காட்டாற்று வெள்ளம்
சென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம்! - என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை ஆராய்ந்தவர்களுக்கு வியப்பு ஒன்றும் இராது. அருவருப்பாயிருந்தாலும், உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா?"
மகேந்திர பல்லவர் காலத்திலும் நரசிம்மவர்மரின் காலத்திலும் தமிழ்நாட்டில் சைவமும் வைஷ்ணவமும் தழைத்து வளர்ந்தன. இவ்விரண்டு சமயங்களும் அன்பையும் ஜீவகாருண்யத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அப்போது தேய்ந்து போய்க் கொண்டிருந்த ஜைன, பௌத்த சமயங்களின் நல்ல அம்சங்களெல்லாம் சைவ - வைஷ்ணவ மதங்களில் ஏற்கப்பட்டிருந்தன. அவற்றுடன் சிவபக்தியும், கண்ணன் காதலும் சேர்ந்து தமிழ் நாட்டைத் தெய்வத் திருநாடாகச் செய்து வந்தன. அப்பர், சம்பந்தர் முதலிய சைவ சமயக் குரவர்களும், வைஷ கணவ ஆழ்வார்களும் தெய்வீகமான பாடல்களைப் பாடி நாடெங்கும் பக்தி மதத்தைப் பரப்பி வந்தார்கள். சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் அற்புத சிற்பக் கனவுகளைப் போல் தோன்றி வளர்ந்து வந்தன.
ஒருபுறம் இப்படிப்பட்ட அன்பு - மதங்கள் பெரும்பாலான ஜனங்களிடையே பரவி வருகையில், மிகச் சிலரான மக்களிடையே நரபலியைத் தூண்டும் பயங்கரமான கபாலிகம், சாக்தம், பைரவம் என்னும் மதங்கள் எப்படியோ இரகசியமாக வேரூன்றி வந்தன. இந்த மதங்களை ஆரம்பித்தவர்கள் மிதமிஞ்சிய மூடபக்தியை வளர்த்தார்கள். மூடபக்தி காரணமாக அவர்கள் காளிக்கோயில்களிலும், துர்க்கைக் கோயில்களிலும் தங்களுடைய சிரங்களைத் தாங்களே அநாயாசமாக வெட்டி எறிந்து கொண்டார்கள்! இப்படித் தங்களைத் தாங்களே பலிக்கொடுத்துக் கொள்வதால் அடுத்த ஜன்மத்தில் மகத்தான பலன்களை அடையலாமென்று நம்பினார்கள். இம்மாதிரி நம்பிக்கைகளை வளர்ப்பதற்குப் பூசாரிகளும் இருந்தார்கள். ஆங்காங்கு அடர்ந்த காடுகளிலும், மனிதர்கள் எளிதில் புகமுடியாத மலைப் பிராந்தியங்களிலும் காளி கோயில்களையும், துர்க்கைக் கோயில்களையும் இவர்கள் நிறுவினார்கள்.
மகேந்திர பல்லவரின் காலத்தில் வடக்கே வாதாபியிலிருந்து புலிகேசி என்பவன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது, அவனுடைய சைன்யங்களுடனே மேற்கூறிய பயங்கர மதங்களும் தமிழ்நாட்டில் புகுந்தன. பிறகு, புலிகேசி திரும்பிப் போன அடியோடு ஒரு முறையும், நரசிம்ம பல்லவர் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்ற காலத்தில் ஒரு முறையும், தமிழகத்தில் கொடும் பஞ்சங்கள் தோன்றி ஜனங்களை வருத்தின. இந்தக் காலங்களில் மேற்கூறிய நரபலி மதங்கள் அதிகமாக வளர்ந்தன. இந்த மூட மதங்களை வேரோடு களைவதற்கு நரசிம்ம சக்கரவர்த்தி பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். குருட்டு மத நம்பிக்கையை ஒழிப்பதற்குத் தண்டோபாயம் மட்டும் பயன்படாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தங்களுடைய கழுத்தைத் தாங்களே வெட்டிக் கொள்ளச் சித்தமாயிருப்பவர்களை எந்த விதத்தில் தண்டிக்க முடியும்? ஆகையால்தான் அவர் சென்ற இரண்டு வருஷமாகத் தமது மூத்த குமாரனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டுத் தாம் மாறுவேடம் பூண்டு, நாடெங்கும் சஞ்சரித்து, மேற்படி மதங்கள் எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றன, எங்கெங்கே அந்த மதங்களுக்கு வேர் இருக்கிறது என்பதையெல்லாம் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தார். இதனாலேதான் விக்கிரமனுக்கு நேர்வதற்கிருந்த பேராபத்திலிருந்து அவனைச் சக்கரவர்த்தி காப்பாற்றுவதும் சாத்தியமாயிற்று.
ஆனால், விக்கிரமனோ தனக்கு நேர இருந்த அபாயம் எப்படிப்பட்டதென்பதை அறிந்து கொள்ளவில்லை. தன்னைத் திருடர்கள் தாக்கியதாகவே அவன் எண்ணியிருந்தான். ஒற்றர் தலைவனிடம் விடைபெற்று அவனுடைய குதிரைமீது ஏறிச் சென்ற விக்கிரமனுடைய உள்ளத்தில் பல விதமான எண்ணங்கள் அலைமேல் அலை எறிந்து கொந்தளித்துக் கொண்டிருந்தன. அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுடைய உள்ளத்தில் முதன்மையாக இருந்தது. ஒற்றர் தலைவனின் உயர்ந்த ஜாதிக் குதிரை எவ்வளவோ விரைவாகச் சென்றும், அவனுடைய உள்ளத்தின் வேகம் காரணமாக, "குதிரை இன்னும் வேகமாய்ப் போகக் கூடாதா?" என்று தோன்றியது.
பிறகு, அந்த ஒற்றர் தலைவனின் கம்பீரத் தோற்றமும் அவன் மனக் கண்முன் அடிக்கடி வந்தது. அவன் தனக்குச் செய்த உதவியை நினைத்தபோது அளவில்லாத நன்றி உணர்ச்சி கொண்டான். இடையிடையே ஒரு சந்தேகமும் உதித்தது. அவ்வளவு அறிவுக் கூர்மையுடைய ஒற்றர் தலைவன் தன்னுடைய இரகசியத்தை மட்டும் கண்டுபிடிக்காமலிருந்திருப்பானா? ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சியில் தன்னை அகப்படுத்துவதற்காக இப்படி குதிரையைக் கொடுத்து அனுப்பியிருக்கிறானோ?
பின்னும், ஒற்றர் தலைவன் கூறிய நரசிம்ம சக்கரவர்த்தியின் இளம் பிராயத்துக் காதற் கதை அவனுக்கு அடிக்கடி நினைவு வந்தது. காட்டின் மத்தியில் இருந்த சிற்பியின் வீட்டில், சிவகாமி நடனமாடுவதும், அதைப் பார்த்துப் பார்த்துச் சிற்பி சிலை அமைப்பதும், இதையெல்லாம் நரசிம்மவர்மர் பார்த்துக் களித்துக் கொண்டிருப்பதுமான மானசீகக் காட்சியில் அவன் அடிக்கடி தன்னை மறந்தான். இவ்வளவுக்கும் நடுவில், பல்லக்கில் இருந்தபடி தன்னை ஆர்வம் ததும்பிய பெரிய கண்களால் விழுங்கி விடுபவள் போல் பார்த்த பெண்ணின் பொன்னொளிர் முகமும் அவன் மனக்கண் முன் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அவ்வளவு அழகு ததும்பும் முகத்தையுடையவளின் நெஞ்சில் வஞ்சனை இருக்க முடியுமா?- ஒரு நாளுமிராது. ஆனால் அவள் யார்? சக்கரவர்த்தியின் மகளா? அல்லது தோழிப் பெண்ணா?
இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டும் இடையிடையே ஊர் கண்ட இடங்களில் இது சரியான வழிதானா என்று கேட்டுக் கொண்டும் விக்கிரமன் போய்க் கொண்டிருந்தான். ஒற்றர் தலைவன் கூறியபடியே குதிரை தானாகவே சரியான உறையூர்ப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அவனுக்கு மிகுந்த வியப்புடன் மகிழ்ச்சியும் அளித்தது. இதனால் ஒற்றர் தலைவனிடம் அவனுடைய நம்பிக்கையும் மரியாதையும் அதிகமாயின. அவன் கண்டிப்பாகச் சொல்லியிருப்பதை நினைத்து, இரவிலே பிரயாணம் செய்யக்கூடாதென்றும், இருட்டுகிற சமயத்தில் ஏதேனும் ஒரு கிராமத்துச் சத்திரத்தில் தங்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டே சென்றான். ஆனால் சூரியன் அஸ்தமிப்பதற்குக் கொஞ்ச நேரம் முன்னதாகவே அவனுடைய பிரயாணத்துக்கு ஒரு பெரிய தடங்கல் ஏற்பட்டு விட்டது.
திடீரென்று கிழக்கே வானம் கருத்தது. கருமேகங்கள் குமுறிக் கொண்டு மேலே வந்தன. குளிர்ந்த காற்று புழுதியை அள்ளி வீசிக் கொண்டு அடித்தது. தூரத்தில் மழை பெய்து தரை நனைந்ததினால் கிளம்பிய மணம் பரவி வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் மழையே வந்துவிட்டது. அற்பசொற்பமாக வரவில்லை; இடியும் மின்னலுமாய் நாலு புறமும் இருண்டு கொண்டு வந்து `சோ' என்று சோனாமாரியாகப் பொழிந்தது. வானம் திடீரென்று பொத்துக் கொண்டு வெகுநாள் தேக்கி வைத்திருந்த ஜலத்தையெல்லாம் தொபதொபவென்று பூமியில் கொட்டுவது போலிருந்தது.
சொட்ட நனைந்து குளிரால் நடுங்கிய விக்கிரமன் ஒரு மரத்தடியில் சற்று நேரம் ஒதுங்கி நின்று பார்த்தான். மழை நிற்கும் வழியாயில்லை. நேரமாக ஆக இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தக் கன மழையோடு இரவின் அந்தகாரம் சேர்ந்து விட்டால் கேட்கவேண்டியதில்லை. எனவே எப்படியாவது மேலே போக வேண்டியதுதான் என்றும் கிராமம் அல்லது கோவில் ஏதாவது தென்பட்டதும் அங்கே தங்கி விடலாமென்றும் எண்ணி விக்கிரமன் குதிரையை மேலே செலுத்தினான்.
சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. பார்க்கும்போது தண்ணீர் முழங்காலளவுதான் இருக்குமென்று தோன்றியது. காட்டாற்றில் மளமளவென்று வெள்ளம் பெருகிவிடுமாதலால் சீக்கிரம் அதைத் தாண்டி விடுவதே நல்லது என்று நினைத்து விக்கிரமன் குதிரையை ஆற்றில் இறக்கினான். கொஞ்ச தூரம் போனதும், பிரவாகத்தின் வேகம் அதிகரித்தது. குதிரை வெள்ளத்தின் குறுக்கே போக முடியாமல் நீரோட்டத்துடன் போக தொடங்கியது. பிரவாகமோ நிமிஷத்துக்கு நிமிஷம் பெருகிக் கொண்டிருந்தது. முன்னால் போகலாமா பின்னால் திரும்பிக் கரையேறி விடலாமா என்று விக்கிரமன் சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, குதிரை பிரவாகத்தில் நீந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இனிக் குதிரைக்கும் ஆபத்து என்று எண்ணமிட்டவனாய் விக்கிரமன் வெள்ளத்தில் பாய்ந்தான்.
பழகிய குரல்
குதிரை மேலிருந்து வெள்ளத்தில் பாய்ந்த விக்கிரமன் சற்று நேரம் திக்கு முக்காடிப் போனான். படுவேகமாக உருண்டு புரண்டு அலை எறிந்து வந்த காட்டாற்று வெள்ளம் விக்கிரமனையும் உருட்டிப் புரட்டித் தள்ளியது. உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டு விக்கிரமன் தன்னுடைய பூரண பலத்துடன் சமாளித்துத் தண்ணீர் மட்டத்துக்கு வந்தான். பின்னர், வெள்ளத்தின் போக்கை அனுசரித்து நீந்தத் தொடங்கினான்.
சட்டென்று குதிரையின் ஞாபகம் வந்தது. "ஐயோ! அது வெள்ளத்தில் போயிருக்குமே?" என்ற எண்ணத்தினால் அவன் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தபோது, வெகு தூரத்தில் தான் ஆற்றில் இறங்கிய இடத்துக்கருகில் குதிரை வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். "நல்ல வேளை! குதிரையாவது பிழைத்ததே!" என்று அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. ஏனெனில், தான் தப்பிக் கரையேறலாம் என்ற ஆசை அவனுக்கு வரவரக் குறைந்து வந்தது. அக்கரையை நெருங்க நெருங்க, வெள்ளத்தின் வேகம் அபரிமிதமாயிற்று. யானைகளையும் குன்றுகளையும் கூடப் புரட்டித் தள்ளிவிடக்கூடிய வேகத்துடனும் 'ஓ' வென்ற இரைச்சலுடனும் அந்த வெள்ளம் அலைமோதிக் கொண்டு வந்தது. விக்கிரமனுடைய கைகள் களைப்படையத் தொடங்கின. நீந்திக் கரை ஏறுவது அசாத்தியம் என்றே விக்கிரமன் முடிவு செய்துவிட்டான். ஆகா! விதியின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது; என்னவெல்லாம் பகற் கனவு கண்டோம்! ஆகாசக் கோட்டைகள் கட்டினோம்? எல்லாம் இப்படியா முடியவேணும்! தந்தை பார்த்திப மகாராஜா கண்ட கனவைப் போலவே தன்னுடைய கனவும் முடிந்துவிட்டதே! அவராவது போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். தான் ஆற்று வெள்ளத்தில் அகால மரணமல்லவா அடைய வேண்டியிருக்கிறது! இதற்காகவா இவ்வளவு அவசரமாகத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தோம்? ஐயோ? அம்மாவைப் பார்க்காமலேயல்லவா போகிறோம்! ஒரு தடவையாவது அவளைப் பார்த்து, "அம்மா! தகப்பனாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கடல்களுக்கு அப்பாலுள்ள தேசத்தில் சுதந்திர இராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறேன்" என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லையே! - அவ்விதம் சொன்ன பிறகு இத்தகைய மரணம் சம்பவித்திருந்தால்கூடப் பாதகமில்லை. ஆகா! திரும்புங்காலையில் மாமல்லபுரத்தின் அந்தத் தாமரைக் கண்ணாளைக் கண்டுபிடித்து, அவள் யாராயிருந்தாலும் சரிதான், "என்னுடன் நீயும் தேசப் பிரஷ்டையாகி வரச் சம்மதமா!" என்று கேட்க எண்ணியிருந்தோமே? அவள் ஒருவேளை நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ? அப்படியானால், எத்தகைய ஏமாற்றம் அடைவாள்? - ஆகா, கம்பீரத் தோற்றமுள்ள அந்த ஒற்றர் தலைவனை மறுபடியும் பார்த்து, அவனிடம் குதிரையை ஒப்புவிக்காமல் அல்லவா போகிறோம்?
விக்கிரமனுடைய கைகள் அடியோடு களைத்துவிட்டன. அவனுடைய உடம்பு இரும்பினால் ஆனதுபோல் கனத்தது. முடியாது, இனி ஒரு கணமும் முடியாது... அதோ வெள்ளத்தில் உருண்டு புரண்டு கறுப்பாய் வருகிறதே, அது என்ன? பெரிய மரம் ஒன்றை வெள்ளம் அடித்துக் கொண்டு வருகிறது. நல்ல வேளை! அதைப் பிடித்துக் கொள்ளலாம்... ஐயோ! மரம் அதோ போய் விட்டதே! இனிமேல் நம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லை.... விக்கிரமனுடைய கண்கள் இருண்டன; மதி மயங்கிற்று. அந்தச் சமயத்தில் அவனுக்குத் திடீரென்று படகோட்டி பொன்னனுடைய நினைவு வந்தது! இளம் பிராயத்தில் காவேரியில் நீந்தக் கற்றுக் கொள்ளும் போது, சில சமயம் இம்மாதிரி களைப்படைந்து முழுகும் தருவாய்க்கு வந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் பொன்னன் அவனைத் தூக்கி எடுத்து காப்பாற்றியிருக்கிறான். அம்மாதிரி இச்சமயமும் பொன்னன் வரமாட்டானா?... இது என்ன பைத்தியக்கார எண்ணம்? ஒரு வேளை பொன்னன்தானோ?.... இது என்ன வீண் பிரமை?... அம்மா! அம்மா!..." விக்கிரமனை ஒரு பெரிய அலை மோதிற்று; அவன் நீரில் அமிழ்ந்து நினைவிழந்தான்.
விக்கிரமனுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்து கொண்டிருந்தது. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, பாதாள உலகத்திலிருந்து வருவது போல், - "மகாராஜா" என்ற மெல்லிய குரல் கேட்டது. இது யாருடைய குரல்? கேட்டுப் பழகிய குரல் மாதிரி இருக்கிறதே! ஆம். படகோட்டி பொன்னனுடைய குரல்தான் இது. உண்மையாக நடப்பதுதானா? கனவில்லையா! பிரமையில்லையா! கடைசியாக, காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கியதும், நீந்திக் கை களைத்து நீரில் மூழ்கியதும் விக்கிரமனுக்கு நினைவு வந்தன. ஒரு வேளை இது மரணத்திற்குப் பிறகு மறு உலகத்தில் கேட்கும் குரலோ?- இதுவரையில் விக்கிரமனுடைய கண்கள் மூடியிருந்தன. இப்போது ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தான். ஆமாம்; படகோட்டி பொன்னனுடைய முகந்தான் அது! மழையில் நனைந்து வெள்ளத்தில் முழுகி எழுந்திருந்த பொன்னனுடைய தேகம் முழுதும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. போதாதற்கு அவனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது.
"பொன்னா! நீ தானா? இதெல்லாம் நிஜமா? அல்லது கனவா?" என்றான் விக்கிரமன். "மகாராஜா! நானும் அதையேதான் கேட்க இருந்தேன். நிஜமாக நீங்கள்தானா? அல்லது? அல்லது இது கனவா? பிரமையா? நிஜமாக விக்கிரம மகாராஜாவையா நான் வெள்ளத்திலிருந்து கரையேற்றினேன்... உயிர் பிழைத்துக் கண் விழித்து என்னுடன் பேசுவது நீங்கள்தானா?- ஒன்றுமே நம்ப முடியவில்லையே! - ஆகா! வள்ளி மட்டும் இங்கே இச்சமயம் இருந்தாளானால்..."
ஆற்றங்கரை அரச மரத்தடியில் ஒரு பெரிய வேரின் மேல் பொன்னன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மடியின் மீது விக்கிரமனுடைய தலை இருந்தது. மழை நின்று சிறு தூறல் போட்டுக் கொண்டிருந்தது. குளிர்ந்த வாடை வீசிற்று. இரவு சமீபித்துக் கொண்டிருந்தபடியால் நாலாபுறமும் இருள் அடர்ந்து வந்தது.
விக்கிரமன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். "பொன்னா! நான்தான்; விக்கிரமன்தான். ஒரு அதிசயத்தைக் கேள், வெள்ளத்தில் முழுகும்போது நான் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா? கடைசியாக, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். காவேரி நதியில் நான் நீந்தக் கற்றுக் கொண்டபோது, என் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகும் தருணத்தில் எத்தனை தடவை நீ என்னை எடுத்துப் படகில் ஏற்றி விட்டிருக்கிறாய்? அது எனக்கு நினைவு வந்தது. இந்தச் சமயத்திலும் நீ வரக்கூடாதா என்று நினைத்தேன். கரையிலே ஒரு மனித உருவத்தைப் பார்த்தேன். ஒருவேளை நீதானோ என்றும் எண்ணினேன். இருக்காது- இது பிரமை என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினேன். நிஜமாக நீயாகவே இருந்துவிட்டாயே! என்ன அற்புதம் - அவ்வளவு சரியான சமயத்தில் நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்?" என்றான்.
"எனக்கும் அப்படித்தான் ஆச்சரியமாயிருக்கிறது மகாராஜா....!" அதோ பாருங்கள், அந்த மண்டபத்தை என்று பொன்னன் சுட்டிக் காட்டினான். சற்று தூரத்தில் ஒரு சிறு மண்டபம் காணப்பட்டது. "பெருமழை பிடித்துக் கொண்டபோது, நான் அந்த மண்டபத்தில் ஒதுங்கியிருந்தேன். ஆற்றில் வெள்ளம் பிரமாதமாய்ப் பெருகும் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது அக்கரையில் குதிரைமேல் யாரோ வருவது தெரிந்தது. ஆற்றில் இப்போது இறங்கினால் ஆபத்தாயிற்றே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் மளமளவென்று இறங்கிவிட்டீர்கள். ஆனால், அப்போது நீங்கள் என்று எனக்குத் தெரியாது. குதிரை மேலிருந்து வெள்ளத்தில் குதிப்பதையும், நீந்தி இக்கரைக்கு வர முயற்சிப்பதையும் பார்த்து இவ்விடத்துக்கு வந்தேன். நீங்கள் கை சளைத்து முழுகுவதைப் பார்த்துவிட்டுத் தண்ணீரில் குதித்தேன். மகாராஜா! அந்தச் சமயம் சொல்ல வெட்கமாயிருக்கிறது- `இந்தப் பெரும் வெள்ளத்தில் நாமும் போய்விட்டால் என்ன செய்கிறது?" என்று கொஞ்சம் யோசனை உண்டாயிற்று. நல்ல வேளையாக அந்த யோசனையை உதறித் தள்ளி விட்டுக் குதித்தேன். அப்படிக் குதிக்காமலிருந்திருந்தால், ஐயோ!" என்று பொன்னன் கண்களை மூடிக் கொண்டான். அவன் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று.
"பொன்னா! அதை ஏன் இப்போது நினைக்கிறாய்? நமது குல தெய்வமான முருகக் கடவுள்தான் அந்தச் சமயத்தில் உனக்கு அவ்வளவு துணிச்சலைக் கொடுத்தார்... இல்லை! இல்லை! காலஞ்சென்ற பார்த்திப மகாராஜாதான் தோன்றாத் துணையாயிருந்து ஆபத்து வரும் சமயங்களிலெல்லாம் என்னைக் காப்பாற்றி வருகிறார்... இருக்கட்டும், பொன்னா! என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன்! - மகாராணி சௌக்கியமா?" என்று ஆவலுடன் கேட்டான் விக்கிரமன்.
மகாராணி என்றதும் பொன்னன் திடீரென்று கண்ணைக் கைகளால் பொத்திக் கொண்டு விம்மத் தொடங்கினான். இதை பார்த்ததும் விக்கிரமனுக்கு ஏற்பட்ட நெஞ்சத் துடிப்பை விவரிப்பது இயலாத காரியம். "ஐயோ, பொன்னா! என்ன விபத்து நேர்ந்துவிட்டது? மகாராணி இறந்துவிட்டாரா" என்று பதைபதைப்புடன் கேட்டான். அப்போது பொன்னன், "இல்லை மகாராஜா இல்லை. மகாராணி எங்கேயோ உயிரோடுதான் இருக்கிறார். ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை...." என்றான். விக்கிரமனுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது! "அதெப்படி! பொன்னா! உன்னிடந்தானே நான் மகாராணியை ஒப்புவித்துவிட்டுப் போனேன்? நீ எப்படி அஜாக்கிரதையாயிருந்தாய்?..."
"மகாராஜா! எல்லாம் விவரமாய்ச் சொல்ல வேண்டும். மறுபடியும் மழை வலுக்கும் போலிருக்கிறது. தாங்கள், ஏற்கெனவே நனைந்திருக்கிறீர்கள். குளிர் காற்றும் அடிக்கிறது! அதோ அந்த மண்டபத்துக்குப் போகலாம் வாருங்கள். எவ்வளவோ சொல்ல வேண்டும்; எவ்வளவோ கேட்கவேண்டும். இரவும் நெருங்கி விட்டது." இருவரும் எழுந்திருந்து மண்டபத்தை நோக்கிப் போனார்கள்.
சூரிய கிரகணம்
விக்கிரமனும் பொன்னனும் மண்டபத்தை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. இம்மாதிரி ஜன சஞ்சாரமில்லாத இடங்களில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அத்தகைய மண்டபங்களை அந்நாளில் கட்டியிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய கட்டளையினால் கட்டப்பட்டபடியால் அவற்றுக்கு மகேந்திர மண்டபங்கள் என்ற பெயர் வழங்கி வந்தது. மண்டபத்துக்கு வெளிப்புறம் இருந்த திண்ணையில் விக்கிரமனை இருக்கச் செய்து, பொன்னன் உள்ளே சென்று தான் அங்கு வைத்திருந்த உலர்ந்த துணிகளை எடுத்து வந்தான். விக்கிரமன் அவற்றை உடுத்திக் கொண்டான். அந்த மழைக்கால இருட்டில் இனி வழி நடப்பது அசாத்தியமாதலால், அன்றிரவை அந்த மண்டபத்திலேயே கழிப்பது என்று இருவரும் சேர்ந்து தீர்மானித்தார்கள்.
பிறகு, பொன்னன் அருள்மொழி ராணியைப் பற்றிய பின்வரும் அதிசயமான வரலாற்றைக் கூறினான்:- விக்கிரமன் தேசப் பிரஷ்ட தண்டனைக்கு உள்ளாகிக் கப்பல் ஏறிச் சென்ற பிறகு, அருள்மொழி ராணிக்கு உயிர் வாழ்க்கை பெரும்பாரமாயிருந்தது. மீண்டும் தன் புதல்வனை ஒரு முறை காணலாம் என்ற ஆசையினாலும் நம்பிக்கையினாலுமே உயிரைச் சுமந்து கொண்டிருந்தாள். ஆனாலும், முன்னர் கணவனுடனும் பிறகு புதல்வனுடனும் வசித்திருந்த வசந்த மாளிகையில் தன்னந்தனியாக வசிப்பது அவளுக்கு நரக வேதனையாயிருந்தது. இச்சமயத்தில்தான், பார்த்திப மகாராஜாவின் தோழரும் பழைய பல்லவ சேனாதிபதியுமான பரஞ்சோதி அடிகள் தமது தர்ம பத்தினியுடன் தீர்த்தயாத்திரை செய்து கொண்டு உறையூருக்கு வந்தார். அவர்கள் வசந்த மாளிகைக்கு வந்து அருள்மொழி ராணியைப் பார்த்துத் தேறுதல் கூறினார்கள். அருள்மொழி, அவர்களுடன் தானும் ஸ்தல யாத்திரை வருவதாகச் சொல்லவே, அவளையும் அழைத்துக் கொண்டு பிரயாணம் கிளம்பினார்கள். காஞ்சி நகர் ஒன்று நீங்கலாகத் தமிழகத்திலுள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களுக்ககெல்லாம் அவர்கள் சென்றார்கள். இரண்டு வருஷகாலம் இவ்விதம் யாத்திரை செய்த பிறகு சென்ற வருஷம் தை மாதத்து அமாவாசையில் காவேரி சங்கமத்தில் ஸ்நானம் செய்யும் பொருட்டு அவர்கள் பரஞ்சோதி அடிகளின் சொந்த ஊராகிய திருச்செங்காட்டாங்குடிக்கு வந்து சேர்ந்தார்கள்.
சென்ற வருஷம் தை அமாவாசையில் மகோதய புண்ணிய காலம் சேர்ந்தது. அதனுடன் அன்று சூரிய கிரகணம் - சம்பூர்ண கிரகணம் - பிடிப்பதாயுமிருந்தது. இந்த விசேஷ புண்ணிய தினத்தை முன்னிட்டு அன்று காவேரி சங்கமத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வதற்காக நாடெங்கும் இருந்து ஜனங்கள் திரள் திரளாக வந்தார்கள். பொன்னனும் வள்ளியுங்கூட உறையூரிலிருந்து நெடுநாள் பிரயாணம் செய்து காவேரி சங்கமத்துக்கு வந்து சேர்ந்தனர். உறையூர் வாழ்க்கை அவர்களுக்கும் பிடிக்காமற் போயிருந்தபடியாலும், அருள்மொழி ராணியை ஒரு வேளை சந்திக்கலாம் என்ற ஆசையினாலுந்தான் அவர்கள் வந்தார்கள். அவர்களுடைய ஆசையும் நிறைவேறியது. திருச்செங்காட்டாங்குடியிலேயே அருள்மொழித்தேவியை அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள்.
புண்ணிய தினத்தன்று காலையில் பரஞ்சோதி அடிகள், அவர்களுடைய பத்தினி திருவெண்காட்டு நங்கை, அருள்மொழி ராணி, பொன்னன், வள்ளி எல்லாருமாக காவேரி சங்கமத்துக்குக் கிளம்பினார்கள். சங்கமத்தில் அன்று கற்பனைக்கடங்காத ஜனத்திரள் கூடியிருந்தது. உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் திரண்டு வந்துவிட்டார்களோ என்று தோன்றிற்று. ஜன சமுத்திரத்தைக் கண்ட உற்சாகத்தினால் ஜல சமுத்திரமும் பொங்கிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
சமுத்திரம் பொங்கிக் காவிரிப்பூம்பட்டினத்தைக் கொள்ளை கொண்ட காலத்துக்குப் பிறகு, காவேரி நதியானது மணலைக் கொண்டு வந்து தள்ளித் தள்ளிச் சமுத்திரத்தை அங்கே வெகு தூரத்துக்கு ஆழமில்லாமல் செய்திருந்தது. இதனால் சமுத்திரத்தில் வெகு தூரம் விஸ்தாரமாக ஜனங்கள் பரவி நின்று ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள். அலைகள் வரும்போது ஜலத்தில் முழுகியும், அலைகள் தாண்டியவுடன் மேலே கிளம்பியும், இவ்வாறு அநேகர் சமுத்திர ஸ்நானத்தின் குதூகலத்தை அநுபவித்துக் கொண்டே புண்ணியமும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட ஜனக் கூட்டத்தின் மத்தியில் பரஞ்சோதி அடிகள், அருள்மொழி ராணி ஆகியவர்களும் ஸ்நானம் செய்வதற்காகச் சமுத்திரத்தில் இறங்கிச் சென்றார்கள்.
இப்போது சூரிய கிரகணம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதிக வேகமாகச் சூரியனுடைய ஒளி குறைந்து கொண்டு வந்தது. கிரகணம் முற்ற முற்ற வெளிச்சம் குன்றி வந்ததுடன், சமுத்திரத்தின் கொந்தளிப்பும் கோஷமும் அதிகமாகி வந்தன. பட்டப் பகலில், மேகமில்லாத துல்லிய ஆகாயத்தில் திடீரென்று சூரிய ஒளி குன்றி இருள் சூழ்ந்து வந்த காட்சியினால் சகலமான ஜனங்களும் மனத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித அச்சம் உண்டாயிற்று. அப்போது இயற்கையிலேயே தெய்வ பக்தியுள்ளவர்கள் அண்ட சராசரங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் இறைவனுடைய லீலா விபூதிகளையெண்ணிப் பரவசம் அடைந்தார்கள். பரஞ்சோதி அடிகள் அத்தகைய நிலையைத்தான் அடைந்திருந்தார். ராணி அருள்மொழித் தேவியும் கண்களை மூடிக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்திருந்தாள்.
வள்ளி சமுத்திரத்தையே அன்று வரையில் பார்த்தவள் இல்லை. ஆகையால் அவள் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. அவளை அலை அடித்துக் கொண்டு போகா வண்ணம் பொன்னன் அவளுடைய கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். வள்ளி பொன்னனிடம், "எனக்குப் பயமாயிருக்கிறதே! கரைக்குப் போகலாமே!" என்றாள். "இவ்வளவுதானா உன் தைரியம்?" என்று பொன்னன் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த அதிசயமான துயரச் சம்பவம்- யாரும் எதிர்பாராத காரியம் நடந்து விட்டது.
ராணி அருள்மொழி மூடியிருந்த கண்களைத் திறந்தாள். 'குழந்தாய், விக்கிரமா! இதோ வந்து விட்டேன்!" என்று கூவினாள். ராணியின் அந்த அலறும் குரல் ஒலி, அலைகளின் பேரிரைச்சலையெல்லாம் அடக்கிக்கொண்டு மேலெழுந்து பொன்னன், வள்ளி இவர்களின் செவியில் விழுந்தது. அந்த அலறல் ஒலி கேட்டது ஒரு கணம்; மறுகணத்தில் அருள்மொழி ராணி கிழக்கு நோக்கிக் கடலிலே பாய்ந்தாள். ஒரு பேரலை வந்து மோதி அவளை மூழ்கடித்தது.
பொன்னனும், வள்ளியும் `ஓ'வென்று கதறினார்கள். தியானத்திலிருந்து கண் விழித்த பரஞ்சோதி அடிகள், "என்ன? என்ன?" என்றார். பொன்னன், "ஐயோ! மகாராணி அலையில் போய்விட்டாரே!" என்று அலறினான். உடனே, பரஞ்சோதி அடிகள் தமது பத்தினியையும் வள்ளியையும் நோக்கி, "நீங்கள் உடனே கரை ஏறிவிடுங்கள்!" என்றார்.
அச்சமயத்தில் சூரிய கிரகணம் சம்பூரணம் ஆயிற்று. வானத்தில் நட்சத்திரங்கள் தெரிந்தன. இருட்டினால் கலவரமடைந்த ஜனங்களின் மத்தியில் "அப்பா!" "அம்மா!" "மகனே!" என்ற கூக்குரல்கள் கிளம்பின. பக்தர்களுடைய பரவசக் குரலில், "ஹரஹர" "சம்போ" என்னும் கோஷங்களும் எழுந்தன. அந்தக் கிரகண அந்தகாரத்தில் கடல் அலைகளுடன் போராடிக் கொண்டு பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி ராணியைத் தேடத் தொடங்கினார்கள்.