கட்டாய பாலியல் உறவில் ஈடுபட்ட பெண் அதிகாரி, ரூ.844 கோடி நஷ்டஈடு கேட்டு ஆண் ஊழியர் வழக்கு
01 Dec,2025
அமெரிக்காவில் தனது பெண் உயர் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி ஆண் ஊழியர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவ மையத்தில், கியான் கூப்பர் என்பவர் கிளினிக்கல் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவருக்கு, அதே மையத்தில் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய மைக்கேல் புல் என்ற பெண் அதிகாரி உயர் அதிகாரியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மைக்கேல் புல் தன்னைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தற்போது கியான் கூப்பர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தனது பெண் அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், தனது வேலையைப் பறித்துவிடுவேன் என்று மிரட்டி, அந்தப் பெண் அதிகாரி தன்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை அலுவலக நேரத்திற்கு முன்பாகவே தன்னை வரவழைத்து, அறைக்குள் வைத்துத் தவறாக நடந்துகொண்டதாகவும், இவ்வாறான செயலை நிறுத்தும்படி 100 முறைக்கு மேல் கேட்டும் அவர் செவிசாய்க்கவில்லை எனவும் கூப்பர் வேதனை தெரிவித்துள்ளார். தனது செயலை நியாயப்படுத்தி அந்தப் பெண் அதிகாரி பேசுகையில், ‘முன்னாள் அதிபர் ஒபாமா தனது மனைவி மிஷெலை அலுவலகத்தில்தான் சந்தித்தார்.
அப்போது மிஷெல் அவருக்கு அதிகாரியாக இருந்தார். எனவே நீங்களும் அதிபர் போல நடந்துகொள்ளுங்கள்’ என்று கூறியதாகக் கூப்பர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் சுமார் 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.844 கோடி) நஷ்டஈடு கேட்டு அந்த பெண் அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், இது பரஸ்பர சம்மதத்துடன் நடந்த உறவு என்று கூறி அந்தப் பெண் அதிகாரி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.