வள்ளியின் சாபம்.20
பொன்னனுடைய குற்றச்சாட்டைக் கேட்டபோது மாரப்பன் திடீரென்று ஆயிரம் தேள் கொட்டியவனைப்போல் துடிதுடித்தான். பொன்னனைப் பார்வையாலேயே எரித்து விடுகிறவனைப்போல் ஒருகண நேரம் கடூரமாய்ப் பார்த்தான். பின்னர் திரும்பித் தலையைக் குனிந்து கொண்டான். "பூபதி! இதற்கு என்னச் சொல்கிறாய்?" என்று சக்கரவர்த்தி இடிக் குரலில் கேட்கவும், மாரப்பனுக்கு மறுபடியும் தூக்கிவாரிப்போட்டது. ஆத்திரத்தினாலும், கோபத்தினாலும் அவனுக்கு அழுகை வந்துவிட்டது. "பிரபோ! இவன் சொல்வது பொய், பொய், பொய்! இளவரசனை நான் தூண்டிவிடவில்லை. இவர்களுடைய சதியாலோசனையைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொள்வதற்காகச் சிறிது காலம் இவர்களுக்கு உதவியாயிருப்பது போல் நடித்தேன்; அவ்வளவுதான். உடனுக்குடனே, தங்களுடைய தளபதி அச்சுதவர்ம பல்லவரிடம் எல்லா விவரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தேன்...."
அப்போது, "பாவி! துரோகி!" என்ற மெல்லிய பெண் குரல் கேட்டது. சக்கரவர்த்தி "யார் அது?" என்று அதட்டிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தார். அந்தக் குரல் வள்ளி நின்ற திசையிலிருந்துதான் வந்தது. ஆனாலும் வள்ளி சக்கரவர்த்தி அந்தப் பக்கம் பார்த்தபோது பரம சாதுவைப் போல் நின்றாள்.
மாரப்பன் சிறிது தைரியமடைந்து, "பிரபோ! விக்கிரமனை இந்த அடிமைத் தூண்டிவிடவில்லை; இது சத்தியம். அவனைத் தூண்டிவிட்டது யார் என்றும் எனக்குத் தெரியும்! சத்தியமாய்த் தெரியும்! சமூகத்தில் கட்டளை பிறந்தால் சொல்லுகிறேன்" என்றான். "சொல்லு; தைரியமாய்ச் சொல்லு!" என்றார் சக்கரவர்த்தி. "ஜடாமகுடதாரியான ஒரு சிவனடியார் அருள்மொழி ராணியையும் விக்கிரமனையும் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உண்மையில் சிவனடியார் இல்லை; கபட சந்நியாசி. அவர் தான் விக்கிரமனை இந்தப் பயங்கரமான காரியத்தில் தூண்டிவிட்டார்."
இதுவரை மௌனமாய் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவி இப்போது குறுக்கிட்டு "உமக்கு எப்படித் தெரியும்? அந்த கபட சந்நியாசியை நீர் பார்த்திருக்கிறீரா?" என்று கேட்டாள். "ஆமாம், தேவி! இந்தக் கண்களாலேயே பார்த்திருக்கிறேன். இதோ சாதுபோல் நிற்கிறானே, இந்தக் ஓடக்காரனுடைய குடிசையில்தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துச் சதியாலோசனை செய்து வந்தார்கள். அந்தக் கபட சந்நியாசியின் சடையைப் பிடித்துக் குலுக்கி அவனை இன்னாரென்று வெளிப்படுத்த நான் பிரயத்தனம் செய்தேன். இந்தப் பொன்னனும் வள்ளியும் தான் அதைக் கெடுத்தார்கள்."
"என் பேச்சை எடுத்தால் நாக்கை அறுத்துவிடுவேன்" என்று வள்ளி மெல்லிய குரலில் முணுமுணுத்தாள். சக்கரவர்த்தி அவளைப் பார்த்துப் புன்னகையுடன், "பெண்ணே! அடிக்கடி உன் உதடுகள் அசைகின்றன. ஆனால் வார்த்தை எதுவும் வெளியில் வரக் காணோம்! உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமானால் பயப்படாமல் சொல்லு!" என்றார். உடனே வள்ளி சக்கரவர்த்தியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு, "பிரபோ! இவர் சொல்வதெல்லாம் பொய். சிவனடியார் இளவரசரைத் தூண்டிவிட்டார் என்பது பெரும் பொய். சாமியார் பெரிய மகான், அவர் அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தபடியால் தான் எங்கள் மகாராணி இன்னும் உயிரோடிருக்கிறார். அவர் இளவரசரை "இந்தக் காரியம் வேண்டாம், வேண்டாம்" என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார். இளவரசருடைய மனத்தை மாற்ற முடியவில்லை. சாமியார் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்துகிறவர்கள் பாவிகள், சண்டாளிகள், அவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள்...." என்றாள்.
"நிறுத்து பெண்ணே! போதும் சாபம் கொடுத்தது!" என்று சக்கரவர்த்தி சொல்லி, குந்தவியை நோக்கிப் புன்னகையுடன் "பார்த்தாயா அம்மா!" என்றார். "பார்த்தேன்; அந்தச் சாமியாரின் மந்திரத்தில் இந்தப் பெண்ணும் நன்றாய் மயங்கிப் போயிருக்கிறாள்! இவர்களில் ஒருவராவது முழுதும் உண்மை சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை அப்பா! ஒவ்வொருவரும் மனதில் ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு பேசுகிறார்கள்" என்றாள் குந்தவி.
அப்போது சக்கரவர்த்தி மாரப்ப பூபதியைப் பார்த்து, "பூபதி! உன்மேல் ஏற்பட்ட சந்தேகம் தீரவில்லை. போனால் போகிறதென்று இந்தத் தடவை மன்னித்து விடுகிறேன். சேனாதிபதி பதவிக்கு நீ இப்போது ஆசைப்படுவது வீண். அந்தப் பதவிக்கு உன்னுடைய தகுதியை இனிமேல் தான் நீ நிரூபிக்க வேண்டும். அதுவரையில் உன் பேரில் வேறு குற்றம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் தெரிந்ததா, இப்போது நீ போகலாம்!" என்று மிகக் கடுமையான குரலில் கூறினார். மாரப்ப பூபதி சப்த நாடியும் ஒடுங்கியவனாய் வெளியேறினான்.
அந்தச் சமயத்தில் ஒரு சேவகன் உள்ளே வந்து சக்கரவர்த்திக்கு அடிபணிந்து ஒரு ஓலையை நீட்டினான். சக்கரவர்த்தி அதை வாங்கிப் படித்ததும் "ஓடக்காரா! நீயும் உன் மனைவியும் இப்போது போகலாம், பிறகு உங்களைக் கவனிக்கிறேன். உன் மனைவியை அந்தச் சிவனடியார் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாயிருக்கச் சொல்லு! அவருடைய மந்திரத்தில் அவள் ரொம்பவும் மயங்கியிருக்கிறாள்போல் தோன்றுகிறது" என்றார். அப்போது வள்ளியின் முகத்திலே நாணத்தின் அறிகுறி தோன்றியது. திடீரென்று அது புன்னகையாக மாறியது. தலை குனிந்த வண்ணம் சக்கரவர்த்தியைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவள் பொன்னனைத் தொடர்ந்து வெளியே சென்றாள். சக்கரவர்த்தி அவர்கள் வெளியேறிய திசையைப் பார்த்த வண்ணம் "நானும் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன் இந்த வள்ளியைப்போல்..." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.
"அது இருக்கட்டும், அப்பா! ஏதோ ஓலை வந்ததே? அது என்ன!" என்று குந்தவி கேட்டாள். "போலிச் சிவனடியாரைப்பற்றி இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தோமல்லவா? உண்மையான சிவனடியார் இப்போது வருகிறார். நகருக்கு வெளியே சென்று அவரை நாம் எதிர்கொண்டழைத்து வரவேணும்" என்றார் சக்கரவர்த்தி.
"அவர் யார், அப்படிப்பட்ட உண்மையான சிவனடியார்? அப்பா! ஒருவேளை நமது அப்பர் பெருமானோ? அவரைப் பற்றி அன்று கொஞ்சம் அபசாரமாக நினைத்தேன். அடிகளை மறுபடியும் தரிசித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றாள் குந்தவி. "குழந்தையாகிய நீ அபசாரமாக நினைத்ததனால் அவருக்கு என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது? எப்போதும் சிவானந்தத்திலே திளைத்திருக்கும் மகான் அவர். கொஞ்சங்கூட அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம். குழந்தாய்! இப்போது வரப்போகிறவர் அப்பர் பெருமான் அல்ல; பரஞ்சோதி அடிகள்." "யார்? உங்களுடைய பழைய சேனாதிபதியா? உங்களுடன் வாதாபிக்கு வந்து புலிகேசியை வெல்ல உதவி புரிந்தவரா?" "அவர் உதவி புரியவில்லை, குந்தவி! அவர்தான் புலிகேசியை வென்றவர்; புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்பிய சளுக்கர் படைகளைத் துவம்சம் செய்தவர். அந்த மகாவீரர்தான் இப்போது அரையில் உடுத்திய துணியுடன், விபூதி ருத்திராட்சதாரியாய் ஸ்தலயாத்திரை செய்து கொண்டு வருகிறார். தமது பெயரைக் கூட அவர் மாற்றிக் கொண்டு விட்டார். "சிறுத் தொண்டர்" என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறார்." "அவர் ஏன் சேனாதிபதி பதவியை விட்டார்? அவருக்கு ரொம்ப வயதாகிவிட்டதா?" என்று குந்தவி கேட்டாள்.
"இல்லை; அவருக்கு அப்படி ஒன்றும் வயசாகவில்லை. அவர் சேனாதிபதி பதவியை விட்ட காரணத்தை இன்னொரு சமயம் சொல்கிறேன். இப்போது அவர் வரும் நேரம் ஆகிவிட்டது" என்றார் சக்கரவர்த்தி. பிறகு, "குந்தவி! பரஞ்சோதியுடன் கூட அவருடைய தர்மபத்தினியும் யாத்திரை செய்து வருகிறார். அவர்களை எதிர்கொண்டழைத்து வரலாம்; நீயும் வருகிறாயா?" என்று கேட்டார். "அவசியம் வருகிறேன், அப்பா! அவர்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு எத்தனையோ நாளாக ஆசை!" என்றாள் குந்தவி.
சிறுத்தொண்டர்.21
உறையூருக்கு மேற்கே காவேரி நதியிலிருந்து சற்றுத் தூரத்தில் ஒரு அழகான தாமரைக்குளம் இருந்தது. அந்தி நேரமானபடியால், அத்தடாகத்தை அழகு செய்த தாமரை மலர்கள் எல்லாம் அச்சமயம் இதழ் கூம்பியிருந்தன. மேல் வானத்தைப் பொன்மயமாகச் செய்து கொண்டிருந்த சூரியன் சுழலுகின்ற தங்கத் தகட்டைப்போல் அதிவிரைவாய்க் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.
தாமரைக் குளத்தைச் சேர்ந்த படித்துறை மண்டபத்தில் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியும் வந்து தங்கியிருந்தார்கள். மண்டபத்துக்குச் சற்றுப் பின்னால் வேல்பிடித்த வீரர்கள் ஒதுங்கி நின்றார்கள். பட்டத்து யானையும், புரவிகளும் சிறிது தூரத்தில் காணப்பட்டன.
மேற்குத் திக்கிலிருந்து காவேரி ஆற்றின் ஓரமாக வந்த சாலையைச் சக்கரவர்த்தி ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தார். குந்தவி தடாகத்தின் படிக்கட்டில் இறங்கிக் கீழ்ப்படியில் வந்து நின்றாள். தளதளவென்று விளங்கிய தாமரை இலைகளின் வனப்பையும், கூம்பிய தாமரை மலர்கள், மொட்டுகள் இவற்றின் அழகையும் அவள் சிறிது நேரம் பார்த்து மகிழ்ந்தாள். தாமரை இலைகளின் மேலே முத்து முத்தாகத் தண்ணீர்த் துளிகள் நின்றதையும், இளங்காற்றில் தாமரை இலைகள் அசைந்தபோது அந்த முத்துக்கள் அங்குமிங்கும் ஓடிச் சில சமயம் பிரிந்தும் விளையாடியதையும் பார்த்துக் களித்தாள். அப்போது தடாகத்தின் தெளிந்த நீரில் பிரதிபலித்த அவளுடைய உருவமானது தற்செயலாக அவள் பார்வையைக் கவர்ந்தது.
சந்தன நிறத் தந்தத்தினால் செய்தவை போல் விளங்கிய குந்தவியின் அழகிய நீண்ட புஜங்களும் பங்கஜ மலர்ப் பாதங்களும் பளிங்கு போல் தெளிந்த தண்ணீரிலே பிரதிபலித்தபோது பன்மடங்கு வனப்பும் சோபையும் பெற்று விளங்கின. குந்தவி தன்னுடைய பிரதி பிம்பத்தைத் தானே பார்த்த வண்ணமாகச் சற்றுநேரம் ஸ்தம்பித்து நின்றாள். அந்தக் காட்சி, கைதேர்ந்த சிற்பி ஒருவன் செய்த அற்புத அழகு வாய்ந்த தந்தப்பதுமை ஒன்றை உயர்ந்த ஆடை ஆபரணங்களினால் அலங்கரித்து அக்குளக்கரையில் நிறுத்தி வைத்திருப்பது போல் தோன்றியது. திடீரென்று தந்தப் பதுமைக்கு உயிர் வந்ததுபோல் குந்தவி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அவளுடைய மேனி அழகைப்பற்றி அவளிடம் ஏற்கெனவே பலர் பிரஸ்தாபித்ததுண்டு. தாய்மார்கள் சொல்லியிருக்கிறார்கள்; தோழிகள் அடிக்கடி கூறியிருக்கிறார்கள்; சித்திரக்காரர்களும் சிற்பிகளும் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் குந்தவி மேற்படி பாராட்டுதல்களைப் பொருட்படுத்தியதேயில்லை. ஆனால், இப்போது அவள் தன் மேனி அழகைப் பற்றித் தானே சிந்திக்கத் தொடங்கினாள். தோழிகள் அழகைப் பற்றிச் சொல்வதெல்லாம் வெறும் புகழ்ச்சியல்ல, விளையாட்டுமல்ல் உண்மைதான். ஆனால், ஆனால்...? “இந்த அழகினாலே என்ன பிரயோஜனம்?” என்று அவளுடைய உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. அடுத்தாற்போல் “ஆகா! அந்த இராஜகுமாரனுக்கு இந்த உறையூர்தானே? அவன் மட்டும் இப்போது என் அருகில் நின்று கொண்டிருந்தால்....?” என்னும் எண்ணம் உண்டாயிற்று. இதை அடுத்து இன்னதென்று விவரிக்க முடியாத மனக்கிலேசம் ஏற்பட்டது.
“இந்த அலங்காரமெல்லாம் என்னத்திற்காக? நாளை முதல் ஆபரணம் ஒன்றும் அணிந்து கொள்ளக்கூடாது. இவற்றினால் என்ன பிரயோஜனம்? அழகு அதிகமாகி விடுகிறதா! இருக்கிற அழகு போதுமே?” என்றெல்லாம் சிந்தனைகள் தோன்றின. “இப்போதே இதையெல்லாம் எடுத்து எறிந்துவிடுகிறேனே! என்று தலையில் சு10டியிருந்த ஆபரணங்களை முதலில் எடுக்கப் போனாள்.
அப்போது திடீரென்று அவளுடைய தந்தையின் குரல், ஹகுந்தவி! இங்கே ஓடி வா!” என்று விரைந்து அழைத்தது காதில் விழுந்தது. தன்னை மறந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த குந்தவி, திடுக்கிட்டுத் தந்தை இருந்த பக்கம் நோக்கினாள். “அதோ பார் குந்தவி, சிவிகை வருகிறது! என் அருமைச் சிநேகிதர் வருகிறார்! பல்லவ சேனாதிபதி வருகிறார்! சளுக்கரை முறியடித்துப் புலிகேசியைக் கொன்ற மகா வீரர் வருகிறார்! உறையூருக்கு நாம் இந்தச் சமயம் வந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று!...”
இவ்விதம், ஊரிலிருந்து உறவினர் வரக்காணும், சின்னஞ்சிறு குழந்தையைப்போல் சக்கரவர்த்தி அளவற்ற உற்சாகத்துடன், சொல்லிக்கொண்டே போனார். அவர் அவ்வளவு குதூகலம் கொண்டதைக் குந்தவி அதற்கு முன்னால் கண்டதேயில்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் சிவிகை தாமரைத் தடாகத்தின் அருகில் வந்துவிட்டது. மண்டபத்தில் சக்கரவர்த்தி நிற்பதைக் கண்டதும் ஏவலாளர் சிவிகையை விரைந்து கீழே இறக்கினார்கள். அந்தச் சிவிகையிலிருந்து, தலையையும் முகத்தையும் நன்கு முண்டனம் செய்தவரும், விபூதி ருத்திராட்சதாரியுமான பெரியவர் ஒருவர் இறங்கினார். அவருடன் ஒரு மூதாட்டியும் இறங்கினார்.
அந்தப் பெரியவர் “அரசே! என்று சொல்லிக் கொண்டு மண்டபத்தை நோக்கி விரைந்து வந்தார். சக்கரவர்த்தியும் “சேனாதிபதி!” என்று சொல்லிக் கொண்டு மண்டபத்திலிருந்து விரைவாகக் கீழே இறங்கி வந்தார். சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்த வண்ணமாகக் கூப்பிய கரத்துடன் நின்றார்கள். இருவருடைய கண்களிலும் நீர் ததும்பியது. பிறகு, ஏக காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் நெருங்கி வந்து ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அப்போது இருவருடைய கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகி வழிந்து அருவியாக ஓடத் தொடங்கியது.
இதற்கிடையில் சிவிகையிலிருந்து இறங்கிய மூதாட்டியை நோக்கிக் குந்தவி வந்தாள். அவருக்குக் குந்தவி நமஸ்காரம் செய்ய யத்தனிக்க, அந்த அம்மையார் அதற்கு இடங்கொடாமல் அவளைத் தம்முடன் சேர்த்து அணைத்துக் கொண்டு, “குழந்தாய்! பிறைசு10டும் பெருமானுடைய அருளால் உனக்கு எல்லா மங்களமும் உண்டாகட்டும். உன் மனதிற்கிசைந்த மணவாளனை அடைந்து தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்!” என்று ஆசீர்வதித்தார். அவர் இவ்விதம் ஆசிகூறியபோது குந்தவியின் தேகத்தில் புளகாங்கிதம் உண்டாயிற்று.
பரஸ்பரம் ஆலிங்கனம் செய்து கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்த சக்கரவர்த்தியும், அவருடைய பழைய சேனாதிபதியும் சிறிது நேரத்துக்கெல்லாம் சற்று விலகி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். “உறையூருக்கு நான் இச்சமயம் வந்தது எவ்வளவு அதிர்ஷ்டம்! இல்லாவிட்டால் உங்களைப் பார்த்திருக்க முடியாதல்லவா? நீங்கள்தான் என்னை அடியோடு மறந்து விட்டீர்கள்; காஞ்சிக்கு வருவதேயில்லை!” என்றார் சக்கரவர்த்தி. “அரசே! தங்களை நான் மறந்து விடுவதா? தென்னாட்டில் நான் தரிசித்த ஒவ்வொரு ஸ்தலத்திலும் தங்களுடைய நினைவு எனக்கு உண்டாயிற்று. இந்தத் திவ்வியக்ஷேத்திர யாத்திரையில் தாங்களும் என்கூட இல்லையே என்று எவ்வளவோ வருந்தினேன். கடைசியாகப் பழனிமலையில் எழுந்தருளியிருக்கும் ஆண்டவனைத் தரிசித்தபோதும் தங்களுடைய நினைவுதான் எனக்கு. அவருடைய சந்நிதியில் நான் விரும்பியது உடனே நிறைவேறி விட்டது. இங்கே வந்ததும் தங்களைப் பார்த்தேன்...”
“சேனாதிபதி!” “பிரபோ! என்னை அவ்விதம் அழைக்க வேண்டாம்!” “பரஞ்சோதி!” “அது என் பூர்வ ஜன்மப் பெயர்! அதை இப்போது கேட்கப் பிடிக்கவில்லை.” “கேளும், சிவபக்தரே!” “அவ்வளவு பெருமைக்கு நான் உரியவன் அல்ல பிரபு! இன்று இந்நாட்டில் மகான்களான சிவபக்தர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொண்டு புரியும் சிறுத்தொண்டன் நான்!” “கேளும் சிறுத்தொண்டரே! நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால்...” “சொல்லுங்கள் அரசே!”
“இந்த உலகத்தில் நான் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் இன்னும் இரண்டு பாக்கியிருக்கின்றன. அவற்றை முடித்துவிட்டால், நானும் உங்களைப்போல் துறவு பூண்டு ஸ்தல யாத்திரை தொடங்கி விடுவேன். ஆனால் உங்களைப் போல் தலையை முண்டனம் செய்து கொள்ளமாட்டேன். பார்த்தவர்கள் வசிஷ்டரோ, விசுவாமித்திரரோ அல்லது அகஸ்திய முனிவர்தானோ - என்று பிரமிக்கும்படியான ஜடாமகுடம் தரிப்பேன்!” என்று சொல்லிச் சக்கரவர்த்தி நகைக்க சிறுத்தொண்டரும் கூட நகைத்தார். அவ்விருவருடைய சிரிப்பின் ஒலியும், அந்தி நேரத்தில் கூட்டை நோக்கிப் பறந்த பறவைகளின் குரல்களுடன் கலந்து நாற்றிசையும் பரவி எதிரொலி செய்தன
நள்ளிரவில்.22
அன்றிரவு ஏறக்குறைய ஒன்றரை ஜாமம் ஆனபோது உறையூர் நகரில் நிசப்தம் குடிகொண்டது. வீதிமுனைகளில் கல் தூண்களின்மேல் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகள் ஒவ்வொன்றாக மங்கி அணையத் தொடங்கின. உறையூருக்கும் ஸ்ரீஅரங்கத்துக்கும் இடையில் சென்ற காவேரி நதியின்மேல் காரிருள் படர்ந்திருந்தது. அன்று சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி. போதாதற்கு வானத்தைக் கருமேகங்கள் மூடியிருந்தன. இரண்டொரு மழைத்தூறலும் விழுந்தது.
அத்தகைய காரிருளில் காவேரி நதியின் ஓரமாக ஜலத்தைக் கிழித்துக் கொண்டு படகு செல்லும் சலசலப்புச் சத்தம் கேட்டது. கொஞ்சம் உற்றுப் பார்த்தோமானால், ஒரு சிறு படகு கிழக்கேயிருந்து மேற்கே கரையோரமாகப் போவதைக் காணலாம். படகில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பதும் மங்கலாகத் தெரிகிறது. கரையில் நின்ற வண்ணம் ஒருவர், படகைக் கயிற்றினால் இழுத்துக் கொண்டு போவதும் புலப்படுகிறது.
இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்த்தோமானால், அவர்கள் இருவரும் நமக்குத் தெரிந்த புள்ளிகள்தான் என்பதைக் காண்கிறோம். வேறு யாருமில்லை; கரையிலிருந்து படகை இழுத்துக் கொண்டு போகிறவன் படகோட்டி பொன்னன். படகில் உட்கார்ந்திருப்பது வள்ளிதான். வள்ளியின் கையில் ஒரு சிறு கூடை இருக்கிறது. அதற்குள்ளே அகல் விளக்கு ஒன்று மினுக் மினுக்கென்று எரிகிறது. அது அணைந்துவிடாமல் வள்ளி தன்னுடைய சேலைத் தலைப்பால் மறைத்துக் கொண்டு ஜாக்கிரதையாக எடுத்து வருகிறாள்.
அந்தக் கும்மிருட்டில் பிரவாகத்துக்கு எதிராகப் படகை மேற்கு நோக்கி இழுத்துக் கொண்டு போவது இலேசான காரியமில்லை. வழியில் படித் துறைகளும் நதிக்கரை மண்டபங்களும், ஓங்கி வளர்ந்து ஆற்றில் கவிந்திருந்த விருட்சங்களும் குறுக்கிட்டன. ஆனாலும் பொன்னன் சிறிதும் தளர்ச்சியடையாமல் மேற்படி தடங்கல்களையெல்லாம் தாண்டிப் படகை இழுத்துக்கொண்டு போனான்.
படகுக்குப் பின்னால் சுமார் முந்நூறு அடி தூரத்தில் ஒரு நெடிய உருவம் வந்து கொண்டிருந்தது. படகு நின்ற போதெல்லாம் அதுவும் நின்றது. படகு மேலே சென்றால் அதுவும் தொடர்ந்து வந்தது. கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் இந்த உருவமும் நமக்குத் தெரிந்த மனிதனின் உருவந்தான் என்பதைக் காண்கிறோம். ஆமாம்; மாரப்ப பூபதிதான் அப்படிப் பொன்னனுடைய படகை நள்ளிரவில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.
அவனுக்குப் பின்னால் இன்னும் கொஞ்ச தூரத்தில் அதே நதிக்கரை ஓரமாக இன்னொரு உருவம் சத்தம் செய்யாமல் வந்து கொண்டிருந்தது. ஜடா மகுடம் தரித்த சந்நியாசியின் உருவம் அது. ஆம், போர்க்களத்தில் பார்த்திபனுக்கு வரமளித்தவரும், பொன்னன் குடிசையில் நாம் சந்தித்தவருமான அதே சிவனடியார்தான்! ஏறக்குறைய நள்ளிரவு ஆன சமயத்தில், பொன்னன் படகை நிறுத்தி மிகவும் மெல்லிய குரலில், "வள்ளி! இறங்கு! வந்து விட்டோம்" என்றான். அதே சமயத்தில் ஸ்ரீஅரங்கநாதரின் ஆலயத்தில் அர்த்த ஜாம பூஜைக்குரிய மணிச் சத்தம் 'ஓம் ஓம்' என்று கிளம்பி, நள்ளிரவின் நிசப்தத்தை மீறிக்கொண்டு, வானவெளியெங்கும் வியாபித்து எதிரொலி செய்தது.
பொன்னனுக்கும் வள்ளிக்கும் உடம்பு நடுங்கிற்று, "நல்ல சகுனம், வள்ளி! காரியம் ஜெயந்தான்! சீக்கிரம் இறங்கு!" என்றான் பொன்னன். வள்ளி விளக்குக் கூடையை ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு படகிலிருந்து இறங்கினாள். பொன்னன் படகை அங்கிருந்த மரத்தின் வேரில் கட்டினான். பிறகு இருவரும் கரைமேல் ஏறினார்கள். அங்கே ஒரு நீண்ட மதிற்சுவர் இருந்தது. அந்தச் சுவரில் ஒரு வாசற்படி காணப்பட்டது. அதன் கதவு பூட்டியிருந்தது. பொன்னன் தன் மடியிலிருந்து ஒரு கொத்துச் சாவியை எடுத்து ஒரு சாவியினால் பூட்டைத் திறந்தான். இருவரும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள். 'கம்'மென்று செண்பகப் பூவின் நறுமணம் வந்தது.
"பார்த்தாயா, வள்ளி! செண்பகப்பூவின் வாசனையை? இந்த அரண்மனைத் தோட்டத்துக்குள் இதற்கு முன் நீ வந்தது கிடையாதே?" என்றான். "இரையாதே!" என்றாள் வள்ளி. பொன்னன் மறுபடியும் கதவைச் சாத்தி உட்புறம் தாளிட்டான். "பயப்படாதே! என் பின்னோடு வா!" "நீ சத்தம் போடுவதில்தான் எனக்குப் பயம்."
இருவரும் அந்தச் செண்பகத் தோட்டத்துக்குள் புகுந்து சென்றார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் அதே மதில் வாசற்படியண்டை மாரப்ப பூபதி வந்தான். கதவின் வெளிப்புற நாதாங்கியை இழுத்து மாட்டினான். பிறகு அவன் நதியில் இறங்கிப் பொன்னன் மரத்தின் வேரில் கட்டியிருந்த படகை அவிழ்த்து ஆற்றோடு மிதந்து போகும்படி இழுத்துவிட்டான். பின்னர் மதிற்சுவர் ஓரமாக மிக விரைவாய் நடந்து சென்றான்.
படகு கரையோரமாக மிதந்து கொண்டு சிறிதுதூரம் போயிற்று. அங்கே வந்து கொண்டிருந்த சிவனடியார் அதைப் பிடித்து நிறுத்தினார். நிறுத்திய இடத்துக்கு அருகிலிருந்து ஒரு பெரிய விருட்சத்தின் வேரில் அதை இழுத்துக் கட்டினார். மறுபடியும் மேல்நோக்கிச் சென்று அதே மதிற்சுவரின் வாசற்படிக்கு வந்தார். மாரப்ப பூபதி இழுத்துப் போட்ட நாதாங்கியைக் கழற்றிவிட்டார். மீண்டும் திரும்பிச் சென்று படகு கட்டியிருந்த மரத்துக்குப் பின்னால் அமர்ந்தார்.
அச்சமயம் நதியின் அக்கரையில் அநேக தீவர்த்திகளுடன் ஒரு கும்பல் காணப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தத் தீவர்த்திகள் நதியின் நடு மத்திக்கு வந்துவிட்டன. பல படகுகள் நதியைக் கடந்து வந்து கொண்டிருந்தன என்று தெரிந்தது. சிவனடியார் மறைந்திருந்த மரத்துக்குச் சிறிது கிழக்கே படகுகள் கரைக்கு வந்து சேர்ந்தன. படகுகளிலிருந்து பலர் இறங்குகிறது தீவர்த்திகளின் ஜோதியில் தெரிந்தது. அவர்களில் சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், குந்தவி தேவியும் காணப்பட்டனர். சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக உறையூரை ஆண்டு வந்த தளபதி அச்சுதவர்மர், அவர்கள் எல்லாருக்கும் முன்னால் சென்றார். மற்றப் பரிவாரங்களும் ஏவலாளர்களும் பின்னால் வந்தார்கள்.
ஸ்ரீஅரங்கநாதரின் அர்த்த ஜாம ஆராதனையைத் தரிசித்து விட்டுத் திரும்பிய அந்தப் பக்தர் குழாத்தில் சக்கரவர்த்தி நரசிம்மவர்மரை மட்டும் காணவில்லை. காவேரிக் கரையை ஒளிமயமாக்கிய தீவர்த்திகளுடன் அந்தக் கும்பல் படகிலிருந்து கரையில் இறங்கியபோது சிவனடியார் தாம் இருந்த மரத்தின் மறைவில் இன்னும் நன்றாய் மறைந்து கொண்டு அசையாமல் நின்றார். அவர் மூச்சுவிடும் சத்தம்கூட அப்போது கேட்கவில்லை. தீவர்த்திகளுடனே அந்தக் கும்பல் நகருக்குள் புகுந்து மறைந்த பிறகு காவேரி நதிதீரத்தில் முன்னால் இருந்ததை விட அதிகமான கனாந்தகாரம் குடிகொண்டது. சிவனடியார் மரத்தின் மறைவிலிருந்து மறுபடியும் வெளிவந்து நதிக்கரையில் படகின் அருகில் அமர்ந்தார். அந்தக் காரிருளிலுங்கூட மேற்கூறிய மதில் வாசலின் பக்கம் அவருடைய கண்கள் கூர்மையாகப் பார்த்தன. அவருடைய செவிகளும் கதவு திறக்கப்படும் சத்தத்தை எதிர்நோக்கிக் கூர்மையாய்க் கேட்கலாயின.