தொற்று பாதிப்புகளுக்கு நிவாரணம் ஒக்சிஜன் சிகிச்சை
28 Feb,2026
இன்றைய திகதியில் கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரையின் அளவு காரணமாக பாதத்தில் புண்கள் ஏற்பட்டு, அவை ஆறாமல் விரல்களையோ அல்லது குறிப்பிட்ட உறுப்புகளையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் இது போன்ற பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்கும் வகையில் ஹைப்பர்பாரிக் ஒக்சிஜன் சிகிச்சை எனும் நவீன சத்திர சிகிச்சை அற்ற சிகிச்சை முறை அறிமுகமாகி நோயாளிகளிடம் பாரிய வரவேற்பை பெற்று வருகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
நீரிழிவு தொடர்பான காயங்கள், நாட்பட்ட தொற்று பாதிப்புகள், கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்வதால் ஏற்பட்டிருக்கும் திசு சேதம், குருதி ஓட்டத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுக்கள் ஆகியவற்றை நீக்குவதற்கு தற்போது ஹைப்பர்பாரிக் ஒக்சிஜன் தெரபி எனும் சத்திர சிகிச்சை அற்ற சிகிச்சை முறை அறிமுகமாகி இருக்கிறது.
இந்த சிகிச்சையில் நோயாளி ஒரு பிரத்யேக அறைக்குள் தூய ஒக்சிஜனை கூடுதல் அழுத்தத்துடன் சுவாசிக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நுரையீரலுக்கு நூறு சதவீத ஒக்சிஜன் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இதனால் சேதமடைந்த திசுக்கள் மீள் உருவாக்கம் பெறுவதற்கும், குருதிக்கு போதுமான ஒக்சிஜன் கிடைப்பதையும் உறுதி செய்யப்படுகிறது.
இத்தகைய சிகிச்சை 30 நிமிடங்களில் இருந்து 2 மணி தியாலம் வரை ஒரு அமர்வில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சேதமடைந்த திசுக்கள் மீளுருவாக்கம் பெறுகிறது. புதிய ரத்த நாளங்கள் ஏற்படுவதை ஊக்குவிக்கிறது. திசுக்களுக்கு ஒக்சிஜன் கிடைப்பது அதிகரிப்பதால் விரைவான முறையில் குணமடைகிறது.
குருதி ஓட்டத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுக்களை அகற்றப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகிறது. மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. திசு மறுசீரமைப்பிற்கும் புதிய நுண்குழாய்களின் உருவாக்கத்திற்கும் காரணமாகிறது.
குறிப்பாக விளையாட்டு வீரர்கள் மைதானங்களிலும், உள்ளரங்குகளிலும் விபத்திற்கு உள்ளாகும் போது அவர்கள் தங்களுடைய செயல் திறனை மேம்படுத்தவும் காயங்களில் இருந்து விரைவாக குணமளிப்பதற்கும் இத்தகைய சிகிச்சை பலனளிக்கிறது.
செல்களின் மீளுருவாக்கத்தை அதிகரித்து தோலில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கிறது. பக்கவாதம், மூளைக்காயம் போன்றவற்றிற்கும் இத்தகைய சிகிச்சை பலனளிக்கும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.