.
ஓஹியோ: சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் இருந்து மொத்தமாக அழிந்துபோன ஒரு உயிரினத்திற்கு ஆய்வாளர்கள் உயிர் கொடுத்துள்ளனர். ஆய்வாளர்கள் இதை எப்படிச் செய்தனர்.. எந்த விலங்கிற்கு உயிர் கொடுத்தனர்.. இந்த ஆய்வு ஏன் மிக முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாம் அனைவரும் ஜுராசிக் பார்க் படத்தை பார்த்து இருப்போம். அழிந்துபோன டைனோசருக்கு மரபணு தொழில்நுட்பம் மூலம் உயிர் கொடுத்து இருப்பார்கள். அது பார்க்க பிரமிப்பாக இருக்கும். அதேநேரம் இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என நாம் நினைத்து இருப்போம். ஆனால், அதை ஆய்வாளர்கள் இப்போது நிஜ உலகிலும் சாதித்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டை விலங்கில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும். இது கடந்த 10,000- 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு உயிரினமே பூமியில் இல்லாத சூழலே இருந்தது. ஆனால், அதிநவீன டிஎன்ஏ அனாலிசிஸ், CRISPR மரபணு எடிட்டிங் மற்றும் குளோனிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த ஓநாயை மீண்டும் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.
கோலஸ்ஸால் பயோசயின்சஸ் என்ற நிறுவனம் இந்த சாதனையைப் படைத்துள்ளது. உலகில் அழிந்து போன உயிரினம் ஒன்று மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் மற்ற அழிந்துபோன உயிரினங்களையும் கூட நாம் மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அறிவியல் துறையில் இது மிக முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது.
இதற்காக ஆய்வாளர் குழு அழிந்துபோன டையர் ஓநாய் புதைபடிவங்களிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்ததுள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவிலிருந்து 13,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் பல் மற்றும் இடாஹோவிலிருந்து 72,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் மண்டை ஓட்டில் இருந்து டிஎன்ஏவை ஆய்வாளர்கள் பிரித்து எடுத்துள்ளனர்.
இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த மரபணு சிதையாமல் பத்திரமாக இருந்துள்ளது. இதனால் அந்த டிஎன்ஏவை எடுத்து ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.
சாம்பல் ஓநாய்கள்
தற்போது டிஎன்ஏ ஆய்வுகள் பல மடங்கு மேம்பட்டுவிட்ட நிலையில், இதன் மூலம் 70 மடங்கு அதிகமான மரபணு டேட்டாவை ஆய்வாளர்களால் உருவாக்க முடிந்துள்ளது. மரபணுவின் 12.8 மடங்கு கவரேஜை ஆய்வாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். டையர் ஓநாய்கள் தங்கள் டிஎன்ஏவில் 99.5% சாம்பல் ஓநாய்களுடன் பகிர்ந்து கொண்டது தெரிய வந்தது. இருப்பினும், 5.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அது பரிணாம ரீதியாக வேறுபட்டுவிட்டதும் தெரிய வந்தது.
பிறகு டையர் ஓநாய் டிஎன்ஏவை சாம்பல் நிற ஓநாய்களுடன் ஒப்பிடுவதன் மூலம் அதன் சைஸ், தசை அமைப்பு மற்றும் வெள்ளை நிற தோல் என அதன் தனித்துவங்களை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். 14 மரபணுக்களில் 20 முக்கியமான மரபணு மாறுபாடுகளை அடையாளம் கண்டனர். உதாரணமாக LCORL மரபணு டையர் ஓநாய்களின் பெரிய உடலுக்குக் காரணமாக இருந்துள்ளது. இதுபோல பல முக்கிய மரபணுக்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், சாம்பல் ஓநாய் ரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்டோடெலியல் செல்களை (EPCs) பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர். இந்த செல்கள் டையர் ஓநாய் வகைகளுக்கு ஏற்ப எடிட் செய்யப்பட்டு, அணுக்கரு நீக்கப்பட்ட சாம்பல் ஓநாய் முட்டைகளில் அவை பொருத்தப்பட்டன. பிறகு அந்த கருக்கள் நாய்களுக்கு மாற்றப்பட்டன. அந்த நாய் தான் இப்போது மூன்று ஆரோக்கியமான டையர் ஓநாய் குட்டிகளான ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி ஆகியவற்றை பெற்றெடுத்துள்ளது.
இது அறிவியல் உலகில் மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இத்தனை காலம் சினிமாவில் மட்டுமே இதுபோல அழிந்துபோன ஒரு உயிரினத்தை மீண்டும் கொண்டு வருவது போலக் காட்டினர். அதை உண்மையான வாழ்க்கையிலும் செய்து காட்டியுள்ளனர் ஆய்வாளர்கள். மேலும், இது வெறும் தொடக்கம் தான் என்றும் வரும் காலத்தில் மேலும் பல விலங்குகளுக்கு இதுபோல உயிர் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.