பூமி தன்னை தானே சுற்றிக்கொள்வது தான் ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இன்றைய தினம் அதாவது ஆகஸ்ட் 5ம் தேதி பூமியின் சுழற்சி மிக வேகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏன் இதுபோல நடக்கிறது.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன! இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். பூமியில் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்கள் நடந்து வரும் நிலையில்,
அதை ஆய்வாளர்கள் கூர்ந்து கவனித்தே வருகிறார்கள். இதற்கிடையே பூமி இன்று சற்று வேகமாகச் சுழல்வதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நாம் உணராவிட்டாலும், இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி வரலாற்றில் மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாக அமையக்கூடும் என
நமது கிரகத்தின் சுழற்சி வேகம் இன்று அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். வேகமாகச் சுற்றும் பூமி 2020ம் ஆண்டு முதல் பூமியின் சுழற்சியில் மெல்ல வேகம் அதிகரித்து வருவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன் வேகம் இன்று மேலும் அதிகரித்துள்ளது. சமீப ஆண்டுகளில் பதிவான மிகவும் குறுகிய நாட்களில் ஒன்றாக இது இருக்கும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.. முன்னதாக ஜூலை 9ம் தேதி பூமி சுற்றும் வேகம் அதிகரித்ததால் அன்றைய தினத்தில் நாம் 1.3 மில்லி விநாடிகளை இழந்திருந்தோம்.
எவ்வளவு நொடி இழப்பு இதேபோல ஜூலை 22ம் தேதி நாம் 1.4 மில்லி விநாடிகளை இழந்திருந்தோம். அதாவது அன்றைய தினம் பூமி சுழற்சி வேகம் அதிகரித்ததால் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தில் இருந்து குறைந்தது. இன்று பூமி இன்னும் வேகமாகச் சுற்றும் நிலையில், இதைவிடக் கூடுதல் மில்லி நொடிகளை நாம் இழப்போம் எனத் தெரிகிறது. இது மிகக் குறைவானது போல நமக்குத் தெரியும். நம்மில் யாரும் இதை உணர்ந்திருக்கக்கூட மாட்டோம். ஆனால், இதுபோல பூமி சுழற்சி வேகம் அதிகரிப்பது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் அது பூமியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இதுபோல பூமியின் சுழற்சி வேக அதிகரித்துக் கொண்டே போனால் நேரத்தைப் பாலோ செய்வதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் அணு கடிகாரங்களுடன் நேரம் துல்லியமாகப் பொருந்தி இருப்பதை உறுதி செய்ய நெகடிவ் லீப் விநாடி சேர்க்கும் தேவை கூட ஏற்படலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது பூமியின் சுழற்சியுடன் சரியாக ஒத்துப்போக இல்லாத ஒரு நொடியை நாம் கடிகாரங்களில் சேர்க்க வேண்டி வரலாம். என்ன சிக்கல்? மில்லி நொடிகள் தானே ஈஸியாக சேர்த்துவிடலாமே என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், அது மிகவும் சிக்கலான விஷயம். உலகெங்கும் உள்ள கடிகாரங்களில், கணினி உள்ளிட்ட எல்லா சாப்ட்வேர்களிலும் அந்த மாற்றத்தைக் கொண்டு வருவது அவ்வளவு ஈஸி இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள், மேலும், பூமி ஏன் வேகமாகச் சுழல்கிறது என்பதற்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், பூமியின் இன்னர்கோர் மாற்றங்கள், வளிமண்டல சுழற்சி, உருகும் பனிப்பாறைகள், எல் நினோ, லா நினோ நிகழ்வுகளால் ஏற்படும் நிறை (mass) மாற்றங்கள் இதற்குக் காரணங்களாக இருக்கலாம் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.
பகீர் ஆய்வு முடிவுகள் நிலா கூட காரணமாக இருக்கலாம் பூமி மட்டுமில்லை. இதற்கு நிலவு கூட ஒரு காரணமாக இருக்கலாம். 2025ல் பதிவான மிகக் குறுகிய நாட்களில், சந்திரன் பூமியின் நடுக்கோட்டில் இருந்து அதிகபட்ச தூரத்தில் இருந்தது என்றும் இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கும் என வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக மாஸ்கோ மாகாண பல்கலைக்கழக நிபுணர் லியோனிட் ஜோடோவ் கூறுகையில், "இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வேக அதிகரிப்புக்கான காரணம் சரியாக தெரியவில்லை. அதேநேரம் பெரும்பாலான ஆய்வாளர்கள் பூமிக்குள் நடந்த மாற்றமே இதற்கு காரணம் என்று நம்புகிறார்கள். இருப்பினும், இதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை" என்றார்