அத்துருகிரிய மிலேனியம் சிற்றி பாதுகாப்பு மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்தார் என நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்ட, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொல விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சுமார் 20 வருடங்களாக நீடித்த விசாரணைகளுக்குப் பின்னர், உடுகம்பொலவின் விடுதலையுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையே, பேச்சுக்கள் தொடங்கியிருந்த ஆரம்பக் கட்டத்தில், அத்துருகிரிய மில்லேனியம் சிற்றி வீட்டுத் திட்டத்தில் உள்ள அந்த மறைவிடம், 2002 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் திகதி முற்றுகையிடப்பட்டது.
கண்டி மாவட்ட விசேட நடவடிக்கைகளுக்கான பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொல, தலைமையிலான குழுவினரே அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
அந்த மறைவிடத்தில் கிளைமோர்கள், லோ எனப்படும் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், துப்பாக்கிகள், ரவைகள், கைக்குண்டுகள், மற்றும் தெர்மோபெரிக் ஆயுதங்களுடன், விடுதலைப் புலிகளின் 66 சீருடைகளும் கைப்பற்றப்பட்டன.
இலங்கையில் தெர்மோபெரிக் எனப்படும் மிகமிக ஆபத்தான ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது அதுவே முதல்முறை. இந்த வகை ஆயுதங்களை பதுங்குகுழிகள் மற்றும் வாகனங்கள் மீது செலுத்தினால், அதிசக்திவாய்ந்த வெப்பத்துடன் வெடிப்பை ஏற்படுத்தும். அதில் இருந்தவர்கள் கருகிப் போகும் அளவிற்கு வெப்பம் உமிழப்படும்.
அந்தளவு ஆபத்தான ஆயுதங்களுடன், அங்கிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும், துணை ஆயுதக்குழுவைச் சேர்ந்த ஒருவருமாக – ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் கெப்டன் நிலாம் எனப்படும் சாகுல் ஹமீட் நிலாம் என்பவர் முக்கியமானவர்.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய, சில வாரங்களுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுற்றிவளைப்பு இடம்பெற்ற உடனேயே, உள்ளூர் ஊடகங்களை அழைத்த உடுகம்பொல, அங்கு கைப்பற்றிய ஆயுதங்களையும் பொருட்களையும் காண்பித்தார்.
அவை வெளிச்சத்துக்கு வந்த பின்னர் தான், இலங்கை இராணுவத்தின் குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் மட்டுமே தெரிந்திருந்த, அந்த இரகசியப் படைப்பிரிவு பற்றிய தகவல்கள் வெளியுலகத்துக்கு அம்பலமானது.
குலசிறி உடுகம்பொல, தெரிந்தோ தெரியாமலோ, அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் சீருடைகள், பெரும் எண்ணிக்கையான அதிநவீன ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அதை ஊடகங்களிடம் பகிரங்கப்படுத்தியிருக்கலாம்.
2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தி பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்தனர். அதுபோல தெற்கில் பல தாக்குதல் சம்பவங்கள் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டிருந்தன.
எனவே, இது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஒரு மறைவிடமாக இருக்கலாம் என்று உடுகம்பொல நினைத்திருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.
மிலேனியம் சிற்றி மறைவிடத்தில் கைது செய்யப்பட்டவர்கள், தாங்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், இரகசிய நடவடிக்கைகளுக்கான அணியினர் என்றும், தெளிவுபடுத்திய போதும்- உடுகம்பொல விடவில்லை. பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்த பின்னர் தான், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரியவந்தன.
அதற்கிடையில் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் லயனல் பலகல்ல, இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரான பிரிகேடியர் கபில ஹெந்தவிதாரண ஆகியோர், பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு, நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற போதும், பெரும்பாலான தகவல்கள் வெளியே கசிந்து விட்டன.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக இருந்த சந்திரிகா குமாரதுங்க, ஜனாதிபதியாகவும், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்த அந்தக் காலகட்டத்தில், இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முரண்பாடுகளுக்கு குறைவில்லாமல் இருந்தது.
அந்த சூழலில் ரணில் விக்கிரமசிங்கவையும், முக்கிய அமைச்சர்களையும் கொலை செய்வதற்காகவே இந்த மறைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு ஐ.தே.க.வினரால் அப்போது முன்வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள், சந்திரிகா குமாரதுங்க மற்றும் இராணுவப் புலனாய்வுத் துறைக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆனால், பின்னர் அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆனது.
அரசாங்கத்துக்குள்ளேயும் சரி, பொலிஸ் மற்றும் இராணுவ தரப்புக்குள்ளேயும் சரி, இந்த மறைவிடம் தொடர்பான விடயத்தில் கூட்டுச் செயற்பாடு இருக்காத காரணத்தினால், அதன் இரகசியத்தன்மை முற்றிலுமாக வெளியே கசிந்தது.
இராணுவப் புலனாய்வுத்துறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்காக, உருவாக்கியிருந்த ஆழ ஊடுருவும் படையணியே அதுவாகும். அதன் கட்டளை அதிகாரியாக இருந்தவர் தான் கெப்டன் நிலாம்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள், புளொட் உள்ளிட்ட தமிழ் இயக்கங்களை சேர்ந்தவர்கள், பொதுமக்களைக் கொண்டு, புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் ஊடுருவி சென்று தகவல்களை திரட்டுவதற்கும், தாக்குதல் நடத்துவதற்கும் கெப்டன் நிலாம் தயார்படுத்தியிருந்தார்.
போர்நிறுத்த உடன்பாடு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், 2001 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் கிளைமோர் தாக்குதல்கள் சில இடம்பெற்றிருந்தன.
அவ்வாறான தாக்குதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த லெப். கேணல் நிசாம் கொல்லப்பட்டிருந்தார். அதேபோல கேணல் கருணாவும் ஒரு தாக்குதலில் உயிர் தப்பியிருந்தார்.
அதேவேளை, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பிரதேசத்திலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில், நடத்தப்பட்ட ஒரு கிளைமோர் தாக்குதலில், விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தளபதியும், மூத்த உறுப்பினருமான கேணல் சங்கர் உயிரிழந்தார்.
அதேபோல, கடற்புலிகளின் தளபதி லெப்.கேணல் கங்கைஅமரன் முழங்காவிலில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார். அது தவிர, விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், மூத்த கட்டளைத் தளபதிகளான கேணல் ஜெயம், கேணல் பால்ராஜ் போன்றவர்களும் தெற்கு முன்னரங்க போர்முனைகளுக்கு நெருக்கமாக, இடம்பெற்ற தாக்குதல் முயற்சிகளில் இருந்து உயிர் தப்பியிருந்தனர்.
இந்த தாக்குதல்கள் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வகையில், நடத்தப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மிக வேகமாக அந்த இடத்தில் இருந்து பின்வாங்கி செல்லக் கூடியளவுக்குப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள், போர்நிறுத்தம் செய்து கொள்ளவிருந்த காலகட்டத்தில், வன்னியின் தென்பகுதியிலும் கிழக்கிலும் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்கள், புலிகளுக்கு குடைச்சலை கொடுக்க தொடங்கியிருந்தன.
இராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவு, கொமாண்டோ படைப்பிரிவு போன்றவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களை கொண்டு, இராணுவ புலனாய்வுப் பிரிவினால் இந்த தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
அதற்காக உருவாக்கப்பட்ட மறைவிடம் தான் மிலேனியம் சிற்றியில் அமைக்கப்பட்டிருந்தது என இராணுவத்தரப்பு கூறியது. அதனை முற்றுகையிட்டு, இரகசியமான ஒரு நடவடிக்கையை குலசிறி உடுகம்பொல காட்டிக் கொடுத்து விட்டார் என்பதே, அவர் மீதான குற்றச்சாட்டு.
அதனை அடிப்படையாக வைத்து அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.அவர் மீதான குற்றச்சாட்டை, வழக்குத்தொடுநர் தரப்பு சரிவர நிரூபிக்கவில்லை என்ற நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
அதேவேளை, அந்த மறைவிடம் திட்டமிட்டே காட்டிக் கொடுக்கப்பட்டதாக அரசியல் ரீதியாக குற்றம்சாட்டப்பட்டதுடன், அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பிரசாரமாகவும் பயன்படுத்தப்பட்டது.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்த தொடங்கியிருந்த அந்த சூழலில், இந்த விவகாரம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
அதேவேளை இந்த விவகாரத்தில், சில சந்தேகங்களுக்கு அரசாங்கமோ இராணுவ புலனாய்வுத் துறையோ தெளிவான விளக்கங்களை கொடுக்கவில்லை. அதாவது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்துவதற்கான மறைவிடத்தை, இரகசியமாக ஏன் அத்துருகிரியவில் உருவாக்க வேண்டும் என்ற கேள்வி இருந்தது.
அதற்கான பதில் கொடுக்கப்படவே இல்லை.முன்னதாக இந்த செயற்பாடு கொஹுவெல இராணுவ முகாமில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறிது காலத்துக்கு முன்னரே, அது அத்துருகிரியவுக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
அப்படியானால், அது மாற்றப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.கிழக்கு மாகாணத்திலும் வன்னியிலும் தான் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் இருந்தன.
அந்த கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வெளியே, அவற்றுக்கு அருகிலேயே, இராணுவப் புலனாய்வுத்துறையினால் இவ்வாறான மறைவிடத்தை இயங்கியிருக்க முடியும். ஆயுதங்களை மறைத்து வைத்திருக்க முடியும்.
வன்னியிலும் கிழக்கிலும் தாக்குதல் நடத்துவதற்கு, அத்துருகிரியவில் இருந்து – நீண்ட தூரத்துக்கு இந்த ஆயுதங்களை கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்திருக்காது.
அந்தளவுக்கு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் அப்போது முக்கியமான தளங்கள் இருந்தன.
அவற்றை பயன்படுத்தாமல், ஏன் அத்துருகிரியவில் பெருமளவு ஆயுதங்களை பதுக்கி வைத்து ஒரு மறைவிடத்தை இயக்கி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு சரியான பதில் அரசாங்கத்தினாலோ, இராணுவ தரப்பினாலோ வழங்கப்பட்டிருக்கவில்லை.
இதனால் தான், அரசியல் இலக்குகளை தாக்குவதற்காக, இரகசியமாக உருவாக்கப்பட்ட மறைவிடமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
அந்த காலகட்டத்தில் தெற்கில் நிகழ்ந்த எல்லா தாக்குதல் சம்பவங்களுக்கும், விடுதலைப் புலிகள் மீதே அரசாங்கம் பழி போட்டது. அதனை காரணம் காட்டி, வெளிநாடுகளில் புலிகளை தடை செய்வதற்கான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், அந்தத் தாக்குதல்கள் எல்லாம் விடுதலைப் புலிகளால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டவையா என்ற கேள்வியும் – சந்தேகங்களும் இன்று வரை நீடிக்கின்றன.
இத்தகைய பின்னணியில் அத்துருகிரிய மிலேனியம் சிற்றி மறைவிடம் தொடர்பான மர்மம், இன்னமும் விலகவில்லை என்றே கூறலாம்.
இந்த இரகசிய மறைவிடம் வெளிப்படுத்தப்பட்ட போது அங்கு செயற்பட்டவர்கள் தொடர்பான இரகசியங்களும் வெளியே கசிந்தன.
அதன் அடிப்படையில் போர்நிறுத்த காலப் பகுதியில், இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளையும் உறுப்பினர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், உதவியாக செயற்பட்ட வர்களையும் விடுதலைப் புலிகள் வேட்டையாடியிருந்தனர்.
கொழும்பிலும் கிழக்கிலும் நாட்டின் புற பகுதிகளிலும் அவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் இராணுவப் புலனாய்வுத்துறையினர் மற்றும் அதனுடன் தொடர்புடைய 80 பேர் கொல்லப்பட்டனர் என்றும் கூறப்பட்டது. அந்த சம்பவங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பட்டதாகவே, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது .
அதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீதும்- நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக பழி போடப்பட்டது. ஆனால், அவை எல்லாமே உண்மையா அல்லது பகுதி அளவில் உண்மையா என்பது இன்று வரை தெரியாத மர்மமாகவே உள்ளது.
ஏனென்றால் அது ஒரு பக்கம் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தையும், இன்னொரு பக்கம் புலனாய்வுப் போரும் நடந்து கொண்டிருந்த காலம். புலனாய்வுப் போர் என்பது, உண்மையான எதிரிகளை மட்டும் வேட்டையாடுவது அல்ல. எதிரிகளையும் அவர்களின் நண்பர்களையும் மோத விடுவதும் அதன் ஒரு பகுதி தான்.
சுமார் 23 ஆண்டுகளுக்கு முந்திய அந்த புலனாய்வுப் போர் யுகம், ஏராளமான மர்மங்கள் நிறைந்த ஒன்று. அதன் முடிச்சுக்களை முழுமையாக அவிழ்ப்பது சாத்தியமில்லை. ஏனென்றால் அதனுடன் தொடர்புபட்டவர்கள் பலர் இப்போது, உயிரோடு இல்லை.