போதைப்பொருள் கடத்தல்.. சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
28 Sep,2025
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மலேசிய தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதலில் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் ஆகியவற்றுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கடத்தல் குறையவில்லை. எனவே, தண்டனை மேலும் அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில், 15 கிராமை விட அதிகமாக போதைப் பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் மலேசியா தமிழரான தட்சிணாமூர்த்தி காத்தையா, கடந்த 2015 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து சுமார் 45 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. எனவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தட்சிணாமூர்த்தி தொடர்ந்து மேல்முறையீடு செய்து வந்தார். ஆனால், அவரது மேல்முறையீடு எதுவும் ஏற்கப்படாமல் இருந்தது. இருப்பினும் கடந்த 2022 ஆம் ஆண்டு தட்சிணாமூர்த்திக்கான மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தட்சிணாமூர்த்திக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவரது உடல் நாளை மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் தட்சிணாமூர்த்தியின் பெற்றோரை அரசு தவறாக வழி நடத்தியது என்றும், எனவேதான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது எனவும் தட்சிணாமூர்த்தியின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்டதற்கு எதிராகவும் சிங்கப்பூரில் பல்வேறு தரப்பினரும் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.