கபால பைரவர்.13
அருள்மொழித்தேவி "குழந்தாய்! விக்கிரமா! இதோ வந்துவிட்டேன்!" என்று அலறிக் கொண்டு அலை கடலிலே பாய்ந்தாள் என்ற விவரத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய கண்களில் நீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. அச்சமயம் கடல்களுக்கப்பால் எங்கேயோ தான் இருக்கும் விஷயம் தன் தாயின் நினைவுக்கு வந்து அதன் பயனாகத்தான் அப்படி அவள் வெறிகொண்டு பாய்ந்திருக்க வேண்டும் என்று விக்கிரமன் எண்ணினான். பொன்னன், தானும் பரஞ்சோதி அடிகளும் தேவியைத் தேடியதைப் பற்றிச் சொல்லி வந்தபோது விக்கிரமன், "பொன்னா! சீக்கிரம் சொல்லேன்? மகாராணி அகப்பட்டாரா?" என்று கதறினான்.
"இல்லையே, மகாராஜா! அகப்படத்தானே இல்லை! அப்புறம் மகாராணியைத் தரிசிப்பதற்கு இந்தப் பாழும் கண்கள் கொடுத்து வைக்கவில்லையே!" என்று பொன்னனும் கண்ணீர் விட்டான். "பின்னே மகாராணி உயிரோடுதான் இருக்கிறார் என்று சற்று முன்பு சொன்னாயே? எனக்கு ஆறுதலுக்காகச் சொன்னாயா? - ஐயோ! இந்தச் செய்தியைக் கேட்கவா நான் கப்பலேறி கடல் கடந்து வந்தேன்!" என்று விக்கிரமன் புலம்பினான். அப்போது பொன்னன், "பொறுங்கள் மகாராஜா! குறையையும் கேளுங்கள். மகாராணி உயிரோடுதான் இருக்கிறார்; சந்தேகமில்லை, அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். நீங்களும் வந்துவிட்டீர்கள், இனிமேல் என்ன கவலை?" என்றான் பொன்னன்.
பிறகு நடந்த சம்பவங்களையும் தான் அறிந்த வரையில் விவரமாகக் கூறலுற்றான். அலைகளுக்கு மத்தியில் அடர்ந்த இருளில் பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி ராணியை வெகுநேரம் தேடினார்கள். மகாராணி அகப்படவில்லை. "பொன்னா! தேவியைச் சமுத்திரராஜன் கொண்டு போய் விட்டான்!" என்று பரஞ்சோதி அடிகள் துக்கம் ததும்பும் குரலில் கூறினார். பொன்னன் 'ஓ' என்று அழுதான்.
இனிமேல் ஒருவேளை அகப்பட்டாலும் உயிரற்ற உடல்தான் அகப்படுமென்று இரண்டு பேருடைய மனத்திலும் பட்டுவிட்டது. உயிரற்ற உடலை அலைகளே கரையில் கொண்டு வந்து தள்ளிவிடும். இனியும் தேடுவதில் ஒரு உபயோகமுமில்லை. இவ்வாறு மனத்தில் எண்ணிக் கொண்டு இரண்டு பேரும் கரை ஏறினார்கள். அவர்கள் கரைக்கு வந்த சமயத்தில் கிரகணம் விட ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தகாரத்தை அகற்றிக் கொண்டு சூரியனுடைய ஒளி நாலாதிக்குகளிலும் ஸ்தாபித்து வந்தது. மாரிக்காலத்து மாலை வேளையைப்போல் தோன்றிய அச்சமயத்தில், பரஞ்சோதியாரும் பொன்னனும் கரையேறியபோது அங்கே வெடவெடவென்று குளிரில் நடுங்கிக் கொண்டு நின்ற பரஞ்சோதியாரின் பத்தினியும் வள்ளியும், "வாருங்கள்! சீக்கிரம் வாருங்கள்!" என்று கூவினார்கள். அவர்கள் விரைவில் அருகில் நெருங்கியதும், யாரோ ஒரு ஒற்றைக் கை மனிதன் அப்போதுதான் கடலிலிருந்து கரையேறியதாகவும், அவன் அந்த ஒற்றைக் கையினால் ஒரு ஸ்திரீயைக் தூக்கிக் கொண்டு போனதாகவும், மங்கிய வெளிச்சத்தில் பார்த்தபோது, அருள்மொழி ராணி மாதிரி இருந்ததென்றும், தாங்கள் கையைத்தட்டிக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும்போதே அம்மனிதன் ஜனக் கூட்டத்தில் சட்டென்று மறைந்து போய்விட்டதாகவும் சொன்னார்கள். ஒரே படபடப்புடன் பேசிய அவர்களிடமிருந்து மேற்கண்ட விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கே சற்று நேரம் ஆகிவிட்டது. முன்னால் அலைகடலில் அருள்மொழி ராணியைத் தேடிய பொன்னனும் பரஞ்சோதியாரும் இப்போது மறுபடியும் ஜனசமுத்திரத்தில் ராணியைத் தேடத் தொடங்கினார்கள், இதுவும் நிஷ்பலனே ஆயிற்று. மாநிலத்திலுள்ள மாந்தர் யாவரும் திரண்டு வந்திருந்தது போல் தோன்றிய அந்தப் பெரிய ஜனக்கூட்டத்தில் ஒற்றைக் கை மனிதனையும் அவர்கள் காணவில்லை! அவன் ஒரு கையினால் தூக்கிச் சென்ற அருள் மொழி ராணியையும் காணவில்லை. எவ்வளவோ தேடியும் அகப்படாமற் போகவே, திருவெண்காட்டு நங்கையும் வள்ளியும் பார்த்ததாகச் சொன்னதிலேயே அவர்களுக்கு அவநம்பிக்கை உண்டாயிற்று. அது ஒரு வேளை அவர்களுடைய பிரமையாயிருக்கலாமென்று நினைத்தார்கள். ஆனால், அம் மூதாட்டியும் வள்ளியுமோ தாங்கள் நிச்சயமாய்ப் பார்த்ததாக ஆணையிட்டுக் கூறினார்கள்.
மேற்கண்ட வரலாற்றைச் சொல்லி முடித்தபிறகு அருள்மொழி ராணி இன்னும் உயிரோடுதானிருக்கிறார் என்று தான் நம்புவதற்குக் காரணம் என்னவென்பதையும் பொன்னன் கூறினான். வள்ளியும் அவனும் சில தினங்கள் வரையில் திருச்செங்காட்டாங்குடியிலிருந்து விட்டு, அருள்மொழி ராணியைப் பற்றிய மர்மத்தைத் தெரிந்து கொள்ளாமலே திரும்பி உறையூர் சென்றார்கள். அங்கே போய்ச் சில நாளைக்கெல்லாம் சிவனடியார் வந்து சேர்ந்தார். மகாராணியைப் பற்றிய வரலாற்றைக் கேட்டு அவர் பெருந்துயரம் அடைந்தார். ஒற்றைக் கை மனிதனைப் பற்றிய விவரம் அவருக்குப் பெரும் வியப்பையளித்தது. வள்ளியைத் திரும்பத் திரும்ப அவளுக்கு ஞாபகம் இருக்கும் விவரத்தையெல்லாம் சொல்லும்படி கேட்டார். கடைசியில் அவர், "பொன்னா! வள்ளி சொல்லுவதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. ராணியை ஒற்றைக் கை மனிதன்தான் கொண்டு போயிருக்கிறான். ராணி உயிருடன் இருக்கிறாள் என்பதிலும் சந்தேகமில்லை. அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு" என்றார். பிறகு அவர், "அந்த ஒற்றைக் கை மனிதன் யார், தெரியுமா?" என்று கேட்டார். "தெரியாதே சுவாமி!" என்று பொன்னன் சொன்னபோது சிவனடியார், "அவன்தான் கபாலருத்திர பைரவன், கபாலிக மதக் கூட்டத்தின் தலைமைப்பூசாரி. தமிழகத்தில் நரபலி என்னும் பயங்கரத்தை அவன் பரப்பிக் கொண்டு வருகிறான். அதைத் தடுப்பதற்குத்தான் நான் பிரயத்தனப்பட்டுக் கொண்டு வருகிறேன். எங்கேயோ ஒரு இரகசியமான இடத்தில் அவன் ரணபத்திர காளி கோயில் கட்டியிருக்கிறானாம். அந்த இடத்தைக் கண்டு பிடித்தோமானால், அங்கே அநேகமாக நமது ராணியைக் காணலாம்" என்றார்.
இதைக் கேட்டுப் பொன்னன் நடுநடுங்கிப் போனான். "ஐயோ! மகாராணியை ஒரு வேளை காளிக்குப் பலி கொடுத்திருந்தால்...." என்று அலறினான். "இல்லை பொன்னா, இல்லை! கேவலம் ஒரு பலிக்காகக் கபால பைரவன் இவ்வளவு சிரமம் உள்ள ஒரு காரியத்தில் தலையிட்டிருக்க மாட்டான். வேறு ஏதோ முக்கிய அந்தரங்க நோக்கம் இருக்கிறது. ஆகையால், ராணியை உயிரோடு பத்திரமாய் வைத்திருப்பான். ரணபத்திர காளி கோயில் இருக்குமிடத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்' என்றார் சிவனடியார்.
இதன்மேல் பல்லவ, சோழநாடுகளைப் பொன்னனும் சிவனடியாரும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பகுதியை ஒவ்வொருவர் தேடுவது என்று தீர்மானித்துக் கொண்டார்கள். பொன்னன் வள்ளியைத் தன்னுடைய அத்தை வீட்டில் விட்டுவிட்டு, சோழநாடு முழுவதும் தேடி அலைந்தான். பிறகு, காவேரியின் அக்கரைக்கு வந்து தேடத் தொடங்கினான்.
மாதக் கணக்காகத் தேடி அலைந்ததற்குக் கடைசியாக நாலு நாளைக்கு முன்புதான் பலன் கிடைத்தது. அந்தக் காட்டாற்றின் கரையோடு பொன்னன் மேற்கே மூன்று, நாலு காத தூரம் போன பிறகு ஒரு பெரிய மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த மலை அடிவாரத்தில் வெகுதூரம் அடர்த்தியான காடு சூழ்ந்திருந்தது. அவன் வழி பிடித்துக் கொண்டு வந்த காட்டாறானது அந்த மலை உச்சியிலிருந்துதான் புறப்பட்டிருக்க வேண்டுமென்றும், அந்த மலை கொல்லி மலையின் ஒரு பகுதியாயிருக்கலாமென்றும் பொன்னன் ஊகித்தான். அந்த வனப்பிரதேசத்தைப் பார்த்தவுடனேயே, இதற்குள் எங்கேயாவது ரணபத்திர காளியின் கோயில் இருக்க வேண்டுமென்று பொன்னனுக்குத் தோன்றியது. அந்த மலைக்கு உட்புறத்தில் காட்டுமிராண்டி ஜனங்கள் வசிப்பதாகப் பொன்னன் கேள்விப்பட்டிருந்தான். அவர்கள் சில சமயம் மலைக்கு வெளியில் வந்து நரபலி கொடுப்பதற்காக மனிதர்களைக் கொண்டு போவதுண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, பொன்னன் அந்த வனப் பிரதேசத்தில் நாலாபுறத்திலும் தேடி அலைய ஆரம்பித்தான். ஆனால், எந்தப் பக்கத்திலும் அதிக தூரம் காட்டுக்குள் புகுந்து போவதற்குச் சாத்தியப்படவில்லை.
கடைசியாக, காட்டாறு பெருகி வந்த வழியைப் பிடித்துக் கொண்டு போனான். போகப் போக ஆறானது குறுகி சிறு அருவியாயிற்று. அந்த அருவியின் வழியாக மலைமேல் ஏறிச் செல்வது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. சில இடங்களில் பெரிய பெரிய பாறைகள் கிடந்தன. சில இடங்களில் ஆழமான மடுக்கள் இருந்தன. இன்னும் சில இடங்களில் முள் மரங்கள் அடர்த்தியாகப் படர்ந்து, புகுந்து போக முடியாமல் செய்தன. வேறு சில இடங்களில் பாறையில் செங்குத்தாக ஏற வேண்டியதாயிருந்தது. பொன்னன் இதற்கெல்லாம் சிறிதும் சளைக்காமல் ஏறிச் சென்று கொண்டிருந்தான்.
காலையிலிருந்து மத்தியானம் வரையில் இவ்விதம் ஏறி மிகவும் களைத்துப்போன பொன்னன் கடைசியாக ஒரு பாறையின் மீது உட்கார்ந்தான். "இனிமேல் இறங்கிப் போக வேண்டியதுதான்; வேறு வழியில்லை. இராத்திரியில் இந்த வனப் பிரதேசத்துக்குள் அகப்பட்டுக் கொண்டால் காட்டு மிருகங்களுக்கு இரையாக நேரலாம்" என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மனிதப் பேச்சுக் குரல் கேட்டது. அந்த நிர்மானுஷ்யமான காட்டில் மனிதக் குரலைத் திடீரென்று கேட்டதில் பொன்னனுக்கு ஒரு பக்கம் திகிலுண்டாயிற்று. இன்னொரு பக்கத்தில் ஒருவேளை நாம் தேடிவந்த காரியம் சித்தியாகப் போகிறதோ என்ற எண்ணத்தினால் ஆவலும் பரபரப்பும் அளவில்லாமல் பொங்கின. எதற்கும் ஜாக்கிரதையாயிருக்கலாம் என்று பொன்னன் பக்கத்தில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு பாறைக்குக் கீழே சரேலென்று ஒளிந்து கொண்டான்.
சற்று நேரத்துக்கெல்லாம் மேலேயிருந்து இரண்டு மனிதர்கள் இறங்கி வருவது தெரிந்தது. ஆனால் எப்பேர்ப்பட்ட மனிதர்கள்? அவர்கள் மனிதர்கள்தானா? ஒருவன் மனிதன்தான், சந்தேகமில்லை. ஆனால், அவ்வளவு பயங்கரத் தோற்றம் கொண்ட மனிதனை அதற்கு முன்னால் பொன்னன் பார்த்ததேயில்லை. அவனுக்கு அந்தப் பயங்கரத் தோற்றத்தை அளித்தவை முக்கியமாக அவனுடைய உருட்டி விழிக்கும் பார்வையுடைய சிவந்த கண்கள்தான். இன்னும், அவனது உயர்ந்து வளர்ந்த உடலின் ஆகிருதி, நீண்ட பெரிய மீசை, தலையில் அடர்த்தியாக வளர்ந்து சுருட்டை சுருட்டையாகத் தொங்கிய செம்பட்டை மயிர், நெற்றியில் அப்பியிருந்த செஞ்சந்தனம், அதன் மத்தியில் இரத்தச் சிவப்பான குங்குமப் பொட்டு - இவையெல்லாம் அவனுடைய தோற்றத்தின் பயங்கரத்தை அதிகமாக்கின. அவன் ஒரு கரிய கம்பளிப் போர்வையைப் போர்த்தியிருந்தான். ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டியபோது அந்தப் போர்வை நழுவிற்று. அப்போது பொன்னன் "ஹோ!" என்று கதறி விட்டிருப்பான். ஆனால், பயத்தினாலேயே அவனுடைய தொண்டையிலிருந்து சத்தம் வரவில்லை. பொன்னனுக்கு அவ்வளவு ஆச்சரியத்தையும், பயத்தையும் உண்டாக்கிய காட்சி என்னவென்றால், அந்த மனிதனுக்கு ஒரு கை இல்லாமலிருந்தது தான்! அதாவது வலது தோளுக்குக் கீழே முழங்கைக்கு மேலே அவனுடைய கை துண்டிக்கப்பட்டு முண்டமாக நின்றது.
"அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்றதாக வள்ளியும் திருவெண்காட்டு அம்மையும் கூறியவன் இவன்தான்! 'கபால ருத்திர பைரவன்" என்று சிவனடியார் கூறியவனும் இவன்தான்!" என்று பொன்னனுக்கு உடனே தெரிந்து போய்விட்டது. கபால பைரவனின் தோற்றம் மட்டுமல்ல, அவனுடன் இருந்த இன்னொரு மனிதனின் தோற்றமும் பொன்னனுக்குத் திகைப்பை அளித்தது. ஆமாம்; அவனும் மனிதன்தான் என்பது அருகில் வந்தபோது தெரிந்தது. ஆனால், அவன் விபரீதமான குள்ள வடிவமுள்ள மனிதன். பத்து வயதுப் பையனின் உயரத்துடன், நாற்பது வயது மனிதனின் முதிர்ந்த முகமுடையவனாயிருந்தான். அவ்வளவு குள்ளனாயிருந்தும் அவன் கபால பைரவனைப் பின்பற்றி அந்த மலைப் பாறைகளில் அதிவிரைவாகத் தாவித் தாவிச் சென்றது, பொன்னனுடைய வியப்புடன் கலந்த திகிலை அதிகரிப்பதாயிருந்தது.
பொன்னன் கூறிய வரலாற்றில் மேற்கண்ட இடத்துக்கு வந்ததும், விக்கிரமனும் அளவில்லாத ஆவலைக் காட்டினான். அந்தக் குள்ளனை நன்றாக விவரிக்கும்படி சொன்னான். பொன்னன் அவ்விதமே விவரித்துவிட்டு, "மகாராஜா! என்ன விசேஷம்? இம்மாதிரி யாரையாவது நீங்கள் வழியில் பார்த்தீர்களா, என்ன?" என்று கேட்டதற்கு, விக்கிரமன், ஆமாம்; பொன்னா, அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். உன்னுடைய வரலாற்றைச் சொல்லிமுடி" என்றான்.
"இனிமேல் அதிகம் ஒன்றுமில்லை மகாராஜா! அருவிப் பாதையில் அவர்கள் இருவரும் வெகுதூரம் இறங்கிப் போய்விட்டார்கள் என்று தெரிந்து கொண்டு நான் மேலே வந்தேன். அவர்கள் இருப்பிடத்தையும் காளி கோயிலையும் கண்டுபிடித்து விடலாம்; ஒருவேளை மகாராணியையே பார்த்தாலும் பார்த்துவிடுவோம் என்ற ஆசையுடன் அந்த அருவிப்பாதையைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறினேன். ஆனால், சிறிது நேரத்துக்கெல்லாம் என் ஆசை பாழாகிவிட்டது. ஏனென்றால், மேலே கொஞ்ச தூரம் போனதும் அருவியானது மூன்று ஆள் உயரத்திலிருந்து செங்குத்தாக விழுந்தது. பாறையும் அங்கே செங்குத்தாக இருந்தது. அவ்விடத்தில் பாறையின் மேலே ஏறுவதோ, மேலே இருந்து கீழே இறங்குவதோ மனிதர்களால் முடியாத காரியம். அப்படியானால் இவர்கள் எப்படி வந்தார்கள்? மேலேயிருந்து யாராவது கயிறு அல்லது நூலேணி தொங்கவிட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த இடத்துக்கும் நான் ஒளிந்திருந்த இடத்துக்கும் மத்தியில் எங்கேயாவது இரகசிய வழி இருக்கவேண்டும். ஆனமட்டும் தேடிப் பார்த்தேன் மகாராஜா, பிரயோஜனப்படவில்லை. எப்படியும் போனவர்கள் திரும்பி வருவார்களென்று நினைத்து, மலை அடிவாரத்துக்கு வந்து மூன்று தினங்கள் காத்திருந்தேன். போனவர்கள் திரும்பி வரவில்லை. அதன்மேல் சிவனடியாரிடம் தெரிவித்து யோசனை கேட்கலாமென்று கிளம்பி வந்தேன். நல்ல சமயத்திலே வந்தேன் மகாராஜா!" என்று பொன்னன் முடித்தான்.
"ஆமாம்.... நல்ல சமயத்தில்தான் வந்தாய், பொன்னா! இல்லாவிட்டால் இத்தனை நேரம் நான் ஒரு வேளை என் தந்தையிருக்குமிடம் போய்ச் சேர்ந்திருப்பேன்" என்றான் விக்கிரமன். "எனக்கும் ஒருவேளை அந்தக் கதிதான் நேர்ந்திருக்கும், மகாராஜா! எப்படிப் பெருகி வந்தது பெருவெள்ளம், அவ்வளவும் அந்த மலையிலிருந்துதானே வந்திருக்கிறது? மழை பிடித்தபோது அங்கே நான் அகப்பட்டுக் கொண்டிருந்தேனேயானால்... தங்களை எங்கே பார்த்திருக்கப் போகிறேன்! மகாராணியைத்தான் எப்படித் தேடப் போகிறேன்?" "மகாராணி அந்த மலையில் இருக்கிறார் என்று உனக்கு நம்பிக்கை இருக்கிறதா பொன்னா?" என்று கேட்டான் விக்கிரமன்.
"ஆமாம், மகாராஜா! முன்னே, சிவனடியார் சொன்னபோதுகூட எனக்கு அவ்வளவு நம்பிக்கைப்படவில்லை. ஆனால் அந்த ஒற்றைக்கை பைரவனைப் பார்த்த பிறகு, நிச்சயமாக மகாராணி பிழைத்துத்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை உண்டாகிறது." "எப்படியோ என் உள்ளத்திலும் அந்த நம்பிக்கை இருக்கிறது; பொன்னா! என்னைப் பார்க்காமல் அம்மா இறந்து போயிருப்பார் என்று என்னால் நினைக்க முடியவேயில்லை. சென்ற ஆறுமாதமாக மகாராணி என் கனவில் அடிக்கடி தோன்றி வருகிறார். தை அமாவாசையன்று என் பெயரைக் கூவிக்கொண்டு கடலில் பாய்ந்ததாகச் சொன்னாயே, கிட்டத்தட்ட அந்த நாளிலிருந்துதான் அடிக்கடி அவர் கனவில் வந்து என்னை அழைக்கிறார். அவர் உயிரோடுதானிருக்க வேண்டும். ஐயோ, இந்த நிமிஷத்தில் கூட, அவர் என்னைக் கூவி அழைக்கிறார் பொன்னா! அம்மா! அம்மா!" என்று அலறினான் விக்கிரமன்.
அப்போது பொன்னன் சட்டென்று விக்கிரமனுடைய வாயைப் பொத்தி, "மகாராஜா! பொறுங்கள்!" என்றான். பிறகு, "அதோ கேளுங்கள், ஏதோ சத்தம் கேட்கிறது, மனிதக்குரல்!" என்று காதோடு கூறினான். உண்மையிலேயே அந்த இருண்ட மண்டபத்துக்கு வெளியே யாரோ இருவர் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
காளியின் தாகம்.14
பேச்சுக்குரல் நெருங்கி வருவதாகத் தோன்றவே, பொன்னன் விக்கிரமனை மண்டபத்துக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லிவிட்டு எட்டிப் பார்த்தான். மண்டபத்தை நோக்கி இரண்டு பேர் வருவது தெரிந்தது. ஆனால் இருட்டில் முகம் ஒன்றும் தெரியவில்லை. அப்போது பளீரென்று ஒரு மின்னல் மின்னிற்று. மின்னலில் அந்த இருவருடைய முகத்தையும் பார்த்ததும், பொன்னனுடைய உடம்பெல்லாம் ஒரு தடவை பதறிற்று. வந்தவர்களில் ஒருவன் மாரப்ப பூபதி; இன்னொருவன்...ஆம், கபால ருத்ர பைரவன்தான்!
அவர்களை அவ்விதம் திடீரென்று பார்த்த பேரதிர்ச்சியை ஒருவாறு பொன்னன் சமாளித்துக் கொண்டு விக்கிரமன் இருந்த இடத்தின் அருகில் சென்று அவரைத் தொட்டு மெல்லிய குரலில், “மகாராஜா!” என்றான். விக்கிரமன், “இதென்ன, பொன்னா? ஏன் இப்படி நடுங்குகிறாய்?” என்பதற்குள், பொன்னன் விக்கிரமனுடைய வாயைப் பொத்தி, “இரைய வேண்டாம்! பெரிய அபாயம் வந்திருக்கிறது; எதற்கும் சித்தமாயிருங்கள்!” என்று காதோடு சொன்னான். விக்கிரமன் இடுப்பைத் தடவிப் பார்த்து, “ஐயோ! வாள் ஆற்றோடு போய்விட்டதே!” என்று முணுமுணுத்தான். வந்தவர்கள் இருவரும் அந்த மண்டபத்தின் வாசல் திண்ணையில் வந்து மழைக்கு ஒதுங்கி நின்றார்கள். அவர்களுடைய பேச்சு உள்ளே இருந்தவர்களின் காதில் சில சமயம் தெளிவாகவும் சில சமயம் அரைகுறையாகவும் விழுந்தது.
அவர்களில் ஒருவனுடைய குரலைச் சட்டென்று விக்கிரமனும் தெரிந்து கொண்டான். திடுக்கிட்டு அவன் எழுந்திருக்கப் போனபோது பொன்னன் அவனைப் பிடித்து உட்கார வைக்க வேண்டியிருந்தது. “மகாப் பிரபோ! காளிமாதா எனக்கு இன்னும் என்ன ஆக்ஞாபித்திருக்கிறாள்? கிருபை கூர்ந்து சொல்ல வேண்டும்” என்றது மாரப்பனின் குரல். இதற்குப் பதில் கூறிய குரலானது கேட்கும்போதே மயிர்க் கூச்சல் உண்டாக்கக் கூடியதாயிருந்தது. ஒருவேளை பேய், பிசாசுகள் பேசுமானால் இப்படித்தான் அவற்றின் குரல் இருக்கும் என்று எண்ணும்படியிருந்தது.
“மாதா உனக்கு இன்னும் பெரிய பெரிய பதவிகளையெல்லாம் கொடுக்கக் காத்திருக்கிறாள். உன்னிடம் இன்னும் பெரிய பெரிய காரியங்களையும் எதிர்பார்க்கிறாள். அன்னைக்கு ரொம்பவும் தாகமாயிருக்கிறதாம். ராஜ வம்சத்தின் இரத்தம் வேண்டுமென்கிறாள்!” “ஆயிரம் வருடத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த அரசிளங் குமரனைக் காளிக்கு அர்ப்பணம் செய்ய முயன்றேன். எப்படியோ காரியம் கெட்டுப் போய்விட்டதே.....”
“உன்னாலேதான் கெட்டது; அந்த ராஜ குமாரனுக்காக நானே வந்திருந்தேன். நீ குறுக்கிட்டுக் கெடுத்து விட்டாய்.” “மன்னிக்க வேண்டும் பிரபோ...ஆனால் ராஜ குமாரன் வருகிறான் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது? “மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கிறாயே? காளிமாதா சொல்லித்தான் தெரிந்தது. அருள்மொழி ராணியின் வாய்மொழியாக மாதா எனக்குத் தெரிவித்தாள். ‘அதோ கப்பலில் வந்து கொண்டிருக்கிறான்! கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறான்?’ என்று ராணி சொன்னாள். நான் வந்தேன்! அதற்குள்ளாக நீ நடுவில் குறுக்கிட்டுக் காரியத்தைக் கெடுத்து விட்டாய்.” “பிரபோ! க்ஷமிக்க வேண்டும்....”
“போனது போகட்டும். மாதா உன்னை க்ஷமித்து விட்டாள். ஆனால், ஹதாகம்’ ஹதாகம்’ என்று கதறிக் கொண்டிருக்கிறாள்! ராஜ குல ரத்தம் வேண்டும் என்கிறாள்! இந்த அமாவாசை போய்விட்டது. துலா மாதப் பிறப்பிலாவது தாயின் தாகத்தைத் தணிக்க வேண்டும்.... அவனை நீ எப்படியாவது தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்....” “கொண்டு வந்தால்....” “கொண்டு வந்தால் உன் மனோரதம் நிறைவேறும். பூபதி! காளி மாதாவைச் சரணமாக அடைந்தவுடனே உனக்குச் சேனாதிபதிப் பதவி கிடைக்கவில்லையா? இன்னும்....” “இன்னும் என்ன சுவாமி?” “இன்னும் மிகப் பெரிய பதவிகள் உனக்கு நிச்சயம் கிடைக்கும்.” “பெரிய பதவிகள் என்றால்...”
“சோழநாட்டின் சிம்மாசனம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. மாதா கையில் கிரீடத்தை வைத்துக் கொண்டு உன் தலையில் சூட்டக் காத்திருக்கிறாள்.” “அவ்வளவுதானா, பிரபோ!” “அதைவிடப் பெரிய பதவியும் அன்னை வைத்துக் கொண்டிருக்கிறாள்.” “அது என்னவோ?” “என்னவா? பல்லவ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனம் தான்!” “ஆ!” என்றான் மாரப்ப பூபதி. சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது.
“ஆனால், அப்படிப்பட்ட மகத்தான பதவி லேசில் கிடைத்துவிடாது. அதற்குத் தகுந்த காணிக்கை காளி மாதாவுக்கு நீ சமர்ப்பிக்க வேண்டும்.” “அடியேனிடம் மாதா என்ன எதிர்பார்க்கிறாள்?” “முதலில் பார்த்திபன் மகனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்.” “செய்கிறேன்; அப்புறம்?” “வரும் துலா மாதப் பிறப்பன்று....” “சொல்லுங்கள், பிரபோ!” “காளி மாதா சந்நிதிக்கு நீ வரவேண்டும்...” “வந்து...” “உன்னுடைய தலையை உன்னுடைய கையினாலேயே வெட்டி மாதாவுக்கு அளிக்க வேண்டும்!” “ஐயோ!” என்று மாரப்பன் அலறினான். “அளித்தால் அடுத்த ஜென்மத்தில் காஞ்சி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகலாம். இல்லாவிட்டால்....” “இல்லாவிட்டால் என்ன பிரபோ!” “ஆத்ம பலிக்கு ஈடான இன்னொரு மகா பலி அளிக்க வேண்டும். அளித்தால் இந்த ஜென்மத்திலேயே சக்கரவர்த்தி பதவி கிட்டும்.” “அது என்ன பலி, சுவாமி!” “அந்த விபூதி ருத்திராட்சதாரியைப் பலிக்குக் கொண்டு வர வேண்டும்....”
“பிரபோ! இராஜ வம்சத்து இரத்தத்தை விரும்பும் காளி மாதா கேவலம் ஒரு விபூதி ருத்திராட்சதாரியைப் பலி கொள்ள விரும்புவானேன்?” என்று மாரப்பன் கேட்டான். “பூபதி! உனக்கு தெரிந்தது அவ்வளவுதான்; அந்தப் போலி ருத்திரா ட்சதாரி - உண்மையில் யார் தெரியுமா உனக்கு?” “யார் பிரபோ!” என்று பூபதி வியப்புடன் கேட்டான். “பூபதி! அது மகா மர்மம் - யாரும் அறிய முடியாத இரகசியம் - இதோ அடிக்கும் இந்தக் காற்றின் காதிலே கூட விழக் கூடாது. அருகில் வா! காதோடு சொல்கிறேன்...” சொல்ல முடியாத வியப்புடனும் பயத்துடனும் மேற்படி சம்பாஷனையின் பெரும் பகுதியைக் கேட்டுக் கொண்டு வந்த விக்கிரமனும் பொன்னனும் இப்போது செவிகளை மிகக் கூர்மையாக வைத்துக் கொண்டு கேட்டார்கள். ஆனால் ஒன்றும் காதில் விழவில்லை. திடீரென மாரப்பன் இடி இடி என்று சிரிக்கும் சத்தம் கேட்டது. “பூபதி! ஏன் சிரிக்கிறாய்? மாதாவின் வார்த்தையில் உனக்கு அவநம்பிக்கையா?” என்று கபால பைரவர் கோபக் குரலில் கேட்டார். “இல்லை பிரபோ! இல்லை!” என்றான் மாரப்பன். “பின்னர், ஏன் சிரித்தாய்?” “அந்தச் சிவனடியாரைக் கைப்பற்றிக் கொண்டு வரும்படி இன்னொரு தேவியிடமிருந்தும் எனக்குக் கட்டளை பிறந்திருக்கிறது, அந்தத் தேவி யார், தெரியுமா?” “யார்?” “தர்ம ராஜாதி ராஜ மாமல்ல நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியின் திருக்குமாரி குந்தவி தேவிதான்!” “ரொம்ப நல்லது. காளி மாதா தன் விருப்பத்தைப் பல விதத்திலும் நிறைவேற்றிக் கொள்கிறாள்!” என்றார் மகா கபால பைரவர். இந்தச் சமயத்தில் சற்று தூரத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தமும், இரைச்சலும் ஆரவாரமும் கேட்டன. பொன்னன் சத்தமிடாமல் நடந்து வாசற்படியருகில் வந்து எட்டிப் பார்த்தான். ஐந்தாறு குதிரை வீரர்கள் தீவர்த்தி வெளிச்சத்துடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் மனதிற்குள், “இன்று மகாராஜாவும் நாமும் நன்றாய் அகப்பட்டுக் கொண்டோம்!” என்று எண்ணினான். அவனுடைய மார்பும் ஹபட்பட்’ என்று அடித்துக் கொண்டது. சட்டென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டான்.
அதே சமயத்தில் மாரப்ப பூபதி, “மகாபிரபோ! அதோ என்னுடைய ஆட்கள் என்னைத் தேடிக் கொண்டு வருகிறார்கள்; நான் போக வேண்டும்” என்றான். “நானும் இதோ மறைந்து விடுகிறேன். மாதாவின் கட்டளை ஞாபகம் இருக்கட்டும்....” “மறுபடியும் எங்கே சந்திப்பது?” “வழக்கமான இடத்தில்தான். சித்ரகுப்தன் உனக்காகக் காத்திருப்பான்.” இதற்குள் இரைச்சலும் ஆரவாரமும் அருகில் நெருங்கி விட்டன. “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.” “அப்படியே பிரபோ!”
இதற்குப் பிறகு சற்று நேரம் பேச்சுக் குரல் ஒன்றும் கேட்கவில்லை. திடீரென்று கொஞ்சதூரத்தில், “சோழ சேனாதிபதி மாரப்பபூபதி வாழ்க! வாழ்க!” என்ற கோஷம் கேட்டது. பொன்னனும் விக்கிரமனும் மண்டபத்துக்கு வெளியில் வந்து பார்த்தபோது, தீவர்த்திகளின் வெளிச்சத்தில் குதிரைகள் உறையூர்ச் சாலையில் விரைவாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்கள். “மகாராஜா, எப்பேர்ப்பட்ட இக்கட்டிலிருந்து தப்பினோம்?” என்று சொல்லிப் பொன்னன் பெருமூச்சு விட்டான்.
விக்கிரமன், “பொன்னா! என்ன துரதிர்ஷ்டம்? நான் ஏறிவந்த குதிரை, அதன் மேலிருந்த இரத்தினப் பைகள் எல்லாம் ஆற்றோடு போய்விட்டதினால்கூட மோசம் இல்லை; என் உடைவாளும் போய்விட்டதே! என்ன செய்வேன்?” என்றான். “மகாராஜா!” “என்ன, பொன்னா?” “ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. மகாராணி ஸ்தல யாத்திரை கிளம்பும்போது என்னிடம் ஒரு பெட்டியை ஒப்புவித்தார்கள். உங்களிடம் கொடுக்கும்படி....” “என்ன பெட்டி அது? சீக்கிரம் சொல்லு பொன்னா!” “அதில் உங்கள் குலத்தின் வீர வாள் இருக்கிறது. பிடியில் இரத்தினங்கள் இழைத்தது....”
“நிஜமாகவா, பொன்னா? ஆகா! முக்கியமாக அந்த வாளுக்காகத்தானே நான் இப்போது தாய் நாட்டுக்கு வந்தேன்! என் தந்தை போருக்குக் கிளம்பும்போது அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பட்டாக்கத்தியையும் திருக்குறள் சுவடியையும் எனக்குக் காட்டி, ஹஇவைதாம் நான் உனக்கு அளிக்கும் குலதனம்!’ என்றார். எங்கள் மூதாதை - பரத கண்டத்தையெல்லாம் ஒரு குடையின் கீழ் ஆண்டு, கடல் கடந்த தேசங்களிலும் ஆட்சி செலுத்திய கரிகாலச்சோழர் - கையாண்ட வாள் அது. பொன்னா! பத்திரமாய் வைத்திருக்கிறாயல்லவா?”
“வைத்திருக்கிறேன். சுவாமி!” “எங்கே?” “வசந்தத் தீவில் புதைத்து வைத்திருக்கிறேன்.” “அங்கே ஏன் வைத்தாய்?” “வேறு எங்கே வைப்பேன். மகாராஜா?” “சரி பொன்னா! நாம் இப்போது வசந்தத் தீவுக்குப் போய் அந்த வாளை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். என் தந்தை என்ன சொன்னார் தெரியுமா? ஒன்பது வருடத்துக்கு முன்னால் சொன்னது நேற்றுத்தான் சொன்னது போலிருக்கிறது. ஹவிக்கிரமா! இந்தக் கரிகாலச் சோழரின் வீரவாளை வேறொரு அரசனுக்குக் கப்பம் செலுத்தும் கையாலே தொடக்கூடாது. ஆகையினால்தான் என் வாழ்நாளில் நான் இதை எடுக்கவேயில்லை. நீ எப்போது ஒரு கையகலமுள்ள பூமிக்காவது சுதந்திர மன்னனாகிறாயோ, அப்பொழுது இந்த வாளை எடுத்துக்கொள்’ என்றார். பொன்னா! நான் இப்போது செண்பகத் தீவின் சுதந்திர அரசன் அல்லவா? இனி அந்த வாளை நான் தரிக்கலாம்....”
“மகாராஜா! செண்பகத்தீவுக்கு மட்டுந்தானா? சோழ நாட்டுக்கும் நீங்கள்தான் அரசர்....” “அதற்கு இன்னும் காலம் வரவில்லை பொன்னா! ஆனால் சீக்கிரத்தில் வந்து விடும். நாம் உடனே செய்ய வேண்டிய காரியங்கள் இரண்டு இருக்கின்றன. அந்த வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயங்கர நரபலிக் கூட்டத்திலிருந்து மகாராணியை விடுவித்து அழைத்துப் போக வேண்டும். இவற்றுள் முதலில் எதைச் செய்வது, அப்புறம் எதைச் செய்வது என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும்.”
அவர்கள் மேலும் யோசனை செய்து, முதலில் உறையூருக்குப் போய் வசந்தத் தீவிலிருந்து வீர வாளை எடுத்துக் கொள்வதென்றும், பிறகு திரும்பி வந்து சிவனடியாரைத் தேடிப் பிடித்து அவருடைய உதவியுடன் மகாராணியைக் கண்டுபிடிப்பதென்றும் தீர்மானித்தார்கள். இருவரும் மிகவும் களைத்திருந்த படியால் அன்றிரவு இந்த மண்டபத்திலேயே உறங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து உறையூருக்குப் போவதென்றும் முடிவு செய்தார்கள். ஆனால் விக்கிரமனுக்கு ஏற்கனவே கடுமையான சுரம் அடித்துக் கொண்டிருந்ததென்பதையாவது, பொழுது விடிவதற்குள் அவன் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைமையை அடைவானென்பதையாவது அவர்கள் அறிந்திருக்கவில்லை.