7 மாத குழந்தையை கடித்த பிட்புல் நாய்.. பரிதாபமாக போன உயிர்
13 Apr,2025
இந்த காலத்தில் பலரும் ஆசையாக நாய்களை வளர்க்கிறார்கள். என்ன தான் முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயாக இருந்தாலும் கூட குழந்தைகளை எப்போதும் நாய்களுடன் தனியாக விட்டுவிட்டுச் செல்லக்கூடாது. நாய்கள் எப்படி நொடிகளில் ஆபத்தானதாக மாறும் என்பதை உணர்த்தும் சம்பவம் நடந்துள்ளது.
இதில் சொந்த வீட்டில் வளர்க்கும் பிட்புல் நாய் கடித்ததில் 7 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தக் காலத்தில் பலரும் ஆசையாக நாய்களை வளர்க்க வாங்குகிறார்கள். ஆனால், நாய்களை வளர்ப்பது அவ்வளவு ஈஸி இல்லை. முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும். அப்படிப் பயிற்சி இல்லாத நாய்கள் ஆபத்தாக மாறிவிடும்
நாய்கள் பயிற்சி அளிக்கப்பட்டாலும் கூட குழந்தைகளை நிச்சயம் நாய்களுடன் தனியாக விடக்கூடாது. அப்படி விட்டால் அது ஆபத்தில் தான் முடியும். பல்வேறு தரப்பினரும் அளிக்கும் எச்சரிக்கையாகவே இது இருக்கிறது. நாய்களை ஏன் குழந்தைகளுடன் விடக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு மோசமான சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. 7 மாத குழந்தை அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கொலம்பஸ் என்ற பகுதியில் வசித்து வந்த ஏழு மாத குழந்தையை வீட்டில் வளர்த்த பிட்புல் நாயே கடித்துக் கொன்றுள்ளது. அவர்கள் வீட்டில் மொத்தம் 3 பிட்புல் நாய்களை வளர்த்து வந்த நிலையில்,
அதில் ஒரு நாய் இந்தச் சிறுமியைக் கடித்துக் கொன்றுள்ளது. பெற்றோர் வேதனை இது தொடர்பாகக் குழந்தையின் தாய் மெக்கன்சி கோப்லி தனது பேஸ்புக் பக்கத்தில், "ஏன் இப்படி நடந்தது என்பது எனக்கு நிஜமாகவே புரியவில்லை!" என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், தனது மகள் எலிசா டர்னரை நாய்கள் அன்பாக அரவணைக்கும் படங்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் கூறுகையில், "நான் உடைந்து போய்விட்டேன்.
இத்தனை காலம் ஒவ்வொரு நாளும் என் குழந்தையைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்ட நாய்தான் இப்படிச் செய்தது என்பதை ஏற்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். அதேபோல எலிசாவின் தந்தை கேமரன் டர்னரும், "வாழ்க்கை மிகவும் நியாயமற்றது. அவள் இல்லாமல் நான் எப்படித் தொடர்ந்து வாழ முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.. அதிகாரிகள் சொல்வது என்ன ஏழு மாத குழந்தை பிட்புல் தாக்குதலால் உயிரிழந்துள்ளதை உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து கொலம்பஸ் போலீஸ் சார்ஜென்ட் ஜேம்ஸ் ஃபுகுவா கூறுகையில், "சவுத் சாம்பியன் அவென்யூவின் 3700 பிளாக்கில் அமைந்துள்ள ஒரு வீட்டில் எலிசா என்ற குழந்தையை அவர்கள் வீட்டிலேயே வளர்த்த நாய் கடித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை நினைத்தால் எங்களுக்கும் கஷ்டமாகவே இருக்கிறது. அங்கு நிலைமை நொடியில் மாறியிருக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பெற்றோரை எந்தளவுக்குப் பாதித்து இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. காவலர்கள் பலரும் கூட அந்தப் பெற்றோரை நினைத்துத் தான் வேதனை அடைகிறார்கள்" எனத் தெரிவித்தார். இப்போது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 3 நாய்களும் உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நெட்டிசன்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.