குடிசையில் குதூகலம்.25
மறுநாள் பொன்னனும் வள்ளியும் பேசிப் பேசிச் சிரிப்பதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருந்தன. படகு கிளம்புகிற சமயத்தில் தீவர்த்திகளுடனும் ஆட்களுடனும் வந்து சேர்ந்த மாரப்ப பூபதிதான் என்ன ஆர்ப்பாட்டம் செய்தான்? என்ன ஆதிகார தோரணையில் பேசினான்? "நிறுத்து படகை!", "பிடித்துக்கட்டு இரண்டு பேரையும்!" "விடாதே!","படகைச் சோதனை போடு!" என்று என்ன தடபுடல் செய்துவிட்டான். இவ்வளவு தடபுடலுக்கும் பொன்னனும் வள்ளியும் அமைதியாயிருந்தார்கள். படகைச் சோதனை போடும் போது, அவர்கள் கரையிலேயே இறங்கி நின்று விட்டார்கள். படகில் ஒன்றுமில்லையென்று கண்டதும், மாரப்பனுடைய முகத்தில் ஏமாற்றமும் கோபமும் கொந்தளித்தன. "பொன்னா! எங்கே அது!" என்றான். "எது எங்கே, சேனாதிபதி?" என்று கேட்டான் பொன்னன். "கையிலே என்னவோ கொண்டு வந்தாயே, அதுதான்!" "என்னவோ கொண்டு வந்திருந்தால், அது என்னமாய் இல்லாமலிருக்கும்?" என்றான் பொன்னன்.
மாரப்பன் மிரட்டி உருட்டிப் பார்த்ததெல்லாம், பலிக்கவில்லை. மாரப்பன் தன்னுடைய ஆட்களை விட்டு மரத்தடியிலும், தண்ணீரிலுங்கூடத் தேடிப் பார்க்கச் சொன்னான், ஒன்றும் கிடைக்கவில்லை. நடு நடுவே வள்ளி பொன்னன் காதோடு என்னவோ சொல்லிக் கலீரென்று சிரித்தபடியால் மாரப்பனுடைய கோபம் அதிகமாயிற்று. "இந்த அர்த்த ராத்திரியில் என்னத்துக்காக இங்கிருந்து திருட்டுத்தனமாகக் கிளம்புகிறீர்கள்? படகு ஏது?" என்று கேட்டான். "காலையில் தோணித்துறைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று இப்போதே கிளம்புகிறோம். எங்கள் பாட்டன் படகு; அதைத் தோணித்துறைக்குக் கொண்டு போகிறோம்" என்று வள்ளி மறுமொழி சொன்னாள்.
"அரண்மனையில் புகுந்து நீங்கள் எதையோ திருடிக் கொண்டு வந்தீர்கள்; கொண்டு வந்ததை எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறீர்கள். உண்மையை ஒத்துக் கொள்ளாவிட்டால், உங்களை இப்படியே கொண்டு போய்க் காராகிரகத்தில் அடைத்துவிடுவேன்" என்றான் மாரப்பன். எந்தக் காராகிரகத்தில் அடைப்பீர்கள்?" என்றான் பொன்னன். "நீ என்னத்துக்காக அவரோடு பேசறே? நாளைக்குச் சக்கரவர்த்தியின் சமூகத்தில் வழக்கைத் தீர்த்துக் கொண்டால் போகிறது!" என்றாள் வள்ளி.
இதைக் கேட்டதும் மாரப்பனுடைய முகம் தொங்கிப் போய்விட்டது. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு தன்னுடன் வந்திருந்த ஆட்களைப் போகச் சொல்லி விட்டுப் பொன்னனைப் பார்த்துச் சாவதானமாய்ச் சொன்னான்! "இதோ பார், பொன்னா! உனக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது இப்போது அப்போதல்ல, சில சமயம் நமக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறதென்றால், அதற்கு உன் பெண்டாட்டியின் வாய்த்துடுக்குத்தான் காரணம்..."
"இவருடைய கையிலே துடுப்பு, என்னுடைய வாயிலே துடுக்கு..." என்றாள் வள்ளி. "நீ சற்றுப் பேசாமலிரு, வள்ளி! ஆண் பிள்ளைகள் பேசிக் கொண்டிருக்கும்போது நீ ஏன் குறுக்கிடுகிறாய்?" என்றான் பொன்னன். "ஓகோ? நீங்கள் ஆண் பிள்ளைகளா? இருட்டிலே தெரியவில்லை. வெளிச்சம் போட்டுப் பார்த்தால் ஒரு வேளை தெரியும்" என்று வள்ளி முணுமுணுத்தாள்.
மாரப்பன், "பொன்னா! அவ்விதம் வள்ளியை நீ தள்ளிவிட வேண்டாம். நான் சொல்லுகிறது அவளுக்கும் தெரிய வேண்டியதுதான். உங்களால் எனக்கும் ஒரு முக்கிய காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதை மட்டும் நீங்கள் செய்து கொடுத்தீர்களானால் உங்கள் உதவியை நான் மறக்கமாட்டேன். என்னாலும் உங்களுக்கு ஏதாவது ஒத்தாசை வேண்டியதாயிருக்கும். சிறு துரும்பும் பல் குத்த உதவும்..." என்றான்.
"உங்களைச் சிறு துரும்பு என்று யாராவது சொல்வார்களா, சேனாதிபதி?" என்றான் பொன்னன். "சரிதான்; இந்தத் துரும்பினால் பல்லைக் குத்தினால், பல்லு உடைந்து போய்விடும்" என்று வள்ளி முணுமுணுத்தாள். "என்னால் தங்களுக்கு ஆகக்கூடிய ஒத்தாசை என்ன இருக்கிறது? சேனாதிபதி! இந்த ஏழைப் படகோட்டி..."
மறுபடியும் வள்ளி குறுக்கிட்டு, "நீ ஏழை என்றால் யாராவது நம்புவார்களா? உன்னை உருக்கினால் ஒரு ராஜ்யத்தை வாங்கலாமே..." என்றாள். மாரப்பன் கூடச் சிரித்துவிட்டான். "ஆமாம் பொன்னா! உன் பெயரே உனக்கு விரோதமாயிருக்கிறது. போகட்டும், நான் சொல்ல வந்தது என்னவென்றால், அந்தக் கபடச் சாமியார் இருக்கிறார் அல்லவா? அவர் இருக்கிற இடத்தை மட்டும் சொல்லிவிடு. அவரைப் பிடித்துக் கொடுப்பதாகச் சக்கரவர்த்தி குமாரிக்கு வாக்களித்திருக்கிறேன். உன் பேரிலும் வள்ளி பேரிலும் குந்தவி தேவிக்கு ரொம்பக் கோபம். நீங்கள் எனக்கு ஒத்தாசை செய்தால் குந்தவி தேவியிடம் உங்களைப் பற்றிச் சொல்லிக் கோபம் தீரும்படி செய்வேன்...."
"சேனாதிபதி! நாங்கள் படகோட்டிப் பிழைப்பவர்கள்; யார் கோபம் எங்களை என்ன செய்யும்?" என்றான் பொன்னன். "சிவனடியார் எங்கே இருக்கிறார் என்று சொல்லமாட்டாயா?" "தெரிந்தால்தானே சொல்லுவேன்!" "அந்த வேஷதாரிச் சாமியார் இன்றைக்குக்கூட இந்த உறையூரிலேதான் இருக்கிறார். 'இல்லை' என்று சத்தியமாய்ச் சொல்வாயா?" "அதெப்படிச் சொல்கிறது? சாமியார் மந்திர சக்தியுள்ளவராச்சே! எந்த நேரத்தில் எங்கே இருக்கிறாரோ, யாருக்குத் தெரியும்?" என்றாள் வள்ளி. "இந்தச் சமயம் அவர் எங்கே இருக்கிறார் என்று உனக்குச் சத்தியமாய்த் தெரியாதா?" "சத்தியமாய்த் தெரியாது" என்று பொன்னனும் வள்ளியும் ஏககாலத்தில் உண்மையைச் சொன்னார்கள். நிஜமாகவே அவர்களுக்குத் தெரியாதுதானே?
"இருக்கட்டும், பொன்னா! நான் மட்டும் மீசை முளைத்த ஆண் பிள்ளையானால் ஒரு நாளைக்கு அந்தச் சடைச் சாமியாரைக் கையும் மெய்யுமாகப் பிடித்து அவர் சடையைப் பிய்த்தெறிந்து, அவருடைய உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்துவேன்! அப்போது உங்களையும் லேசில் விடமாட்டேன்" என்று கருவிக்கொண்டே மாரப்பன் போய்ச் சேர்ந்தான். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய் இப்போது நினைத்துக் கொண்டு சிரித்த வள்ளி, "ஆகா; சாமியாருடைய சடையை மட்டும் நிஜமாகவே பிய்த்துவிட்டுப் பார்த்தால்... மனுஷன் உடனே மூர்ச்சை போட்டு விழுந்து விடமாட்டானா!" என்றாள். "ஆமாம், வள்ளி! அந்தச் சாமியார் யார்? சொல்கிறேன், சொல்கிறேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறாயே?" என்று பொன்னன் கேட்டான். "பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று நீ சொல்லு; பிறகு சாமியார் யார் என்று நான் சொல்லுகிறேன்." "அதை நினைத்தால்தான் எனக்கு வேதனையாயிருக்கிறது! பெட்டி மட்டும் கிடைக்காமற் போனால்.... ஐயோ! மகாராணியின் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்?" "அப்படி என்னதான் அந்த அதிசயப் பெட்டிக்குள் இருக்கிறது? சொல்லேன்!"
"அது அதிசயப் பெட்டிதான் வள்ளி! அதற்குள் சோழ வம்சத்தின் பரம்பரைப் பொக்கிஷம் இருந்தது. கரிகாலச் சக்கரவர்த்தியின் உடைவாளும், வள்ளுவர் பெருமான் தம் கையால் எழுதிய தமிழ் வேதச் சுவடியும் இருந்தன. பார்த்திப மகாராஜா, போர்க்களத்துக்குக் கிளம்பியபோது, அந்தப் பெட்டியை மகாராணியிடம் ஒப்புவித்தார். இளவரசருக்கு வயது வந்து சுதந்திர மன்னராகும்போது அவரிடம் ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டுப் போனார்."
"இத்தனை நாளும் அரண்மனையில் இருந்ததை இப்போது என்னத்திற்காக மகாராணி எடுத்துவரச் சொன்னார்? இளவரசருக்கு அனுப்பி வைக்கலாம் என்றா?" "இளவரசருக்கு எப்படி அனுப்புகிறது? அவர் இருக்குமிடந்தான் யாருக்குத் தெரியும்? பாவம்! எந்தக் கண்ணில்லாத் தீவிலே என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ?... அதற்காக இல்லை, வள்ளி! பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடனே மகாராணி எனக்கு இந்தக் கட்டளையை இட்டார். பல்லவ குலத்தாரின் வழக்கம் தெரியுமோ, இல்லையோ? நல்ல வேலைப்பாடான பொருள் எதைக் கண்டாலும் கொண்டு போய் விடுவார்கள். சிற்பிகள், சித்திரக்காரர்கள் இருந்தால், அழைத்துப் போய்விடுவார்கள். சுவரில் எழுதியிருக்கும் சித்திரங்களை மட்டுந்தான் அவர்களால் கொண்டு போக முடியாது. அதற்காகத்தான் நமது பார்த்திப மகாராஜா உறையூரில் சித்திரக் காட்சி மண்டபம் மட்டும் ஏற்படுத்தியிருந்தார்!"
"ஐயையோ! அப்படியா சமாசாரம்? எனக்குத் தெரியாமல் போச்சே!" "அதனால்தான் நான் சிவனடியாரிடம் பெட்டியைக் கொடுக்கத் தயங்கினேன். நீ 'கொடு கொடு' என்று அவசரப்படுத்தினாய்!" "நான் என்ன செய்வேன்? அந்த அவசரத்தில், வேறு என்னதான் பண்ணியிருக்க முடியும்? இருந்தாலும், என் மனத்திற்குள் ஏதோ சொல்கிறது. பெட்டி பத்திரமாய் வந்துவிடும் என்று."
"வந்தால் நல்லதுதான். இல்லாவிட்டால் மகாராணியின் முகத்திலேயே நாம் விழிக்க முடியாது! ஆமாம்; அந்தச் சிவனடியார் யார் வள்ளி? அவரைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம்?" அப்போது வள்ளி பொன்னன் காதோடு ஏதோ சொன்னாள். அதைக் கேட்டதும், அவனுக்கு உண்டான ஆச்சரியம் முகத்தில் தெரிந்தது. அதே சமயத்தில் வெளியில் குதிரைகளின் குளம்புச் சத்தம், பல்லக்குச் சுமப்பவர்களின் குரலொலி முதலியவை கேட்கவே, பொன்னன் வள்ளி இரண்டு பேருமே வியப்படைந்து குடிசை வாசலுக்கு வந்து பார்த்தார்கள்.
கண்ணீர்ப் பெருக்கு.26
வள்ளியும் பொன்னனும் குடிசைக்கு வெளியில் வந்த போது பார்த்திப மகாராஜாவின் காலத்திற்குப் பிறகு அவர்கள் பார்த்திராத அதிசயமான காட்சியைக் கண்டார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து காவேரிக் கரைச் சாலை வழியாக அரச பரிவாரங்கள் வந்து கொண்டிருந்தன. குதிரை வீரர்களும், காலாட் படைகளும், கொடி, பரிவட்டம் அலங்கரித்த உயர்ஜாதிப் புரவிகளும், இராஜ ஸ்திரீகளுக்குரிய முத்து விதானம் கட்டிய தந்தப் பல்லக்குகளும் வந்து கொண்டிருந்தன.
இந்த இராஜ பரிவாரமெல்லாம் தோணித் துறைத்தோப்பில் வந்து இறங்கத் தொடங்கியபோது, ஓடக்காரப் பொன்னனும், அவன் மனைவியும் ஆச்சரியக் கடலில் மூழ்கினார்கள். இதோடு ஆச்சரியம் முடிந்தபாடில்லை. காவேரி நதியில் அதே சமயத்தில் ஒரு விந்தைக் காட்சி காணப்பட்டது. உறையூர்ப் பக்கத்திலிருந்து அலங்கரித்த பல படகுகள் அன்னப் பட்சிகளைப் போல் மிதந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தன. அவற்றின் நடுவில் சிங்கக்கொடி பறந்த அழகிய படகைப் பார்த்ததும், சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களுந்தான் வருகிறார்கள் என்பது பொன்னனுக்குத் தெரிந்து போயிற்று.
ஒரு வேளை அந்தப் படகுகள் எல்லாம் இந்தத் தோணித் துறைக்குத்தான் வருமோ என்று பொன்னன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே, படகுகளின் திசைப்போக்கு மாறியது! காவேரியைக் குறுக்கே கடந்து, வசந்தத் தீவை நோக்கி அவை செல்லத் தொடங்கின. "ஓகோ! சக்கரவர்த்தி வசந்தத் தீவுக்கு ஏன் போகிறார்? ஒருவேளை மகாராணியைப் பார்க்கப் போகிறாரோ?" என்று பொன்னன் நினைத்தான். உடனே, தோப்பில் வந்து இறங்கிய வீரர்களிடம் நெருங்கிப்போய் விசாரித்தான். அவன் எண்ணியது உண்மையென்று தெரிந்தது. சக்கரவர்த்தியுடன், குந்தவி தேவி, சிறுத்தொண்டர், அவருடைய பத்தினி முதலியோர் அருள்மொழி ராணியைப் பார்க்க வசந்தத் தீவுக்குப் போகிறார்களென்று அறிந்தான். மேலும், விசாரித்து அவர்கள் அங்கிருந்து திரும்பி இந்தத் தோணித் துறைக்கு வருவார்களென்றும் இங்கிருந்து சிறுத்தொண்டர் கீழச் சோழநாட்டுக்கு யாத்திரை போகிறார் என்றும் சக்கரவர்த்தியும் குந்தவிதேவியும் உறையூருக்குத் திரும்புகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டான்.
அந்தச் சமயம் வசந்தத் தீவில் தானும் இருக்கவேண்டும் என்றும், என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பொன்னனுக்கு உள்ளம் துடித்தது. ஆனால், அந்த ஆவலை வள்ளியிடம் தெரிவித்தபோது அவள் "நன்றாயிருக்கிறது! சக்கரவர்த்தி அங்கே போயிருக்கும் போது, அவருடைய கட்டளையில்லாமல் நீ ஏன் அங்கே போக வேண்டும்? என்ன நடக்கிறதென்று தானே தெரிகிறது. அவசரம் என்ன?" என்றாள்.
எனவே, பொன்னன் துடிதுடித்துக் கொண்டு இக்கரையிலேயே இருந்தான். ஒரு முகூர்த்த காலம் ஆயிற்று. வசந்தத்தீவின் தோணித் துறையில் கலகலப்பு ஏற்பட்டது. பலர் அங்கே கும்பலாக வந்தார்கள். படகுகளிலும் ஏறினார்கள் படகுகள் இக்கரையை நோக்கி வரத்தொடங்கின.
வருகிற படகுகளை மிகவும் ஆவலுடன் வள்ளியும் பொன்னனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்க நெருங்கப் படகுகளில் இருந்தவர்கள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தார்கள். சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்த படகிலே சக்கரவர்த்தியும், ஒரு மொட்டைச் சாமியாரும் இருந்தார்கள். இதற்குள் அவர்களுடைய பார்வை இன்னொரு படகின் மேல் சென்றது. அதில் மூன்று பெண்மணிகள் இருந்தார்கள்? அருள்மொழித் தேவி போல் அல்லவா இருக்கிறது? ஆமாம். அருள்மொழித் தேவிதான். படகு கரையை அடைந்து எல்லாரும் இறங்கியபோது, பொன்னனும் வள்ளியும் வேறு யாரையும் பார்க்கவுமில்லை; கவனிக்கவுமில்லை. அருள்மொழித் தேவியின் காலில் விழுந்து எழுந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள். அருள்மொழித்தேவி அவர்களை நோக்கித் தழுதழுத்த குரலில் கூறினாள்:- "பொன்னா! வள்ளி! என்னால் இங்கே தனியாகக் காலங் கழிக்க முடியவில்லை. நான் திவ்ய ஸ்தல யாத்திரை போகிறேன். நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இந்தத் தோணித் துறையிலேயே இருந்து கொண்டிருங்கள். ஒருவேளை எப்போதாவது மறுபடியும் திரும்பி வந்தால்..."
இச்சமயம் பொன்னன் - வள்ளி இவர்கள் கண்களில் கண்ணீர் பெருகுவதை அருள்மொழித்தேவி கண்டதும், அவளுக்கும் கண்களில் நீர் துளித்தது. பேச முடியாமல் தொண்டையை அடைத்தது. பக்கத்திலிருந்த சிவவிரதையின் கரத்தைப் பிடித்துக் கொண்டு மேலே நடக்கத் தொடங்கினாள். அன்றைய தினம் அந்தக் காவேரிக்கரைத் தோணித்துறையிலே கண்ணீர்ப் பிரவாகம் ஏராளமாய்ப் பெருகித் தண்ணீர்ப் பிரவாகத்துடன் போட்டியிட்டது. சக்கரவர்த்தியும் சிறுத்தொண்டரும் பிரிந்தபோது, அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று. சிறுத்தொண்டரின் பத்தினியிடமும், அருள்மொழித் தேவியிடமும் குந்தவி விடை பெற்றுக் கொண்ட சமயம், அவர்கள் எல்லாருடைய கண்களிலிருந்தும் கண்ணீர் ஆறாய்ப் பெருகிற்று.
கிழக்குத்திசை போகிறவர்கள் முதலில் கிளம்பினார்கள். சிறுத்தொண்டர் தனியாக ஒரு பல்லக்கில் ஏறி அமர்ந்தார். அவர் பத்தினியும் அருள்மொழித் தேவியும் இன்னொரு பல்லக்கில் அமர்ந்தார்கள். சேடிகளும் பரிவாரங்களும் தொடர்ந்துவர, குதிரை வீரர்கள் முன்னும் பின்னும் காவல் புரிந்துவர, சிவிகைகள் புறப்பட்டன. சிவிகைகள் சற்றுத் தூரம் போனபிறகு, பொன்னனுக்குத் திடீரென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அவன் ஓட்டமாய் ஓடி அருள்மொழி இருந்த பல்லக்கை நெருங்கினான், தேவியும் சிவிகையை நிறுத்தச் சொல்லி, "பொன்னா! என்ன? இவ்வளவு படபடப்பு ஏன்?" என்றாள். "தேவி!" என்று பொன்னன் மேலே பேச நாவெழாமல் திகைத்தான்.
"ஏதோ சொல்ல விரும்புகிறாய் போலிருக்கிறது. பயப்படாமல் சொல்லு. இந்த அம்மையார் இருப்பதினால் பாதகமில்லை" என்றாள் ராணி. "தேவி! பெட்டியைப் பற்றிச் சொன்னீர்களல்லவா?" "என்ன? கிடைத்து விட்டதா?" என்று ராணி ஆவலுடன் கேட்டாள். "ஆமாம்; இல்லை. சீக்கிரம் கிடைத்துவிடும். அதை...." என்று தடுமாறினான் பொன்னன்.
அருள்மொழி சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, "பொன்னா! பெட்டியை நீதான் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். முன்னமே, உன்னிடம் ஒப்புவிப்பதாகத்தான் இருந்தேன். ஒரு வேளை, ஒரு வேளை.... நான் இல்லாத சமயத்தில்... அவன் வந்தால்..." ராணி மேலே பேசமுடியாமல், விம்மத் தொடங்கினாள்.
பொன்னன், "ஆகட்டும், அம்மா! இளவரசரிடம் பத்திரமாய் ஒப்புவித்து விடுகிறேன்" என்று அழுது கொண்டே சொன்னான். சிவிகை மேலே சென்றது. பொன்னன் திரும்பி வந்தபோது, சாலையில் பல்லக்கின் அருகில் நின்று குந்தவி தேவி கண்ணீர் விடுவதையும், சக்கரவர்த்தி அவளைத் தேற்றுவதையும் கண்டான். "எனக்குத் தாயார் கிடைத்ததாக எண்ணி மனமகிழ்ந்தேன். அப்பா! அதற்குக் கொடுத்து வைக்கவில்லை!" என்று குந்தவி சொன்னது பொன்னன் காதில் விழுந்தது.
குந்தவி சிவிகையில் ஏறினாள். சக்கரவர்த்தி குதிரை மீது ஆரோகணித்தார். உறையூரை நோக்கி அவர்கள் கிளம்பினார்கள். பொன்னன் குடிசைக்குள் நுழைந்ததும் வள்ளி கண்ணீர் பெருக்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். "ஐயோ! எனக்கு முன்னமே தெரியாமல் போச்சே! தெரிந்திருந்தால் மகாராணியுடன் நானும் வருவதாகச் சொல்லியிருப்பேனே! எனக்கு மட்டும் இங்கே என்ன வேலை!" என்று வள்ளி புலம்பினாள். பொன்னன் சிறிது தைரியப்படுத்திக் கொண்டு, "கடைசியில் பெண் பிள்ளை என்பதைக் காட்டி விட்டாயல்லவா?" பிரமாத வீரமெல்லாம் பேசினாயே!" என்றான். அச்சமயத்தில் மறுபடியும் வெளியில் குதிரையின் காலடிச் சத்தம் கேட்கவே, இருவரும் ஓடி வந்து பார்த்தார்கள். சக்கரவர்த்தி மட்டும் குதிரைமேல் தனியாகத் திரும்பி வந்தார். "பொன்னா! நீ இந்தத் தோணித் துறையில்தானே இருக்கப் போகிறாய்? எங்கேயும் போய்விடமாட்டாயே?" என்று கேட்டார். "இங்கேதான் இருப்பேன், பிரபோ! எங்கும் போகமாட்டேன்" என்றான் பொன்னன்.
"அதோபார்! அரண்மனைப் படகை இங்கேயே விட்டுவைக்கச் சொல்லியிருக்கிறேன். குந்தவி தேவி ஒரு வேளை வசந்த மாளிகையில் வந்து இருக்க ஆசைப்படலாம். அப்போது நீதான் படகு ஓட்ட வேண்டும்...." "காத்திருக்கிறேன், பிரபோ!" "இன்னொரு சமாசாரம்; சிவனடியார் ஒருவர் - என் சிநேகிதர் உன்னிடம் ஒப்புவிக்கும்படி ஒரு பெட்டியைக் கொடுத்தார். அது அந்தப் படகின் அடியில் இருக்கிறது. பார்த்து எடுத்துக்கொள்." இவ்விதம் சொல்லிவிட்டு, சக்கரவர்த்தி வள்ளியை நோக்கினார். அதுவரையில் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த வள்ளி சட்டென்று தலையைக் குனிந்தாள். அவளுடைய முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகை உண்டாயிற்று. அடுத்த கணத்தில், சக்கரவர்த்தியின் குதிரை காற்றாய்ப் பறந்து சென்றது.