நுண்ணறிவு
"பாட்டி இன்னிக்கி நான் டீச்சர் கிட்டே சபாஷ் வாங்கினேன்".
அகமும் முகமும் மலரப் பள்ளியில் நடந்த சம்பவத்தைச் சந்தர் பாட்டியிடம் சொன்னான். அனைவரும் புன்முறுவலோடு அவனைப் பார்த்தார்கள்.
"எதுக்குடா சபாஷ் வாங்கினே, செல்லம்?".
"டீச்சர் ஒரு டெஸ்ட் வச்சாங்க. நீளமான பீன்ஸ் காயை ஒரே வெட்டில் மூணாக்கச் சொன்னாங்க. யாருக்கும் விடை தெரியலே. நான் ஐடியாப் பண்ணி கரெட்டா சொல்லிட்டேன். உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க பார்க்கலாம்".
சந்தருக்கு மகிழ்ச்சி தாங்காமல் சவால் விட்டான். மற்றவர்கள் விடை தெரியாமல் புருவத்தை உயர்த்தினார்கள். விடை சொல்ல ஒருநாள் அவகாசம் கொடுக்க, அன்றைய தினக்கதை ஆரம்பம் ஆனது.
"ஒரு வெட்டுக்கு இரண்டு துண்டுகள் என்று சொல்வார்கள். ஆனால், சந்தர் டீச்சர் கேட்ட கேள்வியை ஊன்றிக் கவனித்து வேறு விதமாகச் சிந்தித்து விடை கண்டு பிடித்து விட்டான். இப்படிக் கற்பனையால் மாறுபட்ட சிந்தனையோடு சிறுவன் ஒருவன் ஒரு கிராமத்தையே காப்பாற்றிய கதையைக் கேளுங்கள்.
மலையனூர் கிராமத்தில் ஏரி ஒன்று இருந்தது. அதற்குக் 'காளி காத்த ஏரி' என்று பெயர். அந்தப் பெயர் வந்ததற்கு ஒரு கதையும் இருந்தது.
"கதைக்குள் கதையா! அது என்ன கதை பாட்டி?"
"ஒரு சமயத்தில் கனத்த பெரும் மழையால் ஏரி நிரம்பி விட்டது. ஆனால் மழை விடவில்லை. ஊர்ப்பக்கம் இருந்த ஏரிக்கரை மற்ற கரைகளைத் விட தாழ்வானது. மழைத் தண்ணீரோடு ஏரித்தண்ணீரும் சேர்ந்து ஊரை அழித்து விடும் ஆபத்து உண்டானது. ஊரைக் காப்பாற்ற ஏரிக்கரைப் பக்கம் இருந்த காளி தேவியை வேண்டிக் கொண்டார்கள். மழை நின்றவுடன் ஏரியை வந்து பார்த்தபோது மற்ற கரைகளில் நீர்மட்டம் அதிகமிருந்தும் ஊர்ப்பக்கம் இருந்த கரையில் இருந்து தண்ணீர் வழியவில்லை. இந்த அதிசயத்தைப் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போனார்கள். காளிதேவி தன் சக்தியால் வெள்ளத்தைத் தடுத்து ஊரைக் காப்பாற்றியதால் அந்த ஏரிக்குக் காளி காத்த ஏரி என்று பெயர் சூட்டினார்கள். ஏரி நிரம்பி வழியும் பொழுதெல்லாம் காளி தேவிக்குப் பூஜை செய்து ஆடிப்பாடி மகிழ்வார்கள்".
"உயரத்தில் இருக்கும் தண்ணீர் கீழே போகாமல் எப்படி இருக்க முடியும் பாட்டி."
"தம்பி, மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் கோவர்த்தன மலையை விரலில் தாங்கிக் கோகுலத்தை மழையிலிருந்து காப்பாற்றிய கதை படித்தாயே. அதுபோல் பெரிய ஆபத்து வரும்போது கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை வைத்துக் கதையைக் கேள்".
அந்த ஊரில் சிவா என்ற பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் இருந்தான். அங்கு ஆரம்பப் பள்ளியில் படித்து முடித்து விட்டு வெளியூரில் ஆறாவது படித்துக் கொண்டிருந்தான். அவனைப் போல் பலரும் அங்கு சென்று படித்து வந்தார்கள். பஸ் வசதி கிடையாது. சைக்கிள்தான் அவர்களுக்குப் பிரதான வாகனம்.
ஒருநாள் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு விட்டு நண்பர்களுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் சாலைக்கு அருகில் உள்ள பெரிய பள்ளத்தில் தண்ணீர் நிரம்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். பள்ளிக்குப் போகும் போது வெறும் பள்ளத்தைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. உடனே சைக்கிளை நிறுத்தி அங்கே இறங்கினான். அவனைப் பார்த்து மற்றவர்களும் இறங்கி விவரம் கேட்டபின் சிரித்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன் மழை பெய்ததால் தேங்கிய தண்ணீர் என்று சொன்னதை சிவா நம்பவில்லை.
நண்பர்கள் அன்று மதியம் வெளியூரில் சினிமாப் பார்க்க திட்டம் போட்டிருந்தார்கள். சிவாவின் ஆராய்ச்சி அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சிவாவும் அவர்களைப் போகச்சொல்ல, அவர்கள் பறந்து போனார்கள்.
சிவா சாலையை விட்டு இறங்கி பள்ளத்தைக் கவனித்தான். தண்ணீர் ஏரிப்பக்கமிருந்து சிறிய கால்வாய் போல் வருவது தெரிந்தது. ஏரிக்கரையில் ஏதோ விபரீதம் உண்டாகி இருப்பதாக உணர்ந்தான். அங்கு செல்வதற்கு வழியில்லை. கரடு முரடான பாதையில் வந்து கொண்டிருந்த கால்வாய் ஓரமாகச் சிரமப் பட்டுச் சென்றான். கரை வந்தவுடன் அவன் நினைத்தபடி கரையின் நடுப்பாகத்திலிருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. அதை நிறுத்த சட்டைக்குள் இருந்த பனியனைக் கழற்றி அதைச் சுருட்டி ஓட்டையில் வைத்து அடைத்தான். கசிவு நின்றதைப் பார்க்க மகிழ்ச்சி அடைந்தான். சட்டையைப் போட்டுக் கொண்டிருந்த போது ஓட்டையில் வைத்திருந்த பனியன் ஐந்தடி தூரம் போய் விழுந்தது. சிறிய துவாரமும் கொஞ்சம் பெரியதாகி தண்ணீர் பீச்சி அடித்தது.
இந்த நிலை நீடித்தால் கரை வெள்ளம் ஊருக்குள் புகுந்து பெரிய ஆபத்தை உண்டாக்கும் அபாயத்தை அறிந்தான். அதைத் தடுக்கப் பள்ளிக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் உதவி கேட்கும் எண்ணம் வந்தது. ஓட்டமும் நடையுமாகத் திரும்பி வந்தான். அதற்குள் பள்ளம் நிரம்பித் தண்ணீர் ஊர்ப் பக்கம் மெதுவாக ஓட ரம்பித்தது. சைக்கிளில் ஏறி வேகமாகப் போகும் போது வழியில் மூடிக்கிடந்த உரத்தொழிற்சாலை அருகே கிடந்த பழைய சாக்குகள் அவன் கண்ணில் பட்டன.
உதவிக்குப் போகு முன் ஏதாவது செய்ய நினைத்துச் சில சாக்குப் பைகளோடு ஏரிப் பக்கம் திரும்பி வந்தான். அதற்குள் ஓட்டை பெரிதாகி தண்ணீர் அருவி போல் கொட்ட ஆரம்பித்து விட்டது.
சிவா அங்கு கிடந்த கற்களைப் பொறுக்கிச் சாக்குப் பைகளில் போட்டு, ஓணான் கொடிகளைக் கயிறாக்கி அவைகளைக் கட்டினான்".
"அதென்ன ஓணான் கொடி பாட்டி".
"நீண்ட கயிறு போல் இலைகளுடன் கொடிகள் படர்ந்து கிடக்கும். அவைகள் ஓணான் போல் நீளமாக இருப்பதால் அந்தப் பெயர் வந்தது. இரண்டு மூன்று கொடிகளைப் பிடுங்கி இலைகளை எடுத்து விட்டால் பச்சைக் கயிறுகள் மாதிரி இருக்கும். அவைகளை ஒன்று சேர்த்து முறுக்கினால் நிஜக்கயிறு போல் உறுதியாகி விடும். காயக்காய உலர்ந்து ஒடிந்து விடும்."
"புரிந்தது பாட்டி. அப்புறம் சிவா என்ன செய்தான்?".
"கட்டிய மூட்டைகளைக் கரைமேல் வைத்தான். தண்ணீர்க் கொட்டிக் கொண்டிருக்கும் அடுத்த பக்கத்தில் சுழல் தெரிந்தது. சிவா மறுபடியும் கீழே ஓணான் கொடிகளைக் கொண்டு வந்து மூட்டைகளில் கட்டி ஒவ்வொன்றாக சுழல் பக்கம் மெதுவாக இறக்கினான். அவைகள் துவாரத்துக்குள் புகுந்து துவாரத்தை அடைத்துக் கொண்டன. அருவி போல் கொட்டிய நீரின் வேகம் குறைந்து பரவலாக வர ஆரம்பிக்க சிவாவுக்கு உற்சாகம் ஏற்பட்டது. நிம்மதியோடு காவல் நிலையம் சென்று தகவல் சொல்ல, சப் இன்ஸ்பெக்டர் கலெக்டரிடம் பேசினார்.
அடுத்த சில மணி நேரத்தில் மணல் மூட்டைகள் கொண்ட லாரிகள் ஏரிக்கரைக்கு வந்தன. அதிகாரிகள், பணியாளர்கள், தேவையான உபகரணங்களோடு கலெக்டரே வந்து விட்டார். வேலைகள் துரிதமாக நடந்தன. ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களும் அலறி அடித்துக் கொண்டு அங்கு வந்து பார்த்து ஆச்சரியப் பட்டுப் போனார்கள்.
பணிகள் முடிந்ததும் கலெக்டர், "சிவாவின் மதியூகத்தை மெச்சுகிறோம். எங்களுக்குத் தகவல் தெரிவித்தற்குப் பாராட்டுகிறோம். ஆனால் அதற்கு முன் சமயோசிதப் புத்தியால் சாக்குகளையும், கற்களையும், ஓணான் கொடிகளையும் உபயோகப் படுத்தி உடைய இருந்த கரையைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தி விட்டான். அதுதான் அவனது கூர்மையான அறிவையும், புத்திசாலித் தனத்தையும் காட்டுகிறது. சிவாவைப் புகழ வார்த்தைகளே இல்லை. காளிதேவி இந்த ஏரியைக் காத்த கதை கேட்டிருக்கிறோம். ஆனால் இந்தச் சிறுவன் இன்று நம் கண்முன்னே உங்களைக் காப்பாற்றி நடமாடும் கடவுளாகி விட்டான்" என்று புகழ்ந்தார்
ஊர் மக்கள் சிவாவை மிகவும் பாராட்டினார்கள்
"பாட்டி, உங்க கதையைக் கேட்டுக்கிட்டே தம்பியின் புதிருக்கு விடையும் கண்டு பிடித்து விட்டேன். பீன்ஸ் காயை வளைத்து வெட்டினால் மூன்று துண்டுகள் ஆகிவிடும்".
"அடி என் தங்கமே! நீ சமத்துடி".
பாட்டி பேத்தியை உச்சி முகர்ந்தாள். சந்தர் அக்காவைப் பார்த்து பூரிப்பு அடைந்தான். சுகமான சூழ்நிலையில் நித்திரை அவர்களை விரைவில் தழுவிக் கொண்டது.