லாட்டரியில் பரிசு அடிக்காதா? என அதை வாங்கி வைத்தவர்கள் கடவுள் போட்டோ முன்பு பூஜை போடாத குறையாய் வைத்து அதை பத்திரமாக பாதுகாப்பார்கள். ஆனால், வாங்கிய லாட்டரியை பெண் ஒருவர் தொலைத்துவிட்ட நிலையில், அந்த டிக்கெட்டிற்கு ரூ.4 கோடி பரிசு அடித்துள்ளது. இதனால், பரிசு விழுந்தவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய லாட்டரி நிறுவனம் ஒருவழியாக கண்டுபிடித்துள்ளது. நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த வினோத சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு அடித்ததாம் யோகம் என்று ஒரு பேச்சு வழக்கு சொல்வார்கள். இது எதற்கு பொருந்துமோ இல்லையோ லாட்டரியில் பரிசு அடித்தவர்களுக்கு பொருந்தும் எனலாம். ஆண்டுக்கணக்கில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி ஒரு ரூபாய் கூட கிடைக்காமல் சேமித்த பணத்தை எல்லாம் இழந்து, லாட்டரி வாங்கிய காசை சேமித்து வைத்தால் கூட செட்டில் ஆகியிருக்கலாம் என நினைக்கும் அளவுக்கு பலருக்கும் மறக்க முடியாத பாடமே லாட்டரியில் மிஞ்சும்.
ஆனால், ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்து விடுகிறது. லாட்டரி டிக்கெட்டுகள் வாங்க கூட பணம் இல்லாமல், கடனுக்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் கூட பல கோடிகள் பரிசு அடித்து பல கோடிகளுக்கு அதிபதியாகிவிடுறார்கள். பகல் கனவு கூட நான் இப்படி கண்டது இல்லை என நினைக்கும் அளவிற்கு ஒரு சிலருக்கு வாழ்க்கை ஒரே நாளில் மாறிவிடுகிறது என்றால் அது பெரும்பாலும் லாட்டரியில் பரிசு அடித்தவர்களின் கதையைதான் சொல்ல முடியும்.
பொதுவாக லாட்டரி வாங்கியவர்கள், தங்களிடம் உள்ள டிக்கெட்டு எண்ணை குறித்து வைத்துக்கொண்டு எப்போது குலுக்கல் நடைபெறும், நமது எண்ணிற்கு பரிசு விழுமா? என ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் நியூசிலாந்தில் ஒரு வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. 5 லட்சம் டாலர் இந்திய மதிப்பில் ரூ.4 கோடி பரிசுத்தொகை வென்ற டிக்கெட்டை தொலைத்த பெண் ஒருவர் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் பணத்தை இழந்து இருப்பாராம்.. இது குறித்த விவரம் வருமாறு: -
தொலைந்துபோன லாட்டரி டிக்கெட்
நியூசிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள லாட்டரி ஒன்றை வாங்கியிருக்கிறார். இவர் வாங்கிய டிக்கெட்டை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் மறந்துவிட்டாராம். பரிசுத்தொகை விழுந்த பிறகு தன்னிடம் டிக்கெட் இல்லை என்பதால், அவருக்கு பரிசு அடித்ததே தெரியாமல் இருந்து இருக்கிறது. லாட்டரி நிறுவனமோ.. பரிசு அடித்தவர் எப்போது வருவார் என்று காத்துக்கொண்டு இருந்து இருக்கிறார்கள்.
நாட்கள் ஆனதே தவிர பரிசுத்தொகையை உரிமை கோர யாரும் வரவில்லை. இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்த லாட்டரி நிறுவனம், லாட்டரி வாங்கும் போது கார்டு வழியாக பேமண்ட் செலுத்தப்பட்டு இருந்ததால், அதை வைத்து லாட்டரி டிக்கெட்டின் உரிமையாளரை கண்டறியும் பணியில் ஈடுபட்டது. ஆனால், அந்த வங்கி அவரது விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டதாம்.
தேடி வந்து கொடுத்த நிறுவனம்
இதையடுத்து, அந்த வாடிக்கையாளருக்கு ரகசிய தகவலாக விவரத்தை கூறுங்கள் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். இதன்படி, பரிசு அடித்த லாட்டரியை வாங்கிய பெண்ணுக்கு மெசேஜ் சென்றுள்ளது. இதைப்பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த அந்த பெண், தன்னால் அன்று இரவு முழுவதுமே தூங்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
டிக்கெட்டை தொலைத்துவிட்டதால், பரிசு கிடைக்காது என்றே நினைத்தேன். தற்போது பரிசுத்தொகை கிடைத்து இருப்பதால், இதை வைத்து குடும்பத்தினருக்கு செலவு செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.