட்டான். “அடே குள்ளா! மகாராஜா எங்கே?” என்று பொன்னன் அலறினான். “மகாராஜாவா? அது யாரப்பா, மகாராஜா?” உடனே பொன்னனுக்குத் தன்னுடைய தவறு ஞாபகம் வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு, “அந்த மண்டபத்தில் படுத்திருந்தவர் எங்கே?” என்று கேட்டான். குள்ளன் தன்னுடைய இடுப்புத் துணியின் மடியை அவிழ்த்து உதறினான். பொன்னனைக் கேலியாகப் பார்த்து, “ஐயையோ! என் மடியிலே வைத்திருந்தேன், காணோமே!” என்றான்.

பொன்னனுக்கு இந்தக் கேலி ரசிக்காமல் குள்ளனை அடிப்பதற்காகக் கையை ஓங்கினான். துடுப்புப் பிடித்த வைரமேறிய அந்தக் கையின் அடி குள்ளன் மேல் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ, தெரியாது. ஆனால், அதற்குள்ளே குள்ளன் உடம்பை ஒரு நெளி நெளித்துப் பொன்னனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மறுகணம் மாயமாய் மறைந்தான். பொன்னன் அளவிட முடியாத கோபத்துடன் அங்குமிங்கும் ஓடினான். இதற்குள் இருட்டிவிட்டபடியால் பத்தடி தூரத்துக்கு மேல் கண் தெரியவில்லை. மேலும் இந்த இடத்தில் நாலாபுறமும் புதர்களாயிருந்தன. எனவே குள்ளனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிக்க மனச்சோர்வுடன் பொன்னன் திரும்ப யத்தனித்த போது, திடீரென்று அந்த இலுப்ப மரத்தின் மேலேயிருந்து “ஊ” என்று ஆந்தை கத்துவதுபோல் ஒரு குரல் கேட்டது. பொன்னன் திகிலுடன் மேலே அண்ணாந்து பார்த்தான். அடர்ந்த மரக்கிளையில் இருண்ட குள்ளவடிவம் காணப்பட்டது. இன்னொரு தடவை “ஊ” என்று அழகு காட்டுவது போல் அவ்வுருவம் கூவிற்று.

பொன்னனுக்கு அப்போது வந்த கோபம் இவ்வளவு அவ்வளவு அல்ல. அந்த மரத்தை வேரோடு பிடுங்கிச் சாய்த்து விடலாம் என்று எண்ணினான். அப்போது குள்ளன், “அடே புத்தியற்றவனே! மகா பத்திரகாளியின் பக்தனை உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான். பொன்னனுடைய மனதில் இப்போது ஒரு யுக்தி தோன்றியது. அதைப் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குள்ளன்,“அடே முரடா! நீயும் மகாகாளியின் பக்தன் ஆகின்றாயா? உன் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும்” என்றான். “என்னையா காளி பக்தனாகச் சொல்லுகிறாய்” என்று பொன்னன் சிரித்தான். “ஏண்டா சிரிக்கிறாய்? ஜாக்கிரத்தை! காளியின் கோபத்துக்கு ஆளாவாய்!”

அப்போது பொன்னன், “நான் சேர்ந்துவிட்டேன், அப்பா, சேர்ந்துவிட்டேன். ஆனால் என்ன பிரயோசனம்? கபால பைரவர் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றத் தவறிவிட்டேனே! ஐயோ, அவருக்கு என்ன சொல்வேன்?” என்றான். அப்போது குள்ளன் வியப்புடன், “அப்படியா! என்ன கட்டளையிட்டிருந்தார்?” என்று கேட்டான். “இந்த மண்டபத்தில் படுத்திருந்தவனைப் பத்திரமாய்க் கொல்லி மலைக்குக் கொண்டு வரச் சொன்னார். நேற்று ராத்திரி இந்த இடத்தில்தான் கட்டளை இட்டார். ஐயோ! தவறிவிட்டேனே?” என்று பொன்னன் அழுகிற குரலில் கூறினான். “அடடா! முன்னமே சொல்லியிருக்கக்கூடாதா? நீ வருவதற்குச் சற்று முன்னால், காஞ்சிக் சக்கரவர்த்தியின் மகனும் மகளும் இந்த வழியே போனார்கள். அவர்கள் அந்த மண்டபத்தின் அருகில் நின்றார்கள். மண்டபத்திலிருந்து ஒருவனை எடுத்துக் கொண்டு வந்து பல்லக்கில் ஏற்றிக்கொண்டார்கள். அவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை, உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

இந்தக் கேள்வி பொன்னன் காதில் விழவில்லை. ஏனெனில் அவன் வைத்தியனையும் கட்டை வண்டியையும் அழைத்து வந்தபோது எதிரில் குதிரை, பல்லக்கு முதலிய ராஜ பரிவாரங்கள் வருவதைக் கண்டு ஒதுங்கி நின்றான். குதிரைமேல் குந்தவி தேவியைக் கண்டதும் அவளுடைய கண்ணில் பட்டு விடாமல் வண்டியின் பின்னால் நன்றாய் மறைந்து கொண்டான். பல்லக்கை அவன் கவனிக்கவில்லை. இப்போது அதெல்லாம் பளிச்சென்று ஞாபகம் வந்தது. குள்ளன் சொல்வது உண்மையாயிருக்கலாமென்று தோன்றிற்று. “ஏனப்பா மௌனமாயிருக்கிறாய்! என்ன யோசிக்கிறாய்?” என்று குள்ளன் மரத்தின் மேலிருந்து கேட்டான். பொன்னன் அவனைப் பார்த்து, “என்ன யோசிக்கிறேனா! உன்னை எப்படிக் காளிக்குப் பலி கொடுப்பது என்றுதான் யோசிக்கிறேன்” என்று கூறி, கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து அவன்மேல் வீசி எறிந்தான்.

குள்ளன் அப்போது முன்னம் விக்கிரமன் கத்தியை ஓங்கியவுடன் செய்ததைப் போல் வாயைக் குவித்துக் கொண்டு, தீர்க்கமான ஒரு கூச்சலைக் கிளப்பினான். அந்தப் பயங்கரமான ஒலியைக் கேட்டதும் பொன்னனுக்கு உடம்பெல்லாம் மயிர்க் கூச்சலெடுத்தது. அங்கிருந்து அவன் ஒரே ஓட்டமாக உறையூர்ச் சாலையை நோக்கி ஓடத் தொடங்கினான். அந்தக் காட்டாற்றங்கரையிலிருந்து சுமார் காத தூரத்திலிருந்த பராந்தகபுரம் என்னும் ஊரைப் பொன்னன் அடைந்தபோது, இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலிருக்கும். ஆனால் அங்கே தீவர்த்தி வெளிச்சமும் வாத்திய முழக்கமுமாய் ஏக தடபுடலாயிருந்தது. பொன்னன் என்னவென்று விசாரித்த போது, சக்கரவர்த்தியின் திருக்குமாரரும், திருக்குமாரியும் விஜயம் செய்திருப்பதாகவும், அவர்களுக்கு வரவேற்பு உபசாரங்கள் அவ்வூர்க் கோயிலில் நடந்து கொண்டிருப்பதாகவும், அதற்காக ஊருக்கு வெளியே கூடாரங்கள் அடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிந்து கொண்டான்.

அவர்கள் ஆலயத்தில் இருக்கும் சமயத்தில் தன்னுடைய சோதனையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடாரங்கள் அடிக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பொன்னன் விரைந்து சென்றான். ஊரைச் சேர்ந்தாற்போல் ஒரு மைதானத்தில் கூடாரங்கள் அடிக்கப்பட்டிருந்தன. யுவராஜா மகேந்திரனும் குந்தவி தேவியும் கோயிலுக்குப் போயிருந்தபடியால் இங்கே அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. சில காவற்காரர்கள் மட்டும் அங்குமிங்கும் நின்றார்கள். பணிப்பெண்களும் ஏவலாளர்களும் கூடாரங்களுக்குள் படுக்கை விரித்தல் முதலிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். மைதானத்தின் ஒரு புறத்தில் கிளுவைச் செடிகளால் ஆன உயரமான வேலி அமைந்திருந்தது. அந்த வேலி ஓரமாகப் பொன்னன் சென்றான். ஓரிடத்தில் இரண்டு பணிப்பெண்கள் வம்பு பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது.

“ஏண்டி, மரகதம்! திருவெண்ணெய் நல்லூரில் போய் இரவு தங்குவதற்காக அல்லவா ஏற்பாடு இருந்தது? இங்கே எதற்காகத் தங்கியிருக்கிறோம்?” என்று ஒருத்தி கேட்டாள். “உனக்குத் தெரியாதா என்ன? வைத்தியர் சொன்னாராம். நோயாளிக்கு அமைதி வேண்டும் என்று. பல்லக்கிலே நெடுந்தூரம் தூக்கிக் கொண்டு போனால் அவரது உடம்பு நெகிழ்ந்து கொள்ளலாம் என்றாராம். அதற்காகத் தான்....” “ஆமாண்டி, அது யாரடி அப்பேர்ப்பட்ட நோயாளி? அவனுக்காக இவ்வளவு தடபுடல் படுகிறதே?” “அவன் செண்பகத் தீவிலிருந்து வந்த இரத்தின வியாபாரியாம், தேவசேனன் என்று பெயராம். மாமல்லபுரத்து வீதியில் நமது தேவியைப் பார்த்தானாம். உறையூரில் இருக்கும் தன் தாயாரைப் பார்க்கப் போவதாகச் சொன்னானாம். அவன் அந்த ஆற்றங்கரை மண்டபத்தில் அநாதையாய்க்கிடக்கவே, தேவி அவனை நம்மோடு உறையூருக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று பல்லக்கில் ஏற்றிக் கொண்டாள்.” “அடி மரகதம்! இதில் ஏதோ மர்மம் இருக்கிறதடி!” “என்ன மர்மம்!” “கட்டாயம் இருக்கிறது; இல்லாவிட்டால் வழியில் அநாதையாய்க் கிடந்தவனுக்கு இப்படி இராஜ வைத்தியமும் இராஜோபசாரமும் நடக்காதடி மரகதம்!” “சீச்சீ...”

“அவனை இந்த ஊரிலேயே விட்டுவிட்டு வைத்தியம் பார்த்து அனுப்பி வைக்கச் சொல்லலாமல்லவா? நம்மோடு எதற்காகப் பல்லக்கில் ஏற்றி அழைத்துப் போக வேண்டும்?” “ஆமாண்டி, தங்கம்! அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால், உனக்குச் சொல்லமாட்டேன்.” “சொல்லாமற் போனால், நான் உன்னோடு பேசப் போவதில்லை.” “இல்லையடி, கோபித்துக் கொள்ளாதே, இங்கே கிட்ட வா, சொல்லுகிறேன். யார் காதிலாவது விழப்போகிறது!” “சொல்லு பின்னே...”

“உறையூர் இராஜகுமாரன் செண்பகத் தீவில்தான் இருக்கிறானாம். அவனை நம் தேவி காஞ்சிநகர் வீதியிலே பார்த்ததும், அவனை மன்னிக்கும்படி சக்கரவர்த்தியிடம் வேண்டிக் கொண்டதும் தெரியுமோ, இல்லையோ? அந்த இராஜகுமாரனைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமென்றுதான் பின்னோடு இந்த இரத்தின வியாபாரியை அழைத்து வருகிறார்.” “ஓகோ! அப்படியானால் உறையூருக்குப் போன பிறகும் இவன் தம்முடன் வஸந்த மாளிகையிலேதான் இருப்பானாக்கும்?” “ஆமாம்.” “ஏண்டி மரகதம், அந்த இரத்தின வியாபாரியை நீ பார்த்தாயாடி?” “பார்க்காமலென்ன? நான்தானே அவனுக்கு மருந்து கொடுக்கிறேன்!” “அவன் இளம் வயதாமேடி?” “ஆமாம்; அதனாலென்ன?” “ரொம்ப அழகாயிருக்கிறானாமே? முகத்தில் களை சொட்டுகிறதாமே?” “அதற்காக....” “எனக்கென்னமோ மரகதம், கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அப்படிப்பட்டவனை நமது தேவி தன் பக்கத்தில்....” “அடி, பாவி! தேவியைப் பற்றி ஏதாவது சொன்னாயோ, உன் நாக்கைச் சுட்டு விடுவேன்!” “சண்டாளி! தேவியைப் பற்றி நான் என்னடி சொன்னேன்?” “ஏதோ சொல்ல ஆரம்பித்தாயே!”

“சீ! தேவியைப் பற்றிச் சொல்வேனாடி? அப்படிப்பட்ட இளம் ரூபவானுக்குப் பக்கத்தில் உன்னைக் கொண்டுபோய் விட்டு, மருந்தும் கொடுக்கச் சொன்னால் நீ இலேசுப்பட்டவளாடி? பெரிய மாயக்காரியாச்சே! வேறு ஏதாவது மருந்து கொடுத்து விட்டாயானால்... ஐயையோ! கிள்ளாதேடி!....” இப்படிப் பேசிக் கொண்டே பணிபெண்கள் இருவரும் வேலி ஓரத்திலிருந்து அப்பால் போய் விட்டார்கள். பொன்னன் மேற்கண்ட சம்பாஷணையில் ஒரு வார்த்தை விடாமல் மிகவும் கவனமாய்க் கேட்டான். அவன் மனதில் வெகுகாலமாக அறிந்திராத மகிழ்ச்சி உண்டாயிற்று. இன்னும் கொஞ்ச தூரம் வேலி ஓரமாகப் போனான். ஒரு கூடாரத்தில் கொஞ்சம் கலகலப்பாயிருந்தது. அங்கே வேலியைச் சற்று விலக்கிக் கொண்டு உற்று நோக்கினான். தீவர்த்தி வெளிச்சத்தில், கட்டிலில் விக்கிரமன் படுத்திருப்பதும், பக்கத்தில் வைத்தியர் உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டுப் பொன்னன் அங்கிருந்து திரும்பினான்.

 

பொன்னனின் சிந்தனைகள் .19

பொன்னன் பராந்தக புரத்தின் வீதியில் போய்க் கொண்டிருந்தபோது, எதிரில் இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டு ஒதுங்கி நின்றான். பல்லக்கில் அமர்ந்திருந்த குந்தவிதேவியைத் தீவர்த்தி வெளிச்சத்தில் பார்த்தான். இதற்கு முன் அவன் மனதில் என்றும் தோன்றாத பக்தியும் மரியாதையும் அவளிடம் அவனுக்கு உண்டாயிற்று. தெய்வீக சௌந்தரியம் பொருந்திய இந்தத் தேவியின் உள்ளமும் தெய்வத் தன்மை கொண்டதாகவல்லவா இருக்கிறது? வழியில் அநாதையாய்க் கிடந்தவனைக் தூக்கித் தன்னுடைய பல்லக்கில் ஏற்றிக் கொண்டு வருவதற்கு எவ்வளவு கருணை, தயாளம், பெருந்தன்மை வேண்டும்?

அன்றிரவு பொன்னன் அவ்வூர்க் கோயில் பிராகாரத்தில் படுத்துக் கொண்டே மேலே செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தனை செய்தான். இளவரசரோ சரியான சம்ரக்ஷணையில் இருக்கிறார். குந்தவி தேவியைக் காட்டிலும் திறமையாக அவரைத் தன்னால் கவனிக்க முடியாது. இளவரசர் எங்கே போக விரும்பினாரோ அவ்விடத்துக்கே குந்தவிதேவி அவரை அழைத்துப் போகிறார். ஏதோ சோழ வம்சத்தின் குலதெய்வமே இவ்விதம் ஏற்பாடு செய்ததென்று சொல்லும்படி எல்லாம் நடந்திருக்கிறது. எப்படியும் இளவரசருக்கு உடம்பு நன்றாய்க் குணமாகச் சில தினங்கள் ஆகும். அதுவரைக்கும் அவரைத் தான் பார்க்கவோ, பேசவோ சௌகரியப்படாது. பின்னர், அவருக்கு உடம்பு குணமாகும் வரையில் தான் என்ன செய்வது? பின்னோடு தொடர்ந்து போவதினாலோ, உறையூருக்குப் போய் உட்கார்ந்திருப்பதினாலோ என்ன பிரயோஜனம்? அதைக் காட்டிலும் ராணி அருள்மொழித் தேவியை விடுதலை செய்ய வேண்டிய காரியத்தைப் பார்ப்பது நலமல்லவா? இதற்குச் சிவனடியாரைப் போய்ப் பார்த்து அவருடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். அருள்மொழித் தேவியைப் பற்றி ஏதாவது துப்புத் தெரிந்தவுடன் தம்மிடம் வந்து தெரிவிக்கும்படி சொல்லியிருக்கிறார். தம்மைச் சந்திக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். மாமல்லபுரத்துக்குச் சமீபத்தில் அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கும் சிற்பியின் வீட்டைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறார். அங்கே போய் அவரைச் சந்தித்து எல்லா விஷயங்களையும் சொல்லி, அவருடைய யோசனைப்படி நடப்பதுதான் உசிதம் என்று தீர்மானித்தான்.

மறுநாள் காலையில் இராஜ பரிவாரங்கள் பராந்தகபுரத்தை விட்டுக் கிளம்பி உறையூர்ச் சாலையில் போவதைத் தூர இருந்து பொன்னன் பார்த்து, “பகவானே! எங்கள் இளவரசரைக் காப்பாற்று; நான் மாமல்லபுரத்திலிருந்து திரும்பி வருவதற்குள் அவர் உடம்பு பூரணமாய்க் குணமாகி விடவேண்டும்” என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான். பரிவாரங்கள் மறைந்ததும், எதிர்த் திசையை நோக்கி நடக்கலானான். அவனுடைய கால்கள் மாமல்லபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதிலும் உள்ளம் மட்டும் இளவரசர் படுத்திருந்த பல்லக்குடன் உறையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. குந்தவி தேவியின் பராமரிப்பில் இளவரசர் இருப்பதினால் ஏற்படக்கூடிய அபாயம் அவனுக்கு அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. பல்லக்கில் படுத்திருக்கும் நோயாளி உண்மையில் சோழநாட்டு இளவரசர் என்பதைக் குந்தவி அறிந்தால் என்ன ஆகும்? ஜுர வேகத்தில் இளவரசர் பிதற்றும்போது அந்த உண்மை வெளியாகி விடலாமல்லவா? அல்லது வஸந்த மாளிகையில் அவர் நல்லுணர்வு பெற்றதும், திடீரென்று பழைய இடங்களைப் பார்க்கும் வியப்பினால் தாம் இன்னார் என்பதை வெளியிட்டு விடலாமல்லவா? - அதனால் ஒருவேளை ஏதேனும் விபரீதம் விளைந்துவிடுமோ? குந்தவிதேவிக்கு உண்மை தெரிந்தால் அவளுடைய தமையனுக்கும் தெரிந்துதான் தீரும். பிறகு, சக்கரவர்த்திக்கும் தெரியாமலிராது. சக்கரவர்த்தியினால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் அல்லவா இளவரசர்? அதை மீறிப் பொய் வேஷத்தில் வந்ததற்குச் சிட்சை மரணமேயல்லவா?

ஆனால், கடவுள் அருளால் அப்படியெல்லாம் ஒன்றும் நேராது என்று பொன்னன் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டான். குந்தவி தேவிக்கு ஒருவேளை உண்மை தெரிந்தால், அவர் இளவரசரைக் காப்பாற்றவே முயல்வார். முன்னம், தேசப் பிரஷ்ட தண்டனை விதிக்கப்பட்ட போதே அவருக்காக மன்னிப்புக் கோரி மன்றாடியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோமே? அதைப் பற்றிச் சிவனடியார் அருள்மொழி ராணியிடம் எவ்வளவெல்லாம் சொன்னார்?.... சிவனடியாரையும் குந்தவி தேவியையும் பற்றிச் சேர்ந்தாற் போல் நினைத்ததும், பொன்னனுக்கு நேற்றிரவு மகேந்திர மண்டபத்தின் வாசலில் நடந்த சம்பாஷணை நினைவு வந்தது. மனதில் இன்னதென்று சொல்ல முடியாத கவலையும் திகிலும் உண்டாயின. சிவனடியாரைப் பிடித்துக் கொண்டு வரும்படி குந்தவி தேவி மாரப்ப பூபதிக்குக் கட்டளையிட்டிருக்கிறாராமே? இது எதற்காக?

அந்தச் சிவனடியார்தான் யார்? அவர் உண்மையில் உத்தம புருஷர்தானா? அல்லது கபட சந்நியாசியா? சோழ குலத்துக்கு அவர் உண்மையில் சிநேகிதரா? அல்லது சிநேகிதர் போல் நடிக்கும் பகைவரா? இளவரசர் திரும்பி வந்திருப்பது பற்றியும், இப்போது குந்தவி தேவியின் பராமரிப்பில் வஸந்த மாளிகைக்குப் போயிருப்பது பற்றியும் அவரிடம் சொல்லலாமா, கூடாதா! - ஐயோ அதையெல்லாம் பற்றி இளவரசரிடம் கலந்து பேசாமற் போனோமே என்று பொன்னன் துக்கித்தான். இன்னொரு விஷயம் பொன்னனுக்கு வியப்பை அளித்தது. இளவரசரை ஒற்றர் தலைவன் ஆபத்திலிருந்து விடுவித்த பிறகு அன்றிரவு காட்டில் ஒரு சிற்பியின் வீட்டில் தங்கியதாக அல்லவா சொன்னார்! தன்னைச் சிவனடியார் வந்து காணச் சொல்லியிருப்பதும் காட்டின் நடுவில் உள்ள சிற்பியின் வீட்டில்தானே? அடையாளங்களைப் பார்த்தால் இரண்டும் ஒரே இடமாகவல்லவா தோன்றுகிறது? ஒற்றர் தலைவனுக்கும் சிவனடியாருக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

சிவனடியார் ஒரு மகான் என்ற எண்ணம் பொன்னனுக்குப் பூரணமாக இருந்தது. அவர் தன்னை ஒரு சமயம் மாரப்பனிடம் அகப்படாமல் காப்பாற்றியதை அவன் எந்த நாளும் மறக்க முடியாது. இன்னும் அருள்மொழி ராணி அவரிடம் பூரண நம்பிக்கை வைத்திருந்தார் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனாலும், அவர் உண்மையான சிவனடியார் அல்ல - அவ்விதம் வேடம் பூண்டவர் என்று சந்தேகிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருந்தன. வள்ளி இவ்விதம் சந்தேகத்துடன் அவர் யார் என்பதைப் பற்றியும் ஒரு ஊகம் கூறினாள். அதாவது அவர் உண்மையில் பார்த்திப மகாராஜாதான் - மகாராஜா போர்க்களத்தில் சாகவில்லை - தன்னந்தனியே தாம் உயிர் தப்பி வந்ததை அவர் யாருக்கும் தெரிவிக்க விரும்பாமல் சிவனடியார் வேஷம் பூண்டிருக்கிறார் என்று வள்ளி சொன்னாள். அவளுடைய மதியூகத்தில் பொன்னனுக்கு எவ்வளவோ நம்பிக்கை உண்டு என்றாலும் இதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

அவனுடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான இன்னொரு சம்பவம் நேரிட்டிருந்தது. அருள்மொழி ராணி தீர்த்த யாத்திரை கிளம்பிச் சென்ற பிறகு பொன்னன் பெரிதும் மனச்சோர்வு அடைந்திருந்தான். தோணித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் காட்டிலிருந்த ஐயனார் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்யலாமென்று அவன் போனான். அங்கே சந்நிதியில் வைத்திருந்த மண் யானைகளில் ஒன்று உடைந்து விழுந்திருப்பதைக் கண்டான். அதனருகில் அவன் சென்று பார்த்தபோது, மண் குதிரையின் வயிற்றுக்குள் ஒரு துணி மூட்டை இருந்தது. அதிசயத்துடன் அவன் அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதற்குள் புலித்தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகள் இருக்கக் கண்டான். அப்போது அவனுக்கு உண்டான வியப்புக்கு அளவேயில்லை. யோசிக்க, யோசிக்க இது சிவனடியாருடைய வேஷப் பொருள்கள்தான் என்பது நிச்சயமாயிற்று.

அந்த வேஷதாரி யார்? அவர் நல்லவரா, பொல்லாத சூழ்ச்சிக்காரா? அவரை நம்பலாமா, கூடாதா? அந்தப் பயங்கர மகா கபால பைரவர் மாரப்பன் காதோடு, சிவனடியாரைப் பற்றி ஏதோ சொன்னாரே அது என்ன? கருணையும், தயாளமும் உருக்கொண்ட குந்தவி தேவி எதற்காக அச்சிவனடியார் மேல் வெறுப்புக் கொண்டிருக்கிறாள்?

இதெல்லாம் பொன்னனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், அவன் ஒன்று நிச்சயம் செய்து கொண்டான். இந்தத் தடவை சிவனடியாரைச் சந்தித்ததும் அவரைத் தெளிவாக “சுவாமி! தாங்கள் யார்?” என்று கேட்டுவிட வேண்டியதுதான். திருப்தியான விடை சொன்னால் இளவரசர் திரும்பி வந்ததைப் பற்றியும், அருள்மொழி ராணி இருக்குமிடத்தைப் பற்றியும் அவருக்குத் தெரிவிக்க வேண்டும். தகுந்த மறுமொழி கூறித் தன் சந்தேகத்தைத் தீர்க்காவிட்டால் ஒன்றும் சொல்லாமல் திரும்பி வந்துவிட வேண்டும். இளவரசருக்கு உடம்பு குணமான பிறகு அவரை எப்படியாவது சந்தித்துக் கலந்து ஆலோசித்துக் கொண்டு மேற்காரியங்களைச் செய்ய வேண்டும்.

இவ்விதம் பலவிதமாக யோசனைகளும், தீர்மானங்களும் செய்துகொண்டு பொன்னன் வழி நடந்து சென்றான். ஆங்காங்கே போக்கு வண்டிகள் கிடைக்கும் போதெல்லாம் ஏறிக்கொண்டு போனான். கடைசியில், மாமல்லபுரம் போகும் குறுக்குப் பாதையிலும் இறங்கிச் சென்றான். காட்டின் மத்தியிலுள்ள சிற்பியின் வீட்டுக்குச் சிவனடியார் மிகத் தெளிவாக அடையாளங்கள் சொல்லியிருந்தார். அந்த அடையாளங்கள் புலப்படுகின்றனவா என்று வெகு கவனமாய்ப் பார்த்துக் கொண்டு அவன் போய்க் கொண்டிருக்கையில் அவனுக்கு எதிரே சற்றுத் தூரத்தில் ஒரு குதிரை வருவதையும், அது சட்டென்று குறுக்கே காட்டில் புகுந்து போவதையும் பார்த்தான். குதிரை மேலிருந்த வீரன் தன்னைக் கவனித்தானா இல்லையா என்பது பொன்னனுக்குத் தெரியவில்லை. ஆனால் இளவரசர் சொன்ன அடையாளத்திலிருந்து அவன் ஒற்றர் தலைவனாயிருக்கலாமென்று தோன்றியது.

திரும்ப வேண்டிய இடத்தைப் பற்றிச் சிவனடியார் கூறிய அடையாளங்கள் அதே இடத்தில் காணப்படவே பொன்னன் அங்கேயே தானும் திரும்பினான். படர்ந்து தழைத்திருந்த செடிகொடிகளை உராய்ந்து கொண்டு குதிரை போகும் சத்தம் நன்றாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வழியைத் தொடர்ந்து பொன்னனும் போனான். ஒரு நாழிகை நேரம் இவ்விதம் போன பிறகு கொஞ்சம் திறந்தவெளி காணப்பட்டது. அதில் ஒரு அழகான சிற்ப வீடு தோன்றியது. அவன் சாலையில் பார்த்த குதிரை அவ்வீட்டின் பக்கத்தில் நிற்பதைக் கண்டான். அதே சமயத்தில் அவ்வீட்டிற்குள்ளிருந்து சிவனடியார் வெளியே வந்து புன்னகையுடன் அவனை வரவேற்றார். பொன்னனோ, அளவில்லாத வியப்புடனும் திகைப்புடனும் அவரை உற்று நோக்கினான்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies