பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோஸ் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இத்தீர்ப்புக்கு எதிராக சார்கோஸி மேன்முறையீடு செய்தாலும் அது தொடர்பான தீர்ப்பு வரும்வரை அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது 70 வயதான நிக்கலஸ் சார்கோஸி, 2007 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.
சார்கோஸிக்கு 100,000 யூரோ (சுமார் 3.35 கோடி இலங்கை ரூபா) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் அரச பதவிகளை வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஊழல் மற்றும் தேர்தல் பிரசாரத்துக்கு சட்டவிரோத நிதி பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சார்கோஸியின் 5 வருட சிறைவாசம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து எதிர்வரும் 13 ஆம் திகதி வழக்குத்தொடுநர்களால் அவருக்கு அறிவிக்கப்படும். எவ்வாறெனினும் பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் அவரின் சிறைவாசம் ஆரம்பமாக வேண்டும்.
2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் பிரான்ஸில் அரச தலைவராக பதவி வகித்த ஒருவர் சிறைவாசம் அனுபவிக்கவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாஸிப்படைகளின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த ஜேர்மனியில் நாஸிகளின் ஆதரவுடன் பிரதமராக பதவி வகித்த பிலிப்பே பேடெய்ன் யுத்தத்தின் பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டில்சிறையில் அடைக்கப்ப அவருக்கு பின்னர் சிறையிலடைக்கப்படும் முதல் முன்னாள் பிரெஞ்சு அரசு தலைவர் நிகோலஸ் சார்கோஸி ஆவார்.
சார்கோஸிக்கு முன் 1995 முதல் 2007 மே மாதம் வரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவரும் சார்கோஸின் அரசியல் குருவுமான ஜக் சிராக், பாரிஸ் நகர மேயராக பதவி வகித்தபோது, நிதி துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கில் 2011 ஆம் ஆண்டில் குற்றவாளியாக காணப்பட்டார். அவருக்கு இரண்டு வருட கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையே விதிக்கப்பட்டதால் ஜக் சிராக் சிறை செல்லவில்லை.
ஜனாதிபதியாகுவதற்கு முன்
நிகோலஸ் சார்கோஸி பிரெஞ்சு ஜனாதிபதியாக தெரிவாகுவதற்கு முன்னர், 2005 மே முதல் 2007 மார்ச் வரை பிரான்ஸின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
லிபியாவின் அப்போதைய அதிபர் கேணல் முவம்மர் கடாபியின் ஆட்சிக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் எழுந்திருந்த நிலையில், சர்வதேச அரங்குகளில் தனது அந்தஸ்தைப் பயன்படுத்தி கடாபிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கும், அதற்கு பதிலீடாக தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு கடாபியிடமிருந்து பணம் பெறுவதற்கும் 2005 ஆம் ஆண்டில் கடாபியுடன் நிகோலஸ் சார்கோஸி ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார் என பிரெஞ்சு விசாரணை அதிகாரிகளால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் சார்கோஸியின் உதவியாளர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
கடாபியுடன் ஒப்பந்தம்
1969 ஆம் ஆண்டு முதல் லிபியாவை கேணல் முவம்மர் கடாபி ஆட்சி செய்தார். 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் மூலம் அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கிளர்ச்சியாளர்களால் கடாபி அடித்துக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகோலஸ் சார்கோஸிக்கு நெருக்கமான குளோட் குவேன்ட் மற்றும் பிரைஸ் ஹோர்ட்பெக்ஸ் ஆகியோரும் இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர்.
குவென்ட் மற்றும் ஹோர்ட்பெக்ஸ் ஆகியோர் 2005 ஆம் ஆண்டில், கேணல் கடாபியின் மைத்துனரான அப்துல்லா அல் செனோசியை இரகசியமாக சந்தித்தனர் என நீதிமன்றம் தெரிவித்தது. 1988 ஆம் ஆண்டில் 270 பேர் உயிரிழந்த லொக்கர்பீ விமான குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி என குற்றம் சுமத்தப்பட்டவர் அப்துல் அல் செனோசி.
‘பான் எம்’ விமான அனர்த்தம்
1988 டிசெம்பர் 21 ஆம் திகதி அமெரிக்காவின் ‘பான் எம்’ நிறுவனத்தின் பயணிகள் விமானமொன்று, ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரிலிருந்து அமெரிக்காவின் டெட்ரோயிட் நகருக்கு சென்றுகொண்டிருந்த வேளையில், ஸ்கொட்லாந்தின் லொக்கர்பீ நகருக்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது குண்டுவெடிப்பினால் வெடித்துச் சிதறியது.
இதனால், அவ்விமானத்திலிருந்த 259 பேரும் தரையிலிருந்த 11 பேருமாக 270 பேர் கொல்லப்பட்டனர். அந்த குண்டுத்தாக்குதலுக்கு லிபியா மீது குற்றம் சுமத்தப்பட்டது.
லிபியா அதை பல வருடங்களாக மறுத்து வந்த நிலையில், அத்தாக்குதலுக்கு லிபியா பொறுப்பேற்பதாக 2003 ஆம் ஆண்டு கேணல் கடாபி ஒப்புக்கொண்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தையும் செலுத்தினார். எனினும், தான் தனிப்பட்ட ரீதியில் இத்தாக்குதலுக்கு உத்தரவிடவில்லை என அவர் கூறிவந்தார்.
உதவியாளர்களுக்கும் தண்டனை
இத்தாக்குதலின் சூத்திரதாரி எனக் கருதப்பட்ட கடாபியின் மைத்துனர் அப்துல்லா அல் செனோசியை இரகசியமாக சந்தித்தாக குற்றம் சுமத்தப்பட்ட குளோட் குவேன்ட், சார்கோஸி ஜனாதிபதியாக பதவி வகித்த வேளையில் ஜனாதிபதி மாளிகையின் செயலாளர் நாயகமாகவும், பிரைஸ் ஹோர்ட்பெக்ஸ் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரித்த, பரிஸ் நீதிமன்றம். 80 வயதான குளோட் குவென்ட்டுக்கு 6 வருட சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், உடல்நிலைமை காரணமாக அவர் உடனடியாக சிறைக்கு அனுப்பப்படவில்லை. 67 வயதான ஹோர்ட்பெக்ஸுக்கு 2 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், அவர் கண்காணிப்பு சாதனம் அணிந்த நிலையில், சிறைக்கு வெளியே இருக்கலாம்.
அப்துல்லா அல் செனோசியுடனான தொடர்புகளை ஊழல் ஒப்பந்தம் என மூன்று நீதிபதிகள் அடங்கிய பரிஸ் குற்றவியல் நீதிமன்றம் வர்ணித்தது.
நிதி உதவிகளைப் பெறுவதற்கு அல்லது நிதி உதவியை பெறுவதற்கு முயற்சி செய்வதற்காக லிபிய அதிகாரிகளை அணுகுவதற்கு தனது உதவியாளர்களை முன்னாள் ஜனாதிபதி சார்கோஸி அனுமதித்தார் என நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும், சார்கோஸியின் தேர்தல் பிரசாரத்துக்கு அப்பணம் சென்றடைந்ததா என்பதை நிரூபிப்பதற்கு ஆதரமில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், பணம் செலுத்தப்படாவிட்டாலும் அல்லது செலுத்தப்பட்டதை நிரூபிக்க முடியாவிட்டாலும் கூட ஊழல் ஒப்பந்தமொன்று பிரெஞ்சு சட்டத்தின்படி குற்றமாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்படியே சார்கோஸிக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதேவேளை, மேற்படி மோசடித் திட்டத்தில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட அலெக்ஸாண்ட்ரே ஜோஹ்ரி என்பவருக்கு 6 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடரும் செல்வாக்கு
2012 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது தவணைக்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நிகோலஸ் சார்கோஸி, பிரான்சுவா ஹொலண்டேவிடம் தோல்வியடைந்தார்.
எனினும், பாடகியும் மொடலுமான கார்லா புரூணியை திருமணம் செய்த சார்கோஸி, அரசியல் வட்டாரங்களிலும் பொழுதுபோக்கு வட்டாரங்களிலும் இன்னும் செல்வாக்கு மிக்கவராக விளங்குகிறார்.
தீர்ப்பின் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் சார்கோஸி கருத்துத் தெரிவிக்கையில், இத்தீர்ப்பானது சட்டத்தின் ஆட்சிக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துவாக கூறியதுடன், அதற்கு எதிராக தான் மேன்முறையீடு செய்வதாகத் தெரிவித்தார்.
சார்கோஸி மீது குற்றம் சுமத்தியவர்களில் பிரதானமான ஒருவரான பிரெஞ்சு – லெபனானிய வர்த்தகர் ஸியாட் தக்கீதீன் (75) மரணமடைந்து 2 நாட்களின் பின்னர் மேற்படி நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் 50 மில்லியன் யூரோ வரையான பணத்தை கடாபியிடமிருந்து, அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதியின் அதிகாரிகளின் பிரதானிக்கு விநியோகிப்பதற்கு தான் உதவியதாக பல தடவைகள் ஸியாட் தக்கீதீன் கூறியிருந்தார்.
பின்னர் தனது கூற்றுகளை வாபஸ் பெற்றுக்கொண்டார் தக்கீதின். இதையடுத்து சாட்சிக்கு அழுத்தம் ஏற்படுத்தினர் என்ற சந்தேகத்தில் நிகோலஸ் சார்கோஸி மற்றும் புரூணி சார்கோஸிக்கு எதிராக மற்றொரு விசாரணையை பிரெஞ்சு அதிகாரிகள் ஆரம்பித்திருந்தனர்.
பிரசாரத்துக்காக சார்கோஸி தனது தந்தையான முவம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை பெற்றார் என கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் 2011 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார். அப்போது சார்கோஸி ஜனாதிபதியாக பதவி வகித்தார். 2013 ஆம் ஆண்டில் இது தொடர்பாக பிரெஞ்சு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
முந்தைய தண்டனைகள்
நிகோலஸ் சார்கோஸி நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டமை இது முதல் தடவையல்ல.
தான் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றின் தகவல்களை நீதிபதி ஒருவரிடமிருந்து சட்டவிரோதமாக பெறுவதற்கு சார்கோஸி முயன்றார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவருக்கு 2021 ஆம் ஆண்டு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 2 வருடகாலம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக இருந்தது. அத்தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்தார்.
2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசார நிதி துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கில் சார்கோஸிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது 6 மாத சிறைத்தண்டனையாகவும், 6 மாத காலம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையாகவும் மாற்றப்பட்டது. இதற்கு எதிரான சார்கோஸியின் மேன்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது.
அதேவேளை 2021 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பை கடந்த வருட இறுதியில் உறுதிப்படுத்தியது. பிரெஞ்சு சட்டத்தின்படி 2 வருடங்களுக்கு குறைந்த சிறைத்தண்டனை பெற்றவர்கள் சிறைக்கு செல்லாமல், நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான சாதனத்தை அணிந்த நிலையில் வீட்டுக்காவலில் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.
அதன்படி, அவர் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான சாதனத்தை அணிந்த நிலையில் வீட்டுக்காவலில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். இச்சாதனம் அணிவிக்கப்பட்ட பிரான்ஸின் முதல் முன்னாள் ஜனாதிபதியானார் சார்கோஸி. 3 மாதங்களின் பின்னர் அச்சாதனம் இவ்வருட முற்பகுதியில் அகற்றப்பட்டது
இந்நிலையிலேயே தற்போது கடாபியுடனான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறை செல்கிறார்.
அரசியல்வாதிகளுக்கு எதிரான இலஞ்சம் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளைக் கையாள்வதற்கு பிரான்ஸின் நீண்டகால போராட்டத்தில் இவ்வழக்கின் இத்தீர்ப்பு ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.