சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் நர்சுகள் தங்கும் விடுதி உள்ளது. இதன் அருகே சாலையோர பிளாட்பாரத்தில் நேற்று காலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பூக்கடை உதவி கமிஷனர் குமார், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் விரைந்து சென்று சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அழுகிய நிலையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பிணம் இருந்தது. சேலை, ஜாக்கெட் அணிந்திருந்த அப்பெண்ணின் முகத்திலும், கழுத்திலும் வீக்கங்கள் காணப்பட்டன. அவரது கைகளும், கால்களும் முறித்து வைக்கப்பட்டிருந்தன. அவரை யாரோ கொலை செய்து சாக்கு மூட்டைக்குள் பிணத்தை வைத்து வீசிச் சென்றுள்ளனர். ஆஸ்பத்திரியில் குளுகோஸ் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய குழாயை வைத்து பெண்ணின் உடல் கட்டப்பட்டுள்ளது. அவரது உடலில் ஊசி மூலம் குளுகோஸ் ஏற்றியதற்கான அடையாளங்களும் காணப்பட்டன. இதை வைத்து பார்க்கும் போது, அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்து அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்காலம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.வாயை பொத்தி மூச்சுத் திணறடிக்க வைத்து பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணை பற்றி எந்தவித தகவலும் தெரியவில்லை. எனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாயமான பெண்களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண்கள் யாரேனும் காணாமல் போயுள்ளார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.