ஈபிள் டவரை விட உயரம்.. .. உலகின் உயரமான பாலம்
12 Apr,2025
உலகிலேயே மிக உயரமான பாலத்தை சீனா திறக்க உள்ளது. இந்த பாலம் உலக அதிசயமான ஈபிள் டவரை விட200 மீட்டர் உயரம். ரூ.2,200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பை வைத்து 3 ஈபிள் டவரை உருவாக்கலாம். உலகின் மிக உயரமான பாலமான இது வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ள நிலையில் அதன் பிரமாண்டம் மற்றும் சிறப்புகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்டை நாடான சீனா தனது நாட்டின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. புதிதாக அணைகள், பாலம், வானளவு உயர்ந்த கட்டடங்களை சீனா தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தான் சீனா தற்போது உலகிலேயே மிகவும் உயரமான பாலத்தை அமைத்துள்ளது.
இந்த பாலம் அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இந்த பாலம் என்பது சீனாவின் ஹுவாஜியாங்க் என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கிற்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் கிராமங்கள் உள்ளன. நடுவில் பள்ளத்தாக்கு உள்ளதால் கிராம மக்கள் பள்ளத்தாக்கின் ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறத்துக்கு செல்ல ஒரு மணிநேரம் வரை நேரம் பிடிக்கும். இதற்கிடையே தான் பள்ளத்தாக்கின் இரண்டு புறங்களில் உள்ள கிராமங்களை இணைக்க ஸ்டீல் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த பாலம் என்பது ஹூவாஜியாங் பள்ளத்தாக்கிற்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது. இது ஹூவாஜியாங்க் கிராண்ட் கேன்யன் ஸ்டீல் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலம் என்பது 216 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.2,200 கோடி) மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் என்பது 2 மைல் அளவுக்கு நீளம் கொண்டது. பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பாலத்தில் கார் உள்பட அனைத்து வாகனங்களும் செல்லலாம்.
இந்த பாலத்துக்கான டவர் மட்டும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள ஈபிள் டவரை விட 200 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஈபிள் டவர் என்பது 330 மீட்டர் (1,083 அடி உயரம்) கொண்டது. ஆனால் ஈபிள் டவரை விட இந்த பாலம் என்பது உயரமானதாக அமைகிறது. மேலும் ஈபிள் டவரின் எடையை விட இந்த பாலத்துக்கு அதிக இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் என்பது ஸ்டீல் பயன்படுத்தி உருவாக்கப்பட்டள்ளது. மொத்தம் 22 ஆயிரம் மெட்ரிக் டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3 ஈபிள் டவரை உருவாக்குவதற்கு ஆகும் ஸ்டீலின் அளவாகும். அதாவது இந்த பாலத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரும்பை கொண்டு 3 ஈபிள் டவர்களை அமைக்கலாம்.
இந்த திட்டத்தின் தலைமை இன்ஜினியர் லி ஜாவோ கூறுகையில், ‛‛இந்த பணி என்பது உறுதியான நம்பிக்கையை எனக்கு தந்துள்ளது. பள்ளத்தாக்கில் இருந்து படிப்படியாக மேலே உயர்ந்து இப்போது பாலம் பணி முடியும் தருவாயில் உள்ளது. இது எனக்கு பெருமையாக இருக்கிறது'' என்றார். இதுதொடர்பாக சீனாவை சேரந்த அரசியல்வாதியான ஜயாங் செங்லின் கூறுகையில், ‛‛இந்த பாலம் என்பது சீனாவின் இன்ஜினியரிங் திறமையை உலகுக்கு எடுத்துரைக்கும். உலக தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக இது நிச்சயம் மாறும்'
' என்றார். இந்த பாலம் என்பது சீனாவின் கிராமப்புறப் பகுதியில் முக்கியமான போக்குவரத்து இணைப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தப் புதிய பாலம் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் மாற உள்ளது. இந்த பாலத்தில் கண்ணாடி நடைபாதை அமைக்கவும், 'உயரமான பங்கி ஜம்ப்' வசதி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக 2016ம் ஆண்டில், சீனாவின் மிக உயரமான பாலம் பெய்பன் ஜியாங்கில் கட்டப்பட்டது, இது வியக்கத்தக்க வகையில் 1,854 அடி உயரம் அமைந்திருந்தது. இப்போது அந்த பாலத்தின் சாதனையை இந்த பாலம் முறியடிக்க உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.